செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மீசாலையில் பொதுமக்களிடம் பணம் சேகரித்த சிங்கள இளைஞர்கள் இருவர் கைது.

மீசாலைப்பகுதி வீடுகளில் பணம் சேகரிக்கச் சென்ற இரு சிங்கள இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி இவர்கள் மீசாலைப் பகுதி வீடுகளில் பணம் சேகரித்துள்ளனர். பணம் வழங்க மறுப்புத் தெரிவித்தவர்களிடம் தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

அப்பகுதி சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்குச் சென்று இவர்கள் பணம் கேட்ட போது விட்டிலிருந்த பெண் கணவருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு சாவகச்சேரி பெலிஸாரினால் குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இவ்விளைஞர்களுக்கு பணம் வழங்கியவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்குப் முன்னர் கிளிநொச்சிப் பகுpகளிலும் இவ்வாறு சிலர் சிறுவர் இல்லம், அநாதைகள் இல்லம் எனக் கூறிக்கொண்டு பொதுமக்களிடம் நிதி சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பதை பாதுகாத்துக் கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்ளும் உபாயத்தை தேடுவோம் – அமைச்சர் தேவானந்தா

douglas-devananda.jpgதமிழ் இனத்தின் விடுதலை என்ற பெயரில் கடந்த 60 வருடங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இழுத்து விடப்பட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரத்தம் சிந்தியிருக்கின்றார்கள். எனினும் ஜனநாயக வழி ஆயுத வழியென இரண்டு வழிகளில் நடந்த போராட்டங்களால் இன்றுவரை எதனையும் சாதிக்க முடியவில்லையென அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நல்லூர் பிரேதச செயலகத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியை  ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இனத்தின் விடுதலைக்காக 30 வருடம் ஜனநாயக வழியிலான போராட்டமும் அதன் பின்னர் 30 வருடங்கள் ஆயுத வழியிலான போராட்டமும் நடந்து முடிவுற்றுள்ளது.இந்த இரண்டிலுமே தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஜனநாயக வழயிலான போராட்டத்தின் முகம் சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் ஆயுதங்களை ஏந்தினோம்.ஆனால் பின்னர் ஆயுத வழியிலான போராட்டமும் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே நின்றமையினால் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற முடியவில்லை.ஆகவே இரண்டு வழியிலான அனுபவங்களையும் நாங்கள் கொண்டிருக்கின்றோம்.அதனடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வழியை தேர்ந்தெடுக்கப் போகின்றோம்.சில விடயங்களை எதிர்க்கத்தான் வேண்டும் அதேவேளை தேவையானவற்றை பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வளாகம் வேண்டாம் பல்கலைக்கழகம் தான் வேண்டும் என வளாகம் அமைக்கப்பட்ட போது எதிர்த்தார்கள்.அதையும் மீறி வளாகம் அமைக்கப்பட்டு இன்றைக்கு அது பல்கலைக்கழகமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் இந்த முடிவைத்தான் அடையும் என நாங்கள் அன்றைக்கே கூறியிருந்தோம்.ஆனால் நாங்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டோமே தவிர வேறெதுவும் நடக்கவில்லை.

அதேபோல இன்றுள்ள பாதையும் எங்கு போய்முடியும் என்பது எனக்குத் தெரியும்.பகவத் கீதையை நினைத்துப் பாருங்கள் எல்லாம் நன்றாக நடந்தது எல்லாம் நன்றாகவே நடக்கவிருக்கிறது.இருப்பதையாவது காப்பாற்றிக் கொண்டு தேவையானவற்றை பெற்றுக் கொண்டும் உபாயத்தை தேடுவோம்.நாளைக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கம் நீங்கிய வாழ்க்கை ஜனாதிபதியால் பெற்றுத் தரப்பட்டுள்ளது.அதை பயன்படுத்துவோம் என்றார்.இந்நிகழ்வில் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்,பாராளுமன்ற உறுப்பினர் அலென்டின், மாநகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும் இதன் போது ஊருணி என்ற நூலும் வெளியிடப்பட்டது.

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு அம்பியுலன்ஸ், கிளினிக் வாகனங்கள் கையளிப்பு

வட பகுதி வைத்தியசாலைகளுக்கென மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளும், இரண்டு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் இன்று கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இந்த வாகனங்களை இன்று கையளிக்கவுள்ளார். அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வண்டிகளுக்கென வட மாகாண சபை 150 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு அம்பியுலன்ஸ் வண்டி களும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்க ளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலும் விசேட உரை

india-obama.jpgஆசியா வுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். புதுடில்லியில் ஒபாமாவுக்கு இராஜ மரியாதை வழங்கப்பட்டது. செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இந்தியா இன்றைய உலகில் சிறிய நாடாக தோன்றவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அமைதியை நிலை நாட்டுதல் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் என்பவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவு வைப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது என்றும் பராக் ஒபாமா உரையாற்றினார். இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுத் தருவதில் அமெரிக்காவின் அபிலாஷை என்னவென்பதையறிவதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாயிருந்தனர். பிரதமரின் இல்லத்தில் இராப்போசன விருந்திலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா பாதுகாப்புச் சபையில் அந்நாடு அங்கம் பெறும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஒபாமா வருவதையொட்டி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் முக்கியமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. அணு உலைகளை அமைப்பது, அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சம்மதிக்க வைப்பது, அயல்நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பது, போன்ற விடயங்கள் இங்கு விசேட கவனமெடுக்கப்பட்டன.

பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்ததை பாகிஸ்தான் பெரிதாக விரும்பவில்லை. ஒபாமா பாகிஸ்தான் வரவேண்டுமென்பது இஸ்லாமாபாத்தின் எதிர்பார்ப்பாகும் அத்துடன் சீனாவும் ஒபாமாவின் இந்திய விஜயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.காங்கேசன் துறை வீதியை அகலமாக்கும் பணி விரைவில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அகலமாக்கி காப்பற் வீதிகளாக மாற்றியமைக்கும் திட்டம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகுமென வீதி அகலமாக்கும் பணியை பொறுப்பேற்றிருக்கும் சீன ரயில்வே கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியை அகலமாக்கும் பணியில் எழுபது சதவீதமான பணியை நிறைவேற்றியுள்ளது. கால நிலை சீராக இருக்குமானால் இப்பணி அடுத்தமாத முற்பகுதியில் முடிவுபெறும் என அந்நிறுவன செயல்பாட்டு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மிரட்டிய “ஜல்’ அமைதியாகக் கரை கடந்தது

jal.jpgசென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த தமிழகத்தை மிரட்டிய “ஜல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்குப் பிறகு அமைதியாகக் கரையைக்கடந்தது.

சென்னை அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி  “ஜல்’ புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது.வங்கக் கடலில் சென்னையிலிருந்து 1,300 கி.மீ. தொலைவில் உருவெடுத்த இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு அருகே 320 கி.மீ. தொலைவுக்கு வந்தது. ஆனால் சென்னை அருகே வந்தபோது புயல் வலுவிழந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்குப்பிறகு சென்னையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை  நெல்லூர் இடையே  “ஜல்’ புயல் கரையைக் கடந்தது. புயல் மேலும் வலுவிழந்திருந்ததால் 45 முதல் 55 கி.மீ. வேகத்திலான காற்றுடன் லேசான மழை சென்னையில் பெய்தது. படிப்படியாக மழை குறைந்துவிடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மரணச் சான்றிதழ்களை வழங்கும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில்

Certificate_of_Deathயுத்தத்தி னாலும் ஏனைய பயங்கரவாத சம்பவங்களாலும் உயிரழிந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான மரணப் பதிவுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரணத்தைப் பதிவு செய்யும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின்படி யுத்தத்தினால் அல்லது, பயங்கரவாத நடவடிக்கைகளினால் உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒருவர் காணாமல் போய் ஒரு வருடம் கடந்த பின்னர் அவருக்கான மரணச் சான்றிதழுக்கு உறவினர் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன், கொல்லபட்ட, காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் உறவினர்களும் மரணச் சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன இச்சட்ட மூலத்தை நாளை செவ்வாய் கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இச்சட்டமூலம் நிறைவற்றப்பட்ட பின்னர் யுத்தம் மற்றும் காணமாமல் போன அரசாங்க ஊழியர்களின் பெற்றோர் உறவினர்கள் இழப்பீடுகள் மற்றும், அரசின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான கூட்டம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.

Students_Under_Treeமகிந்த சிந்தனையின் அடிப்படையில் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டமொன்று நாளை செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இக்கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும் நடைபெறும் எனவும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை வவுனியா இறம்பைக்குளம், திருக்குடும்பக் கன்னியர்மட மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

Killinoche_Schoolநாளை மறுதினம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை அகலிப்பினால் சாவகச்சேரியில் பல கட்டடங்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Chavakacheriஏ-9 பிரதான வீதி அகலிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரியிலுள்ள பல கட்டங்களுக்கு ஆபத்து எற்பட்டுள்ளது. பாதை அகலிப்புக்காக சுமார் 50 வரையிலான கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வீதி அகலிப்புக்கென எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளதன்படி வீதியின் மேற்கிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ பகுதியாகவோ உடைக்கப்பட வேண்டிய நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மூன்று வங்ககிக் கட்டங்களும் அமைந்துள்ளன. அத்துடன் பல குடிமனைகளும் அரச கட்டங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாழைச்சேனையில் மோட்டார் குண்டுகள் மீட்பு.

கிழக்கில் வாழைச்சேனை வட்டவான் பிரதேசத்தில் மோட்டார் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் மீடக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி அப்பகுதி வெற்றுக் காணியொன்றில் புதைக்கபபட்டிருந்த இக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குண்டுகள் முன்னர் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வேறு இடங்களில் இவ்வாறான குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளனவா எனவும் ஆராயப்பட்டு வருகின்றன.