உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கொரோனா இறப்புக்களுடன் போட்டி போடும் வீதிவிபத்து இறப்புக்கள் – சாரதிகளே அவதானம் !

நாடளாவிய ரீதியில் பதிவாகிய வீதி விபத்துகள் காரணமாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாரதிகள் தொடர்ந்தும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாடளாவிய ரீதியில் இன்று காலை(29.06.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் வீதி விபத்துகள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளர். அதற்கமைய, நேற்று இடம்பெற்ற விபத்துகளில் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி காயமடைந்திருந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் , இந்த விபத்துகளின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் , பாதசாரதிகள் 3 பேரும் , முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதேவேளை , தற்போது வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9 – 10 வரையில் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதற்கமைய காயமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றன.

இதனால் சாரதிகள் இது தொடர்பில் மேலும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவுவதால் மோட்டர் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“அடுத்த பத்து வாரங்கள் ஆபத்தானவை” – எச்சரிக்கை விடுத்துள்ள சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே !

சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக பின்பற்றாவிட்டால் அடுத்த பத்து வாரங்களில் டெல்டா வைரஸ் இலங்கை முழுவதும் பரவும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
60வயதிற்கு மேற்பட்டவர்களே அல்பா டெல்டா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே முதியவர்களிற்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெல்டா வைரஸ் பரவும் ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  இதுவரையில் 12 கர்ப்பிணிப்பெண்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

02 பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டு சமையலறையில் சுருட்டி வைக்கப்பட்ட கொடூரம் – சந்தேகநபர் கைது !

நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயூதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான பெருமாள் மாலா எனும் இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராரே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்படும்போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் தெரிவித்தனர்.

சடலம் நாவலப்பிட்டி நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“எந்த ராஜபக்ஷவாலும் நாட்டை மீட்க முடியவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” – ஜே.வி.பி

“நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷ மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளனர். ” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ராஜபக்ஷ ஆட்சி ஆரம்பமான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை மேம்படுத்துவார் என்று கூறினார்கள். அவரின் தோல்வியையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் சுபீட்சமான நாட்டை உருவாக்குவார் என்றனர். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஷில் ராஜபக்ஷவை கூறுகின்றனர். ஆனால் அவராலும் எதனையும் செய்துவிட முடியாது.

பஷில் ராஜபக்ஷ பிறந்த நாள் முதல் அமெரிக்காவின் – லொஸ்ஏஞ்சல்கள் நகரில் வாழ்ந்து தற்போது இலங்கையின் நிலைமையைக் கண்டு, இங்கு வருகை தந்து நிலைமைகளை மாற்றக் கூடிய மாயாஜாலக்காரர் அல்ல. காரணம் பொதுஜன பெரமுன ஆட்சி ஆரம்பித்த நாள்முதல் அவரே இந்த அரசாங்கத்தை நிர்வகித்தார். கொவிட் பரவல் ஆரம்பித்த போது இரு ஜனாதிபதி செயலணிகளை நியமித்தார். அந்த இரு செயலணிகளின் செயற்பாடுகளுமே வெற்றிபெறவில்லை.

நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷ மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளனர். எனவே குடும்ப ஆட்சியொன்றுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.” .

முஸ்லீம் ஒருவரை சீனர் என கூறியதால் டுவிட்டரில் மோதிக்கொண்ட சுமந்திரனும் – அங்கஜனும் !

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்புப் பணியில் சீனப் பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டரில் படமொன்றைப் பதிவேற்றி ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

அதில் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில், அவர்களுக்கு ஏன் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

எனினும், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் சீனப் பிரஜை அல்லர் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், “அவர் இலங்கையர். இஸ்லாமிய சகோதரர். அவருடைய பெயர் மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹனிபா. அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவர் குடத்தனையில் திருமணம் செய்து, அம்பனில் குடியேறியுள்ளார். வீதித் திட்ட ஒப்பந்தக்காரரான என். எம் நிர்மாண பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்” என்று தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன் , “இந்த நபர் சீன நாட்டவர் அல்லர். இலங்கையர் என்பது எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகின்றேன். எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் பிற உண்மையான சீனர்களின் படங்கள் இடுகையிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது. – ரணில் விக்கிமசிங்ஹ

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது.”  என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியமைக்காக நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் அரசியலை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். மதம், இனம் ஆகிவற்றை பிரதானமாகக் கொண்டு அரசியல் ஈடுபடுகின்றமை, தீர்வை வழங்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவது உள்ளிட்ட செயற்பாடுகள் பிரயோசனமற்றவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணமே தற்போது மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த நிலைப்பாடு சாதாரணமானதாகும். காரணம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் மாத்திரமல்ல எந்தவொரு அரசியல் கட்சியும் இதனை செய்யவில்லை. இதனை நினைவில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி அந்த நிலைக்கு தள்ளப்படக் கூடாது.

எந்த சந்தர்ப்பத்திலும் புதிதாக சிந்தித்து புதியவற்றை செய்வது ஐக்கிய தேசிய கட்சி ஆகும். ஐக்கிய தேசிய கட்சிக்கு இதற்கான தீர்வுகளை வழங்க முடியும். தற்போதுள்ள நிலைமையிலிருந்து மீள்வதே இன்று முதன்மை தேவையாகவுள்ளது. அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பினை வழங்க வேண்டும். 2019 ஆம் தேர்தல் பிரசாரத்தின் போதும் இதனையே கூறினோம்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம், கல்வி முறைமை மற்றும் பொருளாதாரம் மேம்பாட்டு உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயம் , மீன்பிடி உள்ளிட்டவை அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இறந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்களே அரசியலில் இருக்க வேண்டும். அத்தோடு இளம் முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபாய தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.” – எம்.எ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,

“அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு விடயமாகும். எனினும், ஏனைய அரசியல் கைதிகளை ஏன் அரசாங்கம் விடுதலை செய்யவில்லை என்பது தொடர்பாக எனக்கு தெரியவில்லை.

இதேவேளை மரணத் தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்தமையானது கண்டனத்துக்குரிய விடயமாகும். இந்த செயற்பாடு நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.

மேலும் நாட்டின் ஜனாதிபதி, தன்னுடைய அதிகாரத்தை இவ்விடயத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.” – ஜனாதிபதி உறுதி !

ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.

நேற்று (27.06.2021) முற்பகல் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது ,

இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. இரசாயனப் பசளை பயன்பாட்டின் காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஏராளமானவையாகும்.

இரசாயன உர இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையை அரசாங்கம் செலவிடுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அப் பணத்தை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் முடியுமாக இருக்குமென்று ஜனாதிபதி, மகா சங்கத்தினரிடம் சுட்டிக் காட்டினார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச அதிகாரிகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பின்நிற்காத காரணத்தினால், குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் கடந்த அரசாங்க காலத்தில் அதிகாரிகள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்காலத்தில் தண்டனை பெற வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் தயங்குவதாகவும் குறிப்பிட்டார். எனவே நாட்டில் பெருமளவு வேலைத்திட்டங்கள் முடங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“வீதி வேலைகள் செய்வதற்கான தொழிலாளர்களை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா..? ” – எம்.ஏ. சுமந்திரன் கேள்வி !

“சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது.எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது” என  தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  என தெரிவித்துள்ளார்.
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் மக்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பூநகரி கௌதாரிமுனை கடல் பரப்பில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும் சீன நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், மற்றம் எஸ்.சிறிதரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
இதன்போது கடலட்டையில் ஈடுபட்டுவரும் நிறுவனம் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுப்பதாக மக்களிற்கு தெரிவித்தனர்.
தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த எம் சுமந்திரன்,
சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயத்தை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம். குறித்த அமைவிடம் மக்களிற்கு தெரியாத மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தினர் அரியாலையில் தமது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்ற விபரத்தினையும் நாங்கள் சேகரித்துள்ளோம். சட்டவிரோதமான அனுமதி கடல் தொழில் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டிலே சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
நேற்றைய தினம் குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்கு சென்று திரும்புகின்றபோது வீதி அபிவிருத்தி பணிகளில் சீனர்கள் நின்றார்கள். நான் படம் எடுத்து வைத்துள்ளேன். வீதி வேலை செய்வதற்கு தொழிலாளிகள்கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கின்றார்கள்.
இந்த  விடயங்களை நாங்கள் முழுமையாக வெளிப்படுத்தவுள்ளோம். இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள். எங்கள் மக்களுடைய கடல் வளத்தை சுரண்டுவதும், கடல் அட்டைகள் பிடிப்பது தொடர்பிலும் பல தடவைகள் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது.
வெளி இடங்களிலிருந்து எந்து தொழிலை செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள். இப்பொழுது வெளி இடங்கள் என்று சொல்வதற்கு அப்பால் வெளிநாடுகளிலிருந்து தூர பிரதேசங்களிலிருந்து இதற்கென்று ஆட்கள் வருவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பின்னணிகளை வெகு விரைவிலே நாங்கள் வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

மார்ச் 09 ஆம் திகதி ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, மார்ச் மாதம் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.