செய்திகள்

செய்திகள்

செய்திகள்

15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய நெல்லை பெண் கைது

திருநெல்வேலியில் 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து, 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  திருநெல்வேலி மற்றும் தாழையுத்து பகுதிகளில் மீனா என்ற இளம்பெண் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு மாயமாகி விட்டார்.

மேலும் அவர் பல வீடுகளி்ல் வேலைக்கு சேர்ந்து உரி்மையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்று பிறகு அவர்கள் கண் அயரும் நேரத்தில் நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது போலீஸில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து மீனாவை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விஎம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மீனா நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று மீனாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனார். அப்போது மீனா, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் போலீஸாரிடம் கூறுகையில், இதுவரை 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவர்களிடம் இருந்து நகைகளை திருடி விற்று ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்தேன். தற்போது பணம் காலியானதை தொடர்ந்து விஎம் சத்திரத்தில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர வந்தேன் என்றார்.

போலீஸார் அந்த பெண்ணிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர். மேலும், 35 பவுன் நகைகளை விரைவில் மீட்க இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தடுப்புக்காவலில் உள்ள கனகரத்தினம் எம்.பி.யை, நேற்று என்.கே.ஸ்ரீகாந்தா பா.உ. பார்வையிட்டார்

குற்றப் புலனாய்வத் துறையினரால் அவசர கால சட்ட விதிகளின் கீழ் கைதாகி 6 வது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை, பாராளுமன்ற உறுப்பினர் என்.கே.ஸ்ரீகாந்தா நேற்று சென்று பார்வையிட்டு உரையாடினார்
 
தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை சந்தித்து சுமார் 25 நிமிடங்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் பேச முடிந்ததாக இச் சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா கூறுகின்றார்.

சந்திப்பையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் தனது விடுதலையை எதிர்பார்த்திருப்பதாக என்.ஸ்ரீகாந்தா, குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பின் போது இவரது விவகாரம் தொடர்பான விடயததையும் பேசுவதற்கு தமது கட்சி உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்

பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அங்கு விஜயம் மேற்கொண்ட பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முல்லைத்தீவு பிரதேச படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த ஆகியோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா படைவீரர்களினால் அணிவகுப்பு மரியாதை அளித்து கெளரவிக்கப்பட்டார்.

பின்னர் பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் 59 வது டிவிசன் சிரேஷ்ட படை அதிகாரிகளுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் போரின் பின்னரான பாதுகாப்பு நிலைமைகளையிட்டு கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு நீதிமன்றம் உத்தரவு

nalini-111.jpgராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினிக்கு, சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

நளினி தனக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், “எனக்கு 1992 முதல் 98 வரை சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் விலக்கி கொள்ளப்பட்டது. நான் எம்.ஏ., எம்.சி.ஏ. படித்துள்ளேன். எனது படிப்பின் அடிப்படையில் எனக்கு சிறையில் முதல் வகுப்பு தர உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தடா வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு தர வேண்டும்’ என்று வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்

செனல் 4 ஊடகத்தின் காட்சிகள் போலியானவை என எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளார் – கோத்தாபய

ExtraJudicialKillingsசெனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என்பதனை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல் ஹெய்ம், தற்போது அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார்.

இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும் தெரிவித்தார் 

வைகோ, விஜயகாந்த், திருமா. புலிகளிடம் பணம் பெற்றனர்-சாமி

swamy1111.jpgவிடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம். அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சாமி கூறுகையில்,  இந்தியாவில் இருக்கும் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது இலங்கையில் இருந்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.

அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் , மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  ஆகியோரும் அடங்குவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே நீதிமன்றத்துக்கு சென்று இதை அம்பலப்படுத்துவேன் என்றார் சுப்பிரமணிய சாமி.

யு.எஸ். ஓபன்: நடால் வெற்றி

nadal5.jpgஅமெரிக் காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.

சற்று முன்னர் நடந்து முடிந்த இப்போட்டியில் ஜெர்மனியின் நிக்கோலஸ் கெய்ஃபர் உடன் மோதிய நடால் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தினார். ஆனால் அடுத்த செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நிக்கோலஸ்.

எனினும், 3வது செட்டில் மீண்டும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அதனைக் கைப்பற்றி நிக்கோலஸ்க்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 4வது செட்டிலும் நடால் கையே ஓங்கியிருந்தது. முடிவில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அதனைக் கைப்பற்றி, 3-1 என்ற செட்க்கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு : அமைச்சர் ஆறுமுகன்

pluckers.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

“கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. இதன் பிறகு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  இதன் போது தோட்டத்தொழிலாளர்களுக்கு 12.5 வீத சம்பள உயர்வை வழங்குவதற்கே முன்வந்தனர். இந்தச் சம்மேளனத்துடன் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதாக இல்லை.

இதனைத்தொடர்ந்து கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் தீர்மானத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை வலியுறுத்தி தோட்ட நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத வகையில் ஒத்துழையாமைப் போராட்டத்தினை கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர். அதாவது வேலை நிறுத்தம், மெதுவாக வேலை செய்தல் போன்ற போராட்டங்களைத் தவிர்த்து இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினை தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளனர். காரணம்: வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை இழக்க நேரிடும்.

இதனைக் கருத்திற்கொண்டு தான் இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் தொழிலாளர்கள் ஒற்றுமையாக முன்னெடுத்து வருகின்றனர். கடந்த முறை சம்பள உயர்வை வலியுறுத்தித் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொண்ட போது, சில சக்திகள் அதனை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றியது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான சக்திகள் தமது சுய விளம்பரத்துக்காக இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் திசை திருப்புவதற்கு எத்தனிக்கலாம். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.இதற்காக இ.தொ.கா.முழுமூச்சாக செயற்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

யுத்தத்தில் ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் – கோதபாய ராஜபக்ஷ

யுத்தம் காரணமாக ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நாட்டை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட படைவீரர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கைவிடாதென குறிப்பிட்ட அவர், ஊனமுற்ற படைவீரர்களை வாழ் நாள் முழுவதும் பராமரிப்பதற்கான விசேட செயற் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
படைவீரர்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்வைன்: இந்தியாவில் 116 பேர் சாவு

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 116 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்தியா முழுவதும் 124 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 50, தமிழகத்தி்ல் 33, மகராஷ்டிராவில் 21 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்து 315 என கூறப்படுகிறது. அதிகபட்சமாக பிரேசிலில் 657, அமெரிக்காவில் 593, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகியுள்ளனர்.