உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சியை தோற்கடிப்போம்.” – சஜித் பிரேமதாச

பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்வது, இந்த நாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை பாரிய நெருக்கடிக்கு தள்ளிவிட வழிவகுக்கும். அதனால் அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துத்துவதற்கு அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தை நிறைவேற்ற முற்பட்டால், நாட்டு மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேடட் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள விதத்தில் பராமரிப்பதற்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இன்னும் நவீன மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்குவதற்கும் தேவையான அந்த முடிவுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் நாங்கள் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறோம் என்றார்.

இதே நேரம் ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ கொத்தலாவல பல்கலைகழகம் பல்கலைகழக மாயிணங்கள் ஆணைக்குழுவின் கீழேயே செயற்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் தொடரும் வாள்வெட்டு சம்பவங்கள் – 3 பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல் !

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாண்டியன் குளம், கரும்புள்ளியான் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயஸ்வாகனம் மற்றும் வீட்டுப் பொருட்களும்  சந்தேகநபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43 வயது) என்பவரே படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காற்றிலும் பரவும் டெல்டா – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுக்கள் பரவு வருகின்றன.இந்த நிலையில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமனம் !

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இது தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும்.” – இரா.சாணக்கியன்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியுதீனின் இல்லத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்,

“குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது. எனினும், எங்களுக்குத் தெரியாமல் எங்கெங்கோ எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. அத்துடன், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் துஷ்பிரயோகங்களும் தினந்தோறும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களினால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதேபோன்று, சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர். எனவே, முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் வலியுறுத்துகின்றேன்.

அத்துடன், சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி – தெருவில் இறங்கிய மக்கள் !

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேதகு திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்த இருவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடையொன்றை நடத்தி வரும் நபரொருவரும் அவரது கூட்டாளியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள, பிரதான சந்தேக நபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பென் டிரைவ்களில் படம் பிரதியெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும், ஹவா எலிய பகுதியில் வசிப்பவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த சிறுமியின் மரணம் தொடர்பான எந்த தகவலும் மறைக்கப்படக்கூடாது.” – ட்ரொடெக்ட்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் ட்ரொடெக்ட் அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.

இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.பல தகவல்கள் வெளியாகினாலும், சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரியவரவில்லை. தரகர் ஒருவர் ஊடாகவே அச்சிறுமி சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்?

எனவே, சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடிமறைக்கப்படக்கூடாது.

இதற்காக வீட்டுப்பணிபெண்களுக்காக குரல் கொடுக்கும் எமது சங்கம் போராடும். இதற்கு வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

“மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களில் இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைக் கையாளும்.”- அமைச்சர் தினேஷ் குணவர்தன

“பயங்கர வாத தடைச்சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த அரசு முன்வந்துள்ளது.”  என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் எழுந்துள்ள இனங்களுக்கு இடையேயான மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள தமிழ் மக்களை மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடிய பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க, இலங்கை அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில், சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையான பிழையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள மனித உரிமைகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து உரையாடுவதில், இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயற்படுவதாக  தெரிவித்துள்ளார்.

டெல்டாவை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பை பொதுமக்களே ஏற்க வேண்டும்.” – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களின் தளர்வு என்பது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்கானது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாட்டை காலவரையின்றி மூடி வைப்பதனால் எவ்வித பயனும் இருக்காது என சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு உரிய முறையில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமோ இறுக்கமான கட்டுப்பாடுகள் மூலமாகவோ தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அது பொருளாதாரத்தை வலுப்படுத்தாது என்றும் கூறினார்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை சாதகமாக எண்ணி மக்கள் அலட்சியத்துடன் செயற்பட்டால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்ய தவறினால் அது பேரழிவு தரும் சூழ்நிலையில் முடிவடையும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.