‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.
‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.
‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.
தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.
இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.
மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.
எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.
‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.
பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.
ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:
இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.
மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.
குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.
இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.