செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யூடியூப்பர் SK கிருஷ்ணாவுக்கு சிறை !

யூடியூப்பர் SK கிருஷ்ணாவுக்கு சிறை !

 

யூடியூப்பர் SK கிருஷ்ணா அவருடன் உதவி செய்வது போன்றதான வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட்ட நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசம்நெற்றில் கடந்த சில தினங்களாகவே சுட்டிக்காட்டப்பட்டு வரும் யூடியூப்பர் கிருஷ்ணாவின் உதவி செய்யும் காணொளிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தயிருந்தமை தெரிந்ததே. கிருஷ்ணா ஒரு வீட்டிற்கு சென்று உயர்தர வகுப்பு பரீட்சையில் ஏ, 2பி எடுத்த இளம் மாணவியை அநாகரீகமாக நடத்திய காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் ஞாயிற்றுக்கிழமை (March 09) அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 10இல் எஸ் கே கிருஷ்ணா மல்லாகம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !

கேள்விச் செவியன் அர்ச்சுனா, ஊரைக் குழப்பிய தருணங்கள் – கூகிள் அறிவாளியின் அதிக பிரசங்கித்தனம் !
கடந்த வாரம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா ஆர்வக்கோளாறினால் முஸ்லீம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மார்ச் 8 இல் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது 1951 ஆண்டு முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அர்ச்சுனாவும் அழையா விருந்தாளியாக தனது கருத்தை திணித்துள்ளார்.
முஸ்லீம் விவாக விகாரத்துச் சட்டத்தை நுனிப்புல் மேய்ந்த எம்பி அர்ச்சுனா முஸ்லீம்களிடையே 12 வயதிலேயே சிறுவயது திருமணம் இடம் பெறுவதாகவும் அதேநேரம் திருமணம் முடிக்கும் போது மணப் பெண்ணின் சுய சம்மதம் மட்டுமே கருத்தில் எடுக்க வேண்டும் எனவும், விவாகரத்தின் போது ஆணும் பெண்ணும் வெவ்வேறாக கையாளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அர்ச்சுனாவின் கருத்துக்களை முஸ்லீம் சமூகம் முற்றாகவே நிராகரிக்கின்றது. முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாமல் எம்பி அர்ச்சுனா தமது தனித்துவமான சட்டத்தில் கருத்து வெளியிட்டமையை கண்டிக்கின்றனர்.
அர்ச்சுனா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே பல கடந்த கால கசப்பான அனுபவங்களால் சிதைந்து போய் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவுவை மேலும் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக இனங்களுக்கான நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லீம் எம்பிக்கள் யாழ்ப்பாண தேச வழமைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது எப்படி பொருத்தமற்றதோ அப்படியே எம்பி அர்ச்சுனாவின் கருத்தும் எடுத்துக் கொள்ளப்படும். இதனையே பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி முஸ்லீம் எம்பிக்களும் அர்ச்சுனாவின் கூற்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பாராளுமன்றம் இடமளிக்கக்கூடாது என எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் வலிறுயுத்தினர். அதேநேரம் ஆளும் கட்சி என்பிபி முஸ்லீம் எம்பியும் பிரதியமைச்சருமான முனீர் முளப்பரும் அர்ச்சுனா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அர்ச்சுனாவை குறுக்கிட்டு, தெரியாத விடயங்களை கதைக்க வேண்டாம்” எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் மகளிர் விவகார அமைச்சர் போல்ராஜ் தெரிவித்த கருத்துக்களும் முஸ்லீம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் ஆராய மல்டி செக்டோரியல் கொமிட்டி ஒன்று உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை நிராகரிக்கும் சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக், ஏன் பல துறை பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். நாங்கள் முஸ்லீம்கள். தனித்துவமான இனம். எங்களுடைய முஸ்லீம் பிரதிநிகளை உள்ளடக்கியே இந்த விடயம் கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார்.
முஸ்லீம் பெண்கள் சார்பில் குரல்கொடுத்த சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக் எம்பி அர்ச்சுனா யுஎன்டிபி அறிக்கையை சுட்டிக் காட்டி தெரிவித்த கருத்தை நிராகரிக்கின்றார். நாங்கள் யுஎன்டிபி அறிக்கையை பின்பற்றுபவர்கள் அல்ல. நாங்கள் அல்-குரான்ஜயும் ஹதீஸ்யையும் பின்பற்றுபவர்கள். ஆகவே யாரும் யாருடனும் இருக்கலாம் , விரும்பினால் திருமணம் செய்யலாம், இல்லை பிரியலாம் என்பது எங்களுக்கு பொருந்தாதவைகள் என்கிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட எம்.பி மொகமட் தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்பி சலீம் நளீம் ஆகியோரும் எம்பி அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எமது மார்க்க விடயங்களில் அர்ச்சுனா எம்பி மூக்கை நுழைக்க கூடாது. அவர் சமூக வலைத்தளங்களில் தான் பெயர் ,புகழ் பெற வேண்டும் என்பதற்காக எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நிலையை நாம் காண்கின்றோம். இவர் தனது பைத்தியத்தை போக்க நல்ல வைத்தியத்தை பெற வேண்டும். அவரை சபாநாயகர் புத்தி சொல்லி வழிநடத்த வேண்டும் என்றார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட எம்பி அர்ச்சுனா
இதற்கு பதிலளிக்கையில், பொதுவான மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை மட்டுமே நான் இங்கு பெண்கள் சார்பாக கூறினேன் .இங்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன்.முஸ்லிம் மதம் என்பது நாங்கள் நினைப்பதுபோன்று சிறிய மதம் அல்ல.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் மதம். அந்த மதத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் யாரும் முயற்சிக்கவில்லை. எமது ரத்தம் அவர்கள். நான் சொன்ன விடயம் சிறுபிள்ளைகளையும் பெண்களையும் மட்டுமே கருதியது. மதத்தை நிந்திப்பதற்காக நான் கூறவில்லை என்று கூறி ஒருவாறு சமாளித்தார். முஸ்லீம் பெண்களுக்கு நீலிக் கண்ணீர் இதே எம்பி அர்ச்சுனா தான் யாழ்ப்பாண என்பிபி எம்பிகள் மூவரையும் பெண் எம்பிக்கள் என கூறியிருந்தார். அவரைப் பொறுத்தவரை பெண்மை என்பது மலினமானது எ‌‌ன்ற ஆணாதிக்க மனோபாவ கருத்தியலாக தான் அக் கூற்று இருந்தது. தன்னை மேதாவியாக காட்டிக் கொள்ளும் வைத்திய கலாநிதிக்கு எல்லா விடயத்திலும் தனக்கிருக்கும் குறையறிவை உணராதவராகவே இருந்து வருகிறார்.
முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் முஸ்லீம் மக்களின் கருத்தும் முஸ்லீம் பெண்களின் கருத்துக்குமே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம் ஒரு பிரத்தியேக தனிநபர் சட்டம். அச்சட்டத்தின் வரையறைக்குள் வருபவர்கள் அது தொடர்பில் தமது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள முடியும். உலகெங்கும் சமூக வலைத்தளங்களினூடாக பரப்பப்பட்டு வரும் “ இஸ்லாமிய போபியா” தொடர்பில் இலங்கை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !

பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு இலங்கையில் அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களுக்கு பின்னணியிலும் பொலிஸார் செயற்பட்டுவருவதாக கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் தமிழ் எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பொலிஸ்பிரிவு முழுமையாக கிளீன் சிறீலங்கா திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு கிளீன் செய்யப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இலங்கை முன்னேற்றப் பாதையில் – IMF நிர்வாக இயக்குநர் வாழ்த்து

இலங்கை முன்னேற்றப் பாதையில் – IMF நிர்வாக இயக்குநர் வாழ்த்து

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி அவர் தனது ‘X’ கணக்கில் ஒரு பதிவில் கூறினார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தனது ‘X’ கணக்கில் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரனின் காஷ்மீர் தொழிற்ச்சாலை சர்ச்சையில் சிக்கியது !

முத்தையா முரளிதரனின் காஷ்மீர் தொழிற்ச்சாலை சர்ச்சையில் சிக்கியது !

 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நடத்தி வரும் குளிர்பான நிறுவனத்திற்கு காஷ்மீர் மாநில அரசாங்கம் 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளது. காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் ரூ. 1,500 கோடியில் அலுமினியம் பொட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கைச்சாத்தான ஒப்பந்தமே தற்சமயம் சர்ச்சையாகி உள்ளது. அதாவது முரளிதரனுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விடயத்தை கேள்வியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி விவசாயத்துறை மந்திரி ஜாவித் அகமது தார் ‛‛இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை பற்றி விசாரிக்கிறோம்” என்று சமாளித்துள்ளார். முத்தையா முரளிதரன் இந்தியாவில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகின்றார். கர்நாடகாவில் அரு. 1400 கோடி முதலீடு செய்துள்ளார். இதற்காக கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களை அடிக்க தடை !

சிறுவர்களை அடிக்க தடை !

 

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு தொடர்பான விவாத த்தின் போதே இதனை தெரிவித்தார். குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், வன்முறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் பெரியவர்களானாலும் அதைத் தொடர்வார்கள் என தெரிவித்தார் அமைச்சர். அந்தவகையில் சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டம் சிறுவர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

குழந்தை மற்றும் பிள்ளை வளர்ப்பிலும் சரி மற்றும் கல்வி நிலையங்களிலும் சரி உடல் மற்றும் உள ரீதியான வன்முறையை பிரயோகிப்பதை மேற்குநாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே சட்டரீதியாக தடைசெய்து விட்டன. பெற்றோர் அதிகாரத்துடன் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கலாச்சாரம் முற்றாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கைவிடப்பட்டு விட்டன. இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு என ஆசிய நாடுகளில் பிள்ளைகளை அடித்து வளர்ப்பது பெற்றோருக்கு இருக்கிற பிரத்தியேக அதிகாரமாக மற்றும் உரிமையாக கருதும் மனப்பாங்கு இருந்து வருகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூட மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிப்பதாக உடலியில் ரீதியான தண்டனைகளை வழங்குகின்றனர்.

ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !

ஆப்பிழுத்த ரணில் – அல்ஜசீரா நேர்காணல் !

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்புபட்ட “பட்டலந்த அறிக்கை” குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல உறுதிப்படுத்தி உள்ளார்.

அப்போதைய அரசாங்கம் ஜே.வி. பியின் கிளர்ச்சியின் போது கைதான ஜே.வி.பியினரை தடுத்து வைக்கும் முகாமாக பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தை பயன்படுத்தியது. அங்கு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் படுகொலைகள் இடம்பெற்றன என குற்றம் சாட்டப்பட்டது. 1980களின் பிற்பகுதியிலும் 1990இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 1994 இல் சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் அமைத்த பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையே பட்டலந்த அறிக்கை என அழைக்கப்படுகிறது.

1997 இல் வெளியான ஆணைக்குழுவின் அறிக்கை பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு  அக்காலப்பகுதியில் சிரேஸ்ட அமைச்சராக பணியாற்றிய ரணில்விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புள்ளது என தெரிவித்திருந்தது. இவ் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமை தொடர்பிலேயே அல்ஜசீராவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சுனில் வட்டகல மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு (al jazeera) வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதுவலை ரணில் விக்ரமசிங்க அரசியல் பாதுகாப்பைப் பெற்று தவிர்த்து வந்த அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !

ஹெல்பிங் வீடியோ பணக்காரனான கிருஷ்ணா மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் !

 

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனலை நடாத்தி வருகின்ற யூரியுப்பர் கிருஷ்ணா என்பவர் நேற்றையதினம் பண்டத்தரிப்பு இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டார். கிருஷ்ணா இளைஞர்களால் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கப்பட்டார். அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை கொடுக்க முடியாது கிருஷ்ணா, ஏதேதோ சொல்லி சளாப்பினார். இறுதியில் கிருஷ்ணா இளைஞர்களின் முயற்சியில் யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.

கிருஷ்ணாவினால் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் காணொளியில் கிருஷ்ணா வீடியோ எடுக்க சம்மதிக்காத உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவி ஒருவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார். வழமையாகவே கிருஷ்ணா தனது உதவி வழங்கும் காணொளிகளில் தனிப்பட்ட குடும்பங்களின் மற்றும் தனிநபர்களின் அந்தரங்க மற்றும் பிரத்தியேக பிரச்சினைகளை எந்த வித தணிக்கையும் இன்றி வெளிப்படுத்தி வந்தார். இதனை ஏற்கனவே தேசம்நெற் தவிர பெரும்பாலும் யாரும் கண்டிக்கவில்லை.

சமீபத்தில் சர்ச்சையான வீடியோ குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்த விடயத்தில் இப்போதாவது எதிர்வினையாற்றியுள்ளார்கள் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்றக்கத்தக்கது.

இது ஒரு கிருஷ்ணா என்ற தனிப்பட்ட யுரீயூப்பர் ஒருவருக்கு எதிரான நடவடிக்கையுடன் முடிவடையக் கூடாது. கிருஷ்ணா போன்று இன்னும் பலர்பேர் இத்தகைய காணொளிகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த விடயத்தில் என்பிபி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சைபர் கிரைம் பிரிவினூடாகவோ அல்லது புதிதாக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் சட்டத்தின் கீழோ சமூக வலைத்தளங்களுக்காக ஒழுங்கு விதிகளை உருவாக்க வேண்டும். தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் அவதூறுகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் தணிக்கையை கொண்டு வர வேண்டும்.

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !

ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி அவுஸ்ரேலிய பிரதிநிதிக்கு 40 ஆண்டுகள் சிறை !

 

அவுஸ்திரேலியாவில் வேலைக்கு விளம்பரம் போட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, 40 வயதான பிஜேபி அவுஸ்திரேலிய பிரதிநிதி பாலேஸ்; தன்கருக்கே இச்சிறைத்தண்டனையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ளது. 21 முதல் 27 வயதான கொரிய நாட்டுப்பெண்களை வேலைக்கான நேர்காணல்களுக்கு அழைத்து அவர்களுக்கு மயக்கமருத்து கொடுத்து அதன்பின் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

2018இல் 5வது பெண்ணை வன்புணர்வு செய்தது தொடர்பில் பொலிஸார் பாலேஸ் தன்கரின் வியாபார மையத்தைச் சோதணையிட்ட போது அங்கு அவர் பெண்களை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்திய மயக்க மருந்து கண்டெடுக்கப்பட்டது. அத்தோடு கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட வீடியோ கமராவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 2023இல் இவர் மீது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட 29 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் தண்டணை வழங்க்பட்டுள்ளது. இதில் முதல் 30 ஆண்டுகள் இவருக்கு பரோல் மறுக்கப்பட்டும் உள்ளது. இவர் தனது 83வது வயதிலேயே விடுதலை செய்யப்படுவார்.