செய்திகள்

செய்திகள்

செய்திகள்

குசல் ஜனித் பெரேராவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி !

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது. ஏற்கனவே தொடரரை இழந்திருந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக  இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தமது 6 சதத்தை பூர்த்தி செய்து 120 ஓட்டங்களையும் டீ சில்வா 55 ஓட்ங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஸ் அணியின் தஸ்கின் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன்படி 97 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.அந்த அணி சார்பில் அதிகமாக மஹ்மதுல்லா 53 ஓட்டங்களையும் ,  ஹூசைன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்தசமீர 05 இலக்குகளை கைப்பற்றி போட்டியின் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் துஷ்மந்தசமீர தெரிவானார். தொடர்நாயகனாக ரஹீம் தெரிவானார்.

ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையினரை விடுதலைப் புலிகள் கொன்றனர். அதனால் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டாம்.” இந்திய குடியரசுத்தலைவருக்கு கடிதம் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்திய  குடியரசுத்தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அவர்களை விடுதலை செய்யக்கூடாது என இந்திய குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையினரை விடுதலைப் புலிகள் கொன்றனர். அந்த அமைப்புதான் ராஜீவ் காந்தியை கொலை செய்தது. அந்த படுகொலையில் தொடர்புள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது. அவர்கள் சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 1,25,000 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் !

மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை இராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்படி ஈடுபட்டவர்களில் 1,25,000 பேரை பணி இடைநீக்கம்  செய்து இராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

மியான்மரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி – வீணானது வனிந்து ஹசரங்கவின் முயற்சி !

இலங்கை அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன்  74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார்.

பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 இலக்குகளையும், மொஹமட் ரஹ்மான் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

பசுவின் சிறுநீரும், பசு சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தாது என கூறியவர்கள் கைது – இந்தியாவின் மணிப்பூரில் சம்பவம் !

இந்தியாவின் மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில பா.ஜ.க. தலைவர் எஸ்.திகேந்திர சிங் ரோனா கொரோனாவுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு குறித்து பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங் கேமும், சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய் கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முக நூலில் பதிவு செய்து இருந்தனர். அவர்கள் தங்களது முகநூல் கணக்கில் திகேந்திர சிங் மறைவு குறித்து, பசுவின் சிறுநீரும், பசு சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தாது என பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றது. இதனை யடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு செய்து 153ன் கீழ் வழக்கு பதிவு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு இம்பால் நீதிமன்றம் பெயில் வழங்கியது. இதனையடுத்து சிறையில் அவர்கள் இருவரும் வெளியே வருவதற்கு தேவையான நடை முறைகளை நிறைவு செய்வதற்கு முன்னதாக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்பால் மேற்கு மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் கே. மேகா சந்சிர சிங், கிஷோரேச்சந்திர வாங்கேம், எரேண்ட்ரோ லெய்கொம்பம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு – தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஏ.ஜி.பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்” – என்றுள்ளது.

“தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் எதிர்த்து போரிட முடியும்.” – கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்த மக்களை கண்டித்து அஷ்வின் ட்வீட் !

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்குப் பின், அணியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவதற்கான விலகினார்.
300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து: சென்னையில் மக்கள் சாலை மறியல்| Dinamalar
நேற்று ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்கான சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஒன்றாக கூடி ஒருவருக்கொரும் இடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளார்.
முன்னாள் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சார்கள் மற்றும் பிசிசிஐ நடுவரான ராஜேந்திரசின் ஜடேஜா கொரோனா தொற்றால் உயிரழந்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அஷ்வின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை இல்லாதது குறித்து டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் முண்டியடித்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அஷ்வின் ‘‘பயமாக இருக்கிறது. பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என அனைவரும் சொல்கிறார்கள். தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் இந்த தொற்றை எதிர்த்து போரிட முடியும். இந்த வைரஸை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது அவசியம்.
உங்களுடைய பயத்தை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நான் அருகில் இருந்து கவனித்துள்ளேன். உங்களுக்கும், எனக்கும் சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்துள்ளது. அனைத்து முன்நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், ஏராளமானோர் இந்த கொடிய நோயின் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை.” – அமெரிக்காவில் அறிவிப்பு !

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது:

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம். இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல்  இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்ற நிலையில் இலங்கையின் யோர்க்கர் நாயகன் லசித் மாலிங்கவை மீண்டும் அணிக்குள் இணைத்துக்கொள்ள இலங்கை அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றார். எனினும், ரி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தேர்வில் லசித் மாலிங்க இருப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோர்னிங் ஸ்போட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மாலிங்கவை இவ்வருடம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைக்க எதிர்பார்த்துள்ளோம். அவர் எமது அணித் தேர்வில் உள்ளார். இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் !

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியிருந்தது. இந்த அளவுக்கு வைரஸ் வேகமாக பரவுவதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் தான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான். கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியதுடன், அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது.