கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Protest_Hunger_Strike_London_._._._._
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீளவும் ஒருமுறை பார்ப்பதன் மூலம் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
_._._._._

பிரித்தானிய தமிழ் மாணவர்கள் – இளையோர்களால் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று (யூன் 17 2009) முடிவுக்கு வருகின்றது. பலருக்கும் இவர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரிந்திருக்கவில்லை. 75 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் வன்னி மக்கள் மிக மோசமான மனித அவலத்தை எதிர்கொண்ட வேளையில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் நடத்தப்பட்டது. யுத்த பூமியில் இருந்து பௌதிக ரீதியில் மட்டுமல்ல யதார்த்தத்திலும் வெகுதொலைவில் நின்று நடத்தப்பட்ட இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் – உண்ணாவிரதப் போராட்டங்கள் வன்னி மக்களை அவலத்தில் இருந்து காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த அவலத்திற்கு உள்ளே வாழ நிர்ப்பந்தித்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அங்கம் போன்று செயற்பட்ட ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன முன்னெடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தாயகத்தில் இருந்து ஒஸ்லோ உடன்பாட்டிற்கு பின்னான காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது என்பது பரகசியமான உண்மை. இந்த அமைப்புகளின் கட்டமைப்பு பரவலாக்கம் என்பனவே இந்த அமைப்புகளின் பின்னணியைப் பறைசற்றும். ஜெனவாவிற்கு முன்னாக இடம்பெற்ற தீக்குளிப்புச் சம்பவமும் இந்தப் பின்னணியிலேயே இடம்பெற்றதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

வன்னி யுத்தத்தில் வன்னி மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய மனித அவலம் ஒன்று நிகழப் போகின்றது என்பதை தேசம்நெற் நண்பர்கள் வேட்டையாடு விளையாடு என்ற தெரு நாடகம் ஒன்றின் மூலம் ஆரம்பத்திலேயே எச்சரித்து இருந்தனர். ( யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் ) இந்த வன்னி மக்கள் சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சுயாதீனமாக தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தால் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து தப்பி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும். மிகப்பெரும் மனித அவலம் ஒன்று தடுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இவர்களின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இலங்கை அரசை மிகச் சரியாக கண்டித்த போதும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பலாத்காரமாக தங்களுடன் தங்கள் மண்மூட்டைகளாக இழுத்துச் சென்றதை கண்டிக்கத் தவறியது. மக்களது சுயாதீனமான நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் மிக மோசமான முறையில் கட்டுப்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மோசமான நடவடிக்கையே பல்லாயிரக் கணக்கான வன்னி மக்கள் உயிரிழக்கவும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடையவும் காரணமானது. மேலும் வன்னியில் உள்ள சக மாணவர்கள் இளையவர்கள் பலாத்காரமாக முறையான பயிற்சிகள் கொடுக்கப்படாமல் யுத்த முன்னரங்கு நிலைகளுக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் கூட இவர்கள் மௌனமாகவே இருந்தனர்.

மே 1 2006ல் சம்பூரில் ஆரம்பிக்கப்பட்ட புரொஜக்ற் பீக்கன் இராணுவ நடவடிக்கையில் டிசம்பர் 31 2008 வரையான 19 மாதங்களில் சில நூறு பொது மக்களே கொல்லப்பட்டு இருந்தனர். இக்காலப் பகுதியில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை. உண்ணாவிரதப் போராட்டங்கள் நிகழவில்லை. யுத்த நிறுத்தமும் கோரப்படவில்லை. ஆனால் ஜனவரி 1 2009 முதல் மே 18 2009 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் படுகொலை செய்யப்படும்வரையான 5 மாதங்களிற்குள்ளாக 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்குக் முக்கிய காரணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத் தீவு என்று பரந்திருந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்தை நோக்கி நகர்த்தப்பட்டு அப்பிரதேசத்தை யுத்தகளமாக்கியது. இலங்கை இராணுவத்தின் மரபுவழி யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க இயலாது பின்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு கெரில்லா போராட்டத்திற்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக தாம் அழைத்து வந்த மக்களுக்குள் ஒழிந்திருந்து தாக்குதலைத் தொடுத்தனர்.

காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த சிங்கள பெரும்பான்மையின அரசுகள் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டது. அதற்கு எவ்விதத்திலும் மாறுபடாத வகையில் தற்போதைய அரசும் நடந்துகொண்டது. ஒரு பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருக்கும் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்ட போதும் வன்னித் தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே நடந்து கொண்டது. புலிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகள் மக்கள் செறிவானதாக உள்ளதை நன்கு அறிந்திருந்த போதும் என்ன விலை கொடுத்தும் புலிகளை வேரறுப்பதிலேயே அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. மக்களின் அவலங்கள் பற்றியோ அம்மக்களுக்க ஏற்படப் போகும் அழிவு பற்றியோ அரசு கவனமெடுக்கவில்லை.

யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்கள் பற்றி யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை அரசோ தமிழீழ விடுதலைப் புலிகளோ சிந்தித்து இருந்தால் இந்தப் பாரிய இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும். யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரு தரப்பினருக்கும் எதிராக புலம்பெயர்ந்த மக்கள் குரல் எழுப்பி இருந்தாலும் இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்தது. இப்பெரும் தவறே 20 000 பொது மக்களின் அழிவுக்கு வித்திட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானவர்களைக் காயங்களிற்கு உள்ளாக்கியது. புலிகளும் மக்களும் ஒன்று என்று இவர்கள் போட்ட கோசம் இன்று இன்று 300 000 வரையான வன்னி மக்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்துள்ளது.

யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற People for Equality and Relief in Lanka (PEARL) அமைப்பு மார்ச் 2ல் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பகுதியில் யுத்தத்தில் சிக்குண்ட மக்களை வெளியேற்ற வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தனர். ( முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் ) வன்னி மக்கள் எப்படியாவது யுத்தப் பகுதியில் இருந்து தப்பிக்க முயல்கையில் வன்னி மண் அந்த மக்களின் பூர்வீக மண் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தது.

இன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கூட வன்னி மக்களின் நலனில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி. முற்று முழுதாக தோல்வியடைந்த ஒரு போராட்டம்.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டனர். படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள்  தீபன் கடாபி நாகேஸ் ஆகியொர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும் பல நூற்றுக்கணக்கான பொராளிகளும் கொல்லப்பட்டனர்.  ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் எதிர்காலம் ஆபத்தில் சிக்கியது புலம்பெயர்நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 7ல் பரேமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆகிய இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பரவியது.

இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஐ நா பொதுச்செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் தங்களுடைய பிரதிநிதிகள் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு அர்த்தமற்ற கோரிக்கையைத் தவிர வேறு எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (ஐ நா பொதுச் செயலாளரையும் பிரித்தானிய பிரதமரையும் சந்திக்க உண்ணாவிரதம் இருந்து அனுமதி பெற்றவர்கள் இந்த உண்ணாவிரதிகளின் பிரதிநிதிகளாகவே இருப்பார்கள்.)

இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கும் கோரிக்கைகளே அன்றி நடைமுறைச்சாத்தியமான வன்னி மக்களின் நலன்சார்ந்த கோரிக்கையாக அமையவில்லை.

உண்ணாவிரதிகளில் சிவதர்சன் சிவகுமாரவேல் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதத்தை கைவிட்டார். பரமேஸ்வரன் சிவசுப்பிரமனியம் பின்னாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். பிரித்தானிய அரசு சில உறுதிமொழிகளைத் தந்துள்ளதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறிய பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் பிரித்தானிய அரசின் உறுதி மொழிகளை தற்போது வெளியே தெரிவிக்க முடியாது என்று மறுத்தவிட்டார். ஆனால் அந்த உறுதிமொழி என்னவென்பது பின்னர் வெளிவந்தது. மனிதக் கேடயங்களாக உள்ள வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுவித்தாலேயே பிரித்தானிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே பரமேஸ்வரன் சிவசுப்பிரமணியம் என்ற உண்ணாவிரதிக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த 75 நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் மெற்றோ பொலிட்டன் பொலிசாருக்கு எட்டு மில்லியன் பவுண்களுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி மக்கள் இலங்கை அரசபடைகளால் கொல்லப்படுவதற்கு புலம்பெயர் மக்களும் காரணமாக இருந்துள்ளனர். இம்மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகக் கொடுமை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் அதன் தலைவர் வே பிரபாகரனின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் சிங்கக் கொடியையும் முப்படைத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் பிடித்துக் கொண்டு மனித உரிமை பேசுவதற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

புலம்பெயர்ந்த மாணவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளையவர்கள் இயக்க கட்சி அரசியலுக்குள் அள்ளுண்டு செல்லாது தங்களுக்கான ஜனநாயக பூர்வமான அமைப்புகளைக் கட்டி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதனை அவர்கள் சுயாதீனமாக மேற்கொள்ள வேண்டும். அதனை விட்டு இறக்குமதி செய்யப்பட்ட தலைமைத்துவங்களுக்குப் பின் மந்தைக் கூட்டமாக இழுக்கப்படுவதை இவர்கள் நிராகரிக்க வேண்டும்.

தங்கள் கைகளிலும் வன்னி மக்களின் குருதி படிந்திருப்பதை இவர்கள் உணர்ந்து சுயவிமர்சனத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டே அடுத்த நகர்வை ஏற்படுத்த முடியும்.

சானியா மிர்சா 78 வது இடத்துக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஉலக டென்னிஸ் வீரர் வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் 98 வது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா 20 இடங்கள் முன்னேறி 78 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். பர்மிங்காமில் நடந்த டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் சானியா தர வரிசையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார். ரஷிய வீராங்கனை தினரா சபீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் 132 வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 154 வது இடத்திலும் உள்ளனர். இரட்டையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற லியாண்டர் பெயஸ் 5 வது இடத்தில் உள்ளார்.

நியுசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்கு தெரிவு

muralitharan-sri-lankas.jpgநியுசிலாந் துடனான இருபது 20 உலகக் கிண்ண “சுப்பர் 8′ போட்டியில் 48 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி  “எப்’ பிரிவிலிருந்து அரையிறுதிக்கு இலகுவாகத் தெரிவாகியது. இத் தொடரில்  இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடையவில்லை.

நொட்டின் ஹாமில்  “எப்’ பிரிவுக்காக இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கையணி டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய நியுசிலாந்து அணிக்கு சகல விக்கெட்டுகளையும்  இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அதே நேரம் “எப்’ பிரிவுக்காக  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

இலங்கை
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/
டிஎம் தில்ஷான் பி. பிபி மெக்குல்லம் ப. டிஎல் வெட்டோரி 48   37   5   0
எஸ்டி ஜெயசூர்யா பி. ஆர்எல் டெய்லர் ப. நாதன் மெக்கல்லம் 0   1   0    0
எல்பிசி சில்வா பி. ஜேடிபி ஓரம் ப. கெய்த் மில்ஸ் 13   10   2   0
கேசி சங்கக்காரா பி. எஸ்பி ஸ்டைரிஸ் ப. டிஎல் வெட்டோரி 35   35   3   0
டிபிஎம்டி ஜெயவர்தனே அவுட்டில்லை 41   29   6   1
துஷார் இம்ரான் எல் பி டபுள்யூ ஐஜி.பட்லர் 8   5   1   0
ஆங்லோ மேத்யூஸ் அவுட்டில்லை 6   4   0   0
 
மொத்தம்: 158/5 (20.0) | ரன் விகிதம்: 7.90 | உதிரிகள்: 7 (பைஸ்- 1, வைடுகள்- 4, நோ பால்- 1, லெக் பைஸ்- 1, அபராதம் – 0) 

விக்கெட் வீழ்ச்சி
1-3(0.3), 2-25(3.5), 3-87(11.3), 4-137(17.4), 5-147(18.5)

(பந்து வீச்சாளர் /ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால்)
நாதன் மெக்கல்லம் 4.0 0 22 1 0 0
கெய்த் மில்ஸ் 4.0 0 41 1 1 0
ஜேடிபி ஓரம் 4.0 0 23 0 0 0
ஐஜி.பட்லர் 3.0 0 29 1 0 0
டிஎல் வெட்டோரி 4.0 0 32 2 2 1
எஸ்பி ஸ்டைரிஸ் 1.0 0 9 0 0 0

 நியூ ஸீலாந்து
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/)
பிபி மெக்குல்லம் பி. துஷார் இம்ரான் ப. இசுரு உதனா 10 12 2 0
ஏ.ஜெ. ரெ‌ட்மா‌ண்‌ட் பி. எல்பிசி சில்வா ப. எஸ்எல் மலிங்கா 23 13 3 1
எம்.ஜே.குப்டில் பி. ஆங்லோ மேத்யூஸ் ப. எஸ்டி ஜெயசூர்யா 43 34 4 1
ஆர்எல் டெய்லர் ஸ்ட. கேசி சங்கக்காரா ப. அஜந்தா மென்டிஸ் 8 8 1 0
எஸ்பி ஸ்டைரிஸ் போல்டு அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
ஜேடிபி ஓரம் போல்டு இசுரு உதனா 7 12 0 0
பி.டி.மெக்லாஷன் பி. துஷார் இம்ரான் ப. அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
நாதன் மெக்கல்லம் ரன் அவுட் எம் முரளிதரன் 2 4 0 0
டிஎல் வெட்டோரி பி. எஸ்எல் மலிங்கா ப. எம் முரளிதரன் 3 5 0 0
கெய்த் மில்ஸ் ரன் அவுட் டிஎம் தில்ஷான் 4 6 1 0
ஐஜி.பட்லர் அவுட்டில்லை 2 2 0 0
 
மொத்தம்: 110/10 (17.0) | ரன் விகிதம்: 6.47 | உதிரிகள்: 4 (பைஸ்- 0, வைடுகள்- 3, நோ பால்- 0, லெக் பைஸ்- 1, அபராதம் – 0)  

விக்கெட் வீழ்ச்சி
1-30 (2.6), 2-39 (4.5), 3-64 (8.1), 4-66 (8.4), 5-93 (12.6), 6-95 (13.4), 7-98 (14.3), 8-100 (15.1), 9-102 (15.4), 10-110 (16.6) 

(பந்து வீச்சாளர்/ ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால் )
இசுரு உதனா 3.0 0 17 2 0 0
எஸ்டி ஜெயசூர்யா 3.0 0 28 1 0 0
எம் முரளிதரன் 4.0 0 18 1 0 0
எஸ்எல் மலிங்கா 3.0 0 26 1 2 0
அஜந்தா மென்டிஸ் 3.0 0 9 3 0 0
டிஎம் தில்ஷான் 1.0 0 11 0 1 0

ஆட்ட நாயகன் அஜந்தா மென்டிஸ்

பெண்கள் உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியா

women-20-20.jpgஇங்கி லாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மழை காரணமாக போட்டி18 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி18 ஓவரில் 6 விக்கெட் இழப்பற்கு 94 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா அணி சார்பில் பூனம் ராவுட் 40 பந்துகளில் 30 ரன்களும், மிதாலி ராஜ் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின – தீவிரவாத செயலுக்கு சதி?

16tiffin-box-bombs.jpgமதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது. தென் மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல்  நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.

குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ள நகரங்களில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மதுரை நகரமும் தீவிர பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் ஏற்கனவே உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

“சுப்பர் 8′ ஆட்டத்தில் தீர்க்கமான போட்டி இன்று: நியூஸிலாந்து இலங்கை மோதல்

muralitharan-sri-lankas.jpgஇருபது- 20 உலகக் கிண்ண போட்டியின் தீர்க்கமான “சுப்பர் 8′ ஆட்டத்தில் நியூஸிலாந்து இலங்கை அணிகள் இன்று மோதவுள்ளன.

நொட்டின் ஹாமில்  “எப்’ பிரிவுக்காக இன்று இலங்கை நேரப்படி ஆறு மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இலங்கையணி வென்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும்.

நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் ரண்டேட் முறையில் நியூஸிலாந்தா அல்லது இலங்கையா “எப்’ பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக்கப்படும்.

அதே நேரம் “எப்’ பிரிவுக்காக  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

அதிபர் தேர்தல் முடிவு குறித்து விசாரணை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

president-ahamadinejad.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.  இந்தத் தேர்தல் நடைபெற்ற விதம் குறித்து பல்வேறு எதிர்கட்சி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள கவலைகளை இரான் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று வர்ணித்துள்ள பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்கள், அரசின் இந்த நடவடிக்கையினை விமர்சித்தும் உள்ளனர்.

20-20 கிரிக்கெட்: மேற்கிந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் டுவென்டி 20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மேற்கிந்திய அணிகள் மோதியன.

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 ஓவராக குறைக்கப்பட்டு 80 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கு 80 ஓட்டங்கள் என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 8.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. சர்வான் சந்திரபால் ஜோடி அற்புதமாக ரன் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். சர்வானுக்கு (19*) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான ஜக்கியம் – இனியாவது சாத்தியமா? : எஸ். தவராசா

SL_Flag(முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் சகலகட்சி மகாநாட்டின் அங்கத்துவருமான எஸ். தவராசா அவர்கள் லண்டன் ‘Oxford Union’ இல்  05.06.09 அன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)

தலைவர் என்னை அறிமுகம் செய்துவைக்கும்போது நான் சார்ந்திருக்கும் கட்சி (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈபிடிபி) இலைங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தை தளுவிய ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிமுகத்தில் அவர் முக்கியமான ஓர் விடயத்தை கூற தவறிவிட்டார். அவ்வாறாக ஜனநாயக நீரோட்டத்தை தளுவியமைக்காக நாம் கொடுத்த விலையோ மிக அதிகம். எழுவதுக்கும் மேற்பட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தனது ஜந்து வயது மகளுடன் புத்தளத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை சுட்டுவிட்டு அவ் ஜந்துவயது சிறுமியிடம் அம்மாவிடம் போய் அப்பா சுடப்பட்டு இறந்துவிட்டார் எனக் கூறவும் என்று சொல்லி அனுப்பினர். அவ்வாறாக மனிதாபிமானமற்ற கொடூரமான முறையில் எமது உறுப்பினர்கள புலிப் பயங்கரவாதத்தினால் தாக்கப்பட்டனர். இவையாவும் நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமைக்காக.

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் பல தடவைகள் புலிகளின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பின் தெற்கு புறத்தில் அமைந்திருக்கும் களுத்துறை மறியற் சாலைக்கு பிரதி சட்டமா அதிபர் சகிதம்  அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பிரச்சனைகள் தொடர்பாக பேசித்தீர்ப்பதற்காக சென்றிருந்த வேளை அங்கிருந்த புலிக்கைதிகளினால் தாக்கப்பட்டார். அத்தாக்குதலின் போது  அவர் பலத்தகாயங்களுக்கு உட்பட்டதுடன் ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார். அவர் உயிருடன் வாழ்வது ஒரு மறு பிறப்பே என்று கூறவேண்டும். இன்னொரு தாக்குதலின் போது கொழும்பில் அவரின் வாசஸ்தலம்  ‘கொமாண்டோ’ முறையிலான தாக்குதலுக்கு உள்ளானது. அத்தாக்குதலின் போது அவரின் நான்கு மெய்க்காட்பாளர்கள் உயிரிழந்தனர். தனது வதிவிடத்தின் பின்பக்க சுவரினால் பாய்ந்து கொண்டதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தப்பித்துக்கொள்ள முடிந்தது. இன்னொரு முயற்சியாக அவரின் அமைச்சுக் காரியாலயத்திற்கு ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி அனுப்பப்பட்டிருந்தார். அமைச்சரின் காரியாலய அறையின் முன்பு பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட முயன்றபோது அவர் ஒத்துழைக்காமையினால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தன் அங்கியில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் நான்கு பொலீஸ் அதிகாரிகள் உயிரை இழந்ததுடன் அத்  தற்கொலைக் குண்டுதாரியும் இறந்து கொண்டார். நான் குறிப்பிட் கடைசி இரு சந்தர்ப்பங்களிலும் நானும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் உடனிருந்தமையினால் மயிரிளையில் உயிர் தப்பித்துக்கொண்டேன். நாம் சந்தித்த புலிப் பயங்கரவாதத்தின் பலவடிவங்கள் இவையாகும். 

இப்புலிப் பயங்கரவாதம்  இன்று ஏறத்தாள 380 000 மக்களை அகதி முகாம்களில் வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இம்மக்களின் துயரங்களோ சொல்லிலடங்கா. போராளிகள், பொதமக்கள் உள்ளடங்கலாக 25 000க்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாக்கப்பட்டு உள்ளனர். அண்மையில் இடம்பெயர்ந்தவர்களை விட, முன்னைய காலங்களில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 25 000 குடும்பங்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் அகதிகளாக உள்ளனர். 75 000 பேர்வரை இந்தியாவில் 113 அகதி முகாம்களில் உள்ளதாக இந்திய அரச அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருந்து புலிகளினால் இரு தசாப்தங்களின் முன் விரட்டியடிக்கப்பட்ட 75 000க்கும மேற்பட்ட (முஸ்லீம்) மக்கள் இன்றும் புத்தளத்தில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இன்றைய ஜனத்தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
 
இன்றைய இக்கூட்டத்தின் கருப்பொருளாகிய ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ அகதி முகாம்களில் வாழும் மக்களின் உடனடித்தேவைக்கு மேலாக அம்மக்களை மீளக்குடியமர்த்தல்,  உள்ளகக் கட்டமைப்புகளை மீள்நிர்மாணித்தல்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்திசெய்தல்; மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்பினை மேற்கொள்வதற்கான தொழில்களை ஆரம்பிற்பதற்கு வேண்டிய  உபகரணங்களை வழங்கல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை செய்யவேண்டி உள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக ஓர் முக்கியமான விடயத்தை செய்வதற்கான முனைப்புகளில் ஈடுபட வேண்டி உள்ளது. அதுதான் இனங்களிற்கு இடையில் ஒருமைப்பாட்டை; ஜக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடு. ‘இனங்களிற்கு இடையிலான ஜக்கியம்’  ஏன்பதே இன்றைய என்னுடைய பேச்சின் தொனியாக அமையப்போகிறது. ஏனென்றால் அவ்வாறான ஜக்கியத்தை ஏற்படுத்தாமல் ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ நாம் மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டங்களும் வீணானவையாகப் போய்விடும்.

நேற்றைய தினம் (04.06.09) நான் லண்டனில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தில் வெளிநாட்டலுவர்கள் அமைச்சர் றோகித போகொல்லகம தலைமையிலான ஆலொசனைக் கூட்டமொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சழூகமளித்தவர்களில் ஏறத்தாள அரைவாசியினர் சிங்களவர்கள் அரைவாசியினர் தமிழர்கள். பேச்சாளர் ‘இராணுவத்தின் வெற்றி’ தொடர்பாக குறிப்பிடும்போது அங்கு பிரசன்னமாயிருந்த சிங்களவர்கள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததையும்; அங்கு சழூகமளித்திருந்த தமிழர்களில் ஒருவரேனும் அவ்வாறு  கைகளை தட்டாததையும் காணக்கூடியதாக இருந்தது. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அங்கு சழூகமளித்திருந்த தமிழர்கள் பலரை நான் அறிவேன். அவர்கள் புலிகளிற்கு சார்பானவர்கள் இல்லை. நாங்கள் உண்மையில் இலைங்கையில் வாழும் இனங்களிற்கிடையில் ஜக்கியத்தை ஏற்படுத்துவதில் நாட்டமுடையவர்களாயின் நான் கூறிய இவ்விடயத்தை புறந்தள்ள முடியாது. சிங்களவர்கள தமிழர்களிற்கிடையிலான இந்தப் பிரிவானது தினம் தினம் விரிசலடைவதுடன் இரு துருவங்களை நோக்கி மையப்படுத்தப்படுகிறது. இந்த இன விரிசலானது இலங்கையில் மட்டுமல்ல இலங்கையர்கள் கணிசமாக வாளும் நாடுகளில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறது. இவ்வாறான இன விரிசலை ஒற்றுமையாக்க வேண்டுமாயின் இதற்கான காரணியை நாம் முதலில் புரிந்து கொள்ளல் வேண்டும்.

சிலரின் கூற்றுப்படீ தெற்கிலங்கையில், குறிப்பாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும்பான்மையான தமிழர்கள், சிங்களவர்கள் வாழ்வதைப்போல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை;  ஏனைய சிங்களவர்களிற்கு சமானமாகவே அவர்கள் வாழ்கிறார்கள. இவ்வாறான கூற்றிற்கு எனது பதில் அவ்வாறாக வாழம் தமிழர்களின் உள்ளங்களிற்கும் மனதிற்குள்ளும் புகுந்து நீங்கள் சிங்களவர்களிற்கு சமானமானவர்களாக வாழ்வதாக உணர்கிறீர்களா? நீங்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என நினைக்கிறீர்களா? ஏன்ற கேள்விகளை எழுப்பினால் நிச்சயமாக அவர்களின் பதில் இல்லை என்றே இருக்கும்.

இன்னுமொரு கருத்து உலாவுகின்றது. அதாவது புலிகள்தான் சகல பிரைச்சனைகளிற்கும் காரணம், தற்போது  புலிகள் இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்பதாகும். பயங்கரவாதம் என்பது அண்மைக் காலங்களில் உருவான ஒன்று. 1970களில் ஆயதப் போராட்டமே முதலில் ஆரம்பமானது. புலிகள் அவ்வாயுதப் போராட்டத்திற்கு பயங்கரவாதத்திற்குரிய செயற்பாடுகளை இணைத்துக் கொண்டதன் மூலம் அதனை ஓர் பயங்கரவாத அமைப்பாக மாற்றிக்கொண்டனர்.

1970க்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர் தரப்பிலிருந்து அரசியல் காரணங்களிற்காக ஒரு துப்பாக்கி வேட்டுவேனும் தீர்க்கப்பட்டது கிடையாது. ஆனால் இலைங்கை சுதந்திரமடைந்த நாள்முதல் தமிழர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான ஏற்பாடுகள் மற்றும்; அவர்கள் சிங்களவர்களிற்கு சமானவற்றவர்களாக நடத்தப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தலைவர்கள் பல எதிர்ப்பு நடைவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறான எதிர்ப்பு நடைவடிக்கைகளை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் சாத்வீக வளிமுறைகளினால் மேற்கொண்டிருந்தனர்.

இங்கு பிரசன்னமாயிருப்பவர்களில் யாராவது தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிய விரும்பினால் பண்டாரநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் என்பவற்றை படியுங்கள் மின்வலைப்பின்னல் தளங்களில அவை உண்டு, எனது நேரத்தை அவற்றை விபரிப்பதில் செலவிட நான் விரும்பவில்லை. பண்டாரநாயகா (பேச்சாளர் ‘Oxford Union’; கேட்போர் கூடத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரமாண்டமான பண்டாரநாயகாவின் படத்தை தன் சுட்டி விரலால் காட்டியவாறு) செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதே தமிழ் மக்களிற்கு பிரச்சனைகள் உண்டு என்பதற்கு அடையாளமாகும். அவ்வொப்பந்தம் நடைமுறைப்படத்தப்படவில்லை எனினும் அதிலிருந்து  இருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது என்னவெனில்  தமிழ்மக்களின் பிரச்சனைகள் இவ்வொப்பந்தத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமையாகும். இதேபோன்றே  டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தமும் அமைகிறது.

இவை 1970ஆம் ஆண்டிற்கு முன் அடையாளம் காணப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளாகும். 1970ஆம் ஆண்டின்பின் இன்னும் பல இனரீதியான பாகுபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு 1970ஆம் ஆண்டு ,அறிமுகப்படுத்தப்பட்ட இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறை. இந்த முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஓருவன். இந்த இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறையே இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுவதற்கு வித்திட்டது; அதுவே காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாகப் பருணமித்தது.
 
ஆயுதப்போராட்டம் பயனையும் ஈற்றுத்தந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத்தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களும் இவ்வடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளிற்கு, முழுமையாக இல்லையெனினும், ஓரளவிற்கு தீர்வினை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டவையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டால் அதில் சில விடயங்களிற்கு பிராந்திய ரீதியில் அதிகாரப்பரவல் செய்யப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மாகாண நிரலை எடுத்துக்கொண்டால் அதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள்  பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விட பன்மடங்காகும். மொழி உரிமை விடயத்தை எடுத்துக்கொண்டால் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இணங்கிய வகையில் 13வது திருத்தச்சட்டத்திலும், அதனைத்தொடர்ந்து ஒரு வருட இடைவேளையின்பின் கொண்டுவரப்பட்ட 16வது திருத்தச்சட்டத்திலும் முழுமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக 16வது திருத்தச்சட்டம் நிர்வாக மற்றும் பதிவேட்டு  மொழி தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாகும். இத்திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக சிங்களமும் வடக்கு கிழக்கில் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக தமிழும் அமையும். அவ்வாறாயின் தமிழ் மக்களின் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட்டு விட்டதே, இதற்குமேலும் என்ன? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.

துரதிஸ்டவசமாக இவையாவும் அரசியலமைப்பு சரத்துக்களே. இவ்வரசியலமைப்பு சரத்துக்கள் முழுமையாக இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு நான் ஏற்கனவே குறிப்பிட்ட 16வது திருத்தச்சட்டம் எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்ட வினைகின்றேன். இந்த 16வது திருத்தச்சட்டத்தின் உப பிரிவொன்றில் ஐனாதிபதி எந்தவோரு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கணிசமான மாற்று மொழி பேசுபவர்கள் வாழ்வார்களேயாயின், அந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவை இரு மொழிப்பிரிவாக பிரகடணப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்கள் தாங்கள் வாழும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் அடங்கும் அரச காரியாலயங்களில் சிங்களத்தில் கருமமாற்றுவதற்கும் அதேபோன்று தெற்கில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள  அரச காரியாலயங்களில் தமிழில் கருமமாற்றுவதற்கும் வகைவகுக்கும்  விதத்திலேயே இச்சரத்து அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 29 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றினுள் சில பிரிவுகள் வடக்கு கிழக்கிலும் குறிப்பாக கிழக்கிலும், 20க்கும் மேற்பட்டவை தெற்கில் அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமாகும். இப்பிரகடணங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பார்ப்போமாயின் வடக்கு கிழக்கில் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அத்தனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் சிங்களத்தில் இலகுவாகக் கருமமாற்ற முடியும். ஆனால் தெற்கில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலேனும் தமிழில் கருமமாற்ற முடியாது. இவவுதாரணத்திலிருந்து அரசியலமைப்பின் ஒரே சரத்து எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இங்கு பாரபட்சமென்பது சட்டவாக்கத்தில் இல்லை அதனை நடைமுறைப் படுத்தலிலேயே உள்ளது.

இதை ஓர் உதாரணத்திற்கே எடுத்துக்காட்டியுள்ளேன். இதைப்போல அரசியல் சாசனத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத எத்தனையோ விடயங்களை, அதிலும் குறிப்பாக 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக, என்னால் விளக்கிக்கொண்டே போக முடியும். எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் காரணமாக என்னால் அவை யாவற்றையும் விபரித்து கூறமுடியாமல் உள்ளது. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நாம் அரசியல் தீர்வுகளை பற்றி அல்லது அரசியலமைப்பு மாற்றங்களைப்பற்றி எல்லாம் பேசிக்கொள்ளலாம், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய மனப்பாங்கு இல்லையெனில் நாம் இப்பிரச்சனைகளிற்கு தீர்வுகண்டு இன ஜக்கியத்தை எற்படுத்த முடியாது. நாம் இப்பிரச்சனைகளை திடசங்கர்ப்பத்துடன்   அணுகினாலேயே உண்மையான இன ஜக்கியத்தை எற்படுத்த முடியும். இன்றைய காலத்தின தேவையானது அரசியலமைப்பின் 13வது மற்றும் 16வது திருத்தங்களில் கொண்டு வரப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன்பின்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு அதற்குரிய முறையில் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருதல்.

புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க சட்ட அறிஞர் உருத்திரகுமார் தலைமையில் செயற்குழு : தவிபு அனைத்துலக இணைப்பாளர் பத்மநாதன்

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.