விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

வெளியானது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி அட்டவணை . முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதல் ! – முழுமையான அட்டவணை இதோ.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. அதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

IPL 2020 Schedule Announced, Mumbai Indians To Take On Chennai Super Kings  In Opener

 

இறுதிப் போட்டி வருகின்ற  நவம்பர் 10- ம் தேதி நடக்கிறது. ப்ளே ஆப் சுற்று நடக்கும் நகரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ வெளியிட்ட அட்டவணையில் ரவுண்ட் ராபின் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் 46 நாட்களில் 56 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் 10 நாட்களில் இரு ஆட்டங்கள் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி மும்பை vs சென்னை

துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் டி20 போட்டிகள் நடக்கின்றன. இரவு நடக்கும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், இரு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும் தொடங்குகிறது.

இதன்படி வரும் 19-ம் தேதி சனிக்கிழமையன்று துபாயில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது நாள் 20-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

3-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. அதன்பின் 22-ம் தேதி ஷார்ஜாவில் முதல் போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

துபாய் நகரில் 24 லீக் போட்டிகளும், அபுதாபியில் 20 லீக் ஆட்டங்களும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடக்கின்றன. ப்ளே ஆப் நடக்கும் இடங்களும், இறுதிப்போட்டி நடக்கும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது இங்லாந்து ! – ஆஸிக்கு அதிர்ச்சி தோல்வி.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி.20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. கடைசி பந்து வரை இந்தப் போட்டி சுவாரஸ்யமான  போட்டியாக அமைந்தது.

163 ஓட்டங்கள் என  இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 124/1 என்று 14 பந்துப்பறிமாற்றங்களில் எளிதான வெற்றி நிலையில் இருந்தது. கடைசியில் 160/6 எனினும் முடிவு இங்லாந்து வசமானது தான் சோகம்.

14வது பந்துப்பறிமாற்றம் வரை சிறப்பாக ஆடி வந்த ஆஸி அதனை தொடர்ந்து 14 பந்துகளில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. இதனையடுத்து கடைசி 3 பந்துப்பறிமாற்றங்ளில் 26 ஓட்டங்கள்கள் தேவைப்பட்டது,  டி20-யில் இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஆனால் விக்கெட்டுகள் போய்க்கொண்டே இருந்தால் கடினம்தான். கடைசி 2 பந்துப்பறிமாற்றங்களில் 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 19வது பந்துப்பறிமாற்றத்தில்  4 ரன்களே ஆஸிக்கு கிடைத்தது, கடைசி பந்துப்பறிமாற்றத்தில் 15 ஓட்டங்கள்  தேவைப்பட்டது. டாம் கரன் அந்த ஓவரை வீசினார்.

இதில் 2வது பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கவர் திசையில் ஒரு பெரிய சிக்சரை அடித்து வெற்றியை நெருக்கினார், 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஆனால் இன்னொரு பவுண்டரி அடிக்க முடியவில்லை. 2 ரன்கள் குறைவாக முடிந்தது.

163 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, கேப்டன் ஏரோன் பிஞ்ச் (46), வார்னர்  (58) ஆகியோர் மூலம் 98 ஓட்டங்கள் பெற்று  அதிரடி தொடக்கம் கண்டது. வார்னர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ஓட்டங்களையும்  சேர்க்க முதலில் பிஞ்ச், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆர்ச்சரிடம் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித்  ஒரே பந்துப்பறிமாற்றத்தில்  ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸுடன் 11 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்  ரஷீத் பந்தில் பிடிகொடுத்து  ஆட்டமிழந்து சரிவைத் தொடங்கி வைத்தார். அதே ஓவரில் ரஷீத் 1 ஓட்டத்துடன்  கிளென் மேக்ஸ்வெலை வீழ்த்தினார்.

அடுத்ததாக வார்னர் 58 ஓட்டங்களில் ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். . அலெக்ஸ் கேரியை 1 ஓட்டத்துடனும் ஆஷ்டன் ஆகர் 4 ஓட்டத்துடனும்  முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழந்தனர். 19 பந்துப்பறிமாற்ற முடிவில் 148/6 என்ற நிலையில் கடைசி பந்துப்பறிமாற்றத்தில் ஸ்டாய்னிஸ் ஒரு சிக்சரைத்தவிர பவுண்டரி அடிக்க முடியவில்லை 2 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா தோற்ற போது ஸ்டாய்னிஸ் 23 ஓட்டங்கடன் ஆட்டமிழக்காது இருந்தார். , வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா, ஆனால் மோர்கனின் தலைமைத்துவம் அருமையாக இருந்தது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 162/7 என்று முடிந்தது, டேவிட்மலான்  66 ஓட்டங்களையும் பட்லர்  44 ஓட்டங்களையும் எடுத்தனர். ஜோர்டான் (14) நீங்கலாக மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கமே எட்டவில்லை, கேன் ரிசர்ட்ஸன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.ஆட்ட நாயகனாக டேவிட் மலான்  தேர்வு செய்யப்பட்டார்.

2016க்குப் பிறகு இங்கிலாந்து வெற்றிகரமாக 180 ஓட்டங்களுக்கும் குறைவான இலக்கை தடுத்துள்ளது. ஞாயிறன்று நடைபெறும் 2வது போட்டியில் இங்கிலாந்து வென்றால் தொடரைக் கைப்பற்றும்.

 

‘உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை ” – ஷோய்ப் அக்தர்

ஷோய்ப் அக்தர் அடிக்கடி இந்திய வீரர்களைப் புகழ்ந்து பேசி வருவது வழக்கம், அதுவும் நட்சத்திர வீரர்கள், செல்வாக்குள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து புகழ்வார்,  இந்த நிலையில் அவர் விராட் கோலியை புகழ்ந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியை அவர் பெரிய அளவில் புகழ்ந்துள்ளார், காரணம் அதற்குள்ளேயே கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும், 80 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் அக்தர் இந்திய வீரர்களை, குறிப்பாக கோலியைப் புகழ்வது குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்தர் பதில் கூறுகையில், “நான் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் புகழக்கூடாது. பாகிஸ்தானில்.. ஏன் உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை.

ஏன் என் மீது கோபப்பட வேண்டும், போய் புள்ளி விவரங்களைப் பார்த்து விட்டு பேசுங்கள், பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தங்கள் வீரர்களிடத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் இன்றைய நிலமை தலைகீழாகி விட்டது” என்றார் ஷோயப் அக்தர்.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றதையும் கடுமையாக ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விலகல்!

ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தின்ஸ்  அணியில் முக்கிய மாற்றமாக, அந்த அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான லசித் மலிங்காவுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

அணியின் திருப்புமுனை பந்துவீச்சாளராக இருந்த மலிங்கா இல்லாதது மும்பை  அணிக்குப் பெரும் பின்னடைவுதான். இருப்பினும், ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் வருகை, அந்த அணிக்கு வலு சேர்க்கும்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ”ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசன் டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் பங்கேற்க முடியாது என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். அவர் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். ஆதலால், மும்பை  அணியில் ஆஸி.யின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அபுதாபி வந்து அணியில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட செய்தியில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் ஜேம்ஸ் பேட்டின்ஸனை வரவேற்கிறேன். மலிங்காவுக்குத் தேவையான ஆதரவை அணி நிர்வாகம் வழங்கும். எங்களுக்குப் பொருத்தமானவராக பேட்டின்ஸன் இருப்பார், எங்களின் வேகப்பந்துவீச்சு வலுப்பெறும், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலுக்குச் சிறப்பாக இருக்கும்.

லசித் லெஜெண்ட் வீரர். மும்பை அணியின் தூண்களில் ஒருவர். இந்த சீசனில் லலித் மலிங்காவை நாங்கள் இழக்கிறோம் என்பது வருத்தம்தான், அதுதான் உண்மை. இந்த நேரத்தில் லசித் அவரின் குடும்பத்தாருடன் இலங்கையில் இருப்பது அவசியம் என நம்புகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி, வீரர்களின் நலன், அவர்களின் குடும்பத்தாரின் நலனில் அதிகமான அக்கறை வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி தங்கள் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் மலிங்கா இடம் பெற்றார். ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடி ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

டிவைன் பிராவோ டி20 போட்டித் தொடரில் 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி சாதனை !

மே.இ.தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தினார் டிவைன் பிராவோ. ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பிராவோ ஆடுவது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மலிங்கா 295 போட்டிகளில் 390 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். சுனில் நரைன் 339 போட்டிகளில் 383 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 295 போட்டிகளில் 374 விக்கெட்டுகளையும் பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் 339 போட்டிகளில் 356 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை!

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளரானார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். 156 டெஸ்ட்களில் ஆண்டர்சன் இந்த மைல்கல்லை எட்டினார்.

3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை வீழ்த்தியதன் மூலம் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளரும் உலக அளவில் 4வது வீச்சாளருமாகத் திகழ்கிறார் ஆண்டர்சன்,

இலங்கையின் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள்,  ஷேன் வார்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 705 விக்கெட்டுகள்,  இந்தியாவின் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட்களில் 619 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளனர்.  இவர்களுக்கு அடுத்த படியாக ஆண்டர்சன், 156 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில் குறைந்த பந்துகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் முத்தையா முரளிதரன் 33,711 பந்துகளில் வீழ்த்தியதையடுத்து ஆண்டர்சன் 33,717 பந்துகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வார்ன் 34,919 பந்துகளிலும் கும்ப்ளே 38,496 பந்துகளிலும் 600 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினர்.

இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தச் சாதனை குறித்துக் கூறும்போது, ஆஷஸ் தொடரில் நான் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் விரும்புகிறார். இந்த டெஸ்ட்டில் வீசியதைப் பார்க்கும் போது என்னிடம் திறமை வற்றவில்லை என்று தெரிகிறது. என்னால் முடியும் என்று உணரும் வரை தொடர்வேன்.

நான் 700 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.. ஏன் முடியாது? என்றார் ஆண்டர்சன்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பெயர் தெரிவு !

இந்திய விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பாத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான விருதுக்கான தேர்வு குழுவில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், சர்தார் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல, துரோனாச்சார்யா விருதுக்கு வில்வித்தை வீரர் தர்மேந்திர திவாரி, தடகள வீராங்கனை புருஷோத்தம் ராய், குத்துச்சண்டை வீரர் சிவ்சிங், ஹாக்கி வீரர் ரோமேஷ் பதானியா, கபடி வீரர் கிருஷண் குமார் ஹூடா, பாரா பவர் லிஃப்ட் வீரர் விஜய் பாலசந்திர முனிஷவர், டென்னிஸ் வீரர் நரேஷ் குமார், மல்யுத்த வீரர் ஓம் பர்காஷ் தாஹியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு 27 பேர், தியான் சந்த் விருதுக்கு 15 பேர் உள்பட மேலும் நான்கு பிரிவுகளுக்கு தேர்வான வீரர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் 29ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காணொளி வாயிலாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 5 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

2016ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தீபா கர்மாக்கர், சாக்ஷி மாலிக் ஆகியோருடன் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜீத்து ராய்க்கு கேல் ரத்னா விருது கிடைத்தது.

இதேபோல, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி ஆகியோருக்கு பிறகு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்காவது வீரராகியிருக்கிறார், ரோஹித் சர்மா.

1998 ஆம் ஆண்டில் கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஆவார். 2007 ஆம் ஆண்டில் டி 20 உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்திய பின்னர் தோனிக்கு அந்த கெளரவம் கிடைத்தது. அதே நேரத்தில் விராட் கோலி, 2018 ஆம் ஆண்டில் பளுதூக்குபவர் மீராபாய் சானுவுடன் விருதை வென்றார்.

இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறவுள்ள வினேஷ் போகாட் 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பாத்ரா 2018 ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கத்தையும், ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

பிற செய்திகள்:

மின்னல் ஓட்ட வீரர் போல்ட்டுக்கு கொரோனா ..?

8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதால், அந்த முடிவு வரும் வரை முன்னெச்சரிக்கையாகத் தனிமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு தடகளத்தில் உலக அளவில் அசைக்க முடியாத மன்னராகத் திகழ்ந்தவர் ஜமைக்கா வீரர் உசேன். 8 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ள உசேன் போல்ட், 100 மீ, 200 மீ, 400 மீ தொடர் ஓட்டத்தில் 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வென்ற உலகின் ஒரே வீரர் போல்ட் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 100 மீ, 200 மீ, 400 மீ தொடர் ஓட்டத்தில் உலக சாம்பியன் பட்டத்தை உசேன் போல்ட் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி உசேன் போல்டின் 34-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, உசேன் போல்ட் குடும்பத்தினர், நண்பர்கள் மான்செஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், பேயர் லெவர்குஷன் விங்கர் லியான் பெய்லி, கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், தடகள வீரர் உசேன் போல்ட்டுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதையடுத்து, உசேன் போல்ட் தனது ட்விட்டரில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் கூறுகிறார்கள். அதற்காகவே நான் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அந்த முடிவுக்காகக் காத்திருக்கிறேன். அதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. கரோனா பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி நான் தனிமையில் இருக்கிறேன். நான் முடிவு அறிவிக்கும் வரை என்னுடைய நண்பர்களும் இதேபோல் தனிமையில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

டோனி போன்ற ஒரு பெரிய வீரரை சரியான விதத்தில் பி.சி.சி.ஐ நடத்தவில்லை! – சக்லைன் முஷ்டாக்

டோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை சுதந்திர தினத்தன்று அறிவித்தார். முறையாக பிரியாவிடை அளிக்காமல் தோனியை இப்படி ஓய்வு பெற விட்டிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சக்லைன் முஷ்டாக் யூடியூப் சேனலில் கூறியதாவது:

நான் எப்பொழுதுமே தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகளைத்தான் கூறுவேனே தவிர எதிர்மறை எண்ணப்போக்கை வெளிப்படுத்த மாட்டேன்.

ஆனால் டோனி ஓய்வு விஷயத்தில் நான் இதைக் கூறியாக வேண்டியுள்ளது. இது பிசிசிஐக்கு ஒரு தோல்வி. தோனி போன்ற ஒரு பெரிய வீரரை சரியான விதத்தில் பிசிசிஐ நடத்தவில்லை.

அவரது ஓய்வு இப்படி நடந்திருக்கக் கூடாது. இது என் இதயத்திலிருந்து எழும் உணர்வு, டோனியின் லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் உணர்ந்திருப்பார்கள்.

பிசிசிஐ குறித்து இப்படிக் கூற என்னை மன்னிக்கவும், பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது மகிழ்ச்சி. ஆனால் சர்வதேச ஓய்வு இன்னும் வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவுகள் உண்டு. ஒவ்வொரு வீரருமே ஆட்டத்தில் தான் உயர்ந்திருக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புவார்கள். டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கலாம்.

இவ்வாறு கூறினார் சக்லைன் முஷ்டாக்.

விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்பட சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்  இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சங்கக்கார மற்றும் ஜெயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக  பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.