செய்திகள்

செய்திகள்

செய்திகள்

”அமெரிக்கா தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல

Keheliya_Rambukwella”அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்” என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்nவெல காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 18வது அரசமைப்புத் திருத்தம் நிறைவேறியுள்ளதையடுத்து அமெரிக்கா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இவ்விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற விதத்தில் தலையிடக்கூடாது. தேவையற்ற, பொறுப்பற்ற விதங்களில் விமர்சனங்களை வெளியிடுவதை அது தவிர்த்துகொண்டு தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அமரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. அத்துடன் எமது நாட்டின் அதியுயர் கட்டமைப்பான உயர் நீதிமன்றத்தையும் அது அவமதித்துள்ளது” எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

”இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தம் அதன் தேவை கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது சட்டப்படியானது. அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 18வது அரசமைப்புத் திருத்திருத்தத்தைக் கண்டித்து அமெரிக்கா அதன் விமர்சனத்தைத் வெளியிட்டிருந்தது. இவ்வரசமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத் தன்மையினைப் பலவீனப்படுத்தும் என அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தது.

வடமாகாண சுகாதார அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

ag-chanra.jpgவட மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் அடுத்த மாத நடுப்பகுதியில் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடைமுறை ப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச் சையும் கிளிநொச்சி நகருக்கு மாற்ற தீர்மானித்ததாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண கல்வி, கலாசார அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.

புலிகளுக்கு பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவையானோருக்கு சுயதொழில் பயிற்சி – டியூ குணசேகர

due-00000.jpgபுலி களுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளானவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

‘புலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் நடமாடும் சேவைக்கு வந்தபோது நான் மிகவும் வேதனைய டைந்தேன்’ என அவர் கூறினார்.

வடக்கில் (மாவட்ட ரீதியாக) மூன்று தினங்கள் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது சுமார் 36 ஆயிரம் பேர் அங்கு வந்து பிரச்சினைகளை முன் வைத்தனர். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் உணரமுடிந்தது எனவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.

கைதிகள் தினத்தையொட்டிய நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எமது பிரதி அமைச்சர் மற்றும் நானும் மக்களின் நன்மைக்காக சிறைக் கைதிகளாக இருந்துள்ளோம். அதன் காரணமாக சிறையில் நடக்கும் அனைத்து விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தவறு இழைத்தவர்களுக்கு சட்டரீதியாக நீதிமன்றமே தண்டனை வழங்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் கைதி களை அதிகாரிகள் தண்டிக்க முயற்சி செய்யக் கூடாது. சிறை அதிகாரிகளின் நடத்தைகளை சிறையில் கண்டுள்ளேன்.

யுத்த காலத்தில் பலாத்காரமாக புலிகள் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப் பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. கட்டம் கட்டமாக இவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்து வருகிறோம். நான்காயிரம் பேர்வரை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 7 ஆயிரத்து 500 பேர் புனர்வாழ்வு நிலை யங்களில் உள்ளனர்.

இவர்களில் 708 பேர் நேரடியாக புலிகளின் தலைமைகளுடன் செயல்பட்ட உயர்மட்ட உறுப்பினர்கள். இவர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படுகிறது. அண்மையில் 570 பேருக்கு புனர்வாழ்வு வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம். கூடிய விரைவில் மேலும் 2700 பேரை விடுதலை செய்யவுள்ளோம். முப்பது வருட கால யுத்தத்தில் எமது படை வீரர்களும் இன்னல்களை அனுபவித்தனர்.

அதேபோன்று கைதிகள் விடயத்திலும் மிகவும் வேகமாக செயல்படுகிறோம். கைதிகள் தொடர்ந்தும் தவறு செய்து சிறைக்கு வருவதை தடுக்க வேண்டும். சிறை வாழ்வில் மாற்றம் பெற வேண்டும். அரசியல் ரீதியாக செயல்படாது சமூக நலனோடு நாம் செயல்பட்டு வருகிறோம். இவ் விடயத்தில் ஜனாதிபதி பெரும் உதவி செய்து வருகிறார். கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு தேவை. சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதிகள் மத்தியில் சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நல்ல முறையில் செயல்படுகிறது.

கனடா சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் திருட்டு

copy.gifகடந்த மாதம் எம்.வி. சன். சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளை ரொரன்டோ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தில் இருந்த கணனி ஒன்றும் களவாடப்பட்ட நிலையிலேயே எம்.வி. சன். சீ கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது. இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி

இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.

ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

unp_logo.jpgஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், சுயாதீனக் குழுவாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பலர் இணைவரென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தலைவர் தொடர்ந்தும் பிடிவாதமாக இருப்பாரேயானால் மேலும் பல எம்.பிகள் எம்முடன் இணைவர். ஒரு கட்சி என்ற வகையில் இதே நிலைமை மேலும் தொடர முடியாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் யாப்பு சீர்திருத்தம் நடைபெறும் வரை கட்சித் தலைமைக்கு அப்பால் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித்தாய் குத்திக் கொலை; லுணுகலயில் நள்ளிரவில் கொடூரம்

கர்ப்பிணித் தாயொருவரை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பசறை லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பசறை பங்குவத்தை என்ற இடத்தில் வசித்த ஒரு பிள்ளையின் தாயான எச். என். டி. பியதர்ஷனி வயது (25) என்ற கர்ப்பிணித்தாயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவம் கடந்த சனி இரவு பசறை லுணுகல சூரியகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் லுணுகல சூரியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வை. எம். நெலும்தெனிய முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது: குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் சேவையாற்றி வருகிறார். சம்பவத்துக்கு முதல் நாள் நண்பர் ஒருவரின் திருமணத்துக்காக விடுமுறையில் வந்து தனது மனைவி பிள்ளைகளுடன் நண்பரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளவென பசறை லுணுகல சூரியகொட பகுதியில் அமைந்து இருந்த நண்பனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இரவு அங்கு இடம்பெற்ற திருமண விருந்து உபசாரத்திலும் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அன்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது. இந்த வேளையில் குறித்த நபர் சமையலறைக்கு தனது கையடக்க தொலைபேசியின் வெளிச்சத்தில் சென்று அங்கிருந்த கத்தியொன்றை எடுத்து வந்து மனைவி உறங்கிகொண்டு இருந்த அறைக்குள் நுழைந்து மனைவியை குத்திப் படுகாயமடைய செய்துள்ளார்.

அதனையடுத்து சற்று நேரத்தில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைத்தவுடன் அங்கு படுக்கையில் இருந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பெண்ணை லுணுகல வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டப்போது அவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை மேற்கொள்ள சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு (12) திகதி மாலை எடுத்துவரப்பட்டு மரண பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின் சடலம் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லுணுகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் அபிவிருத்திக் கூட்டத்தில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினரும் இணைந்து பங்கு கொண்டனர்.

Suresh_P_and_Powzi_Ministerயாழ்ப் பாணத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முதன்முதலாக கலந்து கொண்டுள்ளது. அத்துடன் அனர்த்த செயற்பாட்டு மையத்தையும் ஏனைய அரசு சார்பு அமைச்சர்களுடன் சோந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்துள்ளனர்.

யாழ்.செயலகத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எம் பௌசி ஏற்பாடு செய்த அபிவிருத்திக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு அனர்த்த செயற்பாட்டு மையத்தை அமைச்சர் பௌசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் திறந்து வைத்த போது அதில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இணைந்து கொண்டார்.

Suresh_P_and_Douglas_D_MPs_12Sep10இது வரை காலமும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் நடைபெற்றக் கூட்டங்களில் அரசு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  ஆனால் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்த்திக் கூட்டங்களில் கூட்டமைப்பு நாமாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் பின்னர் அரசாங்கத்தின் அபிவிருத்தி, மீள்குடியமர்வுப் பணிகளுக்கு தமது ஆதரவு உண்டு என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டடில் அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டங்கள் 167 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் என் அமைச்சர் ஏ.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Magazine_Prisonநீண்டகாலமாக தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அவர்களின் பெற்றோர் உறவினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது பல்வேறு சந்தாப்பங்களில் நாட்டின் பல பாகங்களிலும் வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர். யுவதிகளின் விடுதலை குறித்து பல தடவைகள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் குடும்பத் தலைவர்களாகவிருப்பதால் சம்பத்தப்பட்ட குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில வாடுகின்றமையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பிணையிலாவது இவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கைதிகளின் பெற்றோர். உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறந்து ஒரு நாளான குழந்தையொன்று வீதியோரத்தில் மீட்பு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்!

பிறந்து ஒருநாளான ஆண் குழந்தையொன்று பையினால் சுற்றப்பட்ட நிலையில் வீதியோர பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் செம்பியன் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை குறிப்பிட்ட வீதி வழியாக சென்று கொண்டிருந்த கொக்குவில் வாசி ஒருவர் சாக்குப் பைக்குள்ளிருந்து குழந்தையொன்றின் அழுகுரலை அவதானித்துள்ளார். அதனை அவர் அயலவர்களிடம் கூறவே அயலவர்கள் வந்து அக்குழந்தையை மீட்டெடுத்தனர் உடல் நீலம் பாரித்த நிலையில், தெர்ப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் அக்குழந்தை காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பெற்ற தாய் பிறந்த குழந்தையை அனாதரவாக கைவிட்டு விட்டு தலைமறைவான சம்பவம் கிளிநொச்சி மருத்துவமனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்! கடந்த 30 ஆண்டுகால யுத்தம் சமூகத்தின் விழுமியங்களையும் தனிமனித உள்ளுணர்வுகளையும் சிதைத்துள்ளதன் வெளிப்பாடாக இவ்வாறான சம்பவங்களைக் காண முடிகிறது.

குறிப்பிட்டக் குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் அக்குழந்தையின் தாயாரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.