யாழ்ப்பாணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் வைத்தியர்கள் – அம்பலப்படுத்திய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்திய வைத்தியர்கள்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்யையதினம் (04-07-2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் வீடியோ பதிவுகளை தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார்.


இதேவேளை, குறித்த வைத்தியசாலையின் வளங்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாத நிலையில் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் மகப்பேற்று விடுதியை கூட இயங்க விடாமல் வைத்திய குழு ஒன்று தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது பதிவில், மகப்பேறு விடுதி திடீர் விபத்து பிரிவு ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரைகளை விடுத்ததன் எதிரொலியாக முன்னாள் வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை களம் இறக்கி தன்னை குறித்த வைத்தியசாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் சேர்ந்து குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும், தான் இந்த வைத்தியசாலைக்கு வருகை தந்ததும் இவ்வாறான விடயங்களுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என தெரிந்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்

இந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி இருந்ததையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்றைய தினமும் இன்றைய தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லுகின்ற நோயாளிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.

அவ்வேளை அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலீசார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர்.

இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம் ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்க்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி போலீஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.

இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *