செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வீட்டுத்திட்டம் குறித்து ஆராய இந்தியப் பிரதிநிதிகள் குழு யாழ்.விஜயம்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது. நேற்று மாலை இக்குழுவினர் யாழப்பாணம் வந்து சேர்ந்தனர். இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டம் தொடர்பாக ஆராயவே இக்குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளடங்கிய இக்குழுவினரோடு ஐ.ஓ.எம் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். இக்குழுவினர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள விட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் திருப்தி – ராதிகா குமாரசுவாமி

radhika-coomaraswamy.jpgஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பில் அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆயுத மோதல்களற்ற சிறுவர் அபிவிருத்திக்கான சூழல் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் தமது சிறுவர் பராயத்தை இழந்துள்ள சிறுவர்களின் புனர்வாழ்வு மற்றும் கல்விச் செயற்பாடுகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாடுகளுக்கு அரசு முன்னுரிமையளித்து வருவதாக இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இச்செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஐ. நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மேற்குலக ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோதும் இலங்கையில் சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உலகில் மோதல்களில் ஈடுபட்ட நாடுகளை விட திருப்திப்படக் கூடியதாக உள்ளதாகவும் எனினும் அதனை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ. நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தரம் – 5 புலமைப்பரிசில் பெறுபேறு – இன்று நண்பகல் முதல் www.doenets.lk

subatha.jpgஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதன்படி தமிழ் மொழி மூலம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

192 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை கண்டி கலஹா இராமகிருஷ்ண தேசியப் பாடசாலை மாணவன் மொஹமட் சுக்ரி மொஹமட் சபீர் பெற்றுள்ளார். 190 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை மன்னார் புனித சேவியர் கல்லூரி மாணவன் ஜுட் நிதுஷனும், வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியகேசனும் பெற்றுள்ளனர்.

2010ம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 15,000 மாணவர்கள் தோற்றியுள்ளனர். மிகவும் குறுகிய கால எல்லைக்குள் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று காலை பெறுபேறுகள் வழங்கப்படுவதுடன் இன்று பகல் 12.00 மணிக்குப் பின்னர் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக ஏனைய பிரதேச மாணவரின் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்ஹார எதிரிசிங்க 196 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

இம்முறை முதற்தடவையாக பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் 9 தினங்களில் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளன. சுமார் 5000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகள்

5ஆம் ஆண்டு புலமைப் பிரிவில் பரீட்சை மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள் தமிழ்மொழி மூலம். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் 145 புள்ளிகள்.

நுவரெலியா 140 புள்ளிகள், அம்பாந்தோட்டை- 137, கிளிநொச்சி-139, மன்னார்- 141, வவுனியா- 143, முல்லைத்தீவு-139, மட்டக்களப்பு- 142, அம்பாறை- 143, திருமலை- 142, புத்தளம்- 141, அனுராதபரம்- 140, பொலன்னறுவை- 138, பதுளை- 141, மொனராகலை- 143.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை – நோர்வே பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

norway.jpgவடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது சமாதான சூழல் நிலவுவதாகவும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் துரிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ள நோர்வே அமைச்சர் எரிக்சோல்ஹெய்ம், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்ல நோக்கத்துடன் பார்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் தமது நிலைப்பாட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்காமல் பாராளுமன்றத்திற்கூடாக ஜனநாயக ரீதியில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின் போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அதேவேளை நோர்வே அரசாங்கம் நோரூட் நிறுவனத்தினூடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – உட்பட பொலிஸார் இடைநிறுத்தம்

புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்டத்தில் தனியாக விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி கூறினார்.

பொலன்னறுவை, புராதன ரஜமஹா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 10 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்ட பொலிஸ் திணைக்கத்தில் விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும்

lightning-000.jpgதற்போ தைய சீரற்ற காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்குத் தொடரும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரிதிக்கா ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள மீகொட பிரதேசத்தில் 177.3 மி. மீ. என்றபடி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இடி, மின்னலுடன் கூடிய மழைக் காலநிலை நிலவுவதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சீரற்ற காலநிலைக்கு தாழமுக்க நிலைமையே காரணம். இந்த நிலைமை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்க முடியும்.

.தற்போது இடி, மின்னலுடன் மழை பெய்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் இருப்பதையும், நடமாடுவதையும், குளங்களிலும், ஆறுகளிலும், நீராடுவதையும், உயரமான மரங்களுக்கு கீழே இருப்பதையும், மினிசாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்று வீச முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்

Lessons_Learnt_And_Reconciliation_Commissionகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவ்வறிக்கைகள் அவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்த நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 18.19.20 ஆம் திகதிகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சாட்சியங்களையும் விசாரணைகளையும் பதிவு செய்தது.

Lessons_Learnt_And_Reconciliation_Commissionஎதிர்வரும் மாதம் 9.10,11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இவ்வாணைக்குழுவினர் சாட்சியங்களையும் பதிவுகளையும் மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் சாட்சியங்கள் விசாரணைகள் குறித்த அறிக்கைகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்து இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அது ஊடகங்களுக்கும் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

”வன்னியில் படையினர் பயன்படுத்திய பொதுமக்களின் வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு” இராணுவப் பேச்சாளர்

வன்னியில் பொதுமக்களின் வீடுகளை தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்த படையினர் அவற்றைக் கட்டம் கட்டமாக பொது மக்களிடம் ஒப்படைத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல வீடுகளிலிருந்து படையினர் வெளியேறி அவற்றை அதன் உரிமையாளர்களிடம்  கையளித்து விட்டதாகவும். தொடர்ந்தும் படையினரின் வசமிருந்த விடுகள் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படையினர் இருந்து வரும் விட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வழங்கி வருவதாகவும் விடுகள் சம்பந்தப்பட்ட பிரிச்சினைகளை குறிப்பிட்ட பிராந்தியத்தின் சிவில் இணைப்பதிகாரியிடம் அல்லது, பொதுநிர்வாகப்பிரிவிடம் தொடர்பு கொண்டு பொது மக்கள் திர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதிப் பயிற்சிபெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இ.போ.ச.வில் வேலை வாய்ப்பு!

CTB_Logoபுனர் வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சாரதிப் பயிற்சி பெற்றவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் நியமனம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் நூறு விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களுக்கு யாழ். கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்து டிப்போவில் சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் உரிய சாரதி அனுமதிப்பத்திரங்களும் பெற்றிருப்பதால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு யாழ். டிப்போவினால் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத்  தெரிவித்துள்ளார். இலங்கைப் போக்கவரத்து சபையில் வடமாகாணத்தில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

”கிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காமல் கடமை புரிய வேண்டும்” யாழ் அரசஅதிபர்

Imelda_Sugumar_GA_Jaffnaகிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காது அவர்களுக்கான கடமைகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”கிராம அலுவலர்கள் தங்கள் கடமைகளை புறந்தள்ளாமல் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும். யாழ்.குடாநாட்டில் தற்போது அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான பங்களிப்பினை கிராம அலவலர்கள் வழங்க வேண்டும. மது போதை, இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.  கிராம அலுவலர்கள் குறித்து நாளொன்றிற்கு ஐம்பது முறைப்பாடுகள் வருகின்றன. சில சமயங்களில் பாராட்டியும் கடிதங்கள் வருகின்றன. பொதுச்சேவை அலுவலர்களாகவம் அரசாங்க உழியராகவும் கிராம அலுவலர்கள் இருப்பதால் கவனமாக பொறுப்புணர்வுடன் அவர்கள் செயற்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.