ஜெயபாலன் த

ஜெயபாலன் த

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

UN_Logoஎல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

ஏ சி சாந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்து

Santhanபிரித்தானியா தமிழ் அமைப்பின் ஸ்தாபகரும் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பானவருமாக கருதப்பட்ட ஏ சி சாந்தன் கிங்ஸ்ரன் கிரவுண் நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார். குண்டு தயாரிக்கும் பொருட்களை புலிகளுக்கு விநியோகித்ததற்காகவும் பயங்கரவாதத்துடன் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்காகவும் சாந்தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2004ல் புலிகளின் பொலிஸ் பிரிவுக்கு கைவிலங்குகளையும் பூட்ஸ்களையும் வாங்கி விநியோகிக்க முற்பட்ட போது பொலிஸாரால் ஏ சி சாந்தன் எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனாலும் அதனையும் மீறி அவர் இதனை மேற்கொண்டதாகவும் அரச தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஏ சி சாந்தனுடன் குற்றச்சாட்டப்பட்ட முருகேசு ஜெகதீஸ்வரன் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.

Related News:

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிணையில் விடுதலை

பிந்திய செய்தி: விடுதலைப் புலி ஆதரவாளர் மீண்டும் கைது

ஒருபேப்பர்-வாசன் அச்சக கட்டடிம் மீது சோதணை – பிரித்தானிய புலி ஆதரவாளர்கள் மூவர் கைது

சாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

British_French_Foreign_Ministersஏப்ரல் 15ல் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் கொச்னர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் எல்ரிரிஈ பயங்கரவாதத்தை புறக்கணிப்பதும் ஆயுதங்களைக் கீழே போடுவதும் நிரந்தரத் தீர்வுக்கு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 12ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இருநாள் தாக்குதல் தவிர்ப்பை வரவேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் பாராட்டி உள்ளனர். இத்தாக்குதல் தவிர்ப்பு காலப்பகுதியில் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மோதல் பிரதேசத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறவில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மக்களை வெளியேறவிடாது புலிகள் பலவந்தமாகத் தடுக்கின்றனர் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.

தாக்குதல் தவிர்ப்பிற்கு சற்று முன் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த வெளியேற முற்பட்டவர்கள் புலிகளால் சுடப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக Under-Secretary-General for Humanitarian Affairs  ஜோன் ஹொல்ம்ஸ் இவ்வறிக்கை வெளிவருவதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 5ல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் தலைவர் பலத்த இழப்புகளின் மத்தியில் காப்பாற்றப்பட்டார். அத்தாக்குதலுக்கு மறுநாள் முதல் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இப்போராட்டங்கள் இரவு பகலாக பத்து நாட்களுக்கம் மேலாக தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இந்நிலையிலேயே இவ்விரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மீது காட்டமான கண்டனத்தையும் கடுமையான குற்றச்சாட்டையும் வைத்து உள்ளது. புலிக்கொடி மற்றும் பிரபாகரனின் படங்கள் தாங்கிய போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட பளீர் அறையாகவே இக்கூட்டறிக்கை வெளிவந்து உள்ளது.

ஒரு பயங்கரவாத அமைப்பிலும் பார்க்க ஜனநாயக அரசு பொது மக்களைக் காப்பத்தில் உயர்தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைசர்கள் டேவிட் மில்லிபான்ட் உம் பெர்னாட் கொச்னர் உம் மகிந்த ராஜபக்ச அரசு புதிய தாக்குதல் தவிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எல்ரிரிஈ மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். பொது மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய அளவிற்கு நீண்டதாக தாக்குதல் தவிர்ப்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் அப்பொது மக்கள் மோதல் பகுதிகளை விட்டு வெளியேறும்பட்சத்தில் அவர்களுக்கு பாகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை யுஎன் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இரு தரப்பும் சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படத்த வேண்டும் என்ற வழமையான கூற்றுக்களை மீளவும் தெரிவித்துள்ளனர்.

யுஎன் னும் ஏனைய சர்வதேச சமூக உறுப்பினர்களும் இவ்விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் அவ்விரு அமைச்சர்களும் தெரிவித்து உள்ளனர்.

Joint UK and French statement on Sri Lanka (15/04/2009)

The Foreign Secretary, David Miliband, and the Foreign Minister of France, Bernard Kouchner, issued a joint statement on the situation in Sri Lanka on Wednesday 15 April. They said:

‘We welcomed President Rajapakse’s announcement on 12 April of a pause in the Sri Lankan government’s military offensive as a first step towards the protection of civilian life. But we are deeply concerned that there was no large scale movement of civilians away from the conflict area to safety as we had hoped to see, in the short period allowed for the pause. It is clear that the LTTE have been forcefully preventing civilians from leaving the conflict area and we deplore their determination to use civilians as a human shield. We do of course continue to call on the LTTE to renounce terrorism and lay down their arms as a necessary element for a long-term solution.

We urge President Rajapakse to announce a new pause . Democratic governments are rightly held to higher standards for civilian protection than terrorist organisations. We also urge the LTTE to allow civilians to move to safety. It is vital that a pause in the fighting should be long enough to give civilians the opportunity to leave the conflict area, and for the UN to build confidence amongst the population that they will be safe if they leave. Both sides must abide by their obligations under international humanitarian law and do all they can to protect civilians. This includes giving international humanitarian agencies unimpeded access to those affected by the fighting so that they can deliver adequate supplies of assistance. France and Britain, as two members of the Security Council, continue to support the active engagement by the UN and by other members of the international community on this urgent issue.’

._._._._._.

யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்டுள்ள மக்கள் எவ்வாறானதொரு சூழலுக்குள் வாழ்கிறார்கள் என்பதை எந்தவொரு இலங்கைத் தமிழருக்கும் எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மரண வாயிலில் தள்ளப்பட்டுள்ள மக்களை எவ்வாறாயினும் மீட்டெடுக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவர்களுடைய இந்நிலைக்கு இலங்கை அரசா அல்லது புலிகளா காரணம் என்ற விவாதமும் அதையொட்டிய போராட்டங்களும் பரவலாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டு அப்பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்னி மக்களை இனப்படுகொலை செய்யும் இந்த அரசு தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று புலி ஆதரவு அணி புலம்பெயர் நாடுகள் எங்கும் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. மறு முனையில் புலிகள் தங்களைப் பாதுகாக்க மக்களை மனிதக் கேடயங்களாக்கி வன்னி மக்களைப் பலியிடுவதால் புலிகளே வன்னி மக்களின் இந்நிலைக்கு முழுப் பொறுப்பும் என அரச அதரவாளர்களும் வாதிடுகின்றனர். இவர்களில் சிலர் அதனையும் தாண்டுகின்றனர். அண்மையில் கொழும்பு சென்ற புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன்னை வானொலி அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ‘சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இவர்கள் தான் புலம்பெயர் ‘ஜனநாயக்கார்களுக்கு’ ‘மாற்றுக் கருத்தாளர்களுக்கு’ குரல்கொடுப்பவர்கள்.

புலிகளின் தலைவர் உள்ளே – வெளியே என்று உறுதிப்படுத்த முடியாத பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசித்துண்டு நிலத்தை நோக்கி நகர்கின்றனர். புலிகளைப் பொறுத்தவரை இன்று மக்களே அவர்களது மண்மூட்டைகள். இலங்கை அரசு புலிகளை புலிகளின் தலைமையை (அதன் தலைமை அப்பிரதேசத்தில் இருந்தால்) அழிப்பதாக இருந்தால் அந்த மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்தே தனது இலக்கை அடைய முடியும். அதற்கு தாங்கள் தயார் என்பதை அரசு அறிவித்து உள்ளது. செச்சினிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட ஆயிரம் வரையான மாணவர்களை விடுவிக்க ரஸ்ய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை இலங்கை அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அந்த இராணுவ நடவடிக்கையில் பணயக் கைதிகள் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவ்வாறான ஒரு நடவடிக்கை 150000 பொது மக்கள் அகப்பட்டுள்ள முல்லைத்திவில் மேற்கொள்ள இலங்கை இராணுவம் முயல்கிறது. ஆனால் இவ்விரு நிலமையும் முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அரசபடைகளின் ஒரே நோக்கம் புலிகளையும் அதன் தலைமையையும் அழிப்பதே. வன்னி மக்களின் பாதுகாப்பு இரண்டாம் பட்சமானதே. இப்போது புலிகளுக்கு உள்ள கடைசி ஆயுதம் வன்னி மக்களே.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்களில் குதித்து உள்ளனர். அவர்களது போராட்ட வடிவங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் புலிக் கொடியும் பிரபாகரனின் படங்களும் மேலோங்கி நிற்பது இப்போராட்டங்களின் நியாயத்தன்மையை மழுங்கடிக்கின்றன. வன்னி மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தின் மீது சேறடிக்கின்றன. புலிக்கொடியும் வே பிரபாகரனின் படங்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்துவனவாக இல்லை. சிங்கக் கொடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இருக்கும் அதே சமன்பாடு தான் புலிக்கொடிக்கும் வே பிரபாகரனுக்கும் உரியது. இவற்றைக் காவிக்கொண்டு போராட்டம் நடத்த இவையொன்றும் மனிதத்தையும் மனித உரிமையையும் வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் தீவிரமான தகவல்கள் பரிமாற்ற யுகத்தில் வாழ்கின்றோம். புதினம் படித்து, ஐபிசி கேட்டு, ஜிரிவி பார்த்து விட்டுத்தான் டேவிட் மில்லிபான்ட்டும் பெர்னாட் கொச்னரும் கூட்டறிக்கை விடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

புலிகளின் தலைமைக்கு தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை மட்டுமல்ல தங்கள் 25000ற்கும் மேற்பட்ட உறவுகளைப் போராட்டத்திற்காக கொடுத்தனர். புலிகளுடன் தோளோடு தோள் நின்றனர். அப்படி இருந்தும் புலிகளின் தலைமையால் தமிழ் மக்களுடைய எவ்வித உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. மாறாக தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் மீது சவாரி செய்தது தான் மிஞ்சியது. இன்று அந்த மக்கள் மிகவும் களைத்து நொந்து போயிருக்க புலிகளின் பெயரில் புலம்பெயர் புலியாதரவுச் சமூகமும் ஒரு தடவை சவாரி செய்ய முனைகிறது.

பாதுகாப்பிற்கு பதுங்கும் குழிகளே புதைகுழிகளாகும் அந்த மண்ணை அவர்களின் பூர்வீக மண் என்று சொல்லி அவர்களுக்கு வாய்கரிசி போட புலம்பெயர் மண்ணில் போராட்டம் அவசியமில்லை. இன்றைய அவசர தேவை அம்மக்களிற்கான உயிர்ப் பாதுகாப்பு.

புலிகளுக்கு தண்ணி காட்டி பொய்சொல்லி பாஸ் எடுத்துவிட்டு பூர்வீக மண்ணைவிட்டு வெளிநாடு வந்தவர்கள் தான் பெரும்பாலான புலம்பெயர்மக்கள். ஆனால் இங்கு வெளிநாடுகளில் இருந்தகொண்டு தாங்கள் விட்டுவந்த பூர்வீக மண்ணை வன்னி மக்களின் தலையில் கட்டும் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை எப்போதும் முதல் எதிரி ஒடுக்குமுறை அரசு. அந்த அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் மிகப்பெரும் தடையாக உள்ளனர். ஏனைய ஆயுதக் குழுக்கள் அரசுடன் செயற்பட புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக யுத்தம் புரிகின்றனர். ஆனால் அது தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அதனால் புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடித்து உள்ளனர். இன்று புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. ஆயுதங்கள் மீது அதீத காதல் கொண்ட புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பதம் கைவிடுவதும் நீண்டகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனைப் பாதிக்கும் என்றில்லை.

புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை இணைத்தலைமை நாடுகளால் பெப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவும் தற்போது மீண்டும் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் பெற்ற பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் அக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளன. இந்நாடுகளின் அரசுகள் தங்களுக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ள அரசுகள். இந்நாடுகளில் பல நேட்டோ அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இன்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு உள்ளன. இந்நாடுகள் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கோருவதன் நோக்கம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வது பொருத்தமாக இருக்கும் என்று தேசம்நெற்ற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அவர் நேபாளில் மாஓ இஸ்ற்றுக்களின் தந்திரோபாயத்தை புலிகளும் பின்பற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரான ரவி சுந்தரலிங்கமும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தார். மக்களின் பெயரால் ஆயுதம் தூக்கியவர்கள் மக்களுக்காக அவற்றை கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

புலிகளுடைய ஆயுத பலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பேச்சவார்த்தைகளில் பேரம் பேசுவதற்கு உதவும் என்ற வாதம் பொதுவாக உள்ள ஒன்று. ஆனால் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் புலிகள் பலத்த இராணுவ வெற்றிகளைச் சாதித்திருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றனர். ஆயினும் இந்த இராணுவ பலத்தை அரசியல் வெற்றியாகவோ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் கருவியாகவோ மாற்றுகின்ற அரசியல் வல்லமை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. புலிகளின் கைகளில் இருந்த ஆயுதம் குரங்கின் கையில் இருந்த பூமாலைக்கு ஒப்பானது என்பதனை தற்போதைய வன்னி நிலவரம் நிரூபித்து உள்ளது.

எந்த மக்களைக் காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்தார்களோ இன்று அவர்களே இலங்கை இராணுவத்திற்கு எதிராக புலிகளின் அரணாக மாற்றப்பட்டு உள்ளனர். அரணாக இருக்க மறுத்து தப்பிச் செல்பவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதம் தமிழ் மக்களுக்கோ தமிழ் மக்களின் போராட்டத்திற்கோ உதவபோவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அந்த ஆயுதங்களைக் கைவிடுவது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

யுத்தப் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150000 வரையான மக்களில் பெரும்பாலான இளையவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படத்தப்பட்டு யுத்தத்தின் முன்னரங்க நிலைகளில் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப் பிரதேசங்களில் உள்ள நாற்பதினாயிரம் வரையான மாணவர்கள் இந்த யுத்த பிராந்தியத்திற்குள் சிக்குண்டு உள்ளனர். மறத்தமிழன் வீரத்தமிழன் அடங்கா மண்ணில் பிறந்த தமிழன் என்று சொல்லி அந்த மாணவ மாணவிகளை விதைக்கின்றோம் என்று சொல்லி முளையிலேயே கருக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக இந்தக் கொல் கருவிகளை தூக்கியெறிவதில் எந்தத் தயக்கமும் அவசியமில்லை.

தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்

Pirabakaran V_LTTEபுதுக்குடியிருப்பில் ஏப்ரல் 5ல் இடம்பெற்ற தாக்குதலில் பல நூறு போராளிகளை இழந்து காப்பாற்றப்பட்ட புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தங்கள் இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இதனைத் தெரிவிக்கின்ற போதிலும் புலிகள் உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தற்போது அங்கு இல்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்று உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார்.  (Related Article : Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதி முக்கிய தலைவர்கள் சிக்குண்ட நிலையில் இடம்பெற்ற மிக மூர்க்கத்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முழு இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான கொமாண்டர் தீபன் கொல்லப்பட்டு இருந்தார். இதுவரை புலிகளில் கொல்லப்பட்ட போராளிகளில் மிக மிக முக்கியமான கொமாண்டராக தீபன் இருந்துள்ளார். அவர் உட்பட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டு இருந்தனர். இவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும், வே பிரபாகரனின் மெய்ப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த கடாபியும் ஆட்லரிப் பிரிவுத் தலைவரான மணிவண்ணனும் அடங்கி இருந்தனர். இவர்களுடன் கிழக்கு பகுதிப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கீர்த்தி, மட்டக்களப்புத் தலைவர் நகுலன், ராதா படையணித்தலைவர் சீலாபரன், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவுத் தலவர் அமிதாப், மோட்டார் பிரிவுத் தலைவர் கோபால் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சுச் செய்திகள் தெரிவிக்கின்றது. ஆயினும் இப்போராளிகளது இழப்புப் பற்றி புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. புலிசார்பு ஊடகங்களும் மௌனமாகவே உள்ளன.

கிடைக்கின்ற தகவல்கள் காயத்திற்கு உள்ளான வே பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, அவரது மனைவி ஆகியோர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றன. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சில முக்கிய தலைவர்கள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

புலிகளின் தலைமை யுத்தப் பகுதியில் இருந்து தப்பித்ததும் அல்லது தப்பிச் செல்ல அனுமதிக்கபட்டதும் இலங்கை அரசாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பும் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதும் எழுந்தமான நிகழ்வுகளா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இவையனைத்தும் இந்தியா பொதுத் தேர்தலுக்கு நெருங்குகின்ற நிலையில் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே சமாதான அணுசரணையாளர் பொறுப்பில் இருந்து நோர்வே நீக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் கீழ்நிலைப் போராளிகள் சில நூறுபேரே உள்ளதாகவும் யுத்த நிறுத்த முடிவில் ஏனைய பிரதேசங்களைக் கைப்பற்றியது போல் இப்பிரதேசத்தையும் இராணுவம் பாரிய யுத்தம் இன்றிக் கைப்பற்றும் என்றும் தெரியவருகிறது.

இப்பிரதேசத்தில் இருந்து புலிகளின் தலைமை பின்வாங்கியது அல்லது எஸ்கேப்பானது உறுதியானால் அங்கு ஏற்படக் கூடிய பாரிய மனித அவலம் தவிர்க்கப்படும்.

முல்லைத் தீவில் புலிகளின் தலைமை தப்பித்துக் கொண்டது அல்லது தப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. இந்திய இராணுவத்துடனான மோதலின் இராணுவச் சுற்றி வளைப்பில் இருந்து புலிகளின் தலைமை அன்று தப்பித்துக் கொண்டது அல்லது தப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின் முல்லைத்தீவில் சிக்குண்ட புலிகள் தங்களது தலைமையைப் பாதுகாக்க மக்களை கேடயமாக்கியதும் அதானால் இலங்கை இனவாத அரசின் இராணுவத் தாக்குதலில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் வரையானோர் மோசமான காயங்களுக்கு உள்ளாயினர். மூன்று தசாப்த கால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை உறுதுணையாக இருந்த வன்னி மக்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க அதி உச்ச விலையைச் செலுத்தினர். இனவாத அரசின் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடிய மக்களை பிடித்து அடித்து முதுகுத்தோலை உரித்தனர். அல்லது தப்பியோடியவர்களை புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

எது எப்படி இருப்பினும் புலிகளின் தலைமை இன்று அப்பிரதேசங்களில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக அல்லது பின்வாங்கிவிட்டதாக தெரியவருகின்றது. இதனை கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் செய்திருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். ஆயினும் இப்போது தன்னும் அவர்கள் தப்பியோடியது அல்லது பின்வாங்கியது இன்னும் பல்லாயிரம் இழப்புகளை தவிர்க்க உதவியுள்ளது.

இணைத்தலைமை நாடுகள் இந்தியா உட்பட ஆதரவளித்த பீக்கன் புரஜக்ற் திட்டத்தின்படி;
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதி குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியும்  குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியின் கடைசி 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையான பகுதியும் கைப்பற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

அடுத்து  01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இது மிகவும் சிரமமானதும் அதிக காலத்தை வேண்டி நிற்பதுமான நடவடிக்கை.

இன்று பின்வாங்கிய புலிகள் மீண்டும் தங்களை சுதாகரித்துக் கொண்டு தாக்குதலை நடத்த தயங்க மாட்டார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுடைய அபிலாசைகளை திருப்திப்படுத்தும் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் ஏற்படுத்தவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தப் பொவதும் இல்லை என்ற உணர்வே பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் உள்ளது. அதனால் இன்று புலிகள் ஓரம் கட்டப்பட்டாலும் இலங்கை அரசினதும் அதனுடன் இணைந்து இயங்குகின்ற சக்திகளினதும் செயற்பாடுகள் மீண்டும் புலிகளின் தேவையை உச்சத்திற்கு கொண்டு வரும் என்கின்ற அச்சம் உள்ளது. இந்த வரலாற்று நச்சு சக்கரத்தை மாற்றி அமைக்கின்ற அரசியல் பலம் இன்னமும் இலங்கையில் இல்லை என்பதே வேதனையான உண்மை.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை பலவினப்படுத்தியதில் அன்றும் சரி இன்றும் சரி புலிகளின் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் நியாயமான அரசியல் லட்சியங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைமையின் நியாயமற்ற போராட்டங்களால் அடிபட்டுச் சென்றது மட்டுமல்ல எதிர்மறையாக அதுவே தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் வழிகோலியது.

புலிகள் எதிர்காலத்தில் தங்கள் அரசியலற்ற அரசியலைக் கைவிட்டு தங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவது அவசியம். அப்படிச் செய்யாத வரை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏகபிரதிநிதிகளாக அல்ல ஏகப்பட்ட பிதிரிநிதிகளில் ஒருவராகவும் வர இயலாது. துரதிஸ்டவசமாக இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள சமூகங்கள் மத்தியில் உள்ள அரசியல் தலைமைகள் ஒன்றும் புலிகளின் தலைமையிலும் பார்க்க குறிப்பிடத்தக்கவை என்றும் சொல்லிவிட முடியாததாலேயே இலங்கை இவ்வாறான ஒரு பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது. குறைந்தபட்சம் யுத்தம் முடிவுக்கு வரும் போது ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மீளவும் பலம்பெறுவார்கள். அவர்களைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியும்.

‘சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வு இயல்பானதே’ உயர்ஸ்தானிகர் நிஹால் ஜெயசிங்க – நேர்காணல் : த ஜெயபாலன் & ரி சோதிலிங்கம்

SL_HC_Nihal_Jayasinghe._._._._._.
தற்போதைய  இலங்கை நிலவரம் தொடர்பாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நீதிபதி நிஹால் ஜெயசிங்கேயை தேசம்நெற் க்காக நேர்காண்டிருந்தோம் அதன் தொகுப்பு இங்கு பதிவிடப்படுகிறது. மார்ச் 24 இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்காணலில் தேசம்நெற் சார்பில் த ஜெயபாலன் ரி சோதிலிங்கம் ஆகிய இருவரும் உயர்ஸ்தானிகர் நீதிபதி நிஹால் ஜெயசிங்க மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகப் பொறுப்பாளர் கபில ஆகியோர் பங்கேற்றனர்.  90 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நேர்காணலின் போது உயர்ஸ்தானிகர் ஆயுதப் போராட்டத்தின் முன் தமிழ் பிரதேசங்களுக்கு தான் பயணித்த தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
._._._._._.

தேசம்நெற்: இன்றைய யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தனது சொந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஐ நா உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசு மீது வைத்துள்ளன. குறிப்பாக கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்ததன் பிற்பாடு இவ்வாண்டு ஜனவரி முதல் தொடரும் முல்லைத்தீவு முற்றுகையில் எவ்வித பாகுபாடுமற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தமிழ் பொது மக்களின் இழப்பு ரொக்கற் வேகத்தில் அதிகரித்து உள்ளது. இலங்கை அரசாங்கம் வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குகிறதா ?

உயர்ஸ்தானிகர்: பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் பல்வேறு மூலங்களில் இருந்து வெளிவருகிறது. நாங்கள் கிழக்கை மீட்டெடுக்கவும் இவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கையையே கையாண்டோம். ஆனால் அப்போது இப்படியான குற்றச்சாட்டுகள் எழவில்லை. வடக்கில் தான் புலிகளின் பிரச்சாரத்தால் இந்த பொய்ப்பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. வேறு வேறு மனித உரிமை அமைப்புகள் பல்வேறு புள்ளிவிபரங்களை வெளியிடுகிறது. அரசாங்கம் உதவி அமைப்புகளையோ ஊடகங்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இவர்கள் புலிகள் கொடுக்கும் தகவல்களைக் கொண்டு பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர்.

சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு வெளியே வடக்கிற்கு வன்னிக்கு வெளியே தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். கொழும்பில் சிங்கள மக்களின் சனத்தொகை வெறும் 28 வீதமே. 72 விதமானவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும். தமிழர்கள் மிகவும் பலம் வாய்ந்த வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அந்த வாக்காளர்கள் தங்களைவிட்டுச் செல்வதை எப்படி விரும்புவார்கள். 19 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் 12.5 மில்லியன்  வாக்காளர்கள்  உள்ளனர். சிறுபான்மை இனங்களது வாக்குகள் 25 வீதம். எந்த ஒரு அரசாங்கமும் 25 விதமான சிறுபான்மையினர் தங்களை விட்டு ஒதுங்கிச் செல்லவதை விரும்பாது.

ஆகவே வேறுவேறு முகவர் அமைப்புகளால் வெளியிடப்படும் இந்த அழிவுகள் பற்றிய தகவல்கள் அர்த்தமற்றவை. அரச படைகள் எழுந்தமானமான கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவதில்லை. ஆனால் யுத்த சூழலில் இழப்புகள் ஏற்படும். புலிகள் மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும். புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் தான் யுத்தம் செய்வதாகக் கூறினால் மக்களை எதற்காக அங்கு தடுத்து வைத்திருக்கிறார்கள். அரசபடைகளுடன் சண்டை என்றால் போய் அரச படைகளுடன் சண்டையிடுங்கள். புலிகள் ஒரு பலம் மிக்க இராணுவ அமைப்பு என்று சொன்னால் எதற்கு பொது மக்களை கவசமாகப் பயன்படுத்துகிறார்கள்.

தேசம்நெற்: புலிகள் பொது மக்களை தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச அமைப்புகளும் தெரிவிக்கின்றன. புலிகள் இலங்கையில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ள ஒரு இராணுவ அமைப்பு. ஆனால் இலங்கை அரசு அப்படியல்ல. அது சட்டபூர்வமான ஒன்று. அதனால் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஒரு பயங்கரவாத இயக்கம் என்று நீங்கள் சொல்லும் ஒரு இயக்கத்திடம் மலர்க் கொத்தையும் மனிதாபிமானத்தையும் எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையல்லவா? ஆனால் 3000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 7000 பேர்வரை காயமடைந்து உள்ளனர். இரண்டில் மூன்று வீதமான குண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதாக ஐ நா குற்றம்சாட்டி உள்ளது. பாதுகாப்பு வலயம் இருப்பதன் அர்த்தம் என்ன ?

SL_HC_Nihal_Jayasingheஉயர்ஸ்தானிகர்: இலங்கை அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டு வருகின்றது. அரச படைகள் முன்னேறிச் செல்லும் வேகத்தை பெருமளவில் குறைத்து இருப்பதே மக்களுடைய இழப்புகளைக் குறைப்பதற்கே. இதில் பெரும்பாலான பரப்புரைகள் பொய்யானவை. அரச படைகள் கிளஸ்ரர் குண்டகளைப் பயன்படத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தவதில்லை என்ற ஒப்பந்தத்தில் இலங்கை கையழுத்து இட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது அவ்வாறான ஆயுதங்களை எமக்கு அயுதங்களை வழங்கும் நாடுகள் எப்படி வழங்கி இருக்க முடியும். இது சாதாரண விடயங்கள் அல்ல. ஆயுதக் கொள்வனவுகளுக்கென்று சில நடைமுறைகள் இருக்கின்றது. அப்படியானால் எந்த நாடு எங்களுக்கு இந்த கிளஸ்ரர் குண்டுகளைத் தந்திருக்க முடியும். இதுவும் புலிகளின் ஒரு பிரச்சார யுக்தியே.

மற்றது பாரபட்சமில்லாமல் தமிழ் மக்கள் மீது செல்தாக்குதல் நடத்துகின்றது என்று சொல்வதும் புலிகளின் ஒரு பொய்ப் பிரச்சாரமே. 2010ல் அடுத்த தேர்தல் வர இருக்கின்றது. சிங்கள மக்களுடைய வாக்குகளில் மட்டும் எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் மிக முக்கியம். அப்படி இருக்கும் போது அரசாங்கம் எப்படி தமிழ் மக்களை பகைத்துக் கொள்ள விரும்பும். அந்த மக்கள் மீது செல் தாக்குதலை நடத்திவிட்டு எப்படி அவர்களின் வாக்குகளை வெல்ல முடியும்.

தேசம்நெற்: தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுகிறதே ?

உயர்ஸ்தானிகர்: அரச படைகள் தாக்குதல் தவிர்ப்புப் பகுதியில் வேண்டுமென்று தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதல் தவிர்ப்புப் பகுதிகளில் ஒளிந்துகொண்டு மக்களைக் கேடயமாக்கிக் கொண்டு புலிகள் தான் அரச படைகள் மீது தாக்குதலை நடத்துகின்றனர். அப்படிச் செய்யும் போது அரச படைகள் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா. தமிழ் மக்களைப் போல இராணுவ வீரர்களும் மனிதர்கள் தானே. அவர்களும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.

அங்கே சிங்கள மக்கள் மத்தியிலும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது.  இந்த விடயத்தில் தாக்குதல் தவிர்ப்புப் பகுதி, பாதுகாப்பு பகுதி என்றில்லாமல் அரச படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி முன்னேறிச் செல்வது இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அரச படைகள் அவ்வாறு செய்யவில்லை. அப்படிச் செய்தால் பாரிய உயிரிழப்புகள் பொது மக்களுக்கு ஏற்படும். அதனால் பொது மக்களுடைய பாதுகாப்பை கவனத்தில் எடுத்தே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதனால் தான் 50000 தமிழ் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தப்பி வரக் கூடியதாக இருக்கிறது.

தேசம்நெற்: புலிகளை துடைத்தழிக்கின்ற பீக்கன் புரஜக்ற் என்கிற திட்டம் ஒன்றை இன்றைய அரசாங்கம் 2005ல் இந்தியா மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு வழங்கியதாகவும் அதற்கு அவர்கள் தங்கள் ஆதரவை இரகசியமாக வழங்கி இருந்ததாகவும் தேசம்நெற் அறிகிறது. இத் திட்டம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இந்த இணைத்தலைமை நாடுகள் இதற்கு ஆதரவு அளித்துள்ளனவா ?

உயர்ஸ்தானிகர்: இது என்ன விடயம் என்றே எனக்குத் தெரியாது. இது பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.

தேசம்நெற்: எல்ரிரிஈ பெரும்பாலும் தங்கள் அனைத்து நிலப் பரப்புக்களையும் இழந்து விட்டனர். அரசாங்கம் பெரும்பாலும் யுத்தத்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்த யுத்தத்திலும் பார்க்க கடினமானது தமிழ் மக்களுடைய  இதயங்களை வெற்றி கொள்வது. அதனை அரசாங்கம் எவ்வாறு செய்யப் போகின்றது ?

உயர்ஸ்தானிகர்: இது தான் மிக முக்கியம். அரசாங்கம் பல்வேறு நம்பிக்கைத் தரக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கிறது. இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்கிறது. இலங்கை அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்காக சேர் பொன் ராமநாதன் சேர் பொன் அருணாச்சலம் போன்ற தமிழ் தலைவர்கள் உழைத்து உள்ளார்கள்.

தேசம்நெற்: இலங்கையில் தமிழ் மக்களுக்கு திட்டமிட்ட இனப்பாகுபாடு இல்லையென்று சொல்கிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட முறையில் இனப்பாகுபடுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. யாழ்ப்பாணப் பெண் குடி தண்ணீர் எடுக்க நீண்ட துரம் நடக்க வேண்டி உள்ளது. பாடசாலைகள் சுகாதார வசதிகள் பிரச்சினையாக உள்ளது. அப்படித்தான் மொனராகலையிலும். தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்கள் ஒரே பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அது தமிழர்களுக்கு மட்டுமான பிரச்சினையில்லை. இது ஒரு மூன்றாம் உலகநாடுகள் எதிர்கொள்கின்ற பிரச்சினை.

தேசம்நெற்: கடந்த 30 வருட யுத்தத்தில் 100000 பேர்வரை கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள். இந்த உயிரிழப்புகளில் எல்ரிரிஈ க்கு மட்டுமல்ல பாதுகாப்பு படையினருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள நீதித்துறையால் எந்தவொரு பாதுபாப்பு படையினரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. பண்டாரவளையில் 35 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் நீங்கள் நீதிபதியாக இருந்துள்ளீர்கள் அதிலும் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. இலங்கையின் நீதித்துறையில் எவ்வாறு தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியும் ?

SL_HC_Nihal_Jayasingheஉயர்ஸ்தானிகர்: இது உண்மையல்ல. இலங்கையில் உள்ள நீதித்துறை சட்டங்கள் பெரும்பாலும் குறம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாகவே உள்ளது. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் நீதித்துறை கவனமாக உள்ளது. இலங்கையில் ஒருவர் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதனை எங்கு வந்தும் சொல்வதற்கு நான் தயாராக உள்ளளேன்.

ஒருவருக்கு தண்டனையை உறுதிப்படுத்த சாட்சியங்கள் அவசியம். ஆனால் பெருமளவு வழக்குகளில் ஆதாரபூர்வமான சாட்சியங்கள் கிடைப்பதில்லை. உங்களுடைய கேள்விக்கு எனது பதில் ஆதாரங்கள் இருந்தால் அரசாங்கம் நிச்சயம் அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும்.  நீதித்துறையில் ‘truth beyond reasonable dobut’ என்று குறிப்பிடுவார்கள்.  வழக்கின் போது கூறப்படுகின்ற உண்மையில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தினாலே குற்றம்சாட்டப்பட்டவருக்கு போதுமானது.

தேசம்நெற்:அதாவது இலங்கையில் உள்ள நீதித்துறை நிரபராதிகளை தண்டிக்கவில்லை. ஆனால் பல்வேறு குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக உள்ளனர் என்பதை ஏற்றக் கொள்கிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: அப்படியில்லை. ஒருவரும் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் அல்ல. ஆதாரங்கள்  அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எங்களுக்கு உள்ள பிரச்சினை ஆதாரங்கள் சாட்சிகள் இல்லை.

தேசம்நெற்: ஆதராங்களை பெற்று குற்றவாளிகளைத் தண்டிப்பதும் சாட்சிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பல்லவா ?

உயர்ஸ்தானிகர்: மக்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலமே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்கிறது.

தேசம்நெற்: ஒரு இலங்கைப் பிரஜை அங்குள்ள சட்டத்துறையில் நம்பிக்கை கொள்ள முடியுமா ?

உயர்ஸ்தானிகர்: சட்டத்துறை என்பது ஒரு விடயம். அதில் தங்கி இருக்க முடியுமா என்பது அடுத்தது. ஏனைய துறைகளைப் போன்றது தான் இதுவும். ஒவ்வொருவரும் தமது கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும். ஒரு தவறு ஏற்பட்டதற்காக அந்தத் துறையை நிராகரிக்க முடியாது. ஒரு தவறும் நிகழாத சட்டத்துறை ideal situation தான் இருக்கும்.

தேசம்நெற்: இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவுக்கும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கும்  எதிராக இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றங்கள் சுமத்தப்பட்டு அமெரிக்காவில் வழக்கு தொடரபட்டு உள்ளது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

உயர்ஸ்தானிகர்: இந்த வழக்கைத் தொடுத்தவர் முன்னாள் செனட்டர் புருஸ்பெயின். இவர் எல்ரிரிஈ இன் தீவிர ஆதரவாளர். எல்ரிரிஈ ஆல் இதற்காக அமர்த்தப்பட்டு உள்ளார். இனப்படுகொலை என்பது திட்டமிட்ட முறையில் ஒரு இனத்தை அழிப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை. அதனை எழுந்தமானமாக பயன்படுத்த முடியாது.  இலங்கையில் தென் பகுதியில் கூடுதலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மற்றையது யுத்தத்தில் தோக்கின்ற தரப்பு எப்பொதும் யுத்தத்தில் வெல்பவர்கள் யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாகவே குற்றம்சாட்டுகின்றனர். 

தேசம்நெற்: இலங்கையில் யுத்தத்தில் சிக்குண்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ‘வணங்கா மண்’ என்ற கப்பல் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அது பற்றி இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

உயர்ஸ்தானிகர்: நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சுனாமி காலகட்டத்தில் நிவாரணங்கள் பலராலும் அனுப்பி வைக்கப்பட்டது தானே. இலங்கையின் சுங்க நடைமுறைகளுக்கு அமைய இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை யாரும் அனுப்பி வைக்கலாம். ஆவணங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால் அதில் என்ன திரில். வன்னி மிஸனில் என்ன திரில்.

எந்த ஒரு கப்பலும் ஒரு துறைமுகத்தில் இருந்து புறப்படும் போதும் அது எந்தத் துறைமுகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்தத் துறைமுகத்திற்கு செல்கிறது என்று தெரியாத கப்பல் தனது கடல் எல்லைக்கு வந்தால் எந்த நாடும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும்.

தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டு விட்டது. அபிவிருத்திகள் நடைபெறுகிறது என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அண்மையில் பள்ளிச்சிறுமி பாடசாலையில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முதலமைச்சர் பிள்ளையனுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். மக்கள் எப்படி உங்கள் ஆட்சியில் உங்கள் அரசில் நம்பிக்கை வைக்க முடியும் ?

உயர்ஸ்தானிகர்: 28 வருடங்கள் யுத்தம் நடைபெற்று சட்டமும் ஒழுங்கும் இல்லாது இருந்த பகுதி. தற்போது 10 மாதங்களாகவே அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 28 வருடங்களாக சட்டம் ஒழுங்கு இல்லாது இருந்த பிரதேசத்தில் உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. அதற்கு காலம் எடுக்கும்.

அடுத்தது முதலமைச்சரின் கட்சியுடன் தொடர்புடையவர் செய்தார் என்பதற்காக முதலமைச்சர் மீது குற்றம் சுமத்த முடியாது.

ஒரு சிறுமியை இவ்வளவுக்கு கொடுமைப்படுத்தியவர்களைப் போன்றவர்களுக்கு மத்தியில் தான் நாங்கள் சட்டம் ஒழுகை நிலைநாட்ட முயற்சிக்கிறோம். இதுவெல்லாம் நீண்ட கால ஆயுதக் கலாச்சாரத்தின் விளைவுகள். சட்டம் ஒழுங்கை இவர்கள் மத்தியில் நிலைநாட்ட காலம் எடுக்கும்.

தேசம்நெற்: கிழக்கு விடுவிக்கப்பட்டு இவ்வளவு காலம் ஆகியும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குச்  செல்ல  முடியாமல் இன்னமும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனரே.

உயர்ஸ்தானிகர்: இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது. பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழ்கின்றனர். இலங்கை ஒரு வறியநாடு. எங்களால் செய்யக் கூடியவற்றை செய்கிறோம்.

தேசம்நெற்: ஆனால் இலங்கை 1.5 பில்லியன் டொலர்களை பாதுகாப்புக்கு செலவிடுகிறது. உலகிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை உள்ளது.

உயர்ஸ்தானிகர்: இது இன்றைய அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல. தவிர்க்க முடியாதது. நாங்கள் எதிர்கொள்ளும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கு இந்த செலவு ஏற்படும்.

தேசம்நெற்:  கிழக்கு விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. எல்ரிரிஈ யை குறிப்பிட்ட காலத்திற்குள் இல்லாமல் துடைத் தெறிவோம் என்றும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் எல்ரிரிஈ ஆங்காங்கே கெரில்லா தாக்குதலை நடாத்தி வருகிறது. ஒரு கெரில்லா அமைப்பை அவ்வளவு இலகுவாக துடைத்தெறிய முடியும் என்று நம்புகிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: அரசாங்கம் அப்படி நம்பவில்லை.  ஆனால் ஏற்படப் போகும்  வெற்றிடத்தை அரசியல் நடைமுறையால் நிரப்ப முடியும் என்று அரசாங்கம் மனசார நம்புகிறது. அதனை அரசாங்கம் நிச்சயமாக நிரப்ப வேண்டும்.

தேசம்நெற்: தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டே தமிழ் மக்களின் அரசியல்   அபிலாசைகள் நிரப்பப்பட வில்லை என்பதே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அது எல்ரிரிஈ க்கு விளைநிலமாகவே அமையும். அதனாலேயே தமிழ் மக்கள் எல்ரிரியை நோக்கிச் சென்றனர்.

உயர்ஸ்தானிகர்:  அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனை ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். இந்த யுத்தம் முடிவடைய அரசாங்கம் வடக்கு கிழக்கை கைவிட்டால். யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் இளைஞன் எல்ரிரிஈ இடம்தான் செல்ல வேண்டும். அதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது.

தேசம்நெற்: தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அரசாங்கம் எவ்வாறு நிரப்பப் போகின்றது ?

உயர்ஸ்தானிகர்: அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறது. இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க இருக்கிறது. பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

தேசம்நெற்: அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் நிறைவு செய்ய முடியும் என்று நினைக்கிறது. அதிகாரத்தை பரவலாக்கும் எண்ணம் இல்லை. அப்படித்தானே ?

உயர்ஸ்தானிகர்: அரசியல் தீர்வு பற்றித் தானே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆராய்கிறது. 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள்.

தேசம்நெற்: ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லையே.

உயர்ஸ்தானிகர்: அதனை அமூல்படுத்துவதற்கு எல்ரிரிஈ அனுமதிக்கவில்லையே.

SL_HC_Nihal_Jayasingheதேசம்நெற்: நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்கவில்லை என்று. சரி ஆனால் அரசாங்க கட்டப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் நலன்புரி நிலையங்களுக்கும் அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை.

உயர்ஸ்தானிகர்: இந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சில எல்ரிரிஈ க்கு சார்பாக இயங்குகின்றன என்ற பலமான சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டு உள்ளது. இந்த மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு விநியோகிப்பதற்காக இவ்வமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் எல்ரிரிஈ ன் கைகளுக்குச் செல்கிறது.

தேசம்நெற்: வன்னி மக்கள் மத்தியில் இலங்கை இராணுவம் பற்றிய அச்ச உணர்வு ஒன்று இருக்கிறது. அப்படி இருக்கையில் அச்சத்தில் வருபவர்களை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொருத்தமற்றது. மேலும் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் சீவிக்க வேண்டும் என்பதால் பலர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அச்சம்கொள்வார்கள். அதனால் அந்த முகாம்களை சர்வதேச அமைப்புகளிடம் கையளிப்பதே பொருத்தமானதாக இருக்கும் அல்லவா ?

உயர்ஸ்தானிகர்: ஏன் நாங்கள் சர்வதேச அமைப்புகளிடம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தேவையான அனைத்து விடயங்களையும் செய்கிறது.

இது வந்து எம்மிடம் உள்ள ஒரு மூளைப் பதிவு. எங்களுக்கு எங்களுடைய மக்களைப் பார்க்கத் தெரியாதா? எங்களுக்கு எதற்கு வெளிநாட்டவர். எங்களுடைய மூளைப்பதிவில் வெள்ளைத் தோலுடையவர்கள் உயர்ந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கின்றோம். நோர்வே சுவீடன் டென்மார்க் பிரிட்டன் என்று நாங்கள் ஏன் இவர்களுக்கு பின் செல்ல வேண்டும். நாங்கள் எங்களுடைய மக்களை கவனிப்போம்.

தேசம்நெற்: வன்னி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எல்ரிரிஈ இன் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள்.  இலங்கை இராணுவம் என்பது இரத்த வெறியுடையது என்றே புலிகள் பிரச்சாரப்படுத்தி உள்ளனர். அப்படி இருக்கையில் அவர்களைக் குறைந்தபட்சம் இராணுவம் அல்லாத சமூக அமைப்புகளின் கைகளில் கூட அரசாங்கம் ஒப்படைக்க முன்வரவில்லையே ஏன் ?

உயர்ஸ்தானிகர்: இப்போது யுத்தம் நடந்தகொண்டிருக்கிறது. இது ஒரு முடிவுக்கு வரும்போது இந்த முகாம்கள் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடப்படும்.

தேசம்நெற்: எஸ்எல்எப்பி மட்டுமல்ல முக்கியமாக யூஎன்பி உட்பட இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இன்றைய இந்த மோசமான சூழலை ஏற்படுத்தி உள்ளன என்பதை நீஙகள் ஏற்றுக் கொள்கிறீர்களா ?

உயர்ஸ்தானிகர்: இது ஒரு மிகவும் அரசியல் சார்ந்த கேள்வி. எனது பொறுப்பிற்கு அப்பாற்பட்டது அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

தேசம்நெற்: தமிழ் மக்கள் எல்லோரும் எல்ரிரிஈ என்ற பார்வை அரசாங்கத்திடம் உள்ளதா ?

உயர்ஸ்தானிகர்: தமிழ் மக்கள் வேறு எல்ரிரிஈ வேறு. இது அரசாங்கத்திற்கு மிகத் தெளிவாகத் தெரியும். இந்த நம்பிக்கையீனம் தான் பெரும் பிரச்சினை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வரும் முன்னரே மேற்கு நாட்டு ஊடகங்கள் அவரை கடும் போக்காளர் என்றும் யுத்தப் பிரியர் என்றும் கட்டமைத்தனர்.

தேசம்நெற்: எல்ரிரிஈ பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன ?

SL_HC_Nihal_Jayasingheஉயர்ஸ்தானிகர்: பிரபாகரன் ஒரு இராணுவ தந்திரோபாயம் மிக்க தலைவர் என்று தான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்ததும் ராஜிவ் காந்தியின் படுகொலையும் என்னை அந்த அபிப்பிராயத்தில் இருந்து விடுவித்தது. 

தேசம்நெற்: இன்றைய யுத்தத்திற்கு இந்தியா இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுவது பற்றி….. ஆரம்பத்தில் இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டது. இன்று இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச்  சேர்ந்து உள்ளது.

உயர்ஸ்தானிகர்: இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை அதற்கும் மேல் இந்தியாவே இந்த இயக்கங்களை உருவாக்கியது.

தேசம்நெற்: சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வு எப்போதும் இருக்கிறதல்லவா?

உயர்ஸ்தானிகர்: ஆம். அந்த எதிர்ப்புணர்வு இருக்கிறது. அது இயல்பு தானே. இந்தியா தானே இந்த நிலைமையை தோற்றுவித்தது.

தேசம்நெற்: ஆனால் இந்தியா தானே இந்த யுத்தத்தில் இலங்கைக்கு உதவுகிறது.

உயர்ஸ்தானிகர்: இந்தியா இந்த யுத்த்திற்கு ஆதரவு தருகின்றது. ஏனென்றால் ராஜீவ் காந்தியை படுகொலை செய்து பிரபாகரன் மிகப் பெரிய பிழைவிட்டுவிட்டார்.

‘இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!’ இந்தியத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – போராட்டங்கள் தொடர்கிறது. : த ஜெயபாலன் & வி அருட்செல்வன்

இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.

அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

london-parliment-meeting2.jpgபிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்

Pirabakaran_V2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் முடிவுக்கு வருகிறது. இந்த புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு இல்லையென்று சொல்வது அர்த்தமற்றவாதம்.

ஆனால் இவ்வாறான ஒரு திட்டம் இலங்கை அரசால் இணைத்தலைமை நாடுகளுக்குவழங்கப்பட்டு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டதா என பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு திட்டம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மகிந்த அரசு எவ்வித அரசியல் தலையீடும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதையும் இராணுவத்திற்கான முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடிந்தது. இந்தியாவின் இராணுவ ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருந்தது.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளன. படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் போராளிகளும் கொல்லப்பட்டு தலைமை அச்சுற்றி வளைப்பை உடைத்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அக்குறுகிய சுற்றி வளைப்பில் இருந்து வெளியேறிய போதும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ள முல்லைத்தீவு பகுதியின் இராணுவ அரணை உடைத்து வெளியேற முடியவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் முக்கிய உறுப்பினர்களை உயிருடன் கைது செய்ய இராணுவத்தினர் மயக்க வாயுவை பயன்படுத்தியதாகவும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டது. ஆயினும் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டது மட்டுமல்ல அவர்களின் உடல்கள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டும் உள்ளது. இவர்கள் வருமாறு அடையாளம் காணப்பட்டு உள்ளனர். புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும்,  நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர். கடாபி, பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார்.

இந்த பாரிய இழப்புகளை வெளியிடுவது உளவியல் ரீதியான பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால் புலிகள் இந்த முக்கிய தளபதிகளின் இழப்புகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். புலிகளின் ஆதரவு இணையத் தளமான தமிழ்நெற்றுக்கு சவாலாக உருவாக்கப்பட்ட ‘டிபென்ஸ் எல்கே’ தற்போதைய யுத்தம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் ஊடகமாக மாறியுள்ளது. புலிகளின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ்நெற் பார்ப்பவர்களிலும் பார்க்க டிபென்ஸ் எல்கே பார்த்து யுத்த நிலவரத்தை அறிந்துகொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். அதனால் புலிகள் மறைக்க விரும்பும் செய்திகளும் ஆதார பூர்வமாக அங்கு வெளியிடப்படுகிறது. ஒளிவிச்சு, தமிழ்நெற் எல்லாவற்றையும் டிபன்ஸ் எல்கே உங்வாங்கிக் கொண்டுவிட்டது.

புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நேற்று மாலை (ஏப்ரல் 5ல்) லண்டனில் அவசர அவசரமாகக் கூடிய புலிகளின் முக்கிய ஆதரவாளர்கள் சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக இன்று பிரித்தானியாவின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தீவிர ஆதரவாளர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். காவல்துறையினர் சுமுகமாகவே நடந்து கொள்வதாகவும் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெறுவதாகவும் அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

புரஜக்ற் பீக்கன் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இணைத் தலைமை நாடுகள் அச்சத்துடனேயே தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். குறித்த காலப்பகுதியில் ஒவ்வொரு இலக்கும் அடையப்பட வேண்டும் என்பதை இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இத்திட்டத்தின் முதலாவது ஆண்டின் வெற்றி இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதி 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றை ஒவ்வொன்றாகக் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு பிரிவையும் கைப்பற்ற இலங்கை அரசு 12 மாதங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் இட்டது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கiயோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதிகளையும் கைப்பற்றுவது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றுவது.

புலிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் இந்த திட்டங்களின் படி புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகளை கட்டுப்படுத்த புரஜகற் பீக்கன் திட்டமிட்டது. அதன்படி அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகள் இந்த மூன்றாண்டு திட்டத்தில் கைப்பற்றுவது முக்கிய இலக்குகளாக அமைந்தது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக அமையும். தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமையும். ஏப்ரல் 2011க்கு அண்மையாகவே மகிந்த ராஜபக்ச அரசின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவு பெற்று பொதுத் தேர்தல் இடம்பெற வேண்டிய காலப்பகுதியாகும்.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 வரையான முதலாவது ஆண்டு காலப்பகுதி இலங்கை அரசுக்கு மிகுந்த வெற்றியை ஏற்படுத்தியது. சம்பூரில் 25 ஏப்ரல் முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதி முழுமையும் 30 ஏப்ரல் 2007ல் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இணைத் தலைமை நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை அரசைப் பாராட்டின. தூதரகங்கள் இராணுவ வெற்றிக்கு பாராட்டுச் செய்திகளை வெளியிட்டன. இந்த வெற்றியானது புரஜகற் பீக்கன் திட்டத்திற்கான ஆதரவை மேலும் பலப்படுத்தியது.

முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட புரஜக்ற் பீக்கன் 2வது கட்டம் மன்னார் – வவுனியா முனையில் 25 ஏப்ரல் 2007ல் ஆரம்பமாகியது. 24 ஏப்ரல் 2008ல் மது தேவாலயப் பகுதியையும் 08 மே 2008ல் அடம்பனையும் இராணுவம் கைப்பற்றியது. புலிகள் பெரும்பாலும் மக்களுடன் பின்வாங்கினர்.

புரஜக்ற் பீக்கன் மூன்றாவதும் இறுதியான புலிகளின் நிலப்பரப்பைக் கைப்பற்றும் யுத்தத்தில் ஜனவரி 3ல் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை சர்வதேச அபிப்பிராயங்கள் அனைத்தையும் இலங்கை அரசு தக்க வைத்துக் கொண்டது. குறைந்தபட்ச உயிரிழப்புகளே ஜனவரி பிற்பகுதி வரையான புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைகளில் ஏற்பட்டது. புலிகள் மக்களையும் சாய்த்துக் கொண்டு முல்லைத் தீவிற்குள் பின்வாங்கிச் சென்று ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கப்பட்டனர். ஜனவரி பிற்பகுதி முதல் இந்த குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்ற இராணுவம் தீவிரமான தாக்குதலை நடத்தியது.

ஜனவரி பிற்பகுதி முதல் தினமும் 40 – 100 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு புறம் இராணுவம் தாக்குதலை நடத்த மறுபுறம் இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். . பிடித்து வந்து செம்மையாக அடித்து முதுகுத் தொலை உரித்தனர். நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்று பலவந்தமாக அழைத்து வந்த மக்கள் புலிகளுக்கு மனிதக் கேடயங்களாக மாற்றப்பட்டனர். புலிகள் தங்கள் நன்றிக்கடனை செம்மையாகச் செலுத்தினர்.

இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகளின் மீதும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது திரும்பும் சர்வதேச அழுத்தங்கள் புலிகளின் நடவடிக்கைகளால் பெரிதும் சமப்படுத்தப்பட்டு இலங்கை அரசு ஒப்பீட்டளவில் சர்வதேச அங்கிகாரத்துடன் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்கிறது.

தற்போது புலிகளின் பலத்த கோட்டையாக விளங்கிய புதுக்குடியிருப்பும் படைகளின் வசம் வீழ்ந்து உள்ளது. இரண்டு மூன்று கிராமங்கள் உள்ளடங்கிய 20க்கும் குறைவான கிலோமிற்றர் பரப்பளவே தற்போது புலிகளிடம் எஞ்சியுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இந்தக் கடைசித் துண்டு நிலமும் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் முற்றுப்பெறும். இது இன்னும் சில வாரங்களுக்குள் 30 ஏப்ரல் 2009ற்குள் சாத்தியமாகும் என்பது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது. இதன் போது பெப்ரவரி 2009ல் நோர்வே உட்பட இணைத் தலைமை நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது. இவை புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைக்கு இணைத் தலைமை நாடுகள் அழித்த அங்கீகாரத்தை வெளிப்படையாகக் காட்டி உள்ளது.

ஆனால் அடுத்த சில தினங்கள் மிகவும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் வே பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமைகள் இப்பகுதிகளில் சிக்குண்டு இருப்பதால் நடக்கப் போகும் யுத்தத்தில் மிகப்பெரும் மனித அவலம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் இந்த யுத்தத்தை வென்றுள்ள இலங்கை அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாது என்பது தெட்டத் தெளிவாகி உள்ளது. புலிகளை அழிப்பதில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைக் கொண்டு வரும் என்பதைத் தவிர இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொடுத்து தனது இலக்கை அடைவதில் எவ்வித தயக்கமும் காட்டாது. புலிகளைப் பொறுத்தவரை தமது இருப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசுக்கு ஒப்பாக தமிழ் மக்களை பலிகொடுப்பதில் தாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஏற்கனவே செயலிலும் காட்டி உள்ளார்கள்.

ஜனவரி இறுதி முதல் மரண வதைக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களுக்கு அடுத்து வரும் நாட்கள் மிக மிகக் கொடுமையானதாக அமைய உள்ளது. தமிழ் தேசியத் தலைமைகளினது குறிப்பாக புலிகளினது முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கும் அதற்கு தலையாட்டு பொம்மைகள் போன்று தலையைத் தலையை ஆட்டிய ஊடகங்களினதும் புலம்பெயர் உறவுகளினதும் தவறுகளுக்கும் வன்னி மக்கள் அதி உச்ச விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் செலுத்தப் போகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்குண்ட இளம்பராயத்தினர் குறுகிய கட்டாய பயிற்சியின் பின் களமுனைக்கு அனுப்பப்பட்டு பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒரு தலைமுறையே இழக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தலைமை மிக நெருக்கடியான இராணுவ நிலைக்குள் சிக்குண்டு உள்ளது. அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் தாக்குதல்கள் அவர்களைச் சுற்றியுள்ள பல நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான வன்னி மக்களை உயிரிழக்கச் செய்யும். மிகப்பெரிய மனித அவலம் ஏற்படும். அதுமட்டுமல்ல ஏற்கனவே வன்னிப் பகுதியை விட்டு வெளியேறி எல்லையோரக் கிராமங்களில் உள்ள புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்கள கிராமங்களைத் தாக்கலாம் என்ற அச்சமும் பலமாக உள்ளது. இல்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரவலத்திலும் பார்க்க இலங்கை இராணுவமும் புலிகளும் ஏற்படுத்தப் போகும் மனிதப் பேரவலம் எண்ணிக்கையிலும் அதன் கோரத்திலும் மிக மோசமாக அமையலாம். இது தெற்கில் ஒரு இனக் கலவரத்தையும் தோற்றுவிக்கலாம்.

இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான காலங்கள் இழக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனவாத அலையிலும் புலி ஆதரவு – புலி எதிர்ப்பு அலையிலும் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை புலிகளும் நன்கு அறிந்தே இருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்திய ஆதரவுடன் இலங்கை அரசு புலிகள் மீது இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதை கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அறிந்தே இருந்தனர். ஆயினும் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராணுவத் தவறுகள் அவர்களை அவர்களது முடிவுக்கே துரத்தி உள்ளது. புலிகள் தங்களைச் சூழ நண்பர்களைக் கொண்டிருக்காவிட்டாலும் எதிரிகளை உருவாக்காது இருக்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாக அல்லாமல் ஒரு இராணுவக் குழுவாக செயற்பட்டு தமிழ் மக்களது நியாயமான அரசியல் போராட்டத்தையும் இன்று சிதைத்து தன்னழிவை நோக்கித் தள்ளப்பட்டு உள்ளனர். அதற்கான விலையை ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகமும் செலுத்த வேண்டியுள்ளது.

தோழர் பரா நினைவு ஒன்றுகூடல் : த ஜெயபாலன்

Tholar_Para_05Apr09பணிதல் மறுத்தவர் தோழர் பரா என்ற தலைப்பில் நினைவு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 5ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்வு லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுஸில் மாலை இரண்டு மணிமுதல் மாலை ஒன்பது மணிவரை நடைபெறவுள்ளது.

தோழர் பரா என அன்புடன் அறியப்படும் குமாரசாமி பரராஜசிங்கம் 2007 டிசம்பர் 16ல் உயிரிழந்தார். புலம் பெயர்ந்த நாடுகளில் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமான இவர் தனது மரணத்தின் பின்னும் பலரது நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரது மரணத்தை அடுத்து பரிஸ் ‘அம்மா’ மனோ தேசம்நெற் இல் பதிவு செய்த அஞ்சலிக் குறிப்பில் தோழர் பராவை இவ்வாறு நினைவு கூறுகிறார் ”பொதுவாழ்விற்காக தன்வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு மென்மையான மனிதர். தனது கடைசிக்காலம் வரை தன்து சிந்தனையை நிறுத்தாது தொடர்ந்து வந்தவர். சகல ஜனநாயக போர்க்குரல்களிலும் ஆர்வ்த்தோடு உற்சாகமாய் கலந்து தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். பெறுமதி மிக்க ஒரு மனிதரின் இழப்பு கவலையைத் தருகிறது.”

தோழர் பராவின் மறைவைத் தொடர்ந்து தேசம்நெற்றில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்களும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்:

தோழர் பரா என்ற சிந்தனையானுக்கு எங்கள் இறுதி மரியாதை! :சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன்

ஓரு தலித்திற்கு வாழ்வு கொடுத்த ஆதிக்க சாதியின் உண்மைக்கதை :ஜீவமுரளி

வழமையான? அங்கீகரித்தல்? பெண் கொடுத்தல்? தாமதமாகச் சில குறிப்புகள் :சந்துஸ்

இலக்கிய சந்திப்பு – சில கிறுக்கல்கள் : துடைப்பான்

சுதந்திர சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச செயலூக்க அரங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி : அசோக்

நாளை- மார்ச் 29- நான்காவது குறும்படக் காட்சி – ‘லண்டன் மாப்பிள்ளை’

Vili Clipதேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு மார்ச் 29 அன்று சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி, ஆய்சா ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. (திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்) திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும். காட்சி விபரங்கள் கீழே.

பெப்ரவரி 21 அன்று அதே இடத்தில் சறேயில் இடம்பெற்ற திரையிடலில் நூறு பேர்வரை கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலிலும் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர். இவ்வாறான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய கருத்துக்களில் வெளிப்பட்டு இருந்தது.

வழமைக்கு மாறாக அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் புதிய பார்வையாளர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் மட்டும் திரையிடப்பட்டு வந்த குறும்படக் காட்சிகள் எதிர்வரும் காலங்களில் லண்டனின் ஏனைய பகுதிகளிலும் திரையிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

காட்சியைத் தொடர்ந்து இராப்போசனம் வழங்க உள்ளதால் 12 வயதிற்க்கு உட்பட்ட சிறுவர் தவிர்த்து ஏனையோரிடம் £3 கட்டணம் அறவிடப்படும்.
 
தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

London_Maappillaiமேலும் ஈழத்து சினிமா படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆவணக்காப்பாளரும் நூலகவியலாளருமான என் செல்வராஜா ஈடுபட்டு உள்ளார். உங்கள் படைப்புகளையும் ஆவணப்படுத்திக் கொள்ள தேசம்நெற்றுடன் தொடர்புகொள்ளவும்.

புலம்பெயர் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஆர் புதியவன் மாற்று கனவுகள் நிஜமானால் மண் ஆகியவற்றைத் தொடர்ந்து லண்டன் மாப்பிளை என்ற மற்றுமொரு படத்தை இயக்குகிறார். லண்டனில் படமாக்கப்படும் இம் முழுநீளப்படம் ஆர் புதியவனின் நகைச்சுவை இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயக்கபட்டு வருகிறது. ஜீட் ரட்ணசிங்கத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த நகைச்சுவைச் சினிமாவுக்கான ஒளிப்பதிவை ரியாஸ்கானும் படத்தொகுப்பை சுரேஸ் ஆர்ஸ்ம் இசையை பாலாஜியும் மேற்கொண்டு உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது திரைக்கு வழவுள்ளது.

Vili Clipகாட்சி விபரங்கள்:

5.30 pm on 29th March 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB