கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மக்கா செல்ல 100 இலவச விசாக்கள்; சவூதி வழங்கியுள்ளது

ரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வோருக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 100 விசாக்களை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு அமையவே கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம், உம்றா கடமைமை நிறைவேற்றச் செய்யும் 100 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசாக்களை வெளிவிவகார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

இந்த இலவச விஸாக்கள் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் வைத்து அமைச்சர் போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இலவச விசாக்களை வழங்கியமைக்காக அமைச்சர் போகொல்லாகம சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

ரமழான் மாதத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்வது வழக்கம். பல்வேறு காரணங்களுக்காக சவூதி அரசாங்கம் இம்முறை உலக நாடுகளிலிருந்து உம்றா கடமைக்காக வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை குறைத்திருந்தது. இதனடிப்படையில் இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் போகொல்லாகம இது குறித்து விசேட கவனம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய தூதுவர், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற் தடவையாக இலவச விசாக்களை வழங்கவிருப்பதாக கூறினார். அமைச்சரினால் தெரிவு செய்யப்பட்டு பெயர் வழங்கப்பட்ட, முதல் தடவையாக உம்றா கடமையில் ஈடுபடுவதற்காக செல்லும் 100 பேருக்கே இந்த இலவச விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் தொடர்பு: பாக். பிரதமர் தெரிவிப்பு

pakistanprimeminister.jpgஇலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ராசா கிலானி தெவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கிழக்கு பாகிஸ்தான் நகரான லாஹுரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

மார்ச் மாதம் 3ஆம் திகதி லாஹுர் கடாபி மைதானத்திற்கருகில் இலங்கை கிக்கெட் வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த 12 ஆயுத பாணிகளுக்கு விடுதலைப் புலிகள் நிதியளித்ததற்கான தகவல்கள், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் கிலாணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வாரம் லிபியாவில் சந்தித்த போது மேற்படி தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் ஈடுபாடு பற்றி அவருடன் பிரஸ்தாபித்ததாகவும் கிலானி கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக இலங்கை புலனாய்வு அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக விரைவில் ஒரு குழுவை அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று கடந்த ஜூன் மாதம் ரெஹ்றிக் ஈ தலிபான் பஞ்ஜாப் குழு உரிமை கோரியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வீரர்கள் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்ப்டடது.

இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்ததோடு 6 பாகிஸ்தான் பொலிஸாரும் இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி உட்பட பல கிரிக்கெட் அணிகள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்வதை ரத்துச் செய்தன.

சர்வதேச கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிட்டிருந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது.

பெடரர், ஜோகோவிக் முன்னேற்றம்

federer.jpgஅமெரிக் காவில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-ஆவது சுற்றில் லேடன் ஹெவிட்டை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில், பெடரர் 4-6, 6-3, 7-5, 6-4, என்ற செட் கணக்கில் ஹெவிட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

4ஆம் நிலை வீரரான ஜோகோவிக், ஜெசி ரைட்டனை (அமெரிக்கா) 6-7, (2-7), 6-3, 7-6 (7-2), 6-4 என்ற செட்களில் தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் பெர்னாண்டோ (ஸ்பெயின்), சோடர்லிங் (சுவீடன்), நிகோலாய் (ரஷியா) ஆகியோர் வென்று 4-வது சுற்றில் நுழைந்தனர். 

ஆப்கானிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளின் முடிவுகள் ரத்து

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்கு மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் நானூற்று நாற்பத்து ஏழு வாக்குச்சாவடிகளுக்கான முடிவுகளை ரத்து செய்துள்ளனர்.

கடந்த மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தல்களையடுத்து, நாட்டின் சுமார் 28 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவிலான வாக்கு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ளன.

இதுவரை எண்ணப்பட்டுள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளின்படி, அதிபர் ஹமீத் கர்சாய் 49 வீதத்தை எட்டிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, போட்டி வேட்பாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 32 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஷரபோவா, ரோட்டிக் அதிர்ச்சித் தோல்வி

saforova6.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் பிரிவில் அமெரிக்காவின் ஆன்டி ரோட்டிக், மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் புதுமுக வீரர்-வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினர்.

உலகின் 13-ஆம் நிலை வீராங்கனையான பெட்ரோவா (ரஷியா) 6-4, 6-1 என்ற கணக்கில் சீனாவின் செங்கை வென்றார்.

6-ஆம் நிலை வீராங்கனை சுவெட்லானா குஸ்னெட்சோவா (ரஷியா) 7-5, 6-1 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷகார் பீரை தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தார்.

உலகின் 29ஆவது இடத்தில் இருப்பவரும் ரஷ்யாவின் பிரபல வீராங்கனையுமான மரியா ஷரபோவா, புதுமுக வீராங்கனையான அமெரிக்காவின் மெலின் ஒடின்-யிடம் 3-6, 6-4, 7-5 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இதேபோல 5-ஆம் நிலை வீரரான ஆன்டி ரோட்டிக்கும் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

அமெரிக்காவை சேர்ந்த புதுமுக வீரர் ஜான் இஸ்னொ 7-6, 6-3, 3-6, 5-7, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி சக நாட்டை சேர்ந்த ரோட்டிக்கை வீழ்த்தினார்.

காதலுக்காக கண்களில் தீ வைத்துக் கொண்ட காதலி

06-eye.jpgகாதலனை பார்க்காத முடியாத கண்கள் தேவையில்லை என்று கூறி காதலி ஒருவர் கண்களில் தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர்.

இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்லை என்று கூறி தனது கண்ணில் தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து தீ, முகம், கைகள், மார்பு என பரவி படுகாயம் அடைந்தார் மேனகா. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜஸ்வந்த்சிங் புத்தகத்திற்கு மாநில அரசு விதித்த தடை குஜராத் மேல் மன்றால் நீக்கம்

ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதல்வர் மோடி அரசு விதித்த தடையை அம்மாநில மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. தடை விதிக்கப்பட்டதில் சட்ட விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

பா. ஜ. மூத்த தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் சமீபத்தில், “ஜின்னா – இந்தியா, பிரிவினை, சுதந்திரம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது புத்தகத்திற்கு, குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து, மணீஷி ஜானி, பிரகாஷ் ஷா ஆகியோர் குஜராத் மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை, தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது.

குஜராத் அரசு விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், தங்கள் உத்தரவில் கூறியதாவது:- ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டதில், உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. புத்தகத்தில் உள்ள விவரங்கள் தேசிய நலனுக்கு எதிரானவை மற்றும் மக்களை திசை திருப்புபவை எனக் கூறி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 95 ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை மூலம், ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில், புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிக்கையில் குறிப்பிடவில்லை. மேலும் புத்தகத்தை படிப்பதன் மூலம், எந்த வகையில் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படும் என்பதையும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில், புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட குஜராத் மாநில அரசு தீர்மானித்தால், அதற்கு தடையில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். தன் புத்தகத்திற்கு மோடி அரசு விதித்த தடையை குஜராத் மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதை ஜஸ்வந்த் சிங் வரவேற்றுள்ளார். தீர்ப்பு, தனக்கு எழுச்சியை உண்டாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏனைய மாநிலங்களில் இந்தப் புத்தகத்திற்குத் தடைவிதிக்கப்படவில்லை.

கேரள சாப்பாட்டு போட்டி – தொண்டையில் பாண் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கேரளாவில் நடைபெற்ற சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் தொண்டையில் பாண் சிக்கி மூச்சுத் திணறி இறந்துள்ளார்.

ஓணம் பண்டிகையையொ ட்டி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கம். கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியில் உள்ள ஓர் இளைஞர் அமைப்பு சார்பில் சாப்பாடு போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில், 2 நிமிடத்தில் அதிக அளவில் பாண் சாப்பிடுபவருக்கு ரூ. 1,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சசி (35) என்பவர் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். போட்டியைக் காண அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சசியின் தொண்டையில் பாண் சிக்கியது. இதில் மூச்சு திணறிய அவர் மயங்கி விழுந்தார். அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் நியமனத்தில் இழுபறி; ரெட்டியின் மகனுக்கு 148 பேர் ஆதரவு

ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் முடிந்த கையோடு அங்கு தற்போது முதல்வர் பதவியைப் பிடிக்கும் முயற்சிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 148 எம். எல். ஏக்கள் அணி திரண்டுள்ளனர்.

ஆனால் அவசரப்பட்டு அடுத்த முதல்வரைத் தீர்மானிக்க விரும்பாமல் நிதானமாக முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட் டுள்ளது.

உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப் பதை விட ஆந்திர நலனுக்கும், கட்சிக்கும் உகந்த முடிவை எடுக்க ஆர்வமாக உள்ளதாம் காங்கிரஸ் தலைமை. தற்போது ஆந்திர நிலையை கட்சி மேலிடம் உன் னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது. இதன் காரணமாகவே ரோசய்யாவை உடனடியாக இடைக்கால முதல்வராக கட்சி மேலிடம் அறிவித்து அவரை உடனடியாக பதவியேற்கவும் செய்தது. எனவே நிதானமாக அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது காங்கிரஸின் எண்ணம்.

2004ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே ராஜசேகர ரெட்டியின் அணுகுமுறைதான்.

அதுவரை பல்வேறு கோஷ்டிகளாக பிளவுபட்டுப் போயிருந்த காங்கிரஸை ஒன்றுபடுத்தி அனைவரையும் ஓரணியில் நிற்க வைத்தவர் ராஜசேகர ரெட்டி. ஒரே கட்சி, ஒரே கோஷ்டி என்ற அளவுக்கு காங்கிரஸை ஆந்திராவில் கட்டுக் கோப்பான கட்சியாக கடினப்பட்டு மாற்றி வைத்திருந்தார் ரெட்டி. இப்போது அவரது வாரிசைத் தேர்வு செய்யும் போது கட்சிக்குள் குழப்பமாகி, மறுபடியும் கட்சியில் பூசல்கள் வெடித்து விடாமல் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை யோசிக்கிறதாம்.

இருப்பினும், இப்போதைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கரம் தான் கட்சியில் ஓங்கியிருப்பதாக தெரிகிறது. அவரைத் தவிர வேறு யாரும் தெளிவான, வலுவான தலைவராக தெரியவில்லை. அதேசமயம், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படுபவர்கள் இளம் எம்.பிக்கள், எம். எல். ஏக்கள்தான். அவர்களில் பெரும்பாலானோர் ராஜசேகர ரெட்டியால் அரசியல் அங்கீகாரம் தரப்பட்டவர்கள்.

மற்றபடி மூத்த தலைவர்களோ அல்லது மூத்த எம். எல். ஏ. எம். பியோ யாரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக இவ்வளவு தீவிரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர காங்கிரஸ் முழு ஆதரவுடன் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 36 அமைச்சர்கள் உட்பட 148 எம். எல். ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.

15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய நெல்லை பெண் கைது

திருநெல்வேலியில் 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து, 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  திருநெல்வேலி மற்றும் தாழையுத்து பகுதிகளில் மீனா என்ற இளம்பெண் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு மாயமாகி விட்டார்.

மேலும் அவர் பல வீடுகளி்ல் வேலைக்கு சேர்ந்து உரி்மையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்று பிறகு அவர்கள் கண் அயரும் நேரத்தில் நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது போலீஸில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து மீனாவை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விஎம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மீனா நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று மீனாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனார். அப்போது மீனா, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் போலீஸாரிடம் கூறுகையில், இதுவரை 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவர்களிடம் இருந்து நகைகளை திருடி விற்று ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்தேன். தற்போது பணம் காலியானதை தொடர்ந்து விஎம் சத்திரத்தில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர வந்தேன் என்றார்.

போலீஸார் அந்த பெண்ணிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர். மேலும், 35 பவுன் நகைகளை விரைவில் மீட்க இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.