புளட்

புளட்

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 05 & 06 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 05 & 06:

தேசம்: கிட்டத்தட்ட 80 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் காந்தியத்தோடு உங்களுடைய செயற்பாடுகள் இருக்குது. அதுக்குப் பிறகு காந்தியம் எவ்வளவு காலம் இயங்கியது என்று நினைக்கிறீர்கள்?

அசோக்: 82 இல் வவுனியாவில் விமானாப்படைத் தாக்குதல் நடக்குது தானே. அது புளொட்டின்ட தோழர்கள்தான். அற்புதம் இன்னுமொரு தோழரும் சேர்ந்து தான் அந்த விமானப்படை தாக்குலை செய்கின்றார்கள்.

தேசம்: அற்புதம் இப்ப எங்க இருக்கிறார்?

அசோக்: லண்டனில். அதுல ஒரு தோழர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அற்புதம் பிறகு கைது செய்யப்பட்டவர். அதுலதான் காந்தியம் மீதான சந்தேகம் வருது.

தேசம்: எண்பதுகளிலேயே?

அசோக்: இது வந்து 83 ஆரம்பத்தில என்று நினைக்கிறேன். காந்தியம் மீதான போலீஸ் கண்காணிப்பு அதுக்குள்ள தான் வருது. முதலே சந்தேகம் இருந்திருக்கு, இயக்கத்துடன் தொடர்பு இருக்கு எண்டு. இதுல உறுதிப்படுத்தப்பட்டது. கடும் கண்காணிப்பு, அதன் பிறகு 1983 ஏப்ரல் என நினைக்கிறன். உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: வேறு யார் யார் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்த நிறைய பேர்… அதுக்கு முதல் ஒருதரம் சந்தேகத்தின் பெயரில் குமரன் தோழரும் கைது செய்யப்படுகிறார், கோயில்குளம் காந்தீய ஒப்பிசிலிருந்து. அப்பவே சந்தேகம் வந்திட்டு, புளொட்டுக்கு வேலை செய்பவர் குமரன் என்று. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பிறகு விடுவிக்கப்படுகின்றார்.

தேசம்: ராஜசுந்தரம் எல்லாம் இந்த தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: காந்தியத்துக்கும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி அச்சந்தேகமும் இருந்ததினாலும் தான் உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: காந்தியத்தில் இருக்கும்போது இது தொடர்பில் ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா?

அசோக் : காந்தியத்தில் இருக்கும்போது நான் கைது செய்யப்படவில்லை. நான் முதன் முதலாக கைது செய்யப்படும்போது புளொட்டில் …

தேசம்: 80க்கு பிறகுதான் அது நடக்குதா

அசோக்: ஓம்

தேசம்: அப்ப அதைப்பற்றி பிறகு கதைப்போம். இப்ப நீங்கள் பதின்ம வயதில் இருக்கிறீர்கள் அரசியல் துடிப்பு அதெல்லாம் சரி. காதலின் பருவமும் இதுதான். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பிற்காலத்தில் நாங்கள் எல்லாரும் அறிந்த உங்களுக்கும் செல்விக்குமான உறவு. அது எப்படி உருவாகிற்று?

அசோக்: இளம்வயது கோளாறுகள் எல்லோருக்கும் இருக்கும் தானே. அது நிறைய நடந்திருக்கு. செல்வியின் உடனான தொடர்பு எப்படியென்றால். அந்த நேரம் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. பத்திரிகைகளில் பேனா நண்பர்களின் முகவரி வரும்.

தேசம்: அது என்ன என்று சொல்ல முடியும் என்றால் நல்லா இருக்கும்.

அசோக்: பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பேனா நண்பர் பகுதி என்று ஒன்று வரும். அதில பேனா நட்புக்களை விரும்புகின்றவர்களின் பெயர் முகவரி அவர்களின் விருப்பங்கள் ஈடுபாடுகள் பொழுது போக்குகள் பற்றிய விபரங்கள் இருக்கும். உதாரணமாக நான் அசோக் என்றால்… அசோக் வயது போட்டு எனக்கு விருப்பமான துறை, கவிதை, கட்டுரை, இலக்கியம், விளையாட்டுத்துறை என்று எல்லாம் வரும். அப்ப அதில் ஈடுபாடு கொண்டவங்க எல்லாம் பென் ஃப்ரெண்ட் ஆவார்கள். கடிதத் தொடர்புதான்.

தேசம்: அந்த முகவரிகள் பத்திரிகையில் வரும். அதுல இருந்து உறவுகள் ஏற்படும்.

அசோக்: அந்த உறவினால் என்ன நடக்கும் என்று கேட்டால் உங்களுக்கு இடையே ஆழமான ஒரு கருத்து பரிமாற்றத்தை உரையாடலை அது கொண்டுவரும். ஏனென்றால் உங்களுடைய துறை சார்ந்த நபருடன் தானே நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்..

தேசம்: ஃபேஸ்புக்கும் முதல் வந்த வடிவம்…

அசோக்: பேஸ்புக் என்றது வேறு உலகம். பேனா நட்பு என்பது இது ஆரோக்கியமான உலகம். அது உண்மையில ஆழ்ந்த நட்புக்கான ஒரு வெளி. எழுத்துக்கூடாக நீங்க பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்களை கதைப்பீங்க. உரையாடல், விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வீங்க… அப்படித்தான் எனக்கு நிறைய பென் பிரண்ட் இருந்தது. அப்படியொரு பென் பிரண்ட் தான் செல்வியும்…

தேசம்: எந்த வயசு கட்டத்துல வந்தது… ?

அசோக்: நான் நினைக்கிறேன், 16 17 வயசுல வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இளந்தளிர் வாசகர் வட்டம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் என நினைக்கிறன்… அந்த காலகட்டத்திலேயே தான் தொடர்பு வருகிறது. பிறகு நான் காந்தியத்துக்குள்ள வரேக்க செல்வி காந்தியத்துக்கும் வாரா என்ட தொடர்பில. நான் சந்திக்க முதல், செல்வியைச் சந்தித்தது என்னுடைய நண்பர்கள்தான். செல்வியை சந்திக்கிற என்னுடைய நண்பர்கள் செல்வி தொடர்பாக அவர்கள் தாற அபிப்பிராயம் செல்வி மீதான பெருமதிப்பை ஏற்படுத்துது.

தேசம் : உங்களுக்கு 16,17 வயசுல நீங்க தொடர்புகொண்டா அவாவுக்கு எத்தனை வயசு அப்ப?

அசோக்: செல்வி என்னை விட 3 வயது இளமை.

தேசம்: அப்ப அவாவுக்கு கிட்டத்தட்ட 14 வயசு இருக்கும். அப்ப இது பேனா நட்பு என்ற ரீதியில் தான் உருவானது. எப்ப இது நீங்க காதலியாக அல்லது…

அசோக்: அது நீண்ட காலம். காந்தியத்துக்குள்ள வந்ததுக்கு பிறகு தோழர்கள் நிறைய பேர் செல்வியை சந்திக்கினம். செல்வி காந்தியத்துக்குள் வந்து வேலை செய்கிறார். பிறகு புளொட்டுக்கு வாறா. புளொட்டின் ஆரம்ப காலத்தில் தான் அந்த நட்பு உருவாகிறது.

தேசம்: அது எந்த ஆண்டு காலகட்டமாக இருக்கும்?

அசோக்: 83இல் அதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு முதல் நெருக்கமான பென் பிரண்ட் தான். நேரடியாக சந்தித்த பிறகுதான் அந்த லவ் எனக்கு உருவாகுது.

தேசம்: எப்ப நேரடியாக சந்திச்சனீங்கள்?

அசோக்: 82 நேரடியா சந்தித்திருப்போம்.

தேசம்: நீங்கள் காந்தியத்துக்குள்ள வேலை செய்யும்போது வவுனியாவுக்கு போறீங்க. வவுனியாவில் தான் அந்த சந்திப்பு ஏற்படுதா?

அசோக்: ஓம். நான் முதன்முதல் சந்தித்தது சேமமடுவில. செல்வியின்ர வீட்டில. அண்ணி யாழ்ப்பாண யூனிவசிற்றில படித்துக்கொண்டிருந்தவ. அப்ப செல்வி, யாழ்ப்பாணத்திலே அண்ணியைச் சந்திச்சு இருக்காங்க. அப்ப அண்ணி சொன்னா “செல்வி வந்தது. யாழ்ப்பாணம் வந்தனீ, செல்வியை சந்தித்துவிட்டு போ” என்று.

தேசம்: அப்ப நீங்க வவுனியாவில் சந்திக்கவில்லையா ?

அசோக்: வவுனியாவில் சேமமடுவிலதான் தான் சந்திச்சன். செல்வி யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்டரில படித்துக் கொண்டிருந்தவ. அப்ப நான் யாழ்ப்பாணம் வர, செல்வி போயிற்றாங்க சேமமடுவுக்கு. அப்ப அண்ணி சொன்னா, “செல்வி சேமமடுவுக்கு போயிட்டுது, வேணும்டா அங்க போய் சந்தித்துவிட்டு போ” என்று. அப்ப நான் வவுனியா போகும் போது, ஓமந்தையில் இறங்கி , சேமமடுவுக்கு போய் சந்திச்சிட்டுத் தான் ஊருக்கு போனான்.

தேசம்: அப்போ உங்களுக்கு…

அசோக்: லவ் எல்லாம் இல்லை. பிரெண்டாதான் இருந்தது.

தேசம்: இது எத்தனையாம் ஆண்டு நடந்தது ?

அசோக்: 83ஆக இருக்க இயலாது . 82 நடுப்பகுதியாக இருக்கலாம்.

தேசம்: செல்வியின் அரசியல் மாற்றம் என்பது காந்தியத்திலிருந்து புளொட்டுக்குப் போக… நீங்கள்தான் செல்வியையும் காந்தியத்துக்கு கொண்டு வாறீங்கள்…

அசோக்: ஓம் என்ட பிரண்ட் என்டதும் நிறைய பேர் சந்திக்கினம். அப்ப காந்திய ஈடுபாடுகள் வருது. சேமமடு பக்கத்தில காந்திய வேலைத்திட்டங்கள் எல்லாம் இருந்தது. அப்ப காந்திய கருத்தரங்குகளிலும் செல்வி கலந்துகொண்டார்.

தேசம்:அப்ப நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களா? பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது காந்தியத்தில்?

அசோக்: காந்தியத்தின் சிறுவர் பாடசாலைகள் முழுக்க பெண்கள் தானே ஆசிரியர்கள். வொலன்டியேர்ஸில குடியேற்றத் திட்டங்கள் போன்ற வேலைகளுக்கு ஆண்கள் ஈடுபட்டார்களேயொழிய கல்வி, சுகாதாரம் சார்ந்த விடயங்களில் எல்லாம் பெண்கள்தான் ஈடுபட்டார்கள். கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் அவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அப்ப செல்வி வந்து இதுல இல்ல. செல்வி வொலன்டியராக கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுற ஆளாத்தான் இருந்தா.

பாகம் 06:

தேசம்: காந்திய இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மற்றவர்களுடனான உறவுக்கும், அவருடனான உறவுக்கும், எப்படி அது உங்களுக்கான காதல் என்ற நிலைக்கு போச்சுது ?

அசோக்: பேனா நட்பு என்ற உறவு வரும் போது அது இலக்கிய உறவு மாத்திரமல்ல. எங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால, அது ஒரு அரசியல் சார்ந்த உறவாகவும் இருக்கும்தானே. ஒரு ஆழமான உரையாடலாக இருக்கும். எங்கட விருப்புக்கள் இதனை தீர்மானிக்கும். அத்தோட பேனா நட்பு பரஸ்பரம் ஆழமான புரிதலை நேசிப்பை அன்பை உருவாக்கும். ஆணும், பெண்ணுமாக இந்த நட்பு இருக் கிற பட்சத்தில love வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. அப்படித்தான் எங்களுக்குள்ள love வந்தது.

தேசம்: நீங்க அந்த உறவு வருவதற்கு முதல் நீங்கள் புளொட்டில் இணையவில்லை. காந்திய இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள்.

அசோக்: இரண்டிலும் இருக்கிறேன். அதற்குப் பிறகு செல்வி எங்களோட வந்த வேலை செய்யத் தொடங்குகிறா. காந்தியத்திலும் ஆண், பெண் உறவு என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. தோழமையுடன் இருந்தது. காதல்களும் இருந்தது. காதல்களும் கூட ஆரோக்கியமான உறவாகதான் இருந்தன.

தேசம்: ஆரோக்கியமான காதல் எனும் போது ? நீங்கள் எதைக் குறிப்பாக சொல்லவாறீங்கள்?

அசோக்: ஒரு பரஸ்பரம் சமநிலை. இப்ப நாங்க சொல்றோம் தானே ஒரு ஆணாதிக்கத்தனம் இல்லாமல் பரஸ்பரம் உரிமைகளை கொண்ட, சமநிலையில் தோழிகளாக பார்த்தல், ஒரு ஆரோக்கியமான சமநிலை உரையாடல். சமத்துவம். ஒரு சிக்கல் இருக்கு தானே, காதலுக்குள்ள. காதல் என்றாலும் கூட ,அதுக்குள்ளேயும் ஒரு ஆணாதிக்கத்தனம், ஆளுமை ஒன்று இருக்கும். அதிகாரம் ஒன்று இருக்கும். அந்த அதிகாரமற்ற முறையில் சுதந்திரமான உண்மையான நேசிப்பு கொண்ட காதல் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியம் இருந்தது.

தேசம்: பொதுவாகவே காதல் சம்பந்தமான விஷயங்கள் அது மலரேக்க தனிப்பட்ட எதிர்காலம் சம்பந்தமாக தான் கூடுதலாக கதைக்கிறதா இருக்கும். தாங்கள் எப்படி எதிர்காலத்தைக் கொண்டு போவது. இது வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருந்திருக்கும். ஏனென்றால், ரெண்டு பேருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். அப்ப உங்களுடைய உரையாடல் பொதுவாகவே அரசியல் சார்ந்து தான் இருக்குமா அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்து கதைக்கப்படுமா ?

அசோக்: ஆரம்ப காலத்தில பேனா நட்பில இருக்கக்க தனிப்பட்ட எங்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் விருப்பங்கள் என்று என்னவெல்லாமோ கதைத் திருக்கிறம். காதல் என்று வரும் போதும் தனிப்பட்ட விஷயங்கள் கதைத்திருப்பம். எதிர்கால இருவரின் இணைந்த வாழ்வு பற்றி நிறைய கதைத்திருக்கிறம். செல்வி மீது செல்வியின்ர அம்மம்மா, அம்மா எல்லோரும் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாங்க. செல்விக்கு அப்பா இல்ல. எங்க love செல்வியின்ர அம்மாவுக்கு தெரிய வந்த போது, செல்வியின்ர அம்மா எனக்கொரு கடிதம் எழுதி இருந்தாங்க. கடிதம் ஒரு தாயின்ர நியாயத்தை கொண்டிருந்தது. அது எனக்கு கவலைய வேதனைய கொடுத்திச்சி. படிக்க வேண்டிய வயதில் காதலா என்ற குற்ற உணர்வை என்னில வந்தது. செல்வியின்ர எதிர்கால நல்வாழ்வு என்னால வீணாகிவிடுமோ என்றெல்லாம் நான் அப்ப யோசிச்சி இருக்கிறன்.

தான் கடிதம் எழுதினது பற்றி செல்வியிற்ற சொல்ல வேண்டாம் என அம்மா கேட்டிருந்தா. நான் அத பற்றி செல்வியிற்ற சொன்னதில்ல. நானும் செல்வியும் அம்மாவை ஏமாற்றிவிட்டோமோ என்று இப்ப நினைக்கிறன்.

இயக்கத்துக்கு வந்தபிறகு முழுக்க முழுக்க இயக்கம் சார்ந்த உரையாடல்களாகத் தான் இருந்தது. அடுத்தது இயக்கத்துக்கு வந்ததுக்கு பிறகு இரண்டு பேரும் பிஸியாகிட்டம். அப்ப சந்திக்கிறதும் குறைவு. நாங்க கூடுதலாக சந்திக்க தொடங்கினது யாழ்ப்பாணம் வந்த பிறகுதான்.

தேசம்: உங்கள் அரசியல் தெளிவு மற்ற தோழர்களிடம் இருந்ததா?

அசோக்: இருந்தது ஏனென்றால் வாசிப்பும், அரசியல் அறிவூட்டல்களும் நிறைய நடந்தது. காந்தியத்தில் வேலை செய்த நிறைய தோழர்களைப் பார்த்தீர்கள் என்றால் நான் சந்தித்த தோழர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தாக்கள் தான். அதற்குக் காரணம் பின்புலம் புளொட் இருந்தது. புளொட்டுக்குள்ள வந்த தோழர்களை பார்த்தீர்களென்றால் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்த ரீதியாக வளர்ச்சி அடைந்து தோழர்களாக தான் இருந்திருப்பார்கள். தலைமையை விடுங்கள், தலைமை தொடர்பா எங்களுக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அதுக்கு கீழ வந்த தோழர்களைப் பார்த்தீர்களென்றால் அவங்க கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்து தான் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். புளொட்டை தேர்வு செய்வதற்கான அரசியல் தெளிவு ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.

ஏனென்றால், அந்த கால கட்டங்களில் தோன்றிய இயக்கங்கள் தொடர்பாக புலிகள் தொடர்பான விமர்சனம் இருக்கு அவங்களுக்கு. மார்க்சிய ஐடியோலொஜி கொண்ட இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளொட் இருக்கு. அப்ப அவர்கள் புளொட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் புளொட் மக்கள் மத்தியில் வேலை செய்யுது. அவர்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டுமென்ற அபிலாசை இருக்கின்றபடியால் அவங்கள் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்க. புளொட்டுக்கு வந்ததுக்கு பிறகு நான் சந்தித்த தோழர்கள் முழுப் பேரும் அரசியல் வளர்ச்சி கொண்டவர்களாக இருந்தாங்க. மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வமும், அபிலாசையும் கொண்டவர்களாக இருந்தாங்க.

தேசம்: யாழ்ப்பாண நிலையும் இப்படித்தான் இருந்ததா?

அசோக் : 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான், யாழ்ப்பாணத்தில புளொட்டினுடைய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கு முயல்கிறோம். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் அமைப்புகள் இருக்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியும், தோழர் குமரனும் தான் அங்க முக்கியமான ஆட்களாக இருந்தவை. சத்தியமூர்த்தியும், ரிங்கோ கேதீஸ்வரனும் யாழ்ப்பான யுனிவர்சிட்டியில் இருந்தபடியால், அங்கு பெரிதாக வேலை செய்ய முடியவில்லை. புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அவ்வளவுதான்.

எனக்கு தெரிஞ்சு யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அண்டர்கிரவுண்டுல சுழிபுரத்தில் ஒரு சில தோழர்கள் வேலை செய்தார்கள். சிவசண்முகமூர்த்தியுடன் சுந்தரத்துடன் இயங்கியவர்கள் அவர்கள்.
வெகுஜன மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை. அந்த காலகட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பாக EPRLF இருந்தது. எல்லா வகையிலும் அவங்கள் பலமான அமைப்பாக இருந்தவங்க. கருத்தியல் சார்ந்தும் நிறைய வளர்ச்சி அடைந்த தோழர்கள் அவங்களிட்ட இருந்தாங்க. எங்களுக்கு அப்படி இல்ல. அடுத்தது பொலிஸ் நெருக்கடி ,கண்காணிப்புக்கள் இருந்தபடியால யாழ்ப்பாண பொறுப்பாக இருந்த குமரன் தோழரால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதால குமரன் 83 க்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியாவில் எங்களுடன் தான் வேலை செய்தவர். 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான் மக்கள் அமைப்பு அரசியல் வேலைத்திட்டம் என்று யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறம்.

தேசம்: இந்த காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது? எவ்வளவு தூரம் பெண்கள் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள்? அரசியலை நோக்கி அல்லது பெண்களை அரசியலை நோக்கி கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?

அசோக்: காந்தியத்தில் வேலை செய்த பெண்கள் பலரும் புளொட்டில் இணைகின்றனர். நிறைய பெண் தோழர்கள். சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 83க்கு முன்னர் நிறைய பாசறைகள் நடந்தது.

தேசம்: 83 ஜூலைக்கு முதலே இந்த அரசியல் வகுப்புகள் தீவிரமாக நடக்கிறது…

அசோக் : ஓம், தீவிரமாக நடந்தது. யாழ்ப்பாணத்தில நடக்கேலையேயொழிய, அங்கால நிறைய நடந்தது. வவுனியாவில சமணர்குளம் என்ற இடத்தில தொடர்ச்சியாக அரசியல் பாசறைகள் நடந்தது. தங்கராஜா என்ற தோழர் பழைய JVP தோழர் அரசியல் வகுப்புக்கள் எடுத்தவர். பாசறைகள் வகுப்புகள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும். தோழர் கேசவன் எல்லாம் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லா தோழர்களுக்குமான ஒரு அரசியல் வகுப்பாக தான் இருந்தது அது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் கூடுதலாக அரசு எதிர்ப்பு ஊர்வலங்கள் அப்படியான சம்பவங்கள் கூட நடந்திருக்கும்.

அசோக்: நடந்தது. புளொட் ஆரம்ப காலத்தில் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பு. ஒரு அண்டர் கிரவுன்ட் அமைப்பாக இருக்கேலதானே. அந்த நேரத்தில் உண்ணாவிரதம், கிராமங்களில் கருத்தரங்குகள் நடத்தி இருக்குறம். 82இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளை, மக்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டங்கள் நிறைய இடங்களில் நடத்தியிருக்கிறோம். 81ம் ஆண்டும் 82ம் ஆண்டும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மே தினக் கூட்டம் நடத்திஇருக்கிறம். அதால தான் நாங்கள் வெகுஜன அமைப்பாக பரவலாக பார்க்கப்பட்டோம்.

தேசம்: இன்னும் ஒரு விஷயம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக மட்டக்களப்பில் மூன்று சமூகங்களுமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் இருக்கிறது. முதல் உரையாடலில் சொல்லி இருந்தீர்கள், ஜேவிபியின் அரசியல் வகுப்புகள் எடுக்க வந்தவர்களில் முஸ்லிம் தோழர்களும் இருந்தார்கள் என்று. தமிழ் முஸ்லிம் உறவு எப்படி இருந்தது அந்தக் காலத்தில்.

அசோக்: மிக நெருக்கமாக இருந்தது. புளொட்டில் முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முஸ்லிம், தமிழர் உறவுகள் ஒரு சிக்கலான விஷயமாக போய்விட்டது பிற்காலத்தில்.

மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தோழர்கள் இருந்தார்கள். உதாரணமாக நாக படையின் உருவாக்கம் எப்படி நடந்தது தெரியும்தானே… புளொட் வெகுஜன அமைப்பு வேலையைத்தான் கூடுதலாக செய்துகொண்டிருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அப்ப புலிகள் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு சில தோழர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு ஒன்று இருந்தது.

புளொட்டுக்கு ஆரம்ப காலத்தில் எங்களுட்ட அந்த ஐடியா இருக்கேல. நாங்கள் வெகுஜன மக்கள் மத்தியிலும், காந்தியத்தோடையும் இருந்தபடியால், மக்கள் மத்தியிலான வேலைத்திட்டமாகத்தான், தொடர்பாகதான் எங்களுடைய கொள்கை இருந்தது. அரசியல்மயப்படுத்தல், மக்களை அணிதிரட்டல், அதற்கு ஊடாக மக்கள் யுத்தத்தை கொண்டு வருதல் என்பதுதான் புளொட்டின் கோட்பாடாக இருந்தது. அந்த நேரத்தில இந்த தோழர்கள் மிகத் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொல்லி, முடிவெடுத்து அப்படி செயற்படவும் தொடங்கிவிட்டனர். தயா, சிறிபத்மன் கொஞ்சத் தோழர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதுல ஜூனைதீன் இரண்டு மூன்று முஸ்லிம் தோழர்ககளும் இருந்தவர்கள்… இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த நாக படையை உருவாக்கினாங்க… அது கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாங்கள் தீவிரமாக இல்லை என்று சொல்லி, அவர்கள் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட வெளிக்கிட்டாங்க.

தேசம்: அப்படி என்றால் என்ன கொள்ளை போன்ற சம்பவங்களா?

அசோக்: கொள்ளை இல்லை. மட்டக்களப்பு மாலா ராமச்சந்திரன். அந்தக் கொலை அவங்கதான் செய்தது.

தேசம்: இது கழுகு படையா? நாக படையா?

அசோக்: நாக படை. இந்த நாக படைக்கு ஊடாகத்தான் மாலா ராமச்சந்திரன் கொலை நடக்குது. நாகேந்திரன் என்றவர் சுடப்பட்டு அவர் தப்பிவிட்டார்… அப்ப ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம். யுஎன்பி கட்சியை சேர்ந்தவர்களை சுடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டக்களப்பில பலரை சுட்டிருப்பாங்க. எந்தவொரு அரசியல் தெளிவும் இவங்ககிட்ட இருக்கல்ல. அப்ப நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளர். இவங்க வாசுதேவாவின் தனிப்பட்ட உறவை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக இயங்க வெளிக்கிட்டாங்க. இது வாசுதேவாவுக்கும் சிக்கலாகி விட்டது. அது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்துட்டது.

ஏனென்றால், இவங்கள் புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கள். ஒரு தனி இயக்கமாக நாக படை என்று உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டாங்க… அது எங்களுக்கு பெரிய சிக்கலாக வந்தது. பிறகு அவர்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி. பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான தோழர்கள் எல்.ரீ.ரீக்கு போயிட்டாங்க.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவ்வளவு தூரம் தீவிரவாத இயக்கமாக இல்லாதபடியால்… அதுல இருந்த முஸ்லிம் தோழர்களுக்கு பிறகு என்ன நடந்தது ?

அசோக்: ஜூனைதீன் என்ற தோழர் புலிகளோடு சேர்ந்து பிறகு லெப்டினட் கேணலாக இருந்து , பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். முக்கியமான பதவியில் இருந்தவர். மற்ற முஸ்லிம் தோழர்களின் பெயர் மறந்து போயிட்டேன். அவங்களும் எல்.ரீ.ரீ தான்.

தேசம்: அந்தக் கால கட்டங்களில் 80களின் ஆரம்பம் 83 ஜூலை முதல் மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாணத்தில் எப்படி இந்த வெவ்வேறு இயக்கங்களின் செயற்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருந்தினமா? அல்லது…

அசோக்: இல்லை எல்.ரீ.ரீ .ஈ மிகக் குறைந்த அளவில் தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் நிறைய பேர் வேலை செய்தவர்கள். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. எல்.ரீ.ரீ . ஈ ஆட்களோடும் உறவு இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில பெரிய முரண்பாடு இயக்கங்களுக்குள்ள. அது மட்டக்களப்பில் இருக்கேல.

எல்.ரீ.ரீயில வேலை செய்த தோழர்கள் எல்லாம் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். வேணுதாஸ் அண்ணர் எல்லாம் எல்.ரீ.ரீயில் மிக முக்கியமான ஆள். ரஞ்சன் கனகரட்ணம் என்ட ஃப்ரெண்ட். பரமதேவா என்ற ஃப்ரண்ட். புளொட் வாசு தேவாவின் தம்பி. எங்களுக்குள்ள நெருக்கம் ஒன்று இருந்தது. ரஞ்சனும், நானும் பரமதேவாவும் ஜெயிலில் ஒன்றாக இருந்தம். அப்ப அவர்களுக்கு புளொட்டுக்கு வாற ஐடியா இருக்கேல. எல்.ரீ.ரீக்கு போற ஐடியா இருந்தது. அப்புறம் நாங்க வெளில வந்தும் மிக நெருக்கமாகத் தான் இருந்தம்.

தேசம்: யாழ்ப்பாணத்தில் இயக்கங்களுக்கு இடையிலான வன்முறை மிகக்கூர்மையாகவும், மட்டக்களப்பில் நட்பு ரீதியாகவும் இருந்ததற்கு காரணம் என்ன?

அசோக் : யாழ்ப்பாணத்தில் அதிகாரப் போட்டி ஒன்று இருந்ததாக தெரிஞ்சது. நாங்க பிறகு கதைக்கலாம் இதைப் பற்றி. நான் யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த உறவுகள் எனக்கு நீடித்தது. அப்ப இறைகுமாரன், உமைகுமாரன் யாழ்ப்பாணத்தில கொலை செய்யப்பட்டபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இக் கொலைகளை யார் செய்தது என்று உண்மையாக எங்களுக்கு தெரியாது. இறைகுமாரன் வாசுதேவாவின் ஃப்ரண்ட். எனக்கும் தெரியும் இறைகுமாரனை. வாசுதேவவோட இளைஞர் பேரவையில் இருந்து பிரண்ட்.
அப்ப நாங்கள் மட்டக்களப்பில் இறைகுமாரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினாங்கள். அதற்குப்பிறகுதான் வேணுதாஸ் அண்ணை என்னை கூப்பிட்டு சொல்கிறார் அசோக் உங்கட இயக்கம்தான் செய்தது என்று சொல்லி. உனக்கு தெரியாதா என்று.

தேசம்: இறைகுமாரன், உமாகுமாரன் புலிகளுக்கு ஆதரவாளர்கள்?

அசோக்: ஓம். இரண்டு வாரத்திற்கு பிறகு பிறகு மட்டக்களப்பில் ஒரு ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அமிர்தலிங்கம் வந்தவர். அப்பதான் அவர் ஓப்பினா பேசினார் கொலை செய்து போட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்று. எனக்கும் வாசுதேவாவுக்கும் பயங்கரப் பேச்சு. அப்பதான் வெளில தெரியும் எல்லாருக்கும் புளொட் தான் செய்தது என்று சொல்லி. அதற்கிடையில் வாசுதேவா புளொட் தான் செய்தது என்று தெரிஞ்ச உடனே யாழ்ப்பாணம் போனார். போயிட்டு வந்து சொன்னார் உண்மையிலேயே புளொட் தான் செய்தது என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தேசம்: அதுக்கான காரணங்கள் விளக்கங்கள் தரப்பட்டதா உங்களுக்கு…

அசோக்: அதற்குப் பிறகு சென்டர் கமிட்டில அதெல்லாம் கதைக்கப்பட்டது. தன்னிச்சையாக சில பேர் செய்ததாக. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கல்ல.

தேசம்: இந்த கொலைகளில் சந்ததியாருக்கு தொடர்பு இருக்கின்றதா?

அசோக் : இல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோழர் சந்ததியாரால் அமைப்புக்கு வந்தவங்க. சந்ததியாருக்கு மிகவும் தெரிஞ்சவங்க. இதனால்தான் அப்படி சந்தேகம் பலருக்கு வந்தது. உண்மையிலே தன்னிச்சையான செயற்பாடுதான் இந்த கொலைகள்.

தேசம்: இதெல்லாம் புளொட் ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு முதல் நடந்த சம்பவங்களா அல்லது அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களா… ?

அசோக்: இந்த கொலைகள் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் புளொட் கட்டமைப்பு உருவாகல்ல. ஏனைய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இது சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையான சுந்தரத்தின் விசுவாசிகளால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. புளொட்டின் கட்டமைப்பு பார்த்தீர்களென்றால் 79 ஆண்டு நவம்பர் புளொட்டின் உருவாக்கமே வருது. தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயர் வைக்கப்படுகிறது. அதற்கு முதல் புதியபாதை என்ற அமைப்பு தான் இருந்தது. புதியபாதை என்ற அமைப்பு பிறகு புளொட் என்ற பெயருடன் உருவாக்கப்படுகிறது.

உருவாக்கப்பட்ட மத்திய குழுவில் இருந்தவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். உமா மகேஸ்வரன், சந்ததியார், ஐயர், சாந்தன், சுந்தரம். இதில ஐயரும், சாந்தனும் பிரபாகரனோடு சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் முக்கியமானவர்கள். 79 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட மத்திய குழுவின் பிற்பாடு அவங்களுக்குள்ள ஒரு முரண்பாடு வருகிறது .ஏனென்றால் தன்னிச்சையான போக்கு நடக்குது.

தேசம்: இந்த காலகட்டத்தில் நீங்கள்…

அசோக் : புளொட்டில இல்லை நான். இது காலப்போக்கில் கேள்விப்பட்ட விஷயங்கள். என்ன முரண்பாடு வருது எப்படி என்றால். இவங்கள் எப்படி புலிகளில் என்னென்ன தவறு நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இங்க நடக்குது. முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவது. பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து தான் இருந்தது. பிறகு மத்திய குழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் இவங்கட ஆதிக்கம் மேலோங்க கருத்து முரண்பாடு வருகின்றது. பிறகு சுந்தரம் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் சேர்த்து தன்னிச்சையான போக்குல ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி ஐயரும், சாந்தனும் முரண்படுகின்றாங்க. பிரச்சனை வரும்போது சாந்தனும் ஐயரும் அந்த கமிட்டியை விட்டு போகிறாங்க… அதுல மிஞ்சினது சந்ததியாரும், உமாமகேஸ்வரனும், சுந்தரமும் தான். இப்ப பார்க்கும்போது தெரியுது என்னவென்றால், புலிகளின் அதே அரசியலுடன் தான் இவர்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறங்க என்று. ஏனென்றால் மத்திய குழுவுக்குள்ள ஜனநாயகம் எதுவும் இருக்கல்ல.

மக்கள் போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம், வர்க்க அணி திரட்டல் எந்த அரசியல் தெளிவும் இவர்களிடம் இருக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற புளொட் வாசகம் எம்மைப் போன்றவங்கள உள்வாங்க பயன்படுத்தபட்ட கோசம் என்பது இப்ப நினைக்கக்குள்ள விளங்குது.

தேசம்: இதே காரணங்களுக்காகத்தானே பிரபாகரனோடு முரண்பட்டு ஐயர் வெளியேறியவர்…

அசோக் : ஓம். அப்போ ஐயரோடு சாந்தன், நாகராஜா, குமணன் போன்றவர்கள் வெறியேறுகிறாங்க. பிரபாகரனோடு ராகவன், மாத்தையா, செல்லக்கிளி போன்றவர்கள் இருக்கிறாங்க.

தேசம்: இதில பார்க்கும் போது இதில ஓரளவு சமப்படுத்தப்பட்ட பலம் ஒன்று சந்தததியார், உமா மகேஸ்வரன், சுந்தரத்துக்கு ஒரு ஈகுவலான பலம் இருந்திருக்கு. அதில சந்ததியாரும் சுந்தரமும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள்…

அசோக்: உமாமகேஸ்வர் கட்டுவன். ஐயர் புண்ணாலைக்கட்டுவன்.

தேசம்: சாந்தன்…

அசோக்: தெரியல்ல.

தேசம் :இது ஒரு லூசான கட்டமைப்பா…

அசோக்: பெயரளவில்தான் மத்திய குழுவே தவிர அரசியல் இயக்க கட்டமைப்புக்கான எந்த அரசியல் அமைப்பு வடிவங்களை விதிகளை புளொட் கொண்டிருக்கல்ல. இவங்கள் வெளியேறினதுக்கு பிறகு நான் நினைக்கிறேன் அதுக்குள்ள பிறகு கண்ணனும், ராஜனும் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு சென்றல் கமிட்டி என்று உருவாக்கப்படவில்லை. அப்படியேதான் இயங்கிக்கொண்டிருந்தது. பிறகுதான் பூரணமான சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் உருவாக்கப்படுது 83 ஜூலைக்கு பிற்பாடு.

தேசம்: ஆம் ஆண்டு ஜூலை வரைக்கும் இப்படியான ஒரு கட்டமைப்புதான்?

அசோக்: இப்படியான கட்டமைப்புதான். ஆனா யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில மாவட்ட நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன அந்த நேரத்தில். மாவட்ட அமைப்பாளராக நாங்கள் இருந்தோம். மாவட்ட அமைப்பாளர் கூட்டம் வவுனியாவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும். ஒரு உத்தியோகபூர்வமான அமைப்பா மாவட்ட அமைப்புக்கள் இருந்தது. மாவட்ட அமைப்பாளருக்கு கீழ கிராமிய அமைப்பாளர்கள் எல்லாம் இருந்தாங்க. மட்டக்களப்பு ஜெயில் விரெக் நடந்து பின்தளம் சென்ற பின்னதான் சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் பூரணமாக உருவாக்கப்படுது.

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்!

காந்தியத்தின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும் புளொட்டின் உருவாக்கமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 04 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 4

தேசம்: 77 ஆம் ஆண்டு கலவரத்துக்குப் பிறகு ஜே.வி.பியுடனான உறவு முறிந்து ஒரு இடைவெளிக்குப் பிறகு, காந்தியத்திட்ட போறீங்க. காந்தியத்தின் செயற்பாடுகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது?

அசோக்: 77 ஜே.வி.பியினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு, நாங்க சுயமாக வாசகர் வட்டம், தேசிய இளைஞர் சேவை மன்றம், அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இலக்கியங்களுக்கு ஊடாக வெளிக்கிடுறம். அந்த நேரத்துல காந்திய வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் தொடங்கிவிட்டது. மாலையர்கட்டு என்ற இடத்தில் காந்திய பண்ணை போடுவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கு. அந்த நேரத்தில் தொண்டர் இல்லை , காந்திய வேலைத்திட்டங்கள் செய்ய. நிறைய சிறுவர் பாடசாலைககளும் ஆரம்பிக்க ப்பட்டன.

தேசம்: அப்ப நீங்கள் ஈடுபட தொடங்கும்போதே காந்தியம் இயங்கத் தொடங்கிவிட்டது…

அசோக்: ஆம் காந்தியம் இயங்கத் தொடங்கிற்று… வடக்கிலே கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, இவையெல்லாம் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில இயங்கவில்லை. திருகோணமலையில் எல்லாம் ஃபுல்லா இயங்க தொடங்கிற்று.

தேசம்: அதன் பின்னணி என்ன மாதிரி ? யார் யார் காந்தியத்தை உருவாக்கினது?

அசோக்: நான் நினைக்கிறேன் என்னவென்றால், 77 இல் கே சி நித்தியானந்தா தமிழர் புனர்வாழ்வு கழகம் ரி.ஆர்.ஆர்.ஓ என்ற அமைப்பை தொடங்குகிறார்…

தேசம்: கே.சி நித்தியானந்தா தான் தோழர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய வளர்ப்பு தந்தை என்று சொல்வது. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்தவர்.

அசோக்: ஆம். அன்றைய தொழிற்சங்கவாதிகளாக இலங்கையில் விளங்கிய திசாநாயக்க, கந்தசாமி, வைகுந்தவாசன், ஆசிர்வாதம், எஸ்.டி.பண்டாரநாயக்க, திருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன, போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொழிற்சங்க வேலைகள் செய்தவர் கே. சி. நித்தியானந்தா. அதே காலகட்டத்தில் தான் டேவிட் ஐயா ஆட்கள் காந்திய அமைப்பை தொடங்குகிறார்கள்.

தேசம் : ரீ.ஆர்.ஆர்.ஓ தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான் காந்தியமும் தொடங்கப்படுகிறது…

அசோக் : ஆமா ஏனென்றால், அந்த இனக்கலவரத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்ற வேண்டும், அவர்களுக்கு புனர்வாழ்வு, எதிர்கால நம்பிக்கைகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்படுகிறது. காந்தியத்தை தொடங்குவதில் முக்கியமாக இருந்தவர்கள் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம், சாந்தினி, அடுத்தது கூடுதலா சண்முகலிங்கம் , அதுல கூட ஈடுபாட்டுடன் இருந்தவர்.

சரோஜினிதேவி என்டு கனடாவில இருக்கிறா, அவங்களின்ர தம்பிதான் சண்முகலிங்கம். ஏனென்டா, அவர் மலையகத்தில வேலை செய்தவர். ஜே.வி.பியோட உறவா இருந்தவர். அவருக்கு நிறைய மலையகத் தொடர்பெல்லாம் இருந்தது. அடுத்தது, அவர் காந்தியத்தை உருவாக்கினதில ஒராள் இல்ல. காந்தியத்தோட ஈடுபட்டவர். காந்திய உருவாக்கத்தில வந்து நாலு, ஐந்து பேர் இருக்கிறாங்க. டேவிட் ஐயா, ராஜசுந்தரம், சாந்தினி, ஒரு சிங்களத் தோழரும் அதில இருந்தவர் என்று நினைக்கிறேன்.

தேசம்: இந்த காந்தியம் தொடங்கினாக்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் அல்லது தமிழ்த்தேசிய அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா?

அசோக்: டேவிட் ஐயாவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில எந்த உடன்பாடும் இருக்கேல. காந்திய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அவர்கள் நினைத்தார்கள் காந்தியம் காலப்போக்கில், ஒரு அரசியல் கட்சியாக வரும் என்ற ஒரு பயம் அவங்களுக்கு இருந்தது. காந்தியப் பணிகள் தொடங்கி, பாராளுமன்ற கட்சியாக வருமோ என்ற பயம் இருந்தது. அதால காந்திய அமைப்புக்கு மிக எதிராகத்தான் தமிழரசு கட்சி இருந்தது. அடுத்தது, டேவிட் ஐயாவுக்கும் கோட்பாட்டு ரீதியாக, அரசியல்ல தமிழரசுக் கட்சியை பிடிக்கல. தமிழ் தேசியவாதியாக அவர் இருந்தாலும்…

தேசம்: டேவிட் ஐயாவின் பின்னணி பற்றி சொல்லுறீங்களா?

அசோக்: அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் யுனிவசிற்றியில் ஆக்கிடெக்கில் பட்டம் பெற்றவர். லண்டனிலும், நைஜீரியாவிலும் Urban planning study முடித்தவர். பிறகு கென்யாவின் மொம்பாசா urban planning யில முதன்மைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றினாங்க. உலகம் முழுதும் பிரபல ஆர்க்கிடெக் ஆக இருந்து வந்தவர். வந்து காந்தியத்தைத் தொடங்குகிறார்.

தேசம் : எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அவர்?

அசோக்: நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணம் தீவுப் பகுதியை சேர்ந்தவர். கரம்பன் என்று நினைக்கிறேன். இளவாலை சென் கென்றிஸில் தான் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். பல்வேறு பிரபலமான ஆக்கிடெக் கட்டடங்களை எல்லாம் அவர் உருவாக்கியிருக்கிறார் ஐரோப்பிய நாடுகளில். அவருடைய வரலாற்றை படித்தால் தெரியும், அவர் எங்கெங்கு வேலை செய்திருக்கிறார் என்று. பிரபலமான ஆர்க்கிட்டெக்காக இருந்திருக்கிறார். ஆர்க்கிட்டெக் பற்றி அறிய உலகமெல்லாம் சுத்தி இருக்கின்றார். காந்தியம் பண்ணைய தொடங்குவதற்கு முதல் அவர், மாதிரி கிராமம், மாதிரிகூட்டுப் பண்ணை பற்றி நிறைய ஐடியாக்கள், டேவிட் ஐயாவிடம் இருந்திருக்கு. கூட்டு பண்ணையை பற்றி படிப்பதற்காக இஸ்ரேவேலுக்கெல்லாம் போய் இருக்கிறார்.

தேசம்: அப்ப காந்தியத்தின்ட அந்த concptயை, ஐடியாவை அவர்தான் கொண்டு வாரார்?

அசோக்: அவர்தான் கொண்டு வாரார். காந்தியக் சித்தாந்தத்தின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்திருக்கு. பல நாடுகளுக்கு போய் கூட்டுப்பண்ணை, சுய பொருளாதார கட்டமைப்புக்கள் எப்படி உருவாக்கப்படுது என்றெல்லாம் பார்க்திருக்கிறார். அந்த மாதிரித் திட்டத்தைதான் இங்க கொண்டு வாறார், காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு. பாடசாலைகள், சுகாதார வசதிகள், சத்துணவு திட்டம், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், ஆசிரியர்கள் பயிற்சி திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வாறார்.

தேசம்: டேவிட் ஐயா பற்றி சொன்னீர்கள். கே.சி நித்தியானந்தா காரைநகர் …
அசோக்: ஆனா, கொழும்பில்தான் கே.சி நித்தியானந்தா இருந்தவர். அவருடைய இருப்பிடம் அங்கதான். தொழிற்சங்கவாதியாக அங்க இருந்தவர். அங்கதான் டக்ளஸ் தோழர் இருந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிர அரசாங்க எழுதுவினைஞர் சேவை நலச் சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர் இவர்.

தேசம்: டாக்டர் ராஜசுந்தரம் அவரைப் பற்றி…

அசோக்: அவர் டாக்டர். வவுனியாவில் கிளினிக் வைத்திருந்தவர். அவர் வைஃப் சாந்தினி அவங்களும் டாக்டர். “சாந்தினி கிளினிக்” என்று வவுனியாவில் பிரபலமாக இருந்தது. ராஜசுந்தரம் மலையகத்தில் வைத்தியராக இருந்தவர். அந்த இணைப்பு தான் அவரை காந்தியத்துடன் இணைக்குது. அவருக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது. மலையக மக்கள் மீதான ஒரு கரிசனையும் இருந்தபடியால்… பொருளாதார பெரும்பங்கு டேவிட் ஐயாவின் சொந்தக் காசுதான் . மற்றப்படி பல்வேறு அமைப்புகள் தனிநபர்களுக்கு ஊடாகவும் பணம் பெறப்பட்டது என நினைக்கிறன்.

தேசம்: வேறு யார் குறிப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள் ?

அசோக்: காந்தியத்தில் நிறைய பெயர் ஈடுபட்டிருக்கின்றார்கள் சரோஜினி அடுத்தது…

தேசம்: அவருக்கு ஏதாவது அரசியல் பின்னணி இருக்கா… ?

அசோக்: சரோஜினி பிறகு புளொட்டில சென்றக் கமிட்டில இருந்தவ. காந்தியத்த்துக் ஊடாகத்தான் நிறையபேர் புளொட்டுக்கு வாறாங்கள். அந்த காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்தாக்கள் வந்து… தோழர் சந்ததியார் வேலை செய்தவர்.

தேசம்: நீங்கள் போகும்போது சந்ததியார் காந்தியத்தில் இருந்தவரா?

அசோக்: சந்ததியார் காந்தியத்தில் இருந்தவர். நான் நினைக்கிறேன் ஜென்னி காந்தியத்தில் இருந்தவ. ஜெயச்சந்திரன் பார்த்தன் காந்தியத்தில் இருந்தவர். வாசுதேவா… அடுத்தது, ஜென்னிட அம்மா பிலோமினா லோரன்ஸ் அவா தான் திருகோணமலைக்கு மாவட்ட காந்திய பொறுப்பாளராக இருந்தவா.

தேசம்: ஆனா அவாவும் தமிழ்தேசிய தமிழரசுக் கட்சிதானே…

அசோக் : தமிழரசுக் கட்சியின் பிரதம பேச்சாளர். மங்கையர்கரசி மாதிரி ஒரு பேச்சாளர். நன்றாக பேசக்கூடியவர்.

தேசம்: தமிழரசுக் கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாவிட்டாலும் அதுல உறுப்பினர்கள் சிலர் இருந்திருக்கினம்.

அசோக்: தமிழரசுக் கட்சி நிறைய பேர் காந்தியத்தில் இருந்திருக்கிறாங்கள். தலைமைக்கு அதோட உடன்பாடு இருக்கேலயேயொழிய, அதைக்கூட வெளிப்படையாக காட்டவில்லை. அது உள்ளுக்குள்ள ஒரு பனிப்போர் இருந்ததேயொழிய, வெளிப்படையாக காட்டேல. வெளிப்படையாத் தெரிஞ்சாதான் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அது உள்ளுக்குள்ளேயே இருந்ததுதான்.

அப்ப வாசுதேவா எங்களை சந்திக்கிறார். சந்தித்து காந்தியத்துக்கூடாக இப்படி அபிவிருத்தி வேலைகள், மக்கள் நலப்பணிகள் செய்யலாம் என்று சொல்ல, எங்களுக்கு உடன்பாடு வருது. ஏனென்றால், எங்களுக்கு சமூக போராட்டம், சமூக அக்கறை இருக்கிறபடியால், நாங்கள் இதுல வேலை செய்யலாம் என்று சொல்லி…

தம்பலவத்தை என்ற ஒரு கிராமம் இருக்கு, மண்டூருக்கு அங்கால. அது வந்து எல்லைப்புற கிராமம். அந்த கிராமத்திற்கு பக்கத்தில் மாலையர்கட்டில்ல வந்து ஒரு காந்திய குடியேற்றத் திட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி வாசுதேவா கூப்பிடுகின்றார். அப்ப நாங்கள், அங்க போய் காடுகளை அழித்து வீடுகள் அமைத்து இந்த குடியேற்றத் திட்டத்தில நாங்கள் உதவி செய்கிறோம்.

தேசம்: அது எல்லைப்புற கிராமமா?

அசோக்: எல்லைப்புற கிராமம். அதுல முக்கியமா பேரின்பம் என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அவர் எங்கே என்றே தெரியல. அவர் முக்கியமா அதுல ஈடுபட்டவர். காந்தியப் பண்ணைக்கு பொறுப்பாக இருந்தது சண்முகம் என்று ஒரு தோழர், அவர் இப்பவும் இருக்கிறார். மிக முக்கியமாக இருந்தவர்.

தேசம்: போராட்டங்களோடு சம்பந்தப்பட்ட பலர் இந்தக் காந்தியதுத்துடன் தொடர்பில இருக்க வாய்ப்பு இருந்ததா?

அசோக்: ஓம். மண்டுர் மகேந்திரன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரெல்லாம் தொடர்பு இருந்தது.

தேசம் : யாழ் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞர்கள் பலர் அதுல இருந்திருக்கினமா?

அசோக்: மட்டக்களப்பு காந்தியத்திலாவா…

தேசம் : இல்ல பொதுவா காந்தியத்தில…

அசோக்: யாழ்ப்பணத்தில காந்தியம் இருக்கேலத்தானே.

தேசம்: இல்ல அங்கே இருந்து வந்தவர்கள் காந்தியத்தில் ஈடுபட்டார்களா… ?

அசோக்: தோழர் சந்ததியார் இருந்தவர். காலப்போக்கில் வவுனியா வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் என்று சொல்லி… தோழர் பொன்னுத்துரையை, குமரனை, தோழர் ஜூலியை தெரியும். குமரன் புளொட்டுக்கூடாக வந்ததேயொழிய, காந்திய வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணத் தோழர்கள் குறைவு.
சில வேளைகளில் ஏனைய குடியேற்றத்திட்டங்களில் வேலை செய்திருப்பாங்க. 81ம் ஆண்டு என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தில ஒரு கிராமத்தில சில சிரமதான வேலைகள், குடிசைகள் அமைச்சி கொடுத்தம். கிராமத்தின் பெயர் ஞாபகம் இல்லை. அப்ப நாங்கதான் வவுனியாவில இருந்தும் மட்டக்களப்பில இருந்தும் போய் இருந்தம். யாழ்ப்பாணத்தில இருந்து குமரன் தோழரும் இன்னொரு தோழரும் வந்திருந்தாங்க.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், காந்தியத்தில் இருந்தவைக்கு கூடுதலா பிற்காலத்தில் புளொட்டுடன் தான் தொடர்பு கூட வந்திருக்கா அல்லது வேறு அமைப்புகளுடனும் தொடர்பு வந்திருக்கா?

அசோக்: காந்திய பண்ணைகளை உருவாக்குவதற்கு தொண்டர்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புளொட் உருவாகிவிட்டது. அப்ப சந்ததியார் காந்தியத்தில் இருந்தபடியால், சந்ததியார் என்ன செய்தார் என்றால் புளொட் இளைஞர்களை காந்தியத்துக்குள் இணைத்தார். அப்ப யார் யாரெல்லாம் புளொட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காந்தியத்தில் வேலை செய்தார்கள். அதனாலதான் புளொட்டுக்கும் காந்தியத்துக்கும் உறவு வந்திச்சுது. காந்தியத்தில் இருந்த தோழர்கள் வேறு அமைப்புக்களுக்கு போனமாதிரி நான் அறியல்ல.

தேசம்: தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாவுக்கு தெரியுமா?

அசோக்: இந்த தொண்டர்கள் புளொட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று டேவிட் ஐயாக்கு ஓரளவு தெரியும் . புளொட் ஆயுத அமைப்பு என்று டேவிட் ஐயாவுக்கு தெரிந்திருந்தால் நான் நினைக்கவில்லை, அவர் விரும்பி இருப்பார் என்று. ஒரு ஆயுத இயக்கத்தோடு காந்தியத்தை இணைப்பதற்கு அவர் விரும்பி இருக்க மாட்டார். அவர் நினைத்திருப்பார் புளோட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம் தான் என்று.

ஆனால் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், சந்ததியாரும் டாக்டர் ராஜசுந்தரமும் நல்ல நெருக்கம். சந்ததியார் அண்டர்கிரவுண்ட் இயக்கத்தில் இருக்கிறார் என்று கட்டாயம் டாக்டர் ராஜசுந்தரத்துக்கு தெரிந்திருக்கும். டேவிட் ஐயாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க சான்ஸ் இருந்திருக்காது. டேவிட் ஐயா நினைத்திருப்பார், சந்ததியார் சமூக அக்கறையோடு, காந்திய அமைப்பில ஆர்வத்தோட சமூக சேவைக்கு வாரார் என்று.

இப்படித்தான் வாசுதேவாவும் காந்தியத்தில் இணைந்தவர். சந்ததியார் கூட பெருசா வெளியில தெரியல. வாசுதேவா வெளிப்படையாகவே புளொட்டினுடைய அமைப்புச் செயலாளராக இருந்தவர். அதோட காந்தியத்தினுடைய கிழக்குமாகாண இணைப்பாளர். அப்ப புளோட் அண்டர்கிரவுண்ட் இயக்கம் இல்லை. அண்டர்கிரவுண்ட் ஆனது எப்ப என்று கேட்டால், சுந்தரத்தின் படுகொலைக்குப் பிறகு. அப்போ புளொட் ஒரு வெகுஜன அரசியல் இயக்கம்தான்.

தேசம்: காந்தீயம் ஒரு சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு. புளொட் ஆயுத விடுதலை அமைப்பு. காந்தியத்தோடு தொடர்வு வைத்தால் அது காந்திய அமைப்பின் வளர்ச்சிக்கு ஆபத்து என்று சந்ததியாருக்கு தெரியவில்லையா ? இதை எப்படி பார்க்கின்றீங்க…

அசோக்: உண்மையில இப்ப யோசிக்கும் போது, நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். மக்கள் நல அபிவிருத்தி சமூக மேம்பாட்டு அமைப்பு ஒன்று, சுதந்திரமாக இயங்குவதுதான் சரி என்ற அரசியல் புரிதல் அன்று எங்களுக்கு இல்லாம போயிற்று. சமூக மேம்பாட்டு வெகுஜன அமைப்புக்களுக்கும், இராணுவ கட்டமைப்பு கொண்ட விடுதலை இயக்கத்திற்குமான உறவு நிலை, தொடர்வு பற்றிய அரசியல் தெளிவு எங்கட்ட இருந்திருந்தால் காந்திய அமைப்பை காப்பாற்றி இருக்க முடியும். இப்ப யோசிக்கும்போது எங்க தவறு தெரிகிறது.

தேசம்: புளொட் வெகுஜன அமைப்பாக அது பதிவு செய்யப்பட் டதா?

அசோக்: இல்லை. புளொட் ரெஜிஸ்ட்டர் பண்ணுப்படல. புளொட் வந்து ஒரு அரசியல் வெகுஜன இயக்கமாக வெளியில இயங்குகிறது. உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு, துண்டு பிரசுரம் அடித்தல், புதிய பாதை பத்திரிகை, கருத்தரங்குகள் போன்ற சட்டத்திற்கு உட்பட்ட வெகுஜன அரசியல் வேலைத் திட்டங்களில ஈடுபடுகிறது.

ஆயுத இயக்கம் என்றால் தானே தடை செய்யப்படும். அது ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு… புளொட் வெளிப்படையாக குற்றங்களிலில ஈடுபடவில்லை. ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதலில் கூட, புளொட் என்று வெளிப்படையாகத் தெரியாது. எப்ப அடையாளப்படுத்தப்படுகிறது என்றால், சுந்தரம் படுகொலைக்குப் பிறகுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. சுந்தரம் புளொட் என்று தெரிய வருகிறது.

தேசம்: காந்தியத்தில் உங்களுடைய செயற்பாடுகள் எப்படி அமைந்தன?

அசோக்: காந்தியத்தில் எங்கள் செயற்பாடுகள் என்னென்று கேட்டால்… படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்…

தேசம்: அப்ப நீங்கள் ஏ எல் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓ.எல் எடுத்துட்டன். ஏ.எல் எடுக்கல நான் குழப்பிட்டன். அந்தக் காலகட்டத்தில் சனி – ஞாயிறுகளில், ஒரு விடுமுறை காலத்தில்தான் காந்திய வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது. முக்கியமாக ஈஸ்வரன் தோழர்… காந்தியத்தில் மிக முக்கியமானவர். அவர் புளொட்டில மத்தியகுழுவில் இருந்தவர். எனக்கு முதன் முதல் புளொட் தோழர் என்று அறிமுகமானவர் ஈஸ்வரன் தோழர்தான். ஈஸ்வரன் முதலில் வந்து காந்தியத்தின் ஆளாகத்தான் எனக்கு அறிமுகமானவர். அப்ப அவருக்கு வேறு பெயர்.

மாலையர்கட்டு பண்ணை வேலை முடிந்த பிறகு, செட்டிகுளம் கல்லாறு பண்ணையை ஈஸ்வரனே பொறுப்பு எடுக்கிறார். அவர்தான் முன்நின்று அதனை தொடங்குகின்றார். அவரும் நானும் தான் முதல் முதல் அந்தக் செட்டிக்குளம் கல்லாறு பண்ணைக்கு போறோம். பயங்கர முசுரு காடு. ஈஸ்வரன் மிகப்பெரிய உழைப்பாளி, மிக எளிமையானவர். நான் சொகுசாய் இருந்த ஆள்தானே… அப்ப நம்மட வேலைகள் தெரியும்தானே. அவர் மிக நேர்மையான உழைப்பாளி. அவருக்கு ஊடாகத்தான் நான், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒடுக்கட்ட வறிய மக்களோடு அவர்களாக மாறி அவர்களுக்காக சேவை செய்வதென்பதை ஈஸ்வரன் தோழரிடம் நாம் கற்கவேண்டும். அவ்வளவு எளிமையானவர். மிகப்பெரிய காந்திய வேலைத்திட்டம் அது என்று நினைக்கிறன். நிறைய செட்டிக்குள தோழர்கள் உதவி செய்தார்கள். தர்மலிங்கம் என்றொரு தோழர். இதில முக்கியமானவர். இப்ப அழிந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். மலையக மக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.

தேசம்: செட்டிகுளத்திலயா…

அசோக்: செட்டிக்குளத்திற்கு பக்கத்தில் கல்லாறு பண்ணையில்…

தேசம்: காந்திய இயக்கத்தில் அதில் உங்களுக்கு அரசியல் ரீதியான அறிவூட்டல்களும் நடந்ததா?

அசோக்: இல்லை இல்லை. காந்திய பண்ணையில் சேவை மனப்பான்மைதான். காந்தியத்தில் இருக்கும்போதுதான் வாசுதேவா ஊடாக அரசியல் உறவுகள் வருது எனக்கு. உண்மையிலேயே வாசுதேவா காந்தியத்துக்குள் எங்களை ஈடுபடுத்தியது புளொட்டுக்குள்ள கொண்டு போகத்தான். நேரடியாக நாங்கள் புளொட்டுக்குள்ள போக விரும்பமாட்டோம் என்பதற்காக…

தேசம்: அதுக்குள்ள ஒரு ஹிடின் அஜெண்டா இருந்திருக்கு…

அசோக் : அஜெண்டா இருந்திருக்கு. அதுக்கு பிறகு அவர் புளொட் பற்றிக் கதைக்க வெளிக்கிடுறார். அப்ப சில அறிமுகங்கள் வருது. நான் முன்ன சொன்ன மாதிரி ஈஸ்வரன் தோழரை முதலில் புளொட் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். பிறகு தோழர் டொமினிக், கேசவன், ஜெயச்சந்திரன் – பார்த்தன், ரகுமான் ஜான், குமரன் பொன்னுத்துரை, முரளி எனப்பலரும் அறிமுகம் ஆகிறார்கள்.

தேசம்: தோழர் கேசவன் பிற்காலத்தில் தீப்பொறி…

அசோக்: ஆம் . புதிய தோர் உலகம் நாவல் எழுதியவர். புலிகளால கொலை செய்யப்பட்டவர்.

தேசம்: இதெல்லாம் காந்தியத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்…

அசோக்: ஆம். காந்தியத்தில் இருந்த காலகட்டத்தில் புளொட்டுக்குள்ள போவதற்கான முதல் ஆரம்பம். அந்த அறிமுகங்கள் நடக்குது. அப்ப இவங்கள் புளொட்டுக்கு வேலை செய்கிறார்கள்.

தேசம்: காந்தியத்திலும் இருக்கினம், புளொட்டிலும் இருக்கினம்.

அசோக்: ஆம். அப்ப எங்கட அரசியல் தெரியும்தானே… எங்களுக்கு தமிழீழம் தனிநாடு கோரிக்கை இதிலெல்லாம் ஈடுபாடில்லை என்று தெரியும் தானே. அப்ப இவங்கள் எங்களுக்கு முன்னுக்கு வைக்கிற கோஷம் என்னவென்றால் வர்க்கப் போராட்டம். தேசிய முரண்பாடுகள், இனப்பிரச்சனைகள், தமிழ் மக்களுக்கு உரிமை அற்ற தன்மை, பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான முதல் தீர்வும், அதன் பின் வர்க்கப்போராட்டமும். அதாவது, தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஊடாக வர்க்கப்போராட்டம். கிடைக்கின்ற சோசலிச தமிழ் ஈழத்தினுடாக, எதிர்காலத்தில் சிங்கள உழைக்கும் தொழிலாள விவசாய வர்க்கத்தின் – பாட்டாளி வர்க்கத்தின் இணைப்போடு, தென்னிலங்கை மக்களின் வர்க்கப்போராட்டத்திற்கு ஆதரவளித்தல்.

தமிழீழம்தான். ஆனா அது ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டம். தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை நோக்கிய பயணம்தான். அதற்கான முதல் படிதான் இந்த தேசிய விடுதலைப் போராட்டம். அப்ப எங்களுக்கு தேசிய ஒடுக்குமுறை இருக்குத்தானே.
தேசிய விடுதலைக்கூடாக ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு போறது என்ற சித்தாந்தம் எங்களுக்கு பிடித்துக்கொண்டது. அப்ப கேட்க உண்மையாத்தான் எங்களுக்கு இருந்தது.

இப்ப பரிசீலிக்கும் போது, எனக்குள் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. அப்ப மிக திருப்தியாக இருந்தது. அப்ப நாங்க நினைச்சம் அதுல போய் சேர்ந்து வேலை செய்யலாம் என்று.

பிறகு வவுனியாவுக்கு வாறம். தோழர் சந்ததியார் எல்லாரையும் சந்திக்கிறோம். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் அமைப்பாளராக சின்னாச்சி என்ற ஒரு தோழர் வேலை செய்தவர். அம்பாறை மாவட்டத்தில் கருணாநிதி என்ற தோழர் வேலை செய்தவர். அவர்கள் பெருசாக இல்லை. பிற்காலத்தில் இரண்டு பேரும் புலிகளுக்கு பொயிற்றாங்க.

அப்ப மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக என்னையும், அம்பாறைக்கு ஜீவா என்கிற அகஸ்டின் செபமாலையையும் நியமிக்கிறாங்க. இப்ப அவர் ஜேர்மனியில் இருக்கின்றார். எனக்கு உதவியாக வரதன் என்கிற ராகவன் தோழர் நியமிக்கப்படுகின்றார். அவர் இப்ப நாட்டிலதான் இருக்கிறார்.

தேசம்: மாலையர்கட்டு முடிய நீங்கள் செட்டிகுளம் போறீங்க. எவ்வளவு காலம் காந்தியத்துடன் உங்களுடைய செயற்பாடு இருந்தது?

அசோக்: காந்தியத்தில ஒரு வருஷத்துக்குள்ள தான் இருந்தது.

தேசம்: ஒரு வருஷம் என்றால் 79 ஆம் ஆண்டு மட்டில…

அசோக்: அப்படித்தான். 80 க்கு பிறகுதான் நான் புளொட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆகினது. 80 நடுப்பகுதியில் புளொட்டில் சேர்ந்திருப்பேன். ஏனென்றால் புளொட்டின் உருவாக்கம் நடந்தது 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தான். தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் என்ற பெயருடன், அப்போதுதான் உருவாகினது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் கூடுதலாக மலையகத் தமிழர்களுடன் வேலை செய்வதற்கான வாய்ப்பு இருந்ததா உங்களுக்கு?

அசோக்: நிறைய இருந்தது. மாலையர்கட்டில, செட்டிகுளத்தில எல்லாம் மலையக மக்கள் தானே…

தேசம்: மலையக தமிழர்களுக்கும், தமிழ் சமூகத்திற்குமான உறவுகள் எப்படி பார்க்கப்பட்டது அந்த காலத்தில்?

அசோக்: எல்லைக் கிராமங்கள் தானே. எல்லைக் கிராமங்கள் என்று சொன்னால் கொஞ்சம் தள்ளித்தான் தமிழ்க் கிராமங்கள் இருக்கும். மலையக தமிழ் மக்களுக்கும் அந்தப்பகுதி தமிழ் மக்களுக்கும் உடனே பெரிய தொடர்புகள் இருக்கேல. காலப்போக்கில் உறவு ஒத்துழைப்பு என்று இருந்தது. ஐந்து ஆறு மைல் தள்ளித்தான் சிங்களக் கிராமங்கள் இருக்கும். பல்வேறு விமர்சனங்கள் அந்த காலத்துல வந்தது. எல்லை கிராமங்கள்ல மலையக மக்களை நாங்கள் பலிகடா ஆக்குறம் என்று.

தேசம்: அந்த நேரமே இந்த விமர்சனங்கள் இருந்ததா?

அசோக்: சில இடங்களில் இருந்து வந்தது. விமர்சனங்கள் எப்பவும் இருக்கும் தானே. அதை நாங்கள் உதாசீனப்படுத்திட்டம். ஏனென்றால் அது தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த சில பேரால் வைக்கப்பட்டது. அந்தக் காணிகள் தமிழ்ப் பிரதேசத்துக்குரிய காணிகள்தான். எல்லை பிரதேசமாக இருந்தாலும், சிங்கள கிராமங்கள் பக்கத்தில் இல்லை. தமிழ் எல்லை பிரதேசங்களில் ஏனைய தமிழ் கிராமங்களும் இருந்தது. பல்வேறு கிராமங்களுக்கு இடையில்தான் இந்த குடியேற்றங்கள் உருவானது. நெருக்கமான கிராமங்களாக இருக்கவில்லை. ஒரு மைல் அப்படி இடைவெளிகள் இருக்கும். கல்லாறுப் பண்ணையில் வந்து பக்கத்தில் பல்வேறு கிராமங்கள் இருக்கு. கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பில் அப்படித்தான் தமிழ்க் கிராமங்களை அண்மித்துத்தான் குடியேற்றங்கள் செய்யப்பட்டது.

தேசம்: மலையக மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவு, குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் எப்படி இருந்திருக்கும் அந்த நேரம். வரவேற்கிற தன்மை இருந்ததா?

அசோக் : முரண்பாடு இருக்கேல. அந்த பிரதேச மக்கள் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். நாங்கள் அந்த வேலைத் திட்டம் செய்யேக்குள்ள பக்கத்து கிராமப்புற மக்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. செட்டிகுளம் கல்லாறு பண்ணைக்குள்ள நிறைய செட்டிகுளம் பையன்கள் எல்லாம் வந்து ஹெல்ப் பண்ணி இருக்கிறார்கள். முரண்பாடு இருக்கேல, ஆரம்பத்தில் நெருக்கம் இருக்கல்ல. சமூக உறவுகள் காலப்போக்கில்தானே உருவாகும். ஆனா நாங்க கிராமக் குழுக்களை அமைத்திருந்தோம். இக்குழுவில மலையக இளைஞர்களும், அந்தப் பிரதேச இளைஞர்களும் அங்கம் வகிச்சாங்க. அது காலப்போக்கில் தானே ஏற்படும்.

தேசம்: வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த மலையக மக்களுக்கு எதிரான, வேற பெயர் சொல்லிக் கூப்பிடுற தன்மைகள் இருந்தது. வடக்கத்தையான், தோட்டக்காட்டான், கள்ளத்தோணி இப்படியான விஷயங்கள் எல்லாம் இருந்தன. இப்படியான எதிர்மறையான கருத்து நிலைகள் மற்ற பகுதிகளில் இருந்ததா?

அசோக்: நிச்சயமாக இல்லை. இருந்திருந்தால் குடியேற்றங்கள் செய்திருக்கேலாது. யாழ்ப்பாண சமூகத்தின் ஒருசாரர்களின் மலையக மக்கள் மீதான வெறுப்புணர்வுக்கு இவ்வாறான கண்ணோட்டத்திற்கு பல்வேறு அரசியல் பொருளாதார பின்புல காரணிகள் இருக்கு. அங்கு கிழக்கு மாகாணத்தில அந்த காரணிகள் இல்லை. ஏன் இங்க வருது என்று கேட்டால், பொருளாதார ரீதியாக ஆசிரியர் வேலைவாய்ப்புக்கள் ஏனைய தொழில் என்று அங்க போய்… எப்ப முரண்பாடு வரும் என்று கேட்டால், அந்த பிரதேசத்துக்கும் எங்களுக்கும் சமூக பொருளாதார அரசியல் உறவெண்டு வரும்போதுதான். அந்த உறவை சமத்துவமாக சமநிலையாக நேச உறவாக நாங்க பேணமுடியாம, அதிகார சாதிய வர்க்க பிரதேச கண்ணோட்டத்தோடு அணுக வெளிக்கிடக்குள்ள முரண்பாடுகள் வரும் . இந்த அதிகாரத்தனம், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளாப்பட்ட மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்திவிடும்.

அங்க கிழக்கு மாகாண மக்களுக்கும், மலையக மக்களுக்கும், யாழ்ப்பாண சமூகத்தைப்போன்று, மலையகத்தில் பெரிய உறவுகளும் தொடர்புகளும் நெருக்கங்களும் இருந்ததில்லை. அப்ப முரண்பாடுகள் சிக்கல்கள் உருவாக சாத்தியம் இல்ல. அப்ப அந்த முரண்பாட்டுக்கான தளம் இல்லாமல் போய்விடுகின்றது. மலையக மக்களை குடியேற்றும் போது அந்த பிரதேச மக்கள் சொந்த மக்களாகதான் பார்த்தாங்க… உடனடியாக ஒரு சமூக உறவு வராதேயொழிய, முரண்பாடுகள் வராதுதானே.

கிளிநொச்சியிலயோ முல்லைத்தீவிலயோ மட்டக்களப்பிலயோ குடியேற்றம் செய்த இடங்களில் முரண்பாடு இல்லை.

தேசம்: வட மாகாணத்துக்கு உள்ள நடந்த குடியேற்றங்களில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை…

அசோக்: யாழ்ப்பாணத்தில் குடியேற்றங்கள் நடக்கேல தானே.

தேசம்: எல்லைக் கிராமங்களில் நடந்த குடியேற்றத்திட்டங்கள் தொடர்பான அந்த விமர்சனத்தில் ஒரு உண்மையான நிலையும் இருக்கும் தானே. ஏற்கனவே சிங்கள சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, நாங்கள் எல்லை கிராமத்தில் கொண்டு வந்து குடியேற்றும் போது திருப்பியும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமானதுதானே…

அசோக்: எங்கட உரையாடல் பிரயோகத்தில் எல்லைக் கிராமம் என்ற வார்த்தையை பயன்படுத்துறதால அந்தக் கேள்வி உங்களுக்கு வந்தது என நினைக்கிறன். கிராமங்களிடையேதான் முன்ன நான் சொன்ன மாதிரி நாங்க குடியேற்றம் செய்தனாங்க. என்டாலும் இதுபற்றி ஆராயவேண்டும்.

எல்லைக் கிராமங்களில் தான் திட்டமிட்டு நடந்தது என்று இல்லை. எதிர் விமர்சனங்கள் எப்படி வைக்கப்பட்டது என்றால், நாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக மலையக மக்களை பயன்படுத்துகிறோம் என்று. தவிர்க்க முடியாம சில எல்லைக் கிராமங்களில் குடியேற்ற வேண்டிவந்தது. ஏனென்றால் அங்குதான் காணிகள் இருந்தது. எல்லை கிராமங்களில் அது அமைந்தவுடன் இந்த விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு அது சாதகமாக அமைந்துவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் இது…

தேசம்: தமிழரசுக் கட்சி அந்த விமர்சனம் வைத்ததா?

அசோக்: ஆம் சில பேர்களுக்கு இருந்தது.

 

 

அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும்: பாகம் 3

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 3

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?

அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.

தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?

அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.

தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?

அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.

தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…

அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.

தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.

அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.

தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…

அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.

தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை

அசோக்: இல்லை

தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?

அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.

78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.

என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.

தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?

அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?

அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.

தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?

அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.

தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.

தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?

அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.

தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…

அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.

78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.

இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.

தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.

அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.

அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…

தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.

தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?

அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?

அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.

தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.

தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?

அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.

தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.

அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.

எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.

இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.

தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்

அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.

தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க

அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.

தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.

அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.

தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?

அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.

தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…

அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.

தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?

அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.

தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?

அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! பள்ளிப் படிப்பும் பதின்மப் பருவமும்!!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 02) (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் நீங்கள் உங்கள் கிராமம் பற்றிச் சொல்லவில்லை. உங்களின் கிராமத்தின் சூழலை பற்றி சொல்லுங்கள். அதன் சனத்தொகை போன்ற விபரங்களைக் கூறுங்கள்.

அசோக்: என் களுதாவளைக் கிராமம் இயற்கைச் சூழலும் பசுமைகளையும் குளங்களையும் விவசாய தொழிலையும் கொண்டது. சனத்தொகை கூடிய கிராமங்களில் ஒன்று. வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய கிராமம்.

வெற்றிலை செய்கைக்கு பெயர் போனது. ஒரு கிராமியப்பாட்டு உண்டு ‘களுதாவளை வெற்றிலைக்கும் காலிப் பாக்குக்கும் சிவந்ததுகா உன் உதடு’ என்று.

தேசம்: வழிபாட்டு முறைகள்,..

அசோக்: வழிபாட்டு முறை. பெருங்கோயில் என்றால் களுதாவளை விநாயகர் ஆலயம். முருகன் கோயில் இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுகள் உண்டு. எழுவான்கரை என்றபடியால் ஒரு பக்கம் வங்காள விரிகுடா கடல். எமது கிராமம் கடலைச் சார்ந்து இருக்கும். கிராமத்தில் மூன்று குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விவசாய காணிகள் இருக்கிறது. இங்கே நெற் பயிர்ச்செய்கையே மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கு அங்கால மட்டக்களப்பு வாவி. குளங்களைச் சுற்றி மருத மரங்கள் இருக்கின்றன. இயற்கையை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான கிராமம். கடல் கரையை அண்டிய பகுதியில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் காடுகளும் பனை மரங்களும் இருக்கும். அதற்கு அங்கால எமது கிராமம். இப்போது அக் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயத்தை மேற்கொள்கிறார்கள். அங்கு இப்போது வெங்காயம், மிளகாய் போன்ற சிறு பயிர் செய்கையை மேற்கொள்கிறார்கள். விவசாயம் செய்வதற்கான இடமாக அது மாறிவிட்டது. நாட்டுக் கூத்தெல்லாம் என் கிராமத்தில் நடக்கும். இப்போது அருகிவிட்டது.

தேசம்: நீங்கள் சிறுபிள்ளையாக இருந்து வளர்ந்து வரும்போது உங்கள் அனுபவம் என்ன? உங்களின் ஆறு எழு வயதில் நடந்த சில சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். அது தொடர்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

அசோக்: கிராமத்து சிறுவர்களுக்குரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் நான் விளையாடி இருக்கிறன். நிறைய சுதந்திரம். சிறு வயதில் வெறும் மேலோடு மேல் சட்டை இன்றியே திரிவேன். எங்கள் ஊர் குளங்களில் நீச்சல் அடிக்கிறது. கிட்டிப்புல் அடிப்பது கெற்றப்போல் அடிப்பது. எறி பந்து விளையாடுவது. கோயில் திருவிழாக்கள் என்றால் ஒரே கொண்டாட்டம்தான். சின்னவேட்டி கட்டி பக்திமானாக மாறிவிடுவேன். திருவெண்பாக்காலம் எனக்கு சந்தோசமான காலம். அம்மா கோயிலுக்கு வேறு எங்கு போனாலும் என்னை கூட்டிப் போவா. எனக்கு ஞாபகம் தெரிந்தவரை ஏழு எட்டு வயதுவரை காதில கடுக்கன் தோடு போட்டிருந்தேன். நிறைய ஞாபகங்கள் இருக்கு. நீண்டதாய் போய்விடும்.

தேசம்: உங்கள் கிராமத்திற்கே உரிய விளையாட்டு ஒன்றைப்பற்றி சொல்லியிருந்தீர்கள்.

அசோக்: ஆம் அதனை கொம்புமுறி விளையாட்டு என அழைப்பார்கள். இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையது. சிறுவர்களுக்குரியதல்ல. குடிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டு. ஒரு காலத்தில எங்க கிராமத்தில பிரபலமாக விளையாடப்பட்டது. பெரிய விழாவாக சடங்காக கொண்டாடுவாங்க. கொம்புச்சந்தி என்ற இடமே உண்டு எங்க ஊரில.

தேசம்: உங்களின் இளமைக்கால கல்வியைப் பற்றி கூறுங்கள்.

அசோக்: அப்பாவின் பாடசாலையான இராமகிருஸ்ணன மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். நான் கொஞ்சம் சுட்டித்தனம் கொண்டவனாக இருந்தபடியால் ஆரம்பக்காலத்தில் கல்வியில் பெரிய நாட்டம் இருக்கவில்லை. அப்பாவும் தலைமை ஆசிரியராக இருந்தபடியால் எனக்கு அழுத்தங்கள் கூடுதலாக இருக்கவில்லை. இரண்டாம் வகுப்பிற்கு பிறகே எழுத வாசிக்க தொடங்கினேன்.

தேசம்: இன்றைக்கு இருக்கும் ஒரு அரசியல் சூழல் அன்றைக்கு ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று சொல்ல ஏதாவது ஒரு விடயம் உண்டா?

அசோக்: தமிழரசு கட்சியுடன் அப்பாவுக்கு இருந்த அரசியல் சூழல்தான். நான் நிறைய வாசிப்பேன். எனது வீடு ஒரு நூலகம். நிறைய நூல்கள் இருந்தன. எனது அண்ணாமார்களும் அக்காக்களும் வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஒரு அண்ணா இருந்தவர் தியாகராஜா என்று. பெரியாரின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அண்ணாவும் அவர் நண்பர்களும் அந்தக்காலத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை எழுதி கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டாங்க. பெரியார் தொடர்புடைய எல்லா புத்தகங்களும் இந்தியாவில் இருந்து வரும். இந்தியாவில் இருந்து வரும் நிறைய சஞ்சிகைகளும் எங்கள் வீட்டில் கிடைக்கும். அப்பா பெரியார் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர். அப்பா வித்தியாசமானவர். எல்லாவற்றையும் வாசிப்பார்.

நல்லதொரு உதாரணம் அப்பாவின்ர பாடசாலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமையாற்றினார். அவர் இடதுசாரிக்கட்சியில் இருந்தார். அவர் தேசாபிமானி என்ற பத்திரிகையை கொண்டு விற்பார். எங்கள் பாடசாலையிலேயே அதனை கொண்டு வந்து விற்பனை செய்வார். அதனையும் அப்பா வாசிப்பார்.

தேசம்: அந்த நேரம் உங்களின் பொழுது போக்குகள் எவை? வீட்டில் நிறையபேர் இருந்தாலும் வெளியில் போய் விளையாடுவதற்கான சூழல் மற்றும் நட்பு வட்டங்கள் எவ்வாறு இருந்தது?

அசோக்: நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே எங்கள் கிராமத்தில் படித்தேன். பின்னர் சிவானந்தா வித்தியாலயத்தில் படித்தேன். சிவானந்தா பாடசாலை மிகவும் கட்டுப்பாடான பாடசாலை. அங்கு நாங்க நினைத்த மாதிரி பெரிசா விளையாட முடியாது. லீவுநாட்களில் வீட்டுக்கு வருவேன். ஓரே விளையாட்டுத்தான். பொழுதுபோக்காக முத்திரை சேகரிக்கும் பழக்கம் இருந்தது.

தேசம்: உங்கள் ஊரில் இருந்து அப்பாடசாலை எவ்வளவு தூரம்?

அசோக்: ஊரில் இருந்து 16, 17 கிலோ மீற்றர் இருக்கும். விடுதியில் இருந்தே படித்தேன். இங்கு ஒருவருடம் கல்வி கற்றேன். விடுதியிலும் பாடசாலையிலும் மிகவும் கட்டுபாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாடு எனக்கு கஸ்டமாகஇருந்தது. பிறகு வீட்டிலிருந்து போய் வந்தேன்.

இப்பாடசாலையில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக இருந்தது. படிப்பும் ஒழுங்குகளும் முக்கியம் . ஒரு வருடத்தின் பின் அந்தப் பாடசாலைக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்துவிட்டேன். ஆறாம் வகுப்பு மட்டும்தான் சிவானந்தா பாடசாலையில் கற்றேன். பின்னர் வந்தாறு மூலை மத்தியக் கல்லூரியில் கற்றேன். அந்தப் பாடசாலை எங்க ஊரிலிருந்து இருந்து 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்கேயும் விடுதியில் இருந்தே கல்வி கற்றேன்.

தேசம்: உங்கள் பகுதியில் அப்போது உயர்தரப் பாடசாலைகள் இல்லையா?

அசோக்: பாடசாலைகள் இருந்தன. என்றாலும் அப்பா விபுலானந்தரின் மேல் இருந்த அபிமானத்தில் சிவானந்தா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு கட்டுப்பாடு இறுக்கம் எனக்கு பிடிக்கவில்லை. அதற்குப்பிறகுதான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் சேர்ந்தேன். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வருவேன். எங்கள் ஊரில் கிராம சபையால் உருவாக்கப்பட்ட நூலகம் ஒன்று இருந்தது. அதில் இளந்தளிர் வாசகர் வட்டத்தை நா ங்க உருவாக்கினோம்.

தேசம்: உங்களுக்கு எத்தனை வயது?

அசோக்: அப்போது எனக்கு சுமார் 15, 16 வயதிருக்கும். அந்த வாசகர் வட்டத்தின் ஊடாக சிறியசிறிய கருத்தரங்குகள் நடத்துவோம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கியமைக்கு காரணம் நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாசகர் வட்டத்தின் ஊடாக சிபாரிசு செய்யலாம். அதனூடாக நிறைய எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. பாரதி நூற்றாண்டு விழாவை முதல் முதலாக இலங்கையில் செய்தவர்கள் நாங்கள் தான்.

இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாக்க காரணமாக இருந்தவர் வெல்லவூர் கோபால் அண்ணர். அதற்கு போஷகராக இருந்தவர். அவர்தான் எங்கள் ஆலோசகர். வழிகாட்டி. மிக அருமையானவர். இன்று குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளராக இலங்கையில் இருக்கிறார். அவர் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை செய்துள்ளார். அவர் எங்கட கிராம ஆட்சி சபையின் காரியாலயத்தில பிரதம லிகிதராக இருந்தார். அவர் ஒரு கவிஞராக, எழுத்தாளராக இருந்தபடியால் அவரின் ஊக்கத்தினால இளந்தளிர் வாசகர் வட்டம் உருவாகியது.

தேசம்: அந்தக் காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அசோக்: அவர்களை ஞாபகம் இருக்கிறது. பிற்காலத்தில் அவர்களில் பலர் என்னோடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டத்துடன் பயணித்தவர்களுடனான ஞாபகங்கள்?

அசோக்: ரவி, பேரின்பம், சீவரெத்தினம். இப்போ கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜெயவரதன். செல்வரெத்தினம் காலமாகி விட்டார். ஜெயரெத்தினம். திருநா. மனோ- தவராஜா, பணிக்ஸ், நல்லிஸ் தயா, சிவஞானம், குணம் சந்திரன் இப்படி நிறையப் பேர்களை சொல்லலாம். இவர்களில் பலர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள். சிறைக்குச் சென்று நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்கினாங்க.. எனது கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனேகர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள்தான். என் நண்பன் ரவி பொலிசாரினால் கடும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டான். இன்றும் அதன் பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியவில்லை.

தேசம்: இந்த நீண்ட அரசியல் பயணத்தில் கலை இலக்கிய பயணத்திலும் இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது.

அசோக்: ஆம் இளந்தளிர் வாசகர் வட்டம் எமக்கு வாசகர் வட்டம் மாத்திரமல்ல. கிராம அபிவிருத்தி, சிரமதானங்கள் விழாக்கள் கருத்தரங்குகள் செய்வதுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவோம். கிராமத்தில் நாங்கள் ஒரு வித்தியாசமான முன்னுதாரணங்களாக இருந்தோம். வெறும் படிப்புடன் இருக்காமல் சமூக சேவையிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது.

தேசம்: பதின்ம பருவத்திற்குரிய எல்லா விடயங்களிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்?

அசோக்: ஆம் பதின்ம பருவத்திற்குரிய எல்லாச் சேட்டைகளும் எங்களுக்கு இருந்தது. என்றாலும் அதற்குள் முழுமையாக அகப்படாமல் தப்பித்துக் கொண்டோம். நம்பலாம்! எங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இருந்தது. அந்த சமூக அக்கறையினால நாங்கள் காலப் போக்கில் அரசியலுக்குள்ளும் வந்தோம். பல்வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள் படித்தோம். இவைகள் எல்லாம் சேர்ந்து நாங்கள் அரசியல் மயப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.

தேசம்: அந்தச் சூழல் பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டதா? உங்கள் பார்வை என்ன?

அசோக்: எனது குடும்பத்தில் சுதந்திரம் இருந்தது. படி, படி என்று பெரிதாக கட்டாயப்படுத்தவில்லை.

தேசம்: இந்த சுதந்திரம் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இருந்ததா?

அசோக்: அப்படி சொல்லமுடியாது.

தேசம்: உங்கள் கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது ?
அசோக்: எமக்கும் ஒடுக்கப்பட்ட சமூகம் எனச் சொல்லப்படுகின்ற மக்களுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இயல்பாகவே ஒரு நட்பு இருந்தது. ஆனால் எமது கிராமத்திற்குள் பழைய தலைமுறையினருக்கு முரண்பாடு இருந்தது. பாரதி நூற்றாண்டு விழாவில் அவங்கட நாடகம் ஒன்றை போடுவதற்கு இருந்த வேளையில் எமது கிராமத்தில் ஒரு சிலரால் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனையும் மீறி சித்திரைப் புத்தாண்டு விழாவில் மேடையேற்றினோம்.

நாடங்களில் அவங்க மிகத் திறமையானவங்க. என்ர நண்பன் ஆனைக்குட்டி சிவலிங்கம் அண்ணா கலைமன்றம் வைத்திருந்தார். நிறைய நல்ல நாடகங்கள் போடுவாங்க. நான் சனி, ஞாயிறு போனால் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பேன்.

எங்கு ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறதோ, அங்கு சாதிய முரண்பாடு நிச்சயமாக இருக்கும். எங்க கிராமத்திலும் இந்த முரண்பாடு காணப்பட்டது. கோயிலுக்குள் போக முடியாது. எங்க பாடசாலையில் படிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்க கிராமத்தில் சைக்கிளில் ஓட முடியாது. அவ்வாறு சைக்கிளில் வந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உருட்டிக்கொண்டு போகவேண்டும். நான் அவர்களை சைக்கிளில் ஏற்றிச் செல்வேன். இப்படி என்ன செய்தாலும் எங்க கிராமத்தில் என்னை எதிர்ப்பவர்கள் குறைவு. அதற்கு எனது குடும்ப பின்னணியும் ஒரு காரணமாக அன்று இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு சூழல்தான் நான் இருந்த போது இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.

அவங்க செய்யும் விழாக்கள் விசேடங்கள் எல்லாவற்றிக்கும் செல்வோம்.. நாடகம் போடுவார்கள். என் நண்பர்கள் அவங்கட நாடகங்களில் சேர்ந்து நடிப்பார்கள். என் அண்ணர் ஒருவர் தன் பிள்ளைகளை அவர்களிங்ர ஆரம்ப பாடசாலையில் சேர்த்தார். எனக்கு பல நண்பர்கள் அங்க இருந்தாங்க . அந்த நண்பர்களில் சில பேர் என்னோடு இயக்கத்திற்கு வந்தாங்க.

தேசம்: உங்களுக்கு இயல்பாகவே சாதி எதிர்ப்பு மனநிலை இருந்தது.

அசோக்: எனக்கு மாத்திரம் அல்ல என் நண்பர்களுக்கும் இருந்தது.

– தொடரும் –

 

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! – அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரைஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!

தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 01) (ஒளிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின்  பேச்சுமொழியில்  எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

எனது ஊரும் சுற்றமும்

தேசம்நெற் சார்பாக தோழர் யோகன் கண்ணமுத்து அவர்களுடன் நேரடியான ஒரு உரையாடல். கடந்த கால அரசியலில் 1956ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அல்லது ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானதில் இருந்து அவரின் வரலாறும் கிட்டத்தட்ட தொடங்குகிறது. இலங்கையின் இனவிடுதலை வரலாறும் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்து உடைய வரலாறும் கிட்டதட்ட ஒரே சமாந்திரமாக பயணித்துள்ளது. அந்தவகையில் அவருடனான நேர்காணலும் இந்தப் பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது என நினைக்கின்றேன். நாங்கள் நேரடியாக இந்த உரையாடலுக்குள் செல்வோம்.

தேசம்: வணக்கம் தோழர் யோகன் கண்ணமுத்து!

அசோக்: வணக்கம் ஜெயபாலன்!

தேசம்: உங்களின் அரசியல் பயணத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை நாங்கள் எவ்வாறு அணுகினோம் என்றுதான் நாங்கள் பார்க்கப் போகின்றோம். பிறந்து, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்து போராட்டத்தின் முக்கியமான தளத்தில் இருந்திருக்கிறீர்கள். அத்துடன் இந்த புலம்பெயர் தளத்தில் அரசியல் சார்ந்த ஈடுபாட்டாளனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தற்போது சுமார் ஒரு 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று உங்களின் மிக இளமைப் பருவத்தில் எந்த விடயத்தை மீள கொண்டு வரக்கூடியதாக உள்ளது. அந்த நேர சூழல், உங்கள் கிராமம், எப்படியான சூழலில் நீங்கள் பிறந்திருந்தீர்கள்? உங்கள் பெற்றோரின் அரசியல் பின்னணி என்ன? எப்படி இந்த அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டீர்கள் என்பதைச் சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில் உங்களின் மிக இளமைப் பருவத்தில் என்ன ஞாபகம் இருக்கிறது? உங்கள் கிராமம், குடும்பம் சம்மந்தமாக..

அசோக்: மட்டக்களப்பிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற   கடலோர  விவசாயக் கிராமமான களுதாவளைதான் என்  பூர்வீகம்.  எங்கள் குடும்பம் வந்து நிலப்பிரபுத்துவ சமூகம் சார்ந்த குடும்பம்…

அப்பா, அம்மா இருவரின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். விவசாயத்தையே பின்னணியாகக் கொண்டது. எனது அப்பாதான் எமது கிராமத்தில் படித்த முதலாவது தலைமுறை. களுதாவளையைச் சேர்ந்தவர். படுவான்கரை, எழுவான்கரை என இரண்டில் எமது கிராமம் எழுவான்கரை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டது.

அப்பா இராமகிருஸ்ண மிஷனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். விபுலானந்தர் மீது பற்றுக் கொண்ட விசுவாசியாக இருந்தார்

தேசம்: அதற்கு குறிப்பிடத்தக்க ஏதாவது காரணம்…?

அசோக்: அடிப்படையில் அப்பாவுக்கு   ஆன்மீக ஈடுபாடு இருந்தது.  அத்தோடு  சமூக அக்கறை இருந்தது. அந்தக் காலத்தில் சுவாமி விபுலானந்தரின் சமூக சேவையின் ஊடாகத்தான் பள்ளிக் கூடங்கள்  உருவாகியது.  அபிவிருத்தி நடைபெற்றது. அதில் அப்பாவும் ஆர்வம் கொள்கின்றார். மிஷனரி பாடசாலைக்கு பதிலாக இராமகிருஸ்ணன மிஷன் திருகோணமலை, மட்டக்களப்பு  பிரதேசங்களில்   ஸ்தாபிக்கப்படுகிறது. சிவானந்தா வித்தியாலயம்,  காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் ஆரம்பிக்கப்படுகிறது. இராமகிருஸ்ண மிஷன் களுதாவளையிலும் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கிறார்கள். அப்பா தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.

அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ் ஆசிரியராகவும் இருந்த படியால் தமிழரசு கட்சியினுடன் அரசியல் உறவும் ஏற்படுகிறது.

தேசம் : அம்மாவின் பின்னணியைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?

அசோக்: அம்மாவின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பம் தான். அம்மா 10 ஆம் வகுப்பு படித்தாவோ தெரியவில்லை எனக்கு. ஆனால் நிறைய வாசிப்பார். நாவல், சிறுகதை, இலக்கியம் என பயங்கர வாசிப்பு. நான் நினைக்கிறேன் அம்மா எட்டு ஒன்பதாம் வகுப்புதான் படித்திருப்பார். அப்பா, அம்மா காதலித்து அதில் நிறைய பிரச்சினைப்பட்டு …

தேசம்: இரண்டு பேரும் ஒரு கிராமமா?

அசோக்: ஆம் ஒரே கிராமம்தான். அம்மாவின் அப்பருக்கு விருப்பமில்லை.

தேசம்: ஏன்? சமூக பின்னணியா?

அசோக்: இரண்டு குடும்பமும் ஒரு சமூக பின்னணியை கொண்டிருந்தாலும் அம்மாவின் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அம்மாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அப்பா வந்து அம்மாவை தூக்கிக்கொண்டு போய் மிஷனரியில் வைத்து திருமணம் செய்து அது பெரும் முரண்பாடு.   காலப்போக்கில் இராமக்குட்டியாரின்  கோபம் தணிந்து உறவு உருவாகிவிட்டது. இராமக்குட்டி என்பது அம்மாவின் அப்பா பெயர்.

தேசம்: இதில் பாரம்பரிய வித்தியாசம் அல்லது குல வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?

அசோக்: என்ன சிக்கல் என்றால் எமது கிராமம்   கிழக்கு மாகாணத்தில் தாய்வழி சமூகம்.  இது இறுக்கமான சமூகமாகும். எங்கள் கிராமத்தில் அம்மாவின் குடிதான் நான்.

தேசம்: குடி வழி சமூகம் என்றால்…?

அசோக்: குடிவழிச்சமுகம் என்றா அம்மாவின்  வம்சத்தை வழியை கொண்டதாக இருக்கும். எங்கட கோயில் மற்ற  சடங்குகள் திருவிழாக்கள் எல்லாம் அம்மாவின்ற குடியைக் கொண்டே நடக்கும். என்னை அழைப்பதென்றால் அம்மாவின் குடியைச் சொல்லித்தான் அழைப்பார்கள்.  அம்மா பெத்தான்குடி. அப்பா  பேனாச்சிகுடி.  அம்மா ஆட்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டார்களோ தெரியல்ல. சில நேரத்தில் திருமணத்திற்கு அதுவும் ஒரு தடங்கலாக இருந்திருக்கும். அம்மாவை கொண்டு போய் அங்குள்ள கொன்வென்டில் தங்க வைத்து அப்பா படிப்பித்துள்ளார்.

தேசம்: அப்பாவின் அரசியல் போக்கு தொடர்பாக மாறுபட்ட கருத்திருந்ததா?

அசோக்: இல்லை. அவ்வாறாக தெரியல்லை.

தேசம்: அப்பாவின் அரசியல் தொடர்பால் அம்மாவின் நிலைப்பாடு என்ன?

அசோக்: அம்மாவின்  ஒத்துழைப்பு நிறையவே இருந்தது. 1956ஆம் ஆண்டு ஸ்ரீ எதிர்ப்பு தனிச் சிங்கள சட்டமூலம் வந்தபோது அப்பா ஆறு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.   அம்மா 1961ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இமாநாட்டிற்கும் அறப் போரணித்  தலைவர் அரியநாயகம் திருக்கோயில்   அவருடைய தலைமையில் கால்நடையாக யாத்திரைச் சென்றுள்ளார் திருகோணமலைக்கு. பேரணியில் நிறைய பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இது புரட்சியான விடயம். அந்தக் காலத்தில் பெண்கள் திருக்கோவிலில் இருந்து

திருகோணமலைக்கு கால்நடையாக போவது பெரிய விடயம். அதில் அம்மா கலந்துகொண்டதாக அம்மா சொல்ல அறிந்துள்ளேன்.

தேசம்: உங்கள் பெற்றோரை பொருத்தவரையில் இரண்டு பேரும் அரசியலில் ஈடுபட்டிருந்தனர்?

அசோக்: ஆம்

தேசம்: உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்?

அசோக்: நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். ஏழு அண்ணா இரண்டு அக்கா. நான் ஒன்பதாவது ஆள்.

தேசம்: நீங்கள் பெரிய குடும்பம். ஒரு அண்ணாவை நீங்கள் வளர்த்தும் உள்ளீர்கள்.

அசோக்: ஓம் ஒரு அண்ணா எங்களுடன் தான் வளர்ந்தார். மொத்தம் பத்து பேர்.

தேசம்: பெரிய குடும்பமாக இருந்து இன்னொருவரை எடுத்து வளர்ப்பது அதற்கான தேவை எப்படி வந்தது?

அசோக்: பொருளாதார ரீதியாக எங்கள் வீடு பிரச்சினைக்குரியது அல்ல. அப்பாவுக்கு தலைமை ஆசிரியர் தொழில் கௌரவ தொழிலேயொளிய, அதுதான் எங்களது பொருளாதாரம் இல்லை. அம்மாவின் பக்கம் நிறைய தென்னங் காணிகளும் விவசாயக் காணிகளும் இருந்தன. விவசாயக் காணிகளை நாம் செய்வதுடன் குத்தகைக்கும் கொடுப்போம். இப்போ  அப்படியில்ல. பொருளாதார ரீதியில் சராசரி  குடும்பம்தான். அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சியினுடைய பொருளாதார வளங்களை கொடுக்கும் பெரிய பின்புலமாக அப்பா இருந்துள்ளார். அதனால்தான் எனக்கு தமிழரசு கட்சி யில் வெறுப்பு வந்தது. அப்பா் எப்படி பயன்படுத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.

தேசம்: களுதாவளையில் இருந்து ஒரு சராசரி குடும்பத்தையும் பார்க்க நீங்கள் கொஞ்சம் வசதியாக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

அசோக்: அப்படித்தான் நினைக்கிறன். நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அனைத்து குணாம்சங்களும் எமக்கிருக்கும். தோட்டங்களில் வந்து வேலை செய்வார்கள். நிறைய தொழிலாளர்கள்  எங்களைச் சுற்றியிருப்பார்கள். ஒரு கூட்டு குடும்பத்துக்குரிய எல்லாம் இருக்கும். தொழிலாளர்கள் என்பதை விட ஒரு ஐக்கிய உறவு எங்களுக்குள் இருக்கும். ஏன் என்றால்  நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறவுக்காரர்கள். யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் வேறு சமூகம், நிலவுடையமையாளர்கள் வேறு சமூகம். எமது ஊரில் நிலவுடையாளர்களும், தொழிலாளர்களும் ஒரே சமூகம். அதனால் ஒரு கூட்டுறவு இருக்கும்.

தேசம்: களுதாவளைக் கிராமத்தை எடுத்தோமேயானால் ஒட்டுமொத்தமாக களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? அல்லது வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா?

அசோக்: நல்லதொரு கேள்வி.   யாழ்ப்பாண   சமூகத்திற்கும் எமது சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு சாதிகள் இருக்கும். நீங்கள் வந்து கொக்குவில் கிராமத்தை எடுத்தீர்கள் என்றால் பல்வேறு சமூகங்கள் இருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கிராமங்கள்  மட்டும்தான் சாதிய அடிப்படையிலான கிராமங்கள். ஆரம்ப காலத்தில் பண்டைய  குடியேற்றங்கள் நடைப்பெற்ற போது சில கிராமங்களில் குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் எல்லா கிராமங்களிலும் ஒடுக்கப்பட்ட குடிமைச்   சமூகத்தை காண இயலாது. குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே காண முடியும். ஐந்து கிராமங்கள் என நினைக்கின்றேன். குடிமைச் சமூகங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். களுதாவளை, கோமாரி, அம்பிளாந்துறை, கல்முனை, வெல்லாவெளி. இவ்வாறு நான்கு ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாக பறையர் சமூகம் இருக்கும். கிழக்கு மாகாணத்தில்   பறையர் சமூகத்திற்கு காணிகள் இருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான பறையர் சமூகத்திற்கு நிலங்கள் இல்லை. இங்கு இவர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக வாழக்கூடிய சூழல் இருக்கும்.

தேசம்: சாதிய முரண்பாடு இங்கு ஓரளவு குறைவாக இருக்கும்?

அசோக்: ஆம் குறைவாக இருக்கும். சாதிய முரண்பாடு குறைவாக இருக்கும். பொதுத்தளத்தில்  பார்க்கும் போது குறைவாக இருக்கும். ஆனா  குடிமைச் சமுகங்கள் வாழும்  அந்தந்த கிராமங்களில் இருக்கும். அந்த கிராமங்களில் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் தானே. ஒடுக்கப்பட்ட சமூகம் உள்ள கிராமங்களில் அவர்கள் மீதான ஓடுக்குமுறை கடுமையாக இருக்கும். எங்களுடைய கிராமத்தில் பறையர் சமூகம் கோயிலுக்குள் செல்ல முடியாது.  நாங்கள் படிக்கும் பாடசாலையில் படிக்க முடியாது. அவர்களுக்கு தனி பாடசாலை. தனி கோயில்.

நான் பல்வேறு முயற்சிகள் செய்து அவர்களை எங்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்ல எடுத்த முயற்சியினால் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளேன். அது ஒரு காலம். இப்போதும் அப்படித்தான்  என நினைக்கிறன்.  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்வதற்கு காரணம்,  ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு ஒரே சாதி. முக்குவராக இருப்பார்கள். அல்லது கரையார் சமூகமாக இருப்பார்கள். அங்கு சாதி ஒடுக்குமுறை இருக்காது. நூற்றுக்கு தொண்ணூறு வீதமான கிராமங்கள் ஒரு சமூகமாகத்தான் இருக்கும்.

தேசம்: இப்படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாதி முறைக்கும் வேலை பிரிவினைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. நீங்கள் சொல்வதை பார்க்கும் போது வேலை பிரிவினை அடிப்படையில் சாதி இருப்பது போல் தெரியவில்லை. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

அசோக்: ஆமாம். அப்படித்தான். உதாரணமாக பார்த்தால் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில்தான் அதிகம். மட்டக்களப்பில் அதன் தோற்றம் இடம்பெறமுடியாமல் போய்விட்டது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாகவும் நிலஉடமையாளர்களாகவும் இருந்தபடியால் அது கூர்மை அடையல்ல. சாதிய முரண்பாடுகளோ, வர்க்க முரண்பாடுகளோ வருவதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகின்றது கூர்மை அடைந்தாலும் சமாளித்துவிடுவார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.

சாதியும் வர்க்கமும் வடமாகாணத்தில் தாக்கம் அதிகம். மட்டக்களப்பில் ஒரே சமூகமாக   இருக்கின்ற  படியால் அந்த முரண்பாடுகள் கூர்மையடையாது.

(உரையாடல் தொடரும்…)

 

உண்மைகள் உறங்குவதில்லை: மனம் திறந்து பேசுகின்றார் தோழர் யோகன் கண்ணமுத்து!

ஈழ விடுதலைப் போராட்டம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் – தோழர் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம்

1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட, அதன் பின் பிறந்த தலைமுறையினர் தான் அசோக் யோகன் கண்ணமுத்து. 1957இல் பிறந்த இவர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தோடு தவழந்து, நடந்து, இளைஞனாகி ஆயதமேந்திப் போராடி அதிஸ்டவசமாக உயிர்தப்பி தற்போது தனது சாட்சியத்தை தேசம்நெற் இணையத்தில் பதிவு செய்ய முன்வந்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருந்த தோழர் யோகன் கண்ணமுத்து: தமிழீழ விடுதலைப் போராட்டச் சூழல், தமிழீழ விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட பிளவு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உருவாக்கம், மட்டக்களப்புச் சிறையுடைப்பு, கழகத்தினுள் இடம்பெற்ற பிளவுகள், தீப்பொறி, ஈஎன்டிஎல்எப் ஆகிய அமைப்புகளின் உருவாக்கம் என பல்வேறு விடயங்கள் பற்றியும் பதிவு செய்கின்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் யோகன் கண்ணமுத்து விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர். சகோதரப் படுகொலைகள், பழிவாங்கல் செயற்பாடுகள் என போராட்டத்தின் பல்வேறு அம்சங்ளையும் அவர் இங்கு பதிவு செய்ய முற்பட்டு உள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னணிப் போராளியான இவர் விடுதலைப் போராட்டம் பற்றிய இன்னுமொரு கோணத்தையும் பதிவு செய்கின்றார்.

இது தொடர்பாக வாசகர்களாகிய உங்களுக்கு ஈழப்போராட்ட வரலாறு தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் அவற்றை இங்கு பதிவு செய்தால் அக்கேள்விகளுக்கான பதிலையும் பெற்றுக்கொண்டு இந்த வரலாற்றுத் தொடரை மேலும் காத்திரமானதாக ஆக்க முடியும்.

இப்பதிவு தற்போதைய புதிய தலைமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்டம் பற்றி மறைக்கப்பட்ட அல்லது அறிந்திராத பக்கங்களை எடுத்துக்காட்டும்.

அடுத்த வாரம் முதல் தேசம்நெற் இணையத் தளத்தில் இவருடைய நேர்காணல் பதிவு தொடராக எழுத்திலும் காணொலியாகவும் வெளிவரும்.

என் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் புரட்டிப் போட்ட நாள்: கருப்பு யூலை!

ரவி என் அண்ணா, ஊரில் அவனை எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும். தனபாலன் பதிவுப் பெயர். நாங்கள் அனுராதபுரத்தில் தான் பிறந்தோம். அவன் முதற் பிள்ளை பெரிய உயிரைக் காப்பாற்றுவதா? சின்ன உயிரைக் காப்பாற்றுவதா? என்ற போராட்டத்தோடு தான் அண்ணா சத்திரசிகிச்சை மூலம் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டான். அதனால் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்த டொக்கடர் தனபாலனின் பெயரே அவனுக்கும் சூட்டப்பட்டது. அவனையும் ஒரு டொக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு தான் அம்மா அவனை வளர்த்தார். ஏ எல் பயோ சயன்ஸ் படித்தான். யாழ் வட்டு இந்துக் கல்லூரியில் படித்தான். யாழ் நியூ மாஸ்ரருக்கு ரியூசனுக்குப் போய் வந்தான். ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர். படிப்பிலும் பரவாயில்லை. ஆனால் டொக்டர் கனவை எட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. பெரும்பாலான நேரம் அவன் அரசியல் கூட்டங்கள் என்று தான் திரிந்தான்.

யாழ் வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் ஒரு சிவராத்திரி விழா என்று தான் நினைக்கிறேன்; அப்போது அ அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர்; திரு திருமதி அ அமிர்தலிங்கம் உரையாற்றுவதற்காக வந்திருந்தனர். அப்போது கிளர்ச்சியூட்டும் கோசங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் உரைகள் பொறி பறக்கும். அந்தக்காலம் அ அமிர்தலிங்கம் தளபதி. கையைக் கீறி இரத்த திலகம் இடுவதுதான் அன்றைய வைரல் ரென்ற். அன்றைய கூட்டத்தில் அண்ணாவும் அ அமிர்தலிங்கத்திற்கு இரத்த திலகம் இட்டான். ஏ எல் முடித்துவிட்டு கொக்குவில் ரெக்கில் படித்தான்.

1983 யூலை 23 இரவு யாழ் திருநல்வேலியில் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஆங்காங்கு எழுந்தமானமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தினர். இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு வயது 12. அண்ணாவுக்கு வயது 19. இராணுவ கெடுபிடி என்றாலும் அவன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. எப்போதும் ஓடி ஆடித் திரிந்துகொண்டுதான் இருப்பான். ஆனால் மாலை ஆறு மணி ஏழு மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும். அப்போதெல்லாம் வேலியில் தடியயை முறித்து கோட்டைக் கறீ, கோட்டுக்குள் பிள்ளைகளை நிற்க வைத்து அடிப்பது நல்ல பெற்றோரின் ஸ்ரைல். பத்தொன்பது வயதிலும் அம்மா கீறிய கோட்டைத் தாண்டாமல் துள்ளித் துள்ளி அடிவாங்குவான்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில். அப்பா அனுராதபுரத்தில் வேலை. ஆண்மகனாக அப்பாவின் இடத்தில் அண்ணா தான் வெளிநிர்வாகம் முழுவதும். அவனுக்கு நட்புகளுக்கும் குறைவில்லை. அவனும் அவனது தலைமுறையும் தேசியவாத அலையில் அள்ளுண்டனர். அதைவிட அங்கு பெரிய மாற்றீடு இருக்கவில்லை. ஊரோடு ஒத்தோடி இருப்பார்கள். ஆனையிறவை பெரிதாக தாண்டாத சிங்களவர்களையோ வேற்று ஆட்களையோ கண்டிராத ஒரு சமூகம். அப்போது என்ன பெரிய அரசியல் அறிவு இருந்திருக்கும். ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் கருத்தோடு அள்ளுண்ட காலங்கள் அவை.

1976 இல் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்தது அப்போது எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 1977 கலவரம் வரை நாங்களும் எல்லோரும் அனுராதபுரத்தில் தான் வாழ்ந்தோம். கலவரம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணா அனுராதபுரம் விவேகானந்தக் கல்லூரியில் ஓல் படித்திருக்க வேண்டும். அன்று பாடசாலைநாள். காடையர்கள் தமிழர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் வீடுகள் கடைகள் எரியூட்டப்பட்டது. அப்பாவோ சின்னையாவோ தெரியவில்லை பள்ளிக் கூடம் சென்றிருந்த அண்ணாவை ஓடிப்போய் கூட்டிவந்து பக்கத்தில் இருந்த சிங்கள நண்பரின் வீட்டில் ஓரிரு நாட்கள் ஒளிந்துகொண்டோம். சில மங்களான ஞாபகங்கள் இன்றும் உள்ளது.

அனுராதபுரத்தில் யாழ்ப்பாண சந்திக்கு அருகில் இருந்த எங்கள் வீடும் எரிக்கப்பட்டதாக சொன்னார்கள். ஓரிரு நாட்களில் நாங்கள் பொலிஸ் பாதுகாப்போடு அனுராதபுரம் கச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். அப்போதும் கடையர்கள் பெற்றோல் குண்டுகளோடு துரத்தினர். அனுராதபுரம் கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இராணுவ பாதுகாப்போடு வவுனியா வரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டோம். மாங்குளத்தில் காடையர்கள் பஸ்ஸை கற்கள் கொண்டு தாக்கினர். அக்காலத்திலும் உண்மைச் சம்பவங்களும் வதந்திகளும் சேர்ந்து மரண பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு இதனைப் புரிந்துகொள்ளும் வயதில்லை. ஆனால் அண்ணாவுக்கு இவை தெளிவாக மனதில் பதிந்து இருக்கும். அந்த உணர்வுகளோடு தமிழ் தேசியத்தின் தலைநகரான யாழ் மண்ணில் அவன் இளைஞனான்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல் கொழும்புக்கு மறுநாள் மாலையளவில் கொண்டு செல்லப்பட அங்கு பதட்டம் ஏற்பட்டது. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழர்கள், அவர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்கானது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சியில், இக்கலவரம் கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யூலை 25 மாலை வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 35 பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 17 அரசியல் கைதிகள் யூலை 27 இல் படுகொலை செய்யப்பட்டனர். பரவலாக தென்பகுதியில் குறிப்பாக கொழும்பில் நடந்த வன்முறையில் சிங்களக் காடையர்களால் 800 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம் 24 மணிநேரச் செய்திச் சேவைகள் கிடையாது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்வதுதான் செய்தி. லங்கா புவத் – ப்பொறு புவத் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அன்றும் அசம்பாவிதங்கள் வதந்திகளாக வந்துகொண்டிருந்தது. நாளாந்த வாழ்க்கை சீர்குலைந்தது. சமைத்து சாப்பிடுவதே கஸ்டமானதாக இருந்த நாட்கள். ஒவ்வொரு வீட்டுலுமே இழவு நிகழ்ந்தது போன்ற உணர்வு. மாலை ஆறு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்காக எல்லோரும் மயான அமைதியோடு காத்திருந்தோம். வெலிகடைப் படுகொலைகள் பற்றி சொல்லி கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. அண்ணா குமுறினான். அருகில் இருந்தவற்றை தூக்கி எறிந்தான். கொல்லப்பட்டவர்களில் அவனுக்கு நெருக்கமான மாஸ்ரரும் ஒருவர். கொல்லப்பட்டவர்களில் சிலர் அவனுக்கு நெருக்கமாக இருந்தனர் அல்லது அவர்கள் தனக்கு நெருக்கமாக இருந்ததாக உணர்ந்து இருக்க வேண்டும்.

அப்பொழுதெல்லாம் நாளாந்தம் செய்தி கேட்பது நாளாந்த வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ஒழிப்பு மறைப்பு கூட்டுத்தாபனமானது. அதனால் செய்திகளுக்கு இந்தியாவின் ஆகாசவானியின் செய்திகள், மாநிலச் செய்திகள், பிபிசி இன் தமிழோசை, பிலிப்பைன்ஸில் இருந்து வெரித்தாஸ் வானொலி ஆகியன தமிழ் வீடுகளின் நாளாந்த பெயர்களாக அறியப்பட்டிருந்தது. தமிழ் இயக்கங்கள் கரந்தடிப் படைகள் என வெரித்தாஸ் வானொலியால் என்று தான் நினைக்கிறேன் அழைக்கப்பட்டது.

அவனுடைய போக்குகள் மாற்றம் அடைந்தது. அவன் தன் பொறுப்புகளை உணர்ந்தவன் போல் ஆனான். மேற்கொண்டு தான் படிக்கத் தயாரில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஊர்விட்டு வேலை விடயமாக வேறோர் ஊரக்குப் போகப் போவதாகக் கூறினான். அவன் பொய் சொல்கிறான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்று அவனை நம்ப வைப்பதற்கு எங்களால் முடியவில்லை. நாட்கள் நகர்ந்தது. அவனது நடவடிக்கைகள் முற்றாக மாற்றம் அடைந்தது. ஒரு நாள் இரவு வேலைக்கு போவதாகக் கூறி வெளிக்கிட்டான். ஒரு பாக்கிற்குள் சில உடுப்புகளை எடுத்து வைத்தான். இது எங்களுடைய வீட்டில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள பல வீடுகளில் இதுதான் நடந்தது.

அம்மா கட்டி அணைத்து அழுதா. அவவுடைய கனவுகள் அனைத்தும் அன்று உடைந்தது. அனாலும் அவன் எடுத்த முடிவில் அவன் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கம் இருந்திருக்க வேண்டும். அம்மா கத்தியை எடுத்து கையை கீறி அவனுக்கு இரத்த திலகம் இட்டா. அவன் எந்த சலனமும் இல்லாமல் இருளோடு கரைந்து, படலைக்கு வெளியே அவனை ஏற்றிச் செல்வதற்காக நின்றவரோடு சைக்கிளில் பயணமானன்.

இவ்வாறு ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் புறப்பட்டனர். புறப்பட்டவர்களில் பலருக்கும் புறப்படுவதற்கான காரணம் பெரும்பாலும் அன்றைய அரசியல் சூழல்தான். சில தனிப்பட்ட காரணங்களும் அவர்களை அதனை நோக்க உந்தியிருக்கும்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சிக் கொண்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. யூலைப் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பண்பு நிலை மாற்றத்தை தோற்றுவித்தது. இதுவரை சீராக படிமுறை வளர்ச்சி பெற்று வந்த போராட்டம்; தலைமைகளிடம் வீவேகத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் யூலைக் கலவரம் அதனைப் புரட்டிப்போட்டது. விவேகமற்றவர்கள், அவசரக் குடுக்கைகள் தலைமைகளுக்கு முன் தள்ளப்பட்டனர். வெறும் உணர்ச்சிப் பிளம்பில் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்ட இலக்கையும் வடிவத்தையும் அவர்களோ அவர்களுடைய தலைமைகளோ தீர்மானிக்கவில்லை. மாறாக எதிரியான பேரினவாத அரசிடமும் இந்திய உளவுத்துறையிடமும் அது கையளிக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்’, ‘நாங்கள் ஆயதம் ஏந்த வேண்டும் என்பதையும் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ என்று பெருமையாக அன்று முழங்கினார்கள். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இன்று உணர முடிகிறது. ஏனெனில் இறுதியில் இவர்களை முள்ளிவாய்காலில் முடிப்பது என்று எதிரியான சிங்கள அரசும் இந்திய உளவுத்துறையும் தான் தீர்மானித்தது. ‘ஒப்ரேசன் பிக்கன்’ என்ற 2006 இல் போடப்பட்ட தீட்டத்திற்கமைய அதன் கால அட்டவணப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து 2009 இல் முடிவுக்கு வந்தது.

சகோதரப் படுகொலைகளையும் சில அங்கொன்றும் இங்கொன்றுமான நாளாந்த தாக்குதல்களைத் தவிர எமது விடுதலைப் போராட்டத்தை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறையுமே நடத்தியது.

எமது சகோதரர்களும் சகோதரிகளும் விட்டில் பூச்சிகளாக மடிந்து மறைந்தனர். இன்று எமது வரலாறுகளை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறை முகவர்களுமே மும்மரமாக எழுதுகின்றனர். யாழ் நூலகத்தை எரிக்க முன்நின்ற காமினி திஸ்ஸநாயக்காவை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த எட்வேர்ட் குணவர்த்தன தனது நூலின் மூலம் காப்பாற்றியது போல் இந்திய உளவு முகவர்கள் எமது போராட்டத்திலும் படுகொலைகளிலும் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறைகளை கழுவ முயல்கின்றனர். அதற்காகவும் தங்கள் செயல்களை மறைக்கவும் இன்னுயிர் ஈர்ந்த சகபோராளிகள் மீது வீண்பழி சுமத்துகின்றனர் இந்த உளவுத்துறை முகவர்கள்.

இலங்கையில் ஆயத வன்முறையயை ஏற்படுத்துவதில் இந்திய உளவுத்துறையின் பங்கு தீர்மானகரமானது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் காத்திரமான அரசியல் இல்லாத அமைப்புகள் என்பதால் அவர்களுக்கு ஆயதங்களை இறைத்து அப்பாவி சிங்கள மக்களைப் படுகொலை செய்யவும் அவர்களைத் தூண்டியது. அதனால் இவ்விரு அமைப்புகளுமே இராணுவ கட்டமைப்பில் பலம்பெற்று இறுதியில் விடுதலைப் புலிகள் ஏகபோக தலைமையாகினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த இந்தியாவுக்கு எதிரானவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாக சந்ததியார் படுகொலை. பின்னர் உமாமகேஸ்வரன் இலங்கை அரசுடன் நெருக்கமாக அவருடைய படுகொலை, மாலைதீவு தாக்குதல் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை கொண்டு நடத்தியதே இந்திய உளவுத்துறையே. உளவு நிறுவனங்கள் நேரடியாக வெளிப்படையாக தாங்கள் முன்நின்று எதனையும் செயற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு செயற்படுவதற்கான சூழலை அந்தந்த அமைப்புகளில் உள்ள தங்கள் விசுவாசிகளுடாக அவர்கள் அறியாமலேயே உருவாக்கி விடுவார்கள். இது தான் காகம் இருக்க பனம் பழம் விழுவதென்பது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் மத்திய குழுவில் இந்திய உளவுத்துறை அதிகாரியும் இருந்தார் என்றால் அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான். இந்திய இராணுவத் தளபதியான சேகர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர். இந்திய உளவுத்துறை இன்னமும் பலரையும் தனது முகவர்களாக வளர்த்துக்கொண்டது. இவ்வாறான முகவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். இன்று இவ்வாறான முகவர்களைக் கொண்டு இந்திய உளவுத்துறை தனது செயல்களுக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்கின்றது.

தனபாலன் இயற்பெயர். ஊரில் ரவி. தமிழீழ மக்கள் கழகத்தில் வசந்தன் என அறியப்பட்டவன். கழகத்தின் சமூக விஞ்ஞான கல்லூரியில் கற்றவன். இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி இந்திய உளவுத்துறைக்கு பிடித்தமான ஒரு அம்சமாக ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய உளவுத்துறைக்கு அரசியல் தெரிந்து இந்தியாவை தெரிந்துகொள்பவர்களை விரும்பவில்லை. இந்தியாவுக்கு விசுவாசமான முகவர்களும் தாங்கள் சொல்வதைக் கேட்டு களமிறங்கக் கூடியவர்களுமே தேவைப்பட்டனர். சிந்திக்கக் கூடியவர்கள் அவர்களுக்கு ஒரு போதும் தேவைப்பட்டதில்லை.

தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழகத்தில் வசந்தனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அங்கிருந்த இடதுசாரி அமைப்புகளுக்கு வசந்தனூடக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தவர். இன்றும் அந்த நாட்களை நினைவு கூருகின்றார். அண்ணா வசந்தன் பின்நாட்களில் வவுனியா முள்ளிக்குளம் முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று நாட்களாக நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டான். இம்மோதலில் தமிழீழம் கேட்டுப் போராடச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் இம்மோதலில் கொல்லப்பட்ட பலரின் உடல்களை அருகே இருந்த கிறிஸ்தவ பாதிரியாரே அடக்கம் செய்திருந்தார். சில மாதங்களுக்குப் பின் அப்பகுதிக்குச் சென்று எம் தந்தையார் அந்த பாதிரியாரைச் சந்தித்து வந்தார். அம்மா சில ஆண்டுகளாகவே அவன் சிலவேளை எங்காவது தப்பியோடி இருந்து வருவான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தா. அண்ணாவின் உற்ற நண்பனான பரமானந்தன் தான் எனது மூத்த சகோதரியயை மணம் முடித்தார். அவரின் ஞாபகமாகவே அவர்களுடைய மூத்த மகளுக்கு வசந்தினி என்றும் மகனுக்கு வசந்தன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

(வசந்தனோடு போராடச் சென்ற சக போராளியான நேதாஜி – என்றழைக்கப்படும் பிரேம்சங்கரின் காணொலி கீழே கொமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இவ்வாறாக பல ஆயிரம் போராளிகள் விட்டில் பூச்சிகளாக பேரினவாதத்தினதும் சர்வதிகாரத்தினதும் உளவு நிறுவனங்களினதும் நோக்கங்களுக்காக பலிகொடுக்கப்பட்டனர். வேடர்கள் எழுதுவது வரலாறு அல்ல. வியட்கொங்கின் வரலாற்றை சிஐஏ முகவர்களும் ஹொலிவூட்டும் எழுத முடியாது. அது போல தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வரலாற்றை இந்திய உளவு முகவர்கள் எழுத முடியாது. உண்மையான போராளிகளை வரலாறு பதிவு செய்யும். அல்லாதவர்களை வரலாறு காட்டிக்கொடுத்துவிடும்.