செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மலையக தோட்ட புல் தரைகளில் களைகொல்லி பயன்படுத்த தடை

மலையகப் பெருந்தோட்டங்களில் கால்நடை வளர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். தோட்டங்களில் கால்நடை வளர்ப்புக்குப் பூரண உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தோட்டங்களில் காணப்படும் புல்தரைகளில் தோட்ட நிர்வாகங்கள் களைக்கொல்லி பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென்றும் பணிப்புரை விடுத்திருக்கிறார்.

நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நேற்று முன்தினம் நுவரெலிய மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது நுவரெலிய மாவட்டத்தினை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற அமைச்சரான நவீன் திசாநாயக்க, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், மாகாண பிரதான செயலாளர், மத்திய மாகாணசபை தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்ட மக்களை பெருமளவில் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராகத் தன்னை தெரிவு செய்தமையினையிட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், நாட்டில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வேறுபாடு இல்லை. எல்லா மக்களும் சமமானவர்கள் என்பதனை அவரது இந்த செயற்பாடு தெளிவுபடுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இங்கு தலைமையேற்று உரையாற்றிய அ¨மைச்சர் தொண்டமான், நுவரெலியா மாவட்டம் பல குறைபாடுகளை கொண்டி ருக்கின்றது. அரசியல்வாதிகள் மட்டுமன்றி, நிறுவன அதிகாரிகளும், ஒன்றிணைந்து துரித கதியில் எமது மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்றார்.

கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடை முறைப்படுத்தப்பட்ட 358 வேலைத்திட்டங்களில் 238 திட்டங்கள் பூரணமடைந்திருப்பதாகவும், ஏனையவை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான செயற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

யாழ். மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!

Jaffna_Hospitalயாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இம்மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முன்றாம் ஆண்டு காலாண்டுக்கான மருந்துப் பொருட்கள் இது வரை வராத காரணத்தினாலேயே இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கான இரத்தப் பரிசோதனைகள் உட்பட்ட  மருத்துவ பரிசோதனைகள் அங்கு செய்யப்படுவதில்லை எனவும் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களிலேயே இப்பரிசோதனைகளை மேற்கொள்ள  நோயாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வன்னியில், கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி. துணுக்காய் பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட்ட குறிப்பிட்ட சில மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முற்றாக வீடுகளை இழந்தோருக்கான கொடுப்பனவான மூன்னறரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இத்திட்டத்தின் அடிப்படையில் சில வீடுகள் அமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சிலவற்றிற்கான வீடமைப்பு கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கபட்டு  வருகின்றமையும் குறிப்படத்தக்கதாகும்.

ஓகஸ்ட் முதல் வெளிமாவட்டங்களில் வசித்தவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில வவனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் எதிர்வரும் 26ம் 27ம் திகதிகளில் மீள்குடியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களிலிருந்து வெளியேறி வன்னிக்கு வெளியே வேறு மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகிளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4ம் திகதியிலிருந்து அம்மாதம் மழுவதும் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக  இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், கள்ளச்சாராய விற்பனை, கசிப்பு கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என்கிற வகையில் 29 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், வீதி ஒழுங்கு மீறப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களான 62 பேரும் மற்றும் 7பேருமாக மொத்தம் 113 பேர் பொலிஸாரிடம் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விசேட நடவடிக்கைகளில் ஒன்பது பொலிஸ் நிலையங்களிலிருந்து 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லெபனானில் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு – 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்

housemaids.jpgபல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார்.

விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

றுஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

றுஹுணு பல்கலைக்கழக மாணவனொருவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பொலிஸாருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

எனினும் இராணுவத்தினரும் மேலதிக பொலிஸாரும் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான சம்பவத்தையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பையடுத்து பொலிஸார் அங்குவந்து மாணவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த மாணவனொருவர் பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த மாணவர் மரணமானதாக றுகுணு பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

றுஹுணு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான பண்டார என்பவரே மரணமானார்.இந்த மாணவன் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலே அவரின் மரணத்துக்குக் காரணமென மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து மாத்தறை பஸ் நிலையம் அருகில் பிரதான வீதியில் நின்று நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் மாத்தறையில் இருந்து கதிர்காமம், அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாரõம, தங்காலை, திக்குவல்ல பகுதிகளுக்கான பஸ் சேவைகளும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டன. இதேவேளை, இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய இரு விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தென்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆடிவேல்; அலரிமாளிகை முன் ஜனாதிபதி வழிபாடு

aadivila.jpgகொழும்பில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆடிவேல் விழா நேற்று மிகக் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. ஜுலை 27 ஆந் திகதி வரை நடைபெறும் ஆடிவேல் விழாவின் ஆரம்பமாக கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரதபவனி நேற்றும் காலை எட்டு மணியளவில் ஆரம்பமாகி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம் வரை சென்றது. பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ சென்ற ரதபவனி அலரி மாளிகையில் விசேட பூஜைக்காகத் தரித்து நின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாரியாரும் மாளிகைக்கு முன்பாக மேள தாளத்துடன் அழைத்து வர அவர்கள் காலி வீதியில் வைத்து விசேட பூஜைகளை நடத்தினர். ஆடிவேல் விழாவில் இவ்வாறு ஜனாதிபதி விசேட பூஜை வழிபாடு நடத்தியது இதுவே முதற் தடவையாகும். அங்கு ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் ஆலய அறங்காவலர் சபையினர் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவித்துக் கெளரவித்தார்கள். மேலும், செட்டியார் தெரு ஸ்ரீபுதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி இன்று (24) காலை 7.30 அளவில் ஆரம்பித்து பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தைச் சென்றடைகிறது. சம்மாங்கோடு ஆலய காவடி ரதம் திங்கட்கிழமை (26) திரும்பி வரவுள்ள நிலையில் வெள்ளி ரதம் 27 திங்கட்கிழமை மீண்டும் செட்டியார் தெரு ஆலயத்தை வந்தடையும்.

புசல்லாவ தோட்டம் – மற்றொரு மாணவி நேற்று தற்கொலை

புசல்லாவை பிளக்போரஸ்ட் தோட்டப் பகுதியிலுள்ள பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தனக்குதானே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

க. பொ. த உயர்தர வகுப்பில் இரண்டாவது தடவையாகக் கற்கும் பெரமையா சாந்தி (வயது 21) எனும் மாணவி தனது வீட்டில் சேலை ஒன்றினால் சுருக்கிட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புசல்லாவை பகுதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவிகளின் 3வது தற்கொலைச் சம்பவம் இதுவாகும்.

போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

sitharthan.jpg”போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்” என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், ”போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை. அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை.

இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.