கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தேசிய மாணவர் ஒன்றியமும் பிளவுபட்டுள்ளது !
கலைப் பீடாதிபதி ரகுராமின் முன்னாள் செல்லப் பிள்ளையாக அறியப்பட்ட எஸ் சிவகஜன் அணியினர், பரமேஸ்வரா ஆலயத்தின் அருகில் உள்ள கல்லாசனத்தில் போதைப்பொருள் பாவித்து வந்ததாகவும், அந்த வழியால் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான வசையாடல்களுடன் கூடிய சொற்களை பாவித்து தொல்லைகள் கொடுத்ததாகவும் கலைப்பீடாதிபதி ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ் சிவகஜன் அணியினர், தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பேரவை கவனத்தில்கொள்ளாது மாணவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பு வழங்கியுள்ளது என ரகுராமின் தற்போதைய செல்லப் பிள்ளைகள் கொந்தளித்துள்ளனர்.
எஸ் சிவகஜன் தீவர தமிழ் தேசியத் தொண்டன். யாழ் பல்கலைக்கழகத்தில் புத்திஜீவிகள் இணைந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என ஊடக அறிக்கையை வெளியிட்ட போது, அதில் கையொப்பமிட்ட அப்பேராசிரியர்களுக்கு எதிராக, கேலிச் சித்திரங்கள் வரைந்து அவர்களைக் கேவலப்படுத்திய போது கலைப்பீடாதிபதி ரகுராம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எஸ் சிவகஜன் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரித்தவர். அதற்காகத் தீவிர பிரச்சாரங்களிலும் ஈடுபட்டவர். அப்படியானால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகுதான் எஸ் சிவகஜனின் அணி இந்த போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு பாலியல் ரீதியான வசைபாடல்கள் எல்லாம் செய்கின்றனரா?
கலைப்பீடாதிபதி ரகுராமின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரகுராம் மீண்டும் பதவியேற்கும் வரை தாம் போராடப்போவதாகவும் ரகுராமின் தற்போதைய செல்லப்பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமுக்கு ஆதரவாக தமிழ்தேசியம் பேசும் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவுக்குரல்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் We Stand with Raguram என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு வருகின்றனர்.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பீடாதிபதி ரகுராம் சுயலாபத்துக்காக போதைப்பொருள் பாவனையாளர்களாக முத்திரைகுத்தி, தன்னை நியாயப்படுத்துகின்றார் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் தேசியம் எப்படி சின்னாபின்னமாகச் சிதறுண்டதோ அதுபோல் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைக்குஞ்சுகளும் ராகுராமின் செல்லப் பிள்ளைகளிடையே எழுந்துள்ள பனிப் போரில் சிக்குண்டு உள்ளனர்.
மிக இறுக்கமாக மூடிய நிலையில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் திறந்த புத்தகமாக, பொறுப்புக் கூறலுடன் செயற்பட வேண்டுமாயின், அதற்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து புது இரத்தம், சிந்தனை பாய்ச்சப்பட வேண்டும். அதற்கு அடுத்த துணை வேந்தர் இலங்கைக்கு வெளியே சர்வதேச பல்கலைகழகங்களிலிருந்தும் கோரப்பட்டு கல்வித்தகுதி மற்றும் அவர்களுடைய கல்விச் செயற்பாட்டு திறமையுடன் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பிரதமரும் உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Clean University of Jaffna தொடர்பில் கவனம் செலுத்துவது மிக அவசியம்