செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஒரேநேரத்தில் 18 நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!

இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
 
உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை, இந்தியா,  இந்தோனேஷியா,  மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்,  எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் ஒத்திகைகள் இடம்பெற உள்ளதாக இடர்முகாமைத்துவ நிலைய தேசிய இணைப்பாளர் கீர்த்தி ஏக்கநாயக்க கூறினார்.

மழைக்கு முன் அகதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுங்கள். ஐ.நா. மீண்டும் அவசர வேண்டுகோள்

081009homs.bmpவவுனியா வில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் பருவமழை தொடங்கினால் பாரிய அவலங்களைச் சந்திப்பார்கள். எனவே  அகதிகளை இனியும் தாமதிக்காமல் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கை விவகாரம் குறித்து ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோதே அவர் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில் அகதிமுகாம்களில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டும்போதாது. மழைக்காலத்துக்கு முன்பாக பெரும்பாலான அகதிகள் அவர்களின் சொந்த இடங்களில் சென்று மீள்குடியேற இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

இந்த அகதிகள் மழைக்காலத்திற்கு முன்பாக அவர்களின் சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அல்லது அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். அல்லது இந்த அகதிகளை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கவேண்டும். அப்போதுதான் அகதிகள் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும். மழைகாலத்தில் அகதிமுகாம்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அகதிகள் பாதிக்கப்பட்டு தொற்றுநோய்களுக்கு ஆளாகிவிடுவார்கள். குறிப்பாக மெனிக்பாம் மக்கள் கடந்த காலங்களில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கை விஜயம்;

081009.jpgவாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கை விஜயம் செய்துள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் இங்கு நடத்திய ருத்ரபூஜையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்தாவது முறையாக இம்முறை இலங்கை வந்துள்ள ரவிசங்கர் கொழும்பில் நடைபெற்ற ‘ இதயங்களையும், மனங்களையும் இணைப்போம்’ என்ற பெயரிலான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் பிக்குகள், முஸ்லிம் அறிஞர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்துத் துறவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவாக ருத்ரபூஜையை நடத்தினார் ரவிசங்கர். இந்த பூஜை குறித்து அவர் விளக்குகையில், ” இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும்,  இறைத்துவம் நிரம்பியுள்ளது. இந்த ருத்ர பூஜையின் மூலம்,  இயற்கையின் அனைத்து அம்சங்களும் மதிக்கப்படுகின்றன, கெளரவிக்கப்படுகின்றன” என்றார்.

தென்மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

southern_province2.jpgதென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதினால் தென்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படும் என  கல்வி அமைச்சு தெரிவித்தது. நாளை மூடப்படும் பாடசாலைகள் திங்கட்கிழமை வழமைபோல இயங்க ஆரம்பிக்கும்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது. பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்கள் பாடசாலைகளிலே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை நிர்வாகக் கட்டடம், எண்ணெய்க் களஞ்சியத்துக்கு நேற்று அடிக்கல்!

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 15 மாடிகளுடன் கூடிய நிர்வாகக் கட்டடம் மற்றும் எண்ணெய் களஞ்சியசாலை என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (7) இடம்பெற்றது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிருமானப் பணிகள் கடந்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இத்துறைமுகத்தினுள் 15 எண்ணெய்க் குதங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு இதற்கு 76,581,774 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை கூறியது.

அதில் கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்காக 8 குதங்களும் விமானங்களுக்கு எண்ணெய் விநி யோகிப்பதற்காக 3 குதங்களும் எல். பி. காஸ் விநியோகிக்க 3 குதங்களும் அடங்கு வதாக அதிகாரசபை கூறியது.

செக் பிரதமர் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்

081009_confap.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பணிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் லிஸ்பன் உடன்படிக்கையை அங்கீகரிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமது நாட்டில் உள்ளதாக செக் பிரதமர் யான் பிஷ்ஷர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த உடன்படிக்கை செக் நாட்டால் அங்கீகரிக்கப்படும் என்று தான் நம்புவதாக செக் நாட்டின் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜொஸ் மேனுவல் பரோசோவை சந்தித்துப் பேசிய பிறகு கூறியுள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கு செக் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் செக் அதிபர் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகுதான் லிஸ்பன் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி; பிரதமர் நேரில் சென்று பாராட்டு

071009stock_mkt.pngஇலங்கையின் பங்குச் சந்தை என்றுமில்லாதவாறு மிகவும் சிறப்பாக இருந்ததென அறிவிக்கப் பட்டுள்ளது. சந்தையில் நேற்று ஆகக் கூடிய முதலீடு 1000 பில்லியன் ரூபாவாக இருந்தது. இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் இது முதற்தடவை யாகும்.

பணவீக்கமும், வங்கி வட்டி வீதங்களும் குறைந்ததே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய வளர்ச்சி நாட்டில் அபிவிருத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி ஏற்பட்டதையடுத்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று கொழும்பு பங்குச் சந்தைக்கு திடீர் விஜயம் செய்தார்.  கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள அலுவலகம் சென்ற பிரதமர் அங்கு அதிகாரிகளுட னும் பங்குச் சந்தை ஆணை யாளர் உதய சிறி காரிய வசத்தையும் சந்தித்துப் பேசினார். இலங்கையின் பங்குச் சந்தை 30 வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதற்காக உழைக்கும் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை பிரதமர் ரட்ணசிறி பாராட்டினார்

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு

071009venkatraman-ramakrishnan.jpgதமிழகத்தில் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவருக்கு வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரிபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் அவர் செய்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு அமெரிக்க விஞ்ஞானிக்கும், இஸ்ரேலிய விஞ்ஞானிக்கும் இதே பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம் – தேர்தல் ஆணையாளர்

071009ec-com.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் இரு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களிற்காக ஒட்டப்பட்ட பிரசுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவை அகற்றப்படாவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரு பகுதிகளிற்குமான முடிவுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இதன் போது எச்சரித்துள்ளார். 

மௌலவி ஆசிரியர் நியமனம் நவம்பரில்! கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தகவல்

210909ramzan.jpgமௌலவி ஆசிரியர் நியமனம் எதிர்வரும்  நவம்பர் மாதம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
 
காலி ஆளுநர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  இந்நியமனங்களை வழங்குவதற்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் தென்மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதால் இந்நியமனத்தை உடனடியாக வழங்க முடியாதுள்ளது. இத்தேர்தல் முடிவடைந்ததும் இந்நியமனங்கள் வழங்கப்படும்.

மௌலவி ஆசிரியர் நியமனமனத்தை கடந்த 20 ஆண்டு காலமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வழங்க மறுத்து வந்துள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதனை வழங்க முன்வந்துள்ளது. இதனால் இந்நாட்டு முஸ்லிம்கள் நன்றியுடன் செயற்பட வேண்டும்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டினர் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்த போது விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.