
::விளையாட்டு
::விளையாட்டு
இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாயின் நூற்றுக்கு நூறு வீதம் தங்களது உழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
14-வது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சென்னை அணி அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.
இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சென்னை அணி தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் (இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் திகதி சென்னையில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி தலைவர் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.
இது ஒரு நீண்ட பயணம் – பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம். அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.
டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து நிறைய ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களுக்கு 280 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் பிராத்வெயிட் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஆவது நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 75 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக பிராத்வெயிட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடராட்ட நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலக்கு காப்பாளரான இளம் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளது.
இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசிய போது ,
ரிஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரிஷப்பண்ட் சிறந்தவர். தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.
ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சீசனுக்கு டெல்லி அணியின் தலைவராகக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன். இப்போது அவர் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று 12ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும் உதைபந்து போட்டிகள் கடந்த 07ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விளையாட்டுப் போட்டிகளில் நீர் விளையாட்டுகள், வீதி சைக்கிள் ஓட்டப் போட்டிகள், டன்ஸி ஸ்போட்ஸ், ஜிம்நாஸ்டிக், ஜூடோ, குறி பார்த்து சுடல், பாரம் தூக்கும் போட்டிகள் மற்றும் வூஷ¤ போட்டிகள் என்பன இன்று ஆரம்பமாகின்றன.
15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006 ஆம் ஆண்டிலே கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் வழமைபோல் சீனா 124 தங்கம், 70 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றதுடன், தென் கொரியா 44 தங்கம், 39 வெள்ளியும், 70 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், யப்பான் 43 தங்கம், 51 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் கிடைத்தன. 36 நாடுகள் பங்குபற்றிய இந்த போட்டியில் இலங்கைக்கு 32 ஆவது இடம் கிடைத்தது.
ஆசிய நாடுகளிடையே நடைபெறும் பிரதான விளையாட்டுப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 16 ஆவது முறையாக இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சீனாவின் குவென்ஷ¤ நகரில் நடைபெறுகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த 42 விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை சார்பாக இம்முறை 22 நிகழ்ச்சிகளில் 138 வீரர்கள் கலந்துகொள்வதுடன், 29 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிக்காக குவென்ஷ¤ நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமமானது, 2.73 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் அடங்கலாக 14000 பேருக்கு அதில் தங்குமிட வசதியுண்டென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மேலதிகமாக 14000 பேர் அன்றாட கடமையில் ஈடுபடுவார்களென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.









