உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த பிக்குமாரால் பௌத்த மதத்துக்கும் பாதிப்பு என்கிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க !

குறைந்த வயதில் சிறுவர்களை துறவறம் புகச் செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழு பௌத்த குருமாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் ஊடாக சம்பந்தப்பட்ட பீடங்களின் தலைமை பிக்குமாருக்குத் தெரியப்படுத்துவதற்கும், பொதுவான சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு முன்மொழிவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தலைமை பிக்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை கையாள்வதற்காக தனியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்கள் கொண்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலாயத்தன பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தேவையான 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு இன்மை காரணமாக இதுவரை செயன்முறைப் பரீட்சை நடத்தப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஒதுக்கீடு இன்மை காரணமாக பரீட்சைகள் 6 வருடகாலம் பிற்போடப்பட்டமை தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர், இதனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சூரியப்படல கட்டமைப்பைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

சொத்துக்களைக் கொண்டுள்ள பௌத்த வழிபாட்டுஸ்தலங்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டது. பௌத்தத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இதன்படி அடுத்த கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படுவதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குழுவின் உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரோ, குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா செல்ல விமான நிலையம் சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் !

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று (27) கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுநாயக்காவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதே அவரது திட்டமாக இருந்தது.

எனினும், அவர் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விமானங்கள் செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அவரை திருப்பி அனுப்ப குடிவரவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் 270 நாட்களுக்குள் 1,500 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – பாதுகாப்பில்லாத நிலையில் இலங்கை சிறுவர்கள் !

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது பாரிய அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை, ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற நிலையில் இந்த பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 273 வன்புணர்வுகள் இளம் வயதினருடன் தொடர்புடையவையாகும்.

இதேவேளை ஒப்புதலுடன் இடம்பெற்ற பாலியல் செயற்பாடுகள் பெரும்பாலானவை காதல் விவகாரங்களுடன் தொடர்புடையவை. எனினும் பாதிக்கப்பட்ட பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் இது பாலியல் வன்புணர்வுகளாகவே கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 363ஆவது பிரிவின்படி, 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது சட்டப்பூர்வ பாலியல் வன்புணர்வுக்கு சமமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட மூவர் கைது !

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (வியாழக்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர

“சிறுவர்கள் தொடர்பாக மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள்.”- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது – மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு !

இளைஞர் ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த  மரண தண்டனையை, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையாக மாற்றி மேன் முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.  18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை மையப்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும்  ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

‘குற்றஞ்சாட்டப்பட்டவர் 15 வயதுடைய நபராக இருந்த நிலையில், அவரை குற்றவாளியாக நீதிமன்றம் கண்டுள்ளது. எனினும்  18 வயதுக்கு கீழ் பட்ட குற்றவாளிக்கு  மரண தண்டனையை உறுதிப்படுத்துவது தண்டனை சட்டக் கோவையின்  53வது பிரிவின் விதிகளை மீறுவதாகும்.  எனவே குற்றவாளிக்கு   மேல் நீதிமன்றால்  விதிக்கப்பட்ட மரண தண்டனையை வலுவிழக்கச் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.   ஆகவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட  மரண  தண்டனை ரத்து செய்யப்படுகிறது.’ என நீதிபதிகள் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் விக்கட்டினால்  தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி உயர்நீதிமன்றத்தில் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். அதன்படி வழக்கு விசாரணைகளின் பின்னர்  கொலை குற்றவாளியாக பிரதிவாதியைக் கண்ட மேல் நீதிமன்றம்  அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு எதிராக குற்றவாளி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

குற்றம் சாட்டப்படும் போது  குற்றவாளிக்கு 15 வயது மட்டுமே ஆனதாக வாதிட்ட அவர்,   அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 53வது பிரிவு 2021 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க  சட்டத்தால் திருத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி தர்ஷன குருப்பு,  குற்றவியல் சட்டத்தின் புதிய பிரிவு 53 இன் படி, குற்றம் இடம்பெறும் போது 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபருக்கும், அக்குற்றத்துக்காக  மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என குறிப்பிட்டார்.

அத்தகைய நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, சிறைக் காவலில் வைக்கும் விதமாக தண்டனையளிக்க முடியும் என  அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அந்த வாதத்தை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்றம்,  மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்துசெய்ததுடன், 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையளித்து தீர்ப்பளித்தது.

இரட்டை குடியுரிமையுடைய எம்.பிக்கள் யார்..? – தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வகிக்கும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதை குடிவரவுத் திணைக்களம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விசாரணையில் அந்தந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் கடவுச்சீட்டு பெறும் போது வழங்கிய தகவல்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் வேறு நாட்டின் குடியுரிமை உள்ளவரா என்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இந்த நாட்டில் கடவுச்சீட்டு பெறும் போது அதனை மறைப்பதற்கு அடிக்கடி தூண்டப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமையை மறைத்து அல்லது அறிவிப்பதைத் தவிர்த்தால் அதை மீண்டும் விசாரிக்கும் அமைப்பு அமைப்பில் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை – கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர் !

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை , குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.

வவுனியாவில் பரவிவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு அறிவித்தல் வழங்க பின்வரும் விஷேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“குருந்தூர் மலை விவகாரம்” – புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள் என்கிறார் அபேதிஸ்ஸ தேரர் !

“புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.” என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

பெபிலியான சுனேத்ரா தேவி  மஹா பிரிவெனா விகாரையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒருசில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தில் உண்மையை அறிந்துக் கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அமைதியாக செயற்படுகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.

100 -103 வரையான காலப்பகுதியில் குறுந்தூர் மலையின் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவான நிலப்பரப்பை குருந்தூர் மலை விகாரை கொண்டுள்ளது.இந்த விகாரைக்கு சொந்தமான காணியில் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்டுகிறார்கள்.

புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. குறுகிய நோக்கத்துக்காக புத்தசாசனத்தின் அடையாளங்களை இவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுங்கள் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் போதைப்பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச்சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றுக்கு வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.