உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தனுஷ்க குணதிலக கைது குறித்து இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தமடைவதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

“என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீதிமன்றம் விரைவில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்கும். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பேச வேண்டியதில்லை.” என்றார்.

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பின் இன்று
காலை இலங்கை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விபச்சாரம் செய்து உழைப்பதற்காக இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் – முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்காக அல்ல என்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் கூறப்படுவது பொய்யானது என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்து இளைஞர்களிடம் சாதாரணமாகிப்போன ஹெரோயின் போதை பாவனை – மூவர் கைது !

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அவரிடம் இருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் குடிவரவுத் திணைக்களத்தில் இரட்டைக் குடியுரிமைக்காக ஜனாதிபதியும் கையொப்பமிடுவதால், அரச தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அலுவலகமும் தேவையான ஆவணங்களைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என்பது இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் சுமார் பத்து பேர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் யார் என்று தெரியவில்லை என்பதுடன், அவர்களைப் பற்றிய விபரங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என அவர் தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றதன் மூலம்,  குறித்த நபர் இந்த நாட்டில் தனது குடியுரிமையை இழக்கிறார். அதன் காரணமாக அவர் மீண்டும் இந்த நாட்டில் தனக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோர வேண்டும் என்றும் அதன்பின்னர் அந்த நபர் குடிவரவுத் திணைக்களத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரட்டைக் குடியுரிமை நாட்டின் அரச தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் எனவே, அது ஜனாதிபதி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது அவ்வளவு கடினம் அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோட்டம் – அறிக்கையை கோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

பொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை கோரியுள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே ஜனாதிபதியினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதோடு , இந்த சந்தர்ப்பத்தில் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

குளிக்கும் போது இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் மோதலாகி , அங்கு பதற்றமான சூழல் ஏற்படக் காரணம் என ஆரம்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாறு மோதலில் ஈடுபட்ட தரப்பினர் புனர்வாழ்வு மையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் ஆகயத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட கைலப்பினால் நான்கு கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த எவருக்கும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மோதலில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வருபவர்களாவர்.

தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் வீதித் தடைகளை அமைக்கப்பட்டு சோதனைகளும் , கண்காணிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் !

அரசு அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை கொடுக்க மறுத்த சிட்னி நீதிமன்றம் !

யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் தொடர்ந்தும் பொலிஸாரின் காவலிவ் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, யுவதியொருவர் மீது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சிட்னியின் கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரால் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளையின் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை சிட்னி நகர பொலிஸார் பரமட்டா பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுக்கப்பட்டிருந்தது.

மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழு !

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவின் பணிகள் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை இடம்பெறும்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் – மிஹிகோ டனகா

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியப்பிராந்திய இணை அலுவலகத்தின் தலைவர் மிஹிகோ டனகா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மிஹிகோ டனகா இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு அச்சுறுத்தல் நிலைக்கு மத்தியில் பெண்களால் முன்னெடுக்கப்படும் சிறியளவிலான முயற்சியாண்மைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களின் சிறியளவிலான வணிக முயற்சியாண்மைகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்ககூடியவாறு சேவைத்துறையை படிப்படியாக தாராளமயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் !

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக சேவைத்துறையை படிப்படியாக தாராளமயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை (நவ 4) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திர வர்த்தகம், சர்வதேச வர்த்தகத்தின் எதிர்கால தோற்றம் மற்றும் அதற்கேற்றாற்போல கொள்கைகளை மாற்றியமைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்தார்.

மேலும், விரிவடைந்துவரும் சர்வதேச வர்த்தக செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், இதனால் ஏற்படக்கூடிய போட்டித்தன்மை  காரணமாக உள்நாட்டு தொழில் துறைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் ஏதுவாக அரசாங்கம் வர்த்தக நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலக மட்டத்திலான விநியோகச் சங்கிலியை அணுகுதல், உலகப் பொருளாதாரத்துடன் மீள இணைதல் என்பன நாட்டின் பொருளாதாரத்தை மீள புதுப்பிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை மூலங்களாகும்.

இதற்கமைய அரசாங்கம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பிரதான ஏற்றுமதிச் சந்தையில் பிரவேசித்து வருகின்ற அதேவேளை, தனது ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களை இலக்குவைத்து விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் களமிறங்கியுள்ளது.

இந்நோக்கத்துக்காக தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவை (NTNC) நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பாரியளவிலான நேரடி முதலீடுகள் மற்றும் சிறந்த ஏற்றுமதி நிலவுகின்ற நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதே இக்குழுவின் பிரதான இலக்காகும்.

இதன் மூலம் பொருளாதார நெருக்கடியால் உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில் துறைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஆரம்ப மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் மற்றும் மூலதனங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.