செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மீளக் குடியமர்த்தும் பகுதிகளில் அரச ஊழியர் கடமைக்கு திரும்புவது கட்டாயம்; தவறினால் கொடுப்பனவு ரத்து

north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை மீளக் குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள கிராமசேவகர்கள் உட்பட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் உடனடியாக தத்தம் பகுதிகளுக்கு கடமைக்கு திரும்ப வேண்டும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்களை மீளக் குடியமர்த்துவதை துரிதப்படுத்துவதற்கும், குடியமர்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூரணப்படுத்திக் கொடுப்பதற்கும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றங்கள், குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கென விசேட கூட்டமொன்று நேற்று திருமலையில் நடைபெற்றது.

பிரிட்டிஷ் விசா விண்ணப்பங்கள் 19 முதல் 23 வரை ஏற்கப்படமாட்டா

பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

புதிய விசா விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 18ம் புதன்கிழமையாகும், விசா விண்ணப்பங்கள் எற்பு எதிர்வரும் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் 18ம் திகதிக்கு முன்னர் விசா விண்ணப்பங்களை மேற்கொள்ளும் பயணிகள் விசா விண்ணப்ப நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் 1வது கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

சு.க. தொழிற் சங்க தலைவராக ஜனாதிபதி தெரிவு

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது தேசிய மாநாடு நேற்று (03) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சங்கத்தின் தலைவராக அடுத்த மூன்றாண்டுகளுக்கும் ஜனாதிபதி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச் செயலாளராக லெஸ்லி தேவேந்திர மீண்டும் தெரிவானார். பொருளாளராக நொயல் பத்மசிறி காரியவசம் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் நிர்வாகக் குழுவுக்குக் கட்சியின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுமேதா ஜீ. ஜயசேன, அதாவுத செனவிரட்ன, ரீ. பி. ஏக்கநாயக்க, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

புலிகளுக்கு ஆயுதம் கடத்தல்: சிங்கப்பூர்வாசி அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவிலிருந்து இலங்கையில் புலிகளுக்கு ஆயுதங்களை நடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கப்பூர் வர்த்தகரான பால்தேவ் நாயுடு ராகவன் (47) விசாரணைகளுக்காக அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கு உதவியது மாத்திரமன்றி கடல் கடந்த பல்வேறு நாடுகளுடன் சட்டவிரோச் செயற்பாடுகளில் பால் தேவ் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிபதி ரோய் நெய்பர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு சிங்கப்பூர்வாசியான ஹனீபா ஓஸ்மான் என்பவருடன் இணைந்தே பால்தேவ் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஹனீபா (57)வுக்கு பல்டிமோட் நீதிமன்றத்தினால் 37 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் பால்தேவ் நாயுடு 2006ம் ஆண்டு பெப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் தான் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் கொள்வனவாளர்களுக்குமிடையில் இடைத் தரகராக செயற்பட்டு வந்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு இத்தோனிசியார்கள் சிலர் தனக்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் : 17 வயது யுவதி கைது

கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பாதும்பை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

17 வயதான இந்த யுவதி 2 வாரங்களுக்கு முன்பு உடப்புஸ்ஸலாவை பகுதியில் இருந்து பாதும்பை பகுதியிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்டதாகப் பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பாதும்பை பொலிஸார், காசல் மகப்பேற்று மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டு, இவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி

031109unf.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் ஜனாதிபதியாக மீண்டும் கர்ஸாய் வெற்றி

031109karzai.pngஆப்கானிஸ் தானின் ஜனாதிபதியாக இரண்டாம் முறையாக ஹமீது கர்ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர் திங்கள்கிழமை முறைப்படி அறிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஹமீது கர்ஸாய் பெரும்பான்மை வாக்குகள் பெற்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவானதாகவும் தேர்தலில் தில்லு முல்லு செய்தே கர்ஸாய் வெற்றி பெற்றதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் அப்துல்லா அப்துல்லா குற்றஞ்சாட்டினார்;.

இதையடுத்து,  ஐநா தலையிட்டு அந்த தேர்தலை ரத்து செய்து அடுத்த கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. அதில் கர்ஸாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவர் மட்டுமே போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் தில்லு முல்லு நடக்கும், வாக்குப்பதிவு நேர்மையாக நடக்காது என்று குற்றம்சாட்டி போட்டியிலிருந்து விலகினார் அப்துல்லா.

கர்ஸாய் மட்டுமே களத்தில் இருந்தார். இதனால், இரண்டாம் கட்ட தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கர்ஸாயை ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, அதிபர் தேர்தலில் கர்ஸாய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்; அஜிஸல்லா லூதின் அறிவிப்பு வெளியிட்டார்

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அழுத்தம் கொடுக்க எந்தவொரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

290909mahinda.jpgஇலங் கையின் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்கு உலகின் எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதித் துறையானது ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணித்திருந்த யுகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டுக்கெதிரான அழுத்தங்களின் போது இன, மத, குல பேதமின்றி இணைந்து முகங்கொடுக்க சகலரும் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்க அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத்திற்கருகாமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. மேற்படி கட்டிடத்திற்கான பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

முப்பது வருட கால பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு நாட்டில் நீதித்துறையின் அதிகாரத்தை உறுதிப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இதனை, தேசிய ரீதியில் நாட்டை முன்னேற்றுவதற்கு சிறந்த யுகமாகக் கொள்ள முடியும். கடந்த 30 வருட காலம் இலங்கையின் நீதித்துறை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தது.

மக்களுக்கான நீதித்துறை என்ற நிலைமைக்கு மாறாக நாட்டில் ஒரு பகுதியில் சட்டம் நடைமுறை யற்றதாகியிருந்தது. சில காலகட்டங்களில் வவுனியாவிற்கு அப்பால் சட்டம் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கிய போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத காலம் அது. பயங்கரவாதக் குழுவை பிடிப்பதற்கான தேவை இந்தியாவிற்கும் இருந்தது. எனினும், பிடியாணை உட்பட நீதிமன்ற செயற்பாடுகள் அப்போது கேலிக்குரியதாகின.

சட்டம் ஆயுத பலத்துக்கு அடி பணிந்திருந்த யுகத்துக்கு நாம் முடிவு கட்டினோம். இன்று சட்டத்திற்கெதிரான அச்சுறுத்தல்களை மேற்கொள்ள எவருக்கும் இடமில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் தற்போது செயற்படுவதுடன் சட்டம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செயற்படுத்தப்படுகிறது.

நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களும் கண்டுள்ளோம். வடக்கு, கிழக்கில் பயங்கரவாதம் மற்றும் தெற்கில் பாதாள உலகம் என இவ்வச்சுறுத்தல் தொடர்ந்தன.  நீதிபதி சரத் அம்பேபிடிய போன்றவர்கள் பாதாள உலக குழுவினால் கொல்லப் பட்டார்கள். இது போன்ற நாட்டில் சட்டத்தை நிலைநாட்ட முயன்று துப்பாக்கிக்குப் பலியான பல சம்பங்களுண்டு. நாட்டில் பல நீதிமன்றங்கள் மூடப்பட்ட காலம் அது.

எல்லைக் கிராமம் என்பதை இலங்கையின் வரை படத்திலிருந்தே அகற்றி சட்டம் முழு நாட்டிற்குரியது என்பதை நாம் நடைமுறையில் கொண்டு வந்துள்ளோம். சட்டம் சகலருக்கும் பொதுவானதாக வேண்டும். நாம் தொழில்நுட்ப அறிவை கிராமிய மட்டத்திலும் கொண்டு சென்றுள்ளோம்.

இதனால் எதிர்வரும் காலங்களில் சட்டத்தரணிகள் அறிவு பூர்வமான மக்களுக்கே சேவை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். மக்களுக்கான உரிமை தொடர்பில் அவர்களை அறிவுறுத்த வேண்டியதும் சட்டத்தரணிகளின் கடமையாகிறது.

சிலர் நிறுவனச் சட்டங்களைக் கையிலெடுக்க முயல்கின்றனர். அதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. அரசாங்கம் நீதித்துறை போன்றே நீதித்துறை சார்ந்தவர்களின் கெளரவத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனினும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையில் தலையிடவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது.

ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து ஊடகங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து நீதிமன்றத் தீர்ப்பினை மாற்ற கடந்த காலங்களில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமன்றி வேறு நாடுகளை தலையிடச் செய்து நம் நாட்டு நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றியமைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு செய்தால் நாட்டின் சட்டம் என்னாவது? சட்டத்தின் முன் சலரும் சமம் என்ற கூற்றுக்கு என்ன அர்த்தம்? அப்படி நிகழ்ந்தால் சட்டத்தின் சமத்துவம் கேள்விக்குரியதாகிவிடும்.

எமது நாட்டில் சிறந்த நீதித்துறை உள்ளது. எந்தவொரு பாரதூரமான பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளக்கூடியதான பலத்தை அது கொண்டுள்ளது. இதனால் இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேறு நாடுகளில் நீதிமன்றங்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாத்தால் மட்டுமே சட்டம் ஒழுக்கம் நிறைந்த நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எமது நாட்டிற்கெதிரான அழுத்தங்கள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் இனம், மதம், குலம், கட்சி என்ற பேதங்கள் இருக்கக் கூடாது. எமது தாய் நாட்டிற்கு அழுத்தங்கள் வருமானால் நாம் அனைவரும் இணைந்து அதனை எதிர்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் எவ்வித தொற்றுநோயுமில்லை – வவுனியா அரச அதிபர்

101009displacedidps.gifஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எந்தவித தொற்று நோய்களும் இல்லையெனவும் நோய்த்தடுப்புக்கான சகலவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் தாம் நலன்புரி நிலையங்களுக்கு வரும்போதே பல்வேறு தொற்று நோய்களுடன் வந்தனர்.

அவ்வாறானவர்கள் இனங் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தொற்றுநோய் என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இவ்வாறு இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் பல்வேறு தொற்று நோய்கள் காணப்படுகின்றன. எனினும் இதற்கு முன்னுதாரணமாக தொற்று நோய்களற்றதாக எமது நலன்புரி நிலையங்கள் திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களிடையே மஞ்சட்காமாலை, தோல் நோய் மற்றும் பொக்களிப்பான் போன்ற நோய்கள் இருந்தன. இவற்றைக் குணப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான நோய்களைக் கொண்டோர் வேறாக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதேநேரம் இத்தகைய தொற்றுக்கள் ஏனையோருக்கு பரவாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை காலங்களில் நோய்கள் பரவாமலிருப்பதற்காக சுற்றுச் சூழல்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் நிர்தேங்கி நிற்பதைத் தடுக்கும் வகையில் வடிகான்கள் புனரமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் தங்கியுள்ள கூடாரங்கள் திருத்தியமைக் கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொற்று நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

031109sarathfonseka.jpgஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ”ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

 இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், ” நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.