உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஒருவருடத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் 37,819 பேர் கைது !

இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 1,415 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 37,819 சந்தேகநபர்கள் கைதானதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் அதிகளவிலான சுற்றி வளைப்புக்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின்போது 26, 581 சந்தேகநபர்கள் கைதாகினர். இதன்போது, 10, 222 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த காலப்பகுதியில் 370 கிலோகிராமும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணத்தை திருடியதற்காக மாணவர்களை மின்சாரத்தால் தாக்கிய அதிபர் பணியிலிருந்து நீக்கம் !

பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, ஹொரணை – மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனீஸ் குறிப்பிட்டார்.

விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் மத்திய கல்வி அமைச்சின் அதிகாரியொருவரும் அடங்குகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ​நேற்று(08) உத்தரவிட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தமது அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, பொலிஸ் ஜீப் வண்டி தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அறிக்கையொன்றை பெறவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

குறித்த மாணவர்களின் வாக்குமூலத்திற்கு அமைய ஜீப் வண்டிக்குள் மின்சாரம் தாக்கப்பட்டமை தொடர்பிலான சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த அறிக்கை பெறப்படவுள்ளது.

ஆசிரியை ஒருவரின் பையிலிருந்த பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த மாணவர்களை நூலகத்திற்குள் அழைத்துச் சென்று அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவ தனியார் துறை அடித்தளத்தை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்குவோம் – உலக வங்கி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சவாலான மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் நிலையான தனியார் துறை தலைமையிலான வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் உலக வங்கி குழுவின் ஆதரவை மல்பாஸ் உறுதிப்படுத்தினார்.

வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு !

சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனை வியட்நாம் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

மீட்கப்பட்ட அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவர்களது குடியுரிமை மற்றும் ஏனைய தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் பின்னர் அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடனான படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியது.

அதன்படி, குறித்த நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கையில், ஆபத்தில் இருந்த படகுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஜப்பானிய சரக்குக் கப்பல், இலங்கையர்களைக் காப்பாற்றியது.

மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்களும்19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆலய நிர்வாகத்தினர் பண மோசடி – வடமாகாண ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள்வெட்டு !

ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் புதையலை தேடி விசேட அதிரடிப் படையினர் அகழ்வுப் பணி !

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டுக் காணி ஒன்றில் அகழ்வுப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வுப் பணியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர், கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் !

கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் மூவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாவர். அதேவேளை 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களாவர்.

ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருட்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மாணவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு,  தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்பான சட்டங்கள் தொடர்பில்  பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில், சிறுவர்கள் தொடர்பான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம்  விசேட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.

குறிப்பாக, 1995 ஆண்டின் 22 ஆம் இலக்க 308 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக உப சரத்துகளை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.  மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டவுடன், அதனை பொதுமக்கள், சிவில் அமைப்புகள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு கையளித்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு, சட்ட வரைஞரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் மாணவர்கள் தாக்கப்படுவதுடன், சில மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நிலைமைகள் காணப்படுவதாக  உதயகுமார அமரசிங்க கூறினார்.

அதேபோன்று, மாணவர் தலைவர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்தவுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான  நீண்டகால தீர்வாக பாடசாலை சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக பாடசாலை சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் குரங்குகாய்ச்சல் நோயுடன் மேலுமொரு நபர் அடையாளம் !

மங்கிபொக்ஸ் (monkeypox) எனப்படும் குரங்கம்மை தொற்றுறுதியான இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த ஒருவர், மங்கிபொக்ஸ் தொற்றுடன் கடந்த 3 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.

இவர் குரங்கம்மையுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபராவார்.

களனி பகுதியைச் சேர்ந்த 20 வயதான அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐ.நாவிடம் பாரப்படுத்த வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

வியட்நாம் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

குறித்த 303 பேரையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாரா ளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த 303 பேரில் 264 ஆண்களும் 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் அவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பொறுப்பளிக்க முடியும் என்று நிர்மலநாதன் குறிப்பிட்டார்.