செய்திகள்

செய்திகள்

செய்திகள்

காலிறுதி போட்டி விபரங்கள்

ftfa.jpgஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதி போட்டிகள் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பயிற்சிகளில் 8 அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலிறுதி போட்டி விபரங்கள்

ஜூலை 2, வெள்ளிக்கிழமை
நெதர்லாந்து – பிரேசில்,
இடம்: போர்ட் எலிசபெத்,
நேரம்: இரவு 7.30.

உருகுவே – கானா,
இடம்: ஜோகன்னஸ்பர்க்,
நேரம்: இரவு 12

ஜூலை 3, சனிக்கிழமை,
ஆர்ஜென்டீனா -ஜெர்மனி,
இடம்: கேப்டவுன்,
நேரம்: இரவு 7.30.

பராகுவே – ஸ்பெயின்
இடம்:  ஜோகன்னஸ்பர்க்,
நேரம்: இரவு 12.

பெண்கள் வசமாகும் குடாநாட்டு நிர்வாகம்

jaffna.jpgயாழ். குடாநாட்டின் சிவில் நிர்வாகம் தற்போது மகளிர் வசமாகிவரும் நிலையில் யாழ்.அரச அதிபராக இன்று வியாழக்கிழமை திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்கவுள்ளார். குடாநாட்டின் பல பகுதிகளிலும் மிக முக்கிய பதவிகளில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அவர்களில் சிலரது விபரங்கள் வருமாறு;

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகரமேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீஷன், சங்காணை பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி, யாழ்ப்பாண கல்விப்பணிப்பாளர் திருமதி.கே.வேதநாயகம், யாழ்.பிராந்திய மாகாண ஆணையாளர் திருமதி எஸ். சிவலிங்கம், யாழ்.பிராந்திய உதவிப் பதிவாளர் திருமதி மகாராணி இராஜரத்தினம், புவிச்சரிதவியல் சுரங்கப்பணிகள் அகழ்வு பணிப்பாளர் எந்திரி கே.யோககௌரி, வலிகாமம் தெற்கு பிரதேசசபை செயலாளர் சுலோசனா முருகேசன், யாழ்ப்பாண சித்தமருத்துவத்துறை தலைவர் திருமதி சிவஞானமணி பஞ்சராசா என பெரும்பாலான சிவில் நிர்வாகப்பகுதிகளுக்கு பெண்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பதிவு செய்யப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் திணைக்களத்திடம் சகல ஆவணங்களுடனும் கையளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக ஆர். சம்பந்தனும் அதன் இணைச் செயலாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக் கட்சிசார்பில் மாவை சேனாதிராஜாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமசந்திரனும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் தற்போது நாட்டிலில்லாததாலும் அவர் செப்டெம்பர் மாதமே நாடு திரும்பவுள்ளதாலும் அவர் நாடு திரும்பிய பின்னரே இது தொடர்பான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய கட்சிகளைப் பதிவுசெய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நாள் நேற்றைய தினமென்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரேன்- இலங்கை இருதரப்பு பேச்சு; மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்து

ugrain.jpgஉக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவி ச்சின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உக்ரேன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (30) காலை இடம்பெற்றது. உக்ரேன் நிர்வாகத் தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார துறைகளை மேம்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையிலும் வர்த்தக துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த வர்த்தக ஆணைக் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கும் உக்ரேன் விமான சேவைநிறுவனத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.

இலங்கையிலிருந்து உக்ரேன் இறக்குமதி செய்யும் தேயிலை, மற்றும் பீங்கான் பொருட்களுக்காக அதிக வசதிகளை வழங்குவது தொடர்பாகவும் உக்ரேன் இலங்கைக்கு ஏற்றுமதிசெய்யும் யூரியா உரம் மற்றும் உருக்கு கம்பிகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் அகழ்வு பற்றி ஆராய உக்ரேனிடம் இருந்து தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவும் இரு நாடுகளுக்கிடையிலும் கல்வி பரிமாற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளினதும் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் சுற்றுலா, கடற்படை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் மூன்று உடன்படிக்கைகளை இலங்கையும் உக்ரேனும் நேற்று (30) செய்துகொண்டன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சுற்றுலா தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் உக்ரேனிய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சர் மிக்கேய்ல் குயின்யக்கும் கைச்சாத்திட்டனர்.

யுத்த நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் உக்ரேனின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் மிக்கைலோ யெஸெலும் கைச்சாத்திட்டனர். பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் பாது காப்பு சேவைகளின் பிரதி தலைவர் பொரோ ட்கோவும் கைச்சாத்திட்டனர்.

கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தை சுற்றிவளைக்க வீரவன்ச வலியுறுத்தல்.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பாக நியமித்துள்ள விசேட நிபுணர்குழுவை கலைத்து விடுவதற்கான தீர்மானத்தை எடுக்கும் வரை இலங்கையிலுள்ள ஐ.நா.அலுவலகத்தை சுற்றி வளைத்து அலுவலர்களை உட்புறத்தில் அகப்படுத்தி வைத்திருக்குமாறு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.நிபுணர்குழு நியமனமானது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைத்தலைவர்களையும் யுத்த கதாநாயகர்களையும் ஆஜராக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையென நேற்று புதன்கிழமை நிருபர்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை சாதாரண நடவடிக்கையாக கருத முடியாது. ஏனெனில் ஐ.நா.வின் அடுத்த கட்ட நடவடிக்கை விசாரணைக்குழு வொன்றை அமைப்பதாக இருக்கும். மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்களுக்கான சாத்தியப்பாட்டை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதாக அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.  இது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் தலைவர்களையும் யுத்த கதாநாயகர்களையும் ஆஜராக்கும் நிலைமைக்கு இட்டுச்செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஐ.நா.நிபுணர் குழுவுடன் பேசுவதற்கு தயாரென ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்திருக்கும் விடயம் பற்றியும் அமைச்சர் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார். இது நாட்டின் இறைமைக்கு துரோகமிழைக்கும் விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். அரச அதிபராக இமெல்டா சுகுமார் பதிவியேற்பு. முல்லைத்தீவு அரசாங்க அதிபராக நா.வேதநாயகன்.

Imelda_Sugumar_GAயாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் பதவியிலிருந்த ஓய்வு பெறுவதையடுத்து யாழ்ப்பாணத்தின் புதிய அரசாங்க அதிபராக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த நா.வேதநாயகன் பதவியேற்கிறார்.

யாழ். அரசாங்க அதிபர் திரு கே.கணேஸ் 50 வருடகால அரச சேiயிலிருந்து இன்று ஓய்வு பெறும் நிலையிலேயே நாளை அப்பதவியை  முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எற்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த நா.வேதநாயகன் முல்லை அரச அதிபராக பதவியேற்கிறார்.

போர் முடிவடைந்ததன் பின்னர் கடந்த யுலை மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ந.வேதநாயகன் அவர்களை நீதிமன்றம் இம்மாதம் 17ம் திகதி குற்றமற்றவர் என விடுதலை செய்தமை குறிப்பித்தக்கது.

இலங்கையின் புதிய வரவு செலவு திட்டம் – பதில் நிதியமைச்சர் வெளியிட்டார்.

இலங்கையின் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டப் பிரேரணை நேற்று (June 29 2010) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வருமானம் 817.8 பில்லியன் ரூபா எனவும், செலவினம் 1279.8 பில்லியன் ரூபா எனவும், துண்டு விழும் தொகை 462 பில்லியன் ரூபா எனவும் பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகமவினால் அறிவிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட வருமானத்தின் நேரடி வரி வருமானமாக 729 பில்லியன் ரூபாவும், மறைமுக வரி வருமானமாக 878 மில்லியன் ரூபாவும் எதிர்பார்க்கப்படுவதாக  சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதே வேளை, 2010ஆம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தின்படி மொத்த செலவினமாக 1279.8பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இதில் நடைமுறைச் செலவினமா 928.3 பில்லியன் ரூபாய்களும், மூலதனச் செலவினமாக 352.5 பில்லியன் ரூபாய்களும் மதிப்பிடப்பட்டுள்ளதாக சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

 இதே வேளை, 2010 ஆண்டிற்கான துண்டு விழும் தொகை 462 பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிட்ட அமைச்சர் இந்த வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை 8 வீதமாகக் குறைக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாண்டிற்கான செலவினம் 5.5வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2011 ஆம்; ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமாப்பிக்கப்படும் போது அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக்கடன் கொடுப்பனவு எவ்வித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஒதுக்கீடுகள் தொடர்பாக அவர் விளக்கிய போது, இலங்கையில் 30 இலட்சத்தைக் கொண்ட மாணவ சமூகத்திற்கு இலவச பாடநூல்களை வழங்கவும் ஏனைய நலத்திட்டங்களுக்கும் 7300 மில்லியன் ரூபாவும், 74 ஆயிரம் பேரைக்கொண்ட காப்பிணித் தாய்மார் மற்றும், சிறுவர் நலத்திட்டங்களுக்கும் 2500 மில்லியன் டொலர் ரூபாவும், நலன்புரி கிராமங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக 7500 மில்லியன் ரூபாவும், சமுர்த்தி திட்டத்திற்காக 9300 மில்லியனும், ஊழியர் இளைப்பாற்றுத்திட்டத்திற்காக 4500 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வொதுக்கீடுகள் தொடர்பாக அமைச்சர் தகவல்களை வெளியிட்ட போது, எதிர்கட்சியினர் கோசங்களை எழுப்பி ஆட்சேபனை எழுப்பினர். இவ்வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் கருதிய எவ்வித அம்சங்களும் உள்ளடக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனம் ஒன்று மக்களின் பணத்துடன் தலைமறைவு!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் மாடிக்கட்டடம் ஒன்றில் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட  இந்நிதி நிறுவனம் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளரும் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒரு லட்சம், ஐம்பதினாயிரம் என பணம் பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைகின்றவர்களுக்கு பல கவர்ச்சிகரமான  சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக குறுகிய காலத்தில் 3500 வரையிலான வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது  இதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் எமாற்றப்பட்டமை குறித்து பொலஸில் முறையிட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் நிதி மோசடி இது முதற் தடவையல்ல. யாழ் உதயன் பத்திரிகையின் நிறுவனர் சரவணபவனின் நிதி நிறுவனமான சப்ரா பினான்ஸ் லிமிடடில் வைப்பிட்ட பலரும் தங்கள் சேமிப்பை இழந்தனர். சிலர் தற்கொலைக்கும் முயற்சித்து இருந்தனர். இன்று சரவணபவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். விஜயம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதித் தூதுவரை கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்.

British_High_Commission”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரிட்டன் பிரதித் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளனர்;  நேற்று (June 28 2010) யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதித்தூதுவர் மார்டின் புட்டினிஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

”யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றபட்ட ஒரு லட்சம் வரையிலான மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.  வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள கொடிகாமம் இராமாவில் முகாமிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் மக்கள் முழுவதுமாக மீள்குடியேற்றப்படவில்லை.

வன்னியில் பரந்தளவு நிலப்பரப்புக்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன.  அப்பகுதிகளில் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் நலன்களுக்கும் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது, ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இவ்வாறு செலவிடப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.”

இவ்வாறான விடயங்கள் கூட்டமைப்பினரால்  விளக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Sampanthan_Rதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளன. கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்  கூட்டமைப்பும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை 6 மணிக்கு இச்ந்திப்பு நடைபெற்றுள்ளது.

இன்று தமிழ் மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் உடனடிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டியுள்ளமை குறித்து கூட்டமைப்பு தலைவரிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் கேட்கப்பட்டுள்ளது.