ரஷ்யாவின் பேர்ம் நகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், மாணவரொருவர் மேற்கொண்ட பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதின்போது அவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரியிடமிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச்செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்றும் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி 18 வயதுடையவர் என்றும் அவர் முன்னதாக துப்பாக்கி, தலைக்கவசம் மற்றும் தோட்டாக்களுடன் சமூகவலைத்தளத்தில் படங்களை பதிவிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும். இதற்கு முன்னர் ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த மே மாதத்தில் 19 வயதான இளைஞரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து, ரஷ்யாவின் துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டையில் மீதேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துப் பொருளாதார நிகழ்ச்சி ஒன்றில் பைடன் பேசும்போது,
“காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டயில் மீதேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உலகளாவிய மீதேன் உமிழ்வை 2030க்குள் குறைந்தது 30% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம்.
இம்மாதிரியான நடவடிக்கைகள் உலக வெப்பமயமாக்கலை உடனடியாகக் குறைத்துவிடாது. ஆனால், பொது சுகாதாரம் மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும். அடுத்த மாதம் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன் இது தொடர்பான முயற்சிகளை உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
”பூமியில் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அதிகரிக்கும் பட்சத்தில் பூமியின் நில அமைப்பும், கடலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். இதனால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்” என்று ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.
தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதை தடை செய்திருந்தனர். தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதே போல பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சகத்தை பெண்கள் விவகார அமைச்சரவை கலைத்துள்ளனர். அந்த அமைச்சகத்துக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என்று பெயரை மாற்றி உள்ளனர்.
இந்த அமைச்சகம் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை பெண்கள் விவகார அமைச்சரவை ஆட்சியில் இருந்தபோது செயல்பாட்டில் இருந்தது. இந்த அமைச்சகம் சார்பில் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகம் 7: புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 07 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 7
தேசம்: புளொட்டின் உருவாக்கம் பற்றி பேசியிருந்தோம். யார் உங்களை புளொட்டுக்குள்ள கூடுதலாக influence பண்ணின என்று நினைக்கிறீங்க…
அசோக்: கூடுதலாக அதில கேசவன், ரகுமான் ஜானுடைய கருத்துக்கள். இவங்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள், மார்க்சிய ஐடியோலொஜி இருந்தது. ஈஸ்வரன் அடுத்தது வாசுதேவா. வாசுதேவாவின் பிற்காலம் என்பது விமர்சனத்துக்கு உரியது. அந்த காலத்துல வாசுதேவா முற்போக்கான ஆளாகத் தான் இருந்தவர். காந்தியத்தில் மிக செயற்திறனுடைய ஆளாகத்தான் இருந்தவர். மட்டக்களப்பு தோழர்கள் பலர் புளொட்டுக்குள்ளும், காந்தியத்துக்குள்ளும் உள்வாங்கப்படுவதற்கு வாசுதேவா தான் முக்கிய காரணம். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் வருவதற்கு வாசுதேவோவும் ஒரு காரணம்.
தேசம்: மாவட்ட அமைப்பாளரின் செயற்பாடுகள் என்ன? என்னென்ன பணிகள் உங்களுக்கு தரப்பட்டது?
அசோக்: கூட்டங்கள் பிரச்சாரங்கள்தான். மக்களை அரசியல்மயப்படுத்தல். அரசியல் வகுப்புகள் நடத்துதல். வெகுன போராட்டங்கள் செய்வது, பத்திரிகைகள், துண்டுப்பிரசுர வினியோகம் இப்படிஇருக்கும். கூடுதலாக புதிய பாதை பேப்பர் விற்பது.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராணுவ பயிற்சி அதுகள் இருக்குதா?
அசோக்: அதுகள் ஒன்றுமில்லை. உண்மையிலேயே புளொட்டில் முக்கியமாக இருந்தது அரசியல் வகுப்புக்கள்தான். தோழர்களை புளொட்டில் இணைப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்தது. அந்த நேரத்தில் என்னோடு மிகத் தீவிரமாக வேலை செய்த ஆட்கள், வரதன் என்று ஒரு தோழர், அடுத்தது சக்தி வடிவேல் என்று ஒரு தோழர், அகஸ்டின் என்ற ஒரு தோழர் அவர் பிறகு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக வந்தவர். பேரின்பம் நிறைய தோழர்கள். செல்வரெத்தினம், பணிக்ஸ், பாக்கி மாமா, கராட்டி அரசன், மங்களம் குணரா ஜா, குருக்கள்மடம், பழுகாமம் கிரமாங்களிலிருந்து நிறைய தோழர்கள். வாழைச்சேனையில் யோகராஜா, பெயர்கள் நிறைய மறந்து விட்டது. அவங்க பெயர்களைலெல்லாம் பதிவு செய்யனும். மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். அவர்கள் எல்லாம் மிகத் தீவிரமாக வேலை செய்தவர்கள். வரதன் என்ற தோழர் தன்னை அர்ப்பணித்து வேலை செய்தவர். கடைசி வரைக்கும் நாட்டை விட்டு வெளியேவில்லை.இப்பவும் ஊரில மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.
தேசம்: ஜே.வி.பி காந்தியம் புளொட் என்று உள்வாங்கப்படுகிறீர்கள். இதுக்கெல்லாம் உங்களை தள்ளுகின்ற முரண்பாடு எதுவாக இருந்தது? இலங்கை அரசாங்கத்தின் எந்த வகையான செயற்பாடுகள் உங்களை எப்படித் தள்ளுது?
அசோக்: எனக்கு ஒரு அனுபவம் இருக்கு என்ன என்று கேட்டால், சின்ன வயதிலிருந்தே பல பிரதேசங்களுக்கு போய் வந்திருக்கிறேன். மலையகத்தில் நான் இருந்தனான். மலையகத்தில் எனக்கு பேனா நண்பர்கள் நிறைய பேர் இருந்தவர்கள். கற்றன், தலவாக்கெல, லிந்துல, டயகம, பொகவந்தலாவ, கொட்டகலை போன்ற இடங்களில் நண்பர்கள் இருந்தாங்க. நெடுஞ்செழியன் என்ற நண்பன் சில வருடங்களுக்கு முன் இறங்துட்டாங்க. பிற் காலத்தில வீரகேசரியில வேலை செய்தவர். அரசியல் சமூக அக்கறை கொண்ட நண்பன். அவரோடு மலையகத்தில் பல இடங்கள் சுற்றியுள்ளன்.
இவர் மூலம்தான் சந்திரசேகரம், விஜயகுமார் மற்ற தீர்த்தக்கரை இலக்கிய அரசியல் நண்பர்கள் பலரின்ற அறிமுகம் கிடைச்சது.
அப்ப நான் அடிக்கடி போவேன். நாங்கள் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் இருந்தாலும் கூட, எங்களுடைய சிந்தனை முறை வித்தியாசம் தானே. எங்களுடைய கல்வி, வாசிப்பு, அரசியல்…
அப்ப பார்க்கேக்கை, தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் அதேநேரத்தில், தொழிலாளர் ஒடுக்குமுறை என்பது எல்லா பக்கமும் ஒன்றாகத்தான் இருந்தது.
அதனாலதான் நாங்க ஜே.வி.பியிடம் போக வேண்டி வந்தது. பிறகு இனவாத ஒடுக்கு முறை வரும்போது எங்களுக்கு ஒரு சிந்தனை வருது. இதற்கு அங்கால ஒடுக்குமுறையில் ஒரு பரிணாமம் இருக்குத்தான் என்று. இன ஒடுக்குமுறை என்பது திடீரென வந்த ஒன்று இல்லைதானே. அதற்கு ஒரு பரிணாம வளர்ச்சி இருக்குதானே. தமிழ் தேசியத்தின் வளர்ச்சி என்பது திடீரென ஏற்பட்ட ஒன்று இல்லைதானே. அடிப்படைக் காரணங்கள் இருக்கு. அதற்கும் பரிணாம வளர்ச்சி ஒன்று இருக்கு. இனவாத ஒடுக்கு முறையால் தான் அது உற்பத்தி ஆகுது. வளருது. அப்ப நாங்க பார்க்கும்போது அது நியாயமாக எங்களுக்குப்படுது. தமிழரசு கட்சி மீதான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது யதார்த்தம் தானே
தேசம்: அதை எப்படி feel பண்ணுகிறீர்கள்… எல்லைப்புறக் கிராமங்களை கைப்பற்றுவதால் இனக்கலவரங்கள் ஒரு விடயமாக இருந்திருக்கும், போலீஸ் ராணுவ கெடுபிடிகள் இருந்திருக்கும், அதில ஒன்றா தரப்படுத்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது. இளைஞர்கள் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதற்கு தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது எவ்வாறான தாக்கத்தை கிழக்கு மாகாணத்தில் அல்லது உங்களில் ஏற்படுத்தியது?
அசோக்: தரப்படுத்தலுக்கு அரசியல்ரீதியாக வேற காரணங்கள் இருந்தது. தரப்படுத்தல் கிழக்கு மாகாண , மற்ற கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருந்தது என்பது உண்மைதான். ஆனா, அது முழுத்தமிழ்ச் சமுகத்தின் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்கியது என்பதை காணத்தவறி விடுறம். பல்கலைக்கழகத்திற்கு எடுபடுவது மாத்திரம் முக்கியம் அல்ல. கல்வியின் திறன், ஆற்றல், கொள்ளளவு, ஆளுமை, வளர்ச்சி இவை எல்லாம் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்ப் பல்லைக்கழகங்கள் செய்யத்தவறி விட்டன. அதற்கான போதிய வளங்கள் இல்லை. இதற்கு இலங்கை அரசு முக்கிய காரணம். இது பற்றி நாம நேர்மையாக ஆராய்ய வேண்டும். சிங்கள பிரதேசங்களில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பல்லைக்கழகம் சென்று வெளியேறும் மாணவர்களின் அறிவார்ந்த வளர்ச்சி திறன், ஆற்றல் தமிழ் மாணவர்களிடம் இல்லாமல் போனதை நாம் எப்போதாவது கவனிச்சோமா?
சிங்கள கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, திறமையோடு ஒப்பிடும்போது, எமது கிராமப்புற மாணவர்கள் மிக பின்தங்கியவர்களாக இருக்கிறாங்க. பேரினவாத அரசுகள் பின்தங்கிய தமிழ் கிராமப்புற பாடசாலைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களில் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள செய்து வருகிறதை நாம் கவனிக்க தவறிவிடுறம். ஒவ்வாரு வருடமும் இந்திய உயர் கல்வி பல்கலைக் கழகங்ளுக்கு பிஎச்டிக்கு நிறைய மாணவர்கள் போகிறாங்க. டெல்லி ஜேஎன்யு க்கு போன பலரை எனக்கு தெரியும். எங்கட ஆட்கள் என்றால் யாரும் பெரிதாய் இல்லை. என்ன காரணம் இதையெல்லாம் ஆராய்யவேணும்.
இனக்கலவரங்களின் தோற்றத்தின் பிண்னணியை ஆராய்ந்தால், அந்தந்த காலங்களில் ஆட்சி செய்த அரசின் இனவாதமும், திட்டமிட்ட செயலும் தெரியவரும். எந்தவொரு மக்கள் கூட்டமும் இனவாதிகளாக பிறப்பதில்லைத்தானே. அதிகார வர்க்கம் இனவாத சிந்தனைகளை விதைக்கிறது. தமிழ் அதிகார வர்க்கமும், சிங்கள அதிகார வர்க்கமும் விரும்பி இருந்தா, எங்கட தேசிய இன சிக்கல்களை எப்போ தீர்த்து இருக்க முடியும்தானே. இவங்களின்ர இருப்புக்கு முரண்பாடுகள் அவசியம் என்பது அவங்களுக்கு தெரியும்.
எனக்கு அரசுகளின் இனவாத செயற்பாடுகளில் முக்கிய காரணமாகபட்டது.
திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள்தான். பௌத்த மயமாக்கல். தமிழ்மக்களின்ர நிலத்தை பறிப்பது மாத்திரமல் தமிழ் மக்களின்ர உரிமைகளையும் சுதந்திரங்களையும் அந்த நிலத்திலிருந்து பறிப்பதுதான் இதன்ற நோக்கம். கந்தளாய்க் குடியேற்றத் திட்டம் கல்லோயாக் குடியேற்றத் திட்டம்
இவையெல்லாம் இந்த நோக்கத்தோடுதான் செய்யப்பட்டன.
இதைப்பற்றி புள்ளி விபரங்களோடு நிறையக் கதைக்கலாம். வி.நித்தியானந்தம் அவங்க இதைப்பற்றி நிறைய எழுதி இருக்காங்க. யாழ்ப்பாண யூனிவசிற்றில இருந்தவர். இப்ப நி யூசிலாந்து யுனிவசிற்றில இருக்கிறார். நாங்கள் எடுத்த உடனேயே தரப்படுத்தலை தானே பார்க்கிறோம்…
தேசம்: தரப்படுத்தல் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…
அசோக்: தரப்படுத்தல் என்பது உப காரணிதான். ஒரு தமிழ் தேசிய போக்கினுடைய வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் போராட்டத்தின் தொடக்கத்திற்கும் உந்து சக்தியாக இருந்தது தரப்படுத்தல்தான். அது ஒரு உப காரணி. அதற்கு முதல் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமஉரிமை இல்லாதது, சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கல். தனிச்சிங்களச் சட்டம், புறக்கணிப்புக்கள் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது.
தேசம்: இதெல்லாம் நீங்கள் உணரக்கூடியதாக இருந்தது…
அசோக்: உணரக்கூடியதாக இருந்தது. அடுத்தது இந்த ஒடுக்குமுறை என்பது படுபயங்கரமாக இருந்தது. இரண்டு ஒடுக்குமுறைகள் இருந்தது. ஒன்று இன ரீதியான ஒடுக்குமுறை. அடுத்தது வர்க்க ரீதியான ஒடுக்குமுறை. தேசிய இனமாக ஒடுக்கப்படுகின்ற அதேநேரம் வர்க்க ரீதியாகவும் ஒடுக்குமுறை இருந்தது. அப்போதான் புளொட்டினுடைய தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டம் என்பது சகல மக்களுக்குமான விடுதலை. தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தல். ஒரு தமிழீழப் போராட்டம் என்பது தந்திரோபாயம். அதை வைத்துக்கொண்டு மூலோபாயத்தை நோக்கி போதல் என்பதுதான் புளொட்டினுடைய கோட்பாடாக இருந்தது.
அரசியல் கோட்பாடு எமக்கு உடன்பாடாக இருந்தது. இதப்பற்றி முன்ன கதைச்சி இருக்கம்.
அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பதை இப்ப நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் சாத்தியமாக தான் தெரிந்தது. ஏனென்றால் ஜே.வி.பி எங்களுக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருந்தது தானே. அது தோல்வியடைந்தாலும் கூட, ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஜே.வி.பி எங்களுக்குத் தந்தது.
தேசம்: இந்தக் காலகட்டத்தில்தான் நான் நினைக்கிறேன் 81 காலகட்டத்தில்தான் மாவட்ட சபை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தமிழீழக் கோரிக்கையை 77 ஆம் ஆண்டு முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்குப் பிறகு அந்த கோரிக்கையில் இருந்து பின் வாங்குற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கு வாறினம். மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தான் யாழ்ப்பாணத்தில மாவட்ட சபைத் தேர்தலை ஒட்டி கலவரம் ஒன்று நடக்கிறது. அதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள்? கிழக்கு மாகாணத்தில் அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததா?
அசோக்: மாவட்ட சபை என்பது எந்தவிதமான பூரணமான தீர்வையும் தமிழ் மக்களுக்கு தரப்போவது இல்லை என்பதில் மிகக் கவனமாக இருந்தனாங்கள். மட்டக்களப்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஆட்கள் மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டவர்கள் தானே. அபிவிருத்தி என்பது வேறு, அரசியல் விடுதலை உரிமை என்பது வேறு. மாவட்ட சபை என்பது எங்களுக்கு அபிவிருத்தி ரீதியான பிரயோசனங்களைத் தரலாமே, ஒழிய அரசியலுக்கான தீர்வாக மாவட்டசபை இருக்க இயலாது. அதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். மாவட்ட சபை என்பது தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையை தணிப்பதற்கான ஒரு உபாயமாக தான் அரசு கையாண்டது. ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலை அதன் சம உரிமை சுதந்திரம் இவைகளுக்கூடாகத்தான் புரண அபிவிருத்தி கிடைக்குமே தவிர இந்த அபிவருத்தியெல்லாம் ஒருவகை ஏமாற்று வேலதான்.
தேசம்: இந்த மாவட்ட சபையை கூட தர விரும்பாத ஒரு நிலையில்தான் அரசாங்கம் இருந்தது.
அசோக்: இலங்கை அரசியல் பாரளுமன்ற ஆட்சி அதிகாரம் இனவாதத்தினலாதான் கட்டமைக்கப்பட்டதுதானே. இதற்கு இனமுரண்பாட்டை கூர்மையாக்கல் அல்லது தக்க வைத்துக்கொள்ளல் அவசியம். அப்பதான் ஆட்சியை பிடிக்க முடியும். அதே நேரம் சர்வதேசத்திற்கு, இந்தியாவுக்கு இனமுரண்பாட்டை தணிப்பது போல பாவனையும் காட்டவேண்டும். மாவட்ட சபைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இருந்த தாக்கம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் ஆயுதப் போராட்டத்துக்குரிய தாக்கங்கள், சின்ன சின்ன வடிவங்கள், அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தது. அங்க உருவாகவில்லை.
தேசம்: அந்தக் குழப்பம் யாழ்ப்பாண நூலக எரிப்பு இதுகள் அவ்வளவு தூரம்….
அசோக்: யாழ்ப்பாண நூலக எரிப்பு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அது ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் நாங்கள் வாசகர் வட்டம், படிப்பு என்று இருந்தபடியால், நூலக எரிப்பு என்பது பெரிய தாக்கத்தை கொடுத்தது.
தேசம்: அதற்கு எதிரான ஊர்வலங்கள் ஏதாவது நடந்து இருக்கா.
அசோக்: அது பெருசா நடக்கல. கிழக்கில் பெருசா நடந்த மாதிரி தெரியல. நாங்க துண்டுப்பிரசுரம் அடிக்க நினைச்சம். முடியல்ல.
தேசம்: புளொட்டில் நீங்கள் இணைந்த பிறகு தான் துண்டுப் பிரசுரங்கள் அதுகளை விநியோகிக்கிறது அப்படியாக செயற்பட்டீர்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கினீர்கள் அந்த காலத்தில்?
அசோக்: பிரசுரம் தொடர்பாக பிறகு நான் கைது செய்யப்பட்டன். ஆரம்பத்தில் முதலாவது கைது, கல்முனையில் ஒரு சிங்கள முதலாளியினுடைய லாரி ஒன்று எரிக்கப்பட்டது. தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் புளொட் தோழர்கள் கைது செய்யப்பட்டவர்கள்.
அந்த நேரத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தபடியால் கைது செய்யப்பட்டன். ஆனால் உண்மையில் அவங்களுக்கு அதோட சம்பந்தமில்லை. அரஸ்ட் பண்ணி கொஞ்ச காலம் வைத்திருந்த பிறகு பிணையில் விட்டவங்க. அந்த வழக்கில் அஸ்ரப் தான் பேசினவர். அதற்குப்பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்பட்டேன். சைன் வைக்க வேண்டும் எனக் கூறி விடுவிக்கப்பட்டன். நான் போலீசுக்கு போகாமல் விட்டுட்டேன். போகாமல் விட்டவுடனே நான் தேடப்பட்ட ஆள் ஆகிட்டேன். பிறகு என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அரஸ்ட் பண்ணி என்னை கொண்டு போயிற்றாங்க. டி.ஐ.ஜி மகேந்திரன் தான் விசாரித்தவர். அது ஒரு சுவாரசியமான சம்பவம்
தேசம்: என்ன நடந்தது அதுல? மஹேந்திரன் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் டி.ஐ.ஜி யாக இருந்தவர் என்று நினைக்கிறேன் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவ காலத்தில் இருந்தவர் என நினைக்கிறேன்.
அசோக்: என்னுடைய பெயர் யோகன் கண்ணமுத்து தானே அப்ப கண்ணமுத்து என்றவுடன் அவர் நினைத்தார் ஆள் ஒரு பெரிய ஒரு சைசா உடம்பா இருப்பார் என்று. அவருக்கு தெரியாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று. அப்ப நூர்டீன்தான் என்னை அரஸ்ட் பண்ணினது. என்னை டி.ஐ.ஜி மஹேந்திரன் விசாரிப்பதற்காக அவரின் ஒபிசிக்கு கொண்டு போனாங்க… என்னை உள்ளுக்கு அனுப்பினதும். அவர் என்னை எதிர்பார்க்கவில்லை, இந்த தோற்றத்துடன் எதிர்பார்க்கவில்லை.
தேசம்: மாணவனை எதிர்பார்க்கவில்லை.. !
அசோக்: என்னை கொண்டு போன சிஐடி இன்ஸ்பெக்டர் , தம்பிராஜா எம்பியின் மகன். பெயர்
ஜெயக்குமார். எனக்கு நிறைய உதவி செய்தவங்க. அவர் வந்தவர். கூட்டிக் கொண்டு போன மூணு பேரையும் வெளியில போக சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார். நான் கை கட்டிக்கொண்டு நின்றேன். என்னை சொன்னார் உட்கார சொல்லி. நான் உட்காரவில்லை. நான் பெரிய அப்பாவி மாதிரி சோகத்துடன் இருந்தன். ஆள் சொல்லிச்சு உட்கார சொல்லி.
கேட்டார் புளொட்டுக்கும் உனக்கும் என்ன உறவு என்று. நான் சொன்னேன் ஒரு தொடர்பும் இல்லை என்று. அப்ப வாசுதேவாவ எப்படி தெரியும்? நான் சொன்னேன், காந்தியத்தில் நான் வேலை செய்கிறேன் என்று. நான் படித்துக்கொண்டு, காந்தியம் சமூக சேவைகள் என்று ஈடுபடுகிறேன். நீ பொய் சொல்ல வேண்டாம் நீதான் மாவட்ட அமைப்பாளராக வேலை செய்கிறாய். ரிப்போர்ட் எல்லாம் வந்திருக்கு. நிறைய வன்செயல்களில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுக்குப் பின்னாடி நீ இருக்கிறாய் என்று. நான் சொன்னேன், அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரின்ஸிப்பலிடம் கேட்டுப் பாருங்கள் என்று.
அப்ப கேட்டார் தமிழீழம் கிடைக்கும் என்று நீ நம்புறியா என்று. நான் சொன்னேன் எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்று. நான் காந்தியம் தான் என்று. தமிழீழம் கிடைக்கப்போவதில்லை வீணாக வாழ்க்கையை இழக்காமல் ஏதாவது தொடர்ந்து படி. அல்லது படித்து போட்டு வெளிநாட்டுக்கு போ. இனிமேல் இதில ஈடுபடக்கூடாது என்று போட்டு, இதுதான் கடைசி இனி ஏதாவது பிரச்சனை வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போட்டு, இவரை ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிட்டார்.
அதோட என்னை விட்டாச்சு பிறகு. பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், போலீஸ் தெரியும் தானே, தொடர்ந்து கண்காணிப்பில் தான் நான் இருந்திருக்கிறேன். ஒரு நாள் என்ன நடந்தது என்றால், ஜே ஆர் ஜெயவர்த்தன வடகிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது தொடர்பாக வடகிழக்கில் மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று நடந்தது. அதுல யாழ்ப்பாணத்தில ஈபி ஆர்எல் எப் GUES செய்தது. மட்டக்களப்பில் நாங்கள் பொறுப்பெடுத்தோம்.
வடகிழக்கில் பாடசாலைகளை பகிஷ்கரிக்க சொல்லி எல்லாம் ஒழுங்கமைத்தாச்சு. அது தொடர்பா நோட்டீஸ் அடிக்கிறதுக்கு மட்டக்களப்பு ராஜன் அச்சகத்துக்கு நான் போனேன். அங்க ஓடர் கொடுத்திட்டேன் முதலே நோட்டீஸ் எல்லாம் அடிக்கிறதுக்கு. அண்டைக்கு போய் நோட்டீஸ் எடுத்து ரோட்ல வரும்போது அரஸ்ட் பண்ணுப்படுறேன் கையும் மெய்யுமா. அரஸ்ட் பண்ணு பட்டதும் தெரியும்தானே, ஒன்றுமே செய்ய இயலாது ஏனென்றால் கையும் மெய்யுமாக அரஸ்ட் பண்ணபடுறேன். நாங்க நோட்டிசை தமிழ் ஈழ விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் அச்சிட்டிருந்தோம்.
தேசம்: என்ன காரணம்…
அசோக்: அது ஒரு அபத்தமாக காரணம். தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் அண்டகிரவுண்ட் என்றும், தமிழ் ஈழ விடுதலைக் கழகம் அதனோட ஓப்பின் வொடி என்றுதான் நாங்க அந்த நேரத்தில இயங்கினம். வெகுஜன வேலைகள் எல்லாம் இதன் பெயரிலதான் செய்தோம். ஆன பொலிசிக்கு தெரியும் ஓரே ஆட்கள்தான் என்று. பெயரில் ஒரு சொல்தான் வித்தியாசம். சாதாரணமாகவே விளங்கும் இரண்டும் ஒன்றுதான் என்று.
அரஸ்ட் பண்ணின உடனே என்னை விசாரித்தது நூர்டீன். அவருக்கு இயக்கங்கள் பற்றி சகலதும் தெரிந்திருந்தது. நாங்கதான் முட்டாள்தனமாக இயக்கம் நடாத்தி இருக்கம்.
அந்த நேரத்தில புளொட்டின் தலைமையிடம் அண்டகிரவுண்ட் அமைப்பின் வடிவம், வெகுஜன அமைப்பின் வடிவம் பற்றிய எந்த அரசியல் புரிதல்களும் இருக்கல்ல. இப்ப நினைக்கும்போது சிறுபிள்ளத்தனமாக இவைகள் தெரிகின்றன. பார்த்தீங்க என்றா அண்டகிரவுன்ட அமைப்பின் பெயர் தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம். வெகுஜன அமைப்பின் பெயர் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் யோசித்துப் பாருங்க, இப்படி யாரும் பெயர் வைப்பாங்களா?
தேசம்: அந்த நேரம் புளொட்டின் தலைமை என்று யாரை சொல்கிறீர்ங்க?
அசோக்: உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றவங்க…
தேசம்: பிறகு என்ன நடந்தது…?
பிறகு, நூர்டீன் என்னை கடுமையாக விசாரிக்க முன்னரே, என்னை சிஐடி அரஸ்ட் பண்ணினபடியால், அவங்க என்னை விசாரிக்க பொறுப்பெடுத்தாங்க. ஒரு அடி கூட விழல.
சிஐடி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நல்லா கெல்ப் பண்ணினார். அடுத்த நாள் வாசுதேவாவையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க.
விசாரித்த பிறகு, கோர்ட்டுக்கு கொண்டு போனாங்க. பிறகு ரிமாண்ட் ஒரு மூன்று மாதம் உள்ளுக்கு இருந்தன்.
வாசுதேவாவை ஒரு மாதத்தில விட்டிட்டாங்க. பெட்றிக்சும், பேரின்பநாயகம் என்று சொல்லி யாழ்ப்பாணத்திலிருந்து வந்த லோயர் இரண்டு பேரும்தான் வாதாடுனவங்க. என்னை விடுவிக்கக்கோரி மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடந்தது. அதற்குப்பிறகு, பிணையில் வந்தாலும் கூட தொடர்ந்து சயின் பண்ண வேணும் நான். சைன் பண்றதால என்ன பிரச்சனை என்றால் ஏதாவது பிரச்சனை நடந்தால் என்னை தான் அரஸ்ட் பண்ணறது. அடுத்த தெரியும்தானே. போலீசில் பிடிபட்டால்… அதால நான் தலைமறைவு ஆகிட்டேன். அதற்குப் பிறகு தேடப்படும் ஆளாக ஆக்கப்பட்டேன்.
தேசம்: 82 ஆண்டுக்கு பிறகு நீங்கள் தேடப்பட்ட ஆளா ஆக்கப்பட்டுட்டீங்க. உங்களுடைய கைது தொடர்பா பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன்
அசோக்: ஓம் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது.
தேசம்: அதற்குப் பிறகு உங்களுடைய தலைமறைவுவுக்கு பின் செயற்பாடுகள் எப்படி இருந்தது.
அசோக்: தலைமறைவாக இருந்துகொண்டு நிறைய தோழர்களை வைத்துதான் செயற்பட்டனான். வரதன் சக்திவேல், பேரின்பம், தில்லைநாதன், குணம், பாக்கி மாமா, ஜீவா நிறைய தோழர்கள் இருந்தவர்கள்.
தேசம்: அப்ப இயக்க முரண்பாடுகள் கிழக்கில பெருசா வரேல.
அசோக்: அந்த நேரம் வரேல. மிக தோழமையாக தான் நாங்கள் இருந்தோம். மட்டக்களப்பு ஜெயில் விரேக் வந்து… அதைப் பற்றி கதைக்கலாமா?
தேசம்: அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில இயக்க முரண்பாடுகள் பாரிய பிரச்சனையாக வந்து கொண்டிருக்கின்றது என்று.
அசோக்: அந்த டைம்ல அதற்கு முதலில் சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை எல்லாம் நடந்திட்டு தானே.
தேசம்: அது சம்பந்தமா என்ன அறிந்து இருந்தீர்கள் அந்த நேரம். நீங்கள் சேர முதலே அது நடந்து விட்டது என்று நினைக்கிறேன்
அசோக்: இல்லை சுந்தரம் படுகொலை 82இல் தானே நடக்குது.
தேசம்: சுந்தரத்திற்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?
அசோக்: பெரிதாக நெருக்கமான உறவு ஏற் படவாய்ப்பிருக்கவில்லை. இரண்டு தடவைகள் சந்தித்திருக்கிறன். புலிகள் சுந்தரத்தை சுட்ட போது புலிகள் மீது எங்களுக்கு கடும் ஆத்திரம் வந்தது. இயல்பாகவே ஒரு ஆத்திரம் வரும் தானே.
தேசம்: அதுதான் முதலாவது சகோதர படுகொலை…
அசோக்: ஓம், ஆனால் அந்த படுகொலை மட்டக்களப்பில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு அதிருப்தி இருந்தது புலிகள் மீது. மட்டக்களப்பு புலித் தோழர்களுடன் கதைத்தால் அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. அவங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் நடக்கிற எந்த ஒரு விஷயத்துக்கும் தொடர்பில்லை அப்ப முரண்பட்டும் பிரயோசனமில்லை தானே.
தேசம்: மட்டக்களப்புக்கு யாழ்ப்பாணத்துக்கும் அடுத்த சிக்கல் என்னவென்றால் நிலத் தொடர்போ, நேரடி தொடர்போ இல்லை.
அசோக்: அப்படித்தான் அன்றைய நிலமை இருந்தது. அடுத்தது அங்கு வேலை செய்த தோழர்கள் எல்லாருமே, அப்ப ஈரோசில வேலை செய்த ரமேஷ் என்ற தோழர், ஈபிஆர்எல்எஃப் பில் வேலை செய்த தோழர்கள் பாலா, சிவலிங்கம், கணேஸ், சின்னத்துரை நிறைய தோழர்கள் பெயர்கள் நான் மறந்துட்டேன். எல்லோரும் நாங்கள் ஃபிரண்டா இருந்த ஆட்கள் தானே. ஈபிஆர்எல்எஃப் பில் சின்னத்துரை என்ற ஒரு தோழர் அவர் என்ற பெஸ்ட் பிரெண்ட்.
தேசம்: இதையெல்லாம் பார்க்கும்போது யாழ்ப்பாணத்துக்கும் மட்டகளப்புக்கும் இடையில பெரிய ஒரு கலாச்சார வேறுபாடு ஒன்றும் இருந்திருக்கு
அசோக்: கலாச்சார வேறுபாடு என்று சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சனை, நான் என்ன நினைக்கிறேன் என்றால், இயக்கங்களுக்குள்ள அரசியல் கல்வி இல்லை. ஒரு அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் ஒரே நோக்கத்துக்காக…
தேசம்: சித்தாந்த அரசியல் கலாச்சாரம் ஒன்று இருக்கேல…
அசோக்: இருக்கேல. அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் இந்த இயக்க முரண்பாடுகள் வந்திருக்காது. ஒரே நோக்கத்துக்காக, ஒரே போராட்டத்துக்காக, ஒரே கொள்கைக்காக நிக்கிறம் என்ற உணர்வு வந்திருக்கும். மத்தியதர வர்க்கத்திற்குரிய போட்டி, பொறாமை, அதிகார ஆசை இவை எல்லாம் அரசியல் கல்வி, மக்கள் மயப்பட்ட செயற்பாடு சிந்தனை முலம்தான் இல்லாமல் போகும். 83 ஜூலை கலவரத்துக்கு பிறகுதான் யாழ்ப்பாணத்தில நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம். சம ணர் குளத்தில் நடந்த வகுப்புகள் ஒன்றுக்குமே யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்கள் வந்தது குறைவு. நான் அறிய யாருமே வந்ததில்லை. பொன்னுத்துரை தோழர் மாத்திரம் வந்து போவார். வேறு தோழர்கள் வந்ததில்லை.
தேசம்: யாழ்ப்பாணத்தில நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்திலேயே இங்க வந்து யுஎன்பி செயற்பாட்டாளரைக் கொலை செய்தது மாதிரி யாழ்ப்பாணத்திலும் சில கொலைகள் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் தியாகராஜா…
அசோக்: மட்டக்களப்பில் நடந்த கொலைகளை எங்களால நிறுத்த முடிந்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலா ராமச்சந்திரன் யு என் பி அமைப்பாளராக இருந்தாலும்கூட எங்களுக்கு அந்த கொலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கல்ல. கொலை, தனிநபர் பயங்கரவாதம் என்பது எப்பவுமே விடுதலைக்கு சாத்தியமில்லை.
தேசம்: துரையப்பா படுகொலையை நீங்கள் எப்படி பார்த்தீர்கள் அந்த நேரம்..
அசோக்: சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாக அவரைப் பற்றி மோசமான பிம்பம்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. துரையப்பா அவர் தொடர்பாக பொசிட்டிவான விடயங்கள் இருக்கு. அதை ஏற்றுக் கொள்கிற அதே நேரம், அவர் தொடர்பான நெகட்டிவான விமர்சனங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். அதுக்காக படுகொலை என்பது பிழை. ஆனால் அவரை பிழையற்ற நபராக புனிதராக கட்டமைக்கும் போக்கு ஒன்று இருக்குத் தானே அது பிழை.
ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பில் இருந்தவர். அவரும் எஸ்எல்ஃப் பி இல இருந்தவர். துரையப்பா மாதிரிதான் அவர் அபிவிருத்தி வேலை செய்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அதன்ர அரசியல் எல்லாத்திற்கும் எதிரான ஆள். அதே நேரம் விடுதலை இயக்கங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணினவர். ஒரு தடவை பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு பொலிஸ் பெமிசன் தரல்ல. ராஜன் செல்வநாயகம்தான் எடுத்துத் தந்தவர். மாலா ராமச்சந்திரன் படுகொலை செய்யப்படாமல் இருந்தால் அவரும் இயக்கங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பார். அதால தான் தனிமனித பயங்கரவாதத்தை, கொலைகளை நாங்க எதிர்த்தம். நாக படை உருவாகியிருந்தால் யாழ்ப்பாணம் மாதிரி தனிநபர் பயங்கரவாதம், கொலைக் கலாச்சாரம் உருவாகியிருக்கும். கண்டகண்ட முழுப்பேரையும் எதிரிகளாக்கி சுட்டு இருப்பார்கள். அதே நேரம் ராஜன் செல்வநாயகம் போல துரையப்பா இருக்கல்லதானே.
தேசம்: துரையப்பா செய்வதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை ஒரு எதிரியாகத் தானே காட்ட முற்பட்டது.
அசோக்: எப்பவுமே அரசியல் இருத்தலுக்கு இலங்கை அரசிற்கு தமிழர்களை எதிரிகளாக்குவது போல, தமிழரசுக்கட்சிக்கு, கூட்டணிக்கு எதிரிகளை கட்டமைக்கவேண்டிய அவசியம் இருக்கு. அதற்கான சந்தர்ப்பங்களை துரையப்பா போன்றவங்க வழங்கியது அக்காலங்களில் இவர்களுக்கு சாதகமாக போய்விட்டது.
தேசம்: இயக்கங்களின் மந்தமான ஒரு வளர்ச்சி, இவ்வாறான ஒரு போக்குத்தான் 83 ஜூலை வரைக்கும் தொடர்ந்து கொண்டிருந்ததா?
அசோக்: 83 ஜூலை வரை எல்லா அமைப்புகளும் மந்தமான போக்கா, பெரிய வளர்ச்சி இருக்கல்ல.
புளொட் சித்தாந்த ரீதியாக வளர்ந்த தோழர்களை கொண்டிருந்த போதிலும், ஒழுங்கான கட்டமைப்பு இருக்கல்ல. நான் நினைக்கிறேன் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக அந்த காலகட்டத்தில் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மாத்திரம்தான் என்று… ஈபிஆர்எல்எவ் இல் அரசியல் ரீதியான வளர்க்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்ட அமைப்பாக, ஒரு கட்டமைப்பை கொண்டு ஈ.பி.ஆர்எல்எஃப் இருந்தது. அது வேறு எந்த அமைப்பிலும் இருக்கவில்லை.
தேசம்: ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தது. விடுதலைப்புலிகளை காட்டிலும் பன்மடங்கு. இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது இது இந்த வீக்கம் 83 ஜூலைக் பிறகுதான் வருதா அல்லது அதற்கு முதலே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்குள்ள கூடுதலான நபர்கள் உள்வாங்கப்பட்டு விட்டார்களா?
அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு முற்பாடு புளொட்டுக்குள்ள உள்வாங்கப்பட்ட தோழர்கள் முழுப்பேரும் அரசியல் சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்டவர்கள். ஏனென்றால் பாசறை நடத்தப்பட்டது .யாழ்ப்பாணம் தவிர்ந்த எல்லா இடங்களிலும் பாசறை நடத்தப்பட்டது. அடுத்தது அவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தாங்க. வடக்குக்கு அங்கால விவசாய குடும்பங்களாக , கடல்தொழிலாளர்கள் குடும்பங்களாக, தொழிலாள குடும்பங்களாக. அல்லது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும், உழைக்கின்ற சமூகத்தினுடைய அபிலாசைகளையும், குணாதிசயங்களையும் கொண்டிருந்தாங்க. நிறைய தோழர்கள் இருந்தாங்க. 83 ஜூலைக் பிறகுதான் எல்லா இயக்கங்களிலும் வீக்கம் ஏற்படுது. புளொட்டிலும் அப்படித்தான். இலங்கை அரசின் பேரினவாத செயல்களினால், இனக்கலவரத்தால் உணர்ச்சி கொண்ட, பாதிக்கப்பட்ட பலரும் இயக்கங்களில் சேருராங்க. எல்லா மாவட்டங்களிலிருந்தும். கூடுதலா புளொட்டில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேதான் கூட தோழர்கள் இருந்தாங்க. பெரும்பான்மை தோழர்கள் இப்படித்தான் வந்தவங்க. ஆனால் பின்தளத்தில் இவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டப் பட்டது. புளொட்டில் அரசியல் கல்விக்காக, அரசியல் சமூக விஞ்ஞானக் கல்லூரி ஒன்று சென்னையில T3S என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மற்ற இயக்கங்கள் எப்படியோ தெரியல்ல.
46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில், உள்நாட்டு செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக நடவடிக்கை, இழப்பீட்டு அலுவலக அலுவலக நடவடிக்கை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், கடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், வழக்குகளை விரைந்து தீர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அத்தோடு 8 அம்ச செயற்றிட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்திகதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11 எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன்பின் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.
இந்த நிலையில் நேற்று வீடியோவில் தோன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 9/11 தாக்குதல் சம்பவம் அனுசரிக்கப்படும் நாளில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது. சிரியாவில் ரஷிய இராணுவம் மீது அல்-கொய்தா இராணுவம் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.
எஸ்.ஐ.டி.இ. உளவுக்குழு இந்த வீடியோவை ஆராய்ந்து நேற்று வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது. இந்த வீடியோவில் தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை.
மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளது. இந்த குழுக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டங்கள், கிளர்ச்சியாளர்கள் குழுக்களை இராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மியான்மரை விட்டு வெளியே அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மர் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென துபாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தங்களால் செயல்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு அரசை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என மியான்மார் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன்னர் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோஸை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.
ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் கரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 05 & 06 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 05 & 06:
தேசம்: கிட்டத்தட்ட 80 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் காந்தியத்தோடு உங்களுடைய செயற்பாடுகள் இருக்குது. அதுக்குப் பிறகு காந்தியம் எவ்வளவு காலம் இயங்கியது என்று நினைக்கிறீர்கள்?
அசோக்: 82 இல் வவுனியாவில் விமானாப்படைத் தாக்குதல் நடக்குது தானே. அது புளொட்டின்ட தோழர்கள்தான். அற்புதம் இன்னுமொரு தோழரும் சேர்ந்து தான் அந்த விமானப்படை தாக்குலை செய்கின்றார்கள்.
தேசம்: அற்புதம் இப்ப எங்க இருக்கிறார்?
அசோக்: லண்டனில். அதுல ஒரு தோழர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அற்புதம் பிறகு கைது செய்யப்பட்டவர். அதுலதான் காந்தியம் மீதான சந்தேகம் வருது.
தேசம்: எண்பதுகளிலேயே?
அசோக்: இது வந்து 83 ஆரம்பத்தில என்று நினைக்கிறேன். காந்தியம் மீதான போலீஸ் கண்காணிப்பு அதுக்குள்ள தான் வருது. முதலே சந்தேகம் இருந்திருக்கு, இயக்கத்துடன் தொடர்பு இருக்கு எண்டு. இதுல உறுதிப்படுத்தப்பட்டது. கடும் கண்காணிப்பு, அதன் பிறகு 1983 ஏப்ரல் என நினைக்கிறன். உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.
தேசம்: வேறு யார் யார் கைது செய்யப்படுகிறார்கள்?
அசோக்: அந்தக் காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்த நிறைய பேர்… அதுக்கு முதல் ஒருதரம் சந்தேகத்தின் பெயரில் குமரன் தோழரும் கைது செய்யப்படுகிறார், கோயில்குளம் காந்தீய ஒப்பிசிலிருந்து. அப்பவே சந்தேகம் வந்திட்டு, புளொட்டுக்கு வேலை செய்பவர் குமரன் என்று. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பிறகு விடுவிக்கப்படுகின்றார்.
தேசம்: ராஜசுந்தரம் எல்லாம் இந்த தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுகிறார்கள்?
அசோக்: காந்தியத்துக்கும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி அச்சந்தேகமும் இருந்ததினாலும் தான் உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.
தேசம்: காந்தியத்தில் இருக்கும்போது இது தொடர்பில் ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா?
அசோக் : காந்தியத்தில் இருக்கும்போது நான் கைது செய்யப்படவில்லை. நான் முதன் முதலாக கைது செய்யப்படும்போது புளொட்டில் …
தேசம்: 80க்கு பிறகுதான் அது நடக்குதா
அசோக்: ஓம்
தேசம்: அப்ப அதைப்பற்றி பிறகு கதைப்போம். இப்ப நீங்கள் பதின்ம வயதில் இருக்கிறீர்கள் அரசியல் துடிப்பு அதெல்லாம் சரி. காதலின் பருவமும் இதுதான். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பிற்காலத்தில் நாங்கள் எல்லாரும் அறிந்த உங்களுக்கும் செல்விக்குமான உறவு. அது எப்படி உருவாகிற்று?
அசோக்: இளம்வயது கோளாறுகள் எல்லோருக்கும் இருக்கும் தானே. அது நிறைய நடந்திருக்கு. செல்வியின் உடனான தொடர்பு எப்படியென்றால். அந்த நேரம் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. பத்திரிகைகளில் பேனா நண்பர்களின் முகவரி வரும்.
தேசம்: அது என்ன என்று சொல்ல முடியும் என்றால் நல்லா இருக்கும்.
அசோக்: பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பேனா நண்பர் பகுதி என்று ஒன்று வரும். அதில பேனா நட்புக்களை விரும்புகின்றவர்களின் பெயர் முகவரி அவர்களின் விருப்பங்கள் ஈடுபாடுகள் பொழுது போக்குகள் பற்றிய விபரங்கள் இருக்கும். உதாரணமாக நான் அசோக் என்றால்… அசோக் வயது போட்டு எனக்கு விருப்பமான துறை, கவிதை, கட்டுரை, இலக்கியம், விளையாட்டுத்துறை என்று எல்லாம் வரும். அப்ப அதில் ஈடுபாடு கொண்டவங்க எல்லாம் பென் ஃப்ரெண்ட் ஆவார்கள். கடிதத் தொடர்புதான்.
தேசம்: அந்த முகவரிகள் பத்திரிகையில் வரும். அதுல இருந்து உறவுகள் ஏற்படும்.
அசோக்: அந்த உறவினால் என்ன நடக்கும் என்று கேட்டால் உங்களுக்கு இடையே ஆழமான ஒரு கருத்து பரிமாற்றத்தை உரையாடலை அது கொண்டுவரும். ஏனென்றால் உங்களுடைய துறை சார்ந்த நபருடன் தானே நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்..
தேசம்: ஃபேஸ்புக்கும் முதல் வந்த வடிவம்…
அசோக்: பேஸ்புக் என்றது வேறு உலகம். பேனா நட்பு என்பது இது ஆரோக்கியமான உலகம். அது உண்மையில ஆழ்ந்த நட்புக்கான ஒரு வெளி. எழுத்துக்கூடாக நீங்க பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்களை கதைப்பீங்க. உரையாடல், விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வீங்க… அப்படித்தான் எனக்கு நிறைய பென் பிரண்ட் இருந்தது. அப்படியொரு பென் பிரண்ட் தான் செல்வியும்…
தேசம்: எந்த வயசு கட்டத்துல வந்தது… ?
அசோக்: நான் நினைக்கிறேன், 16 17 வயசுல வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இளந்தளிர் வாசகர் வட்டம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் என நினைக்கிறன்… அந்த காலகட்டத்திலேயே தான் தொடர்பு வருகிறது. பிறகு நான் காந்தியத்துக்குள்ள வரேக்க செல்வி காந்தியத்துக்கும் வாரா என்ட தொடர்பில. நான் சந்திக்க முதல், செல்வியைச் சந்தித்தது என்னுடைய நண்பர்கள்தான். செல்வியை சந்திக்கிற என்னுடைய நண்பர்கள் செல்வி தொடர்பாக அவர்கள் தாற அபிப்பிராயம் செல்வி மீதான பெருமதிப்பை ஏற்படுத்துது.
தேசம் : உங்களுக்கு 16,17 வயசுல நீங்க தொடர்புகொண்டா அவாவுக்கு எத்தனை வயசு அப்ப?
அசோக்: செல்வி என்னை விட 3 வயது இளமை.
தேசம்: அப்ப அவாவுக்கு கிட்டத்தட்ட 14 வயசு இருக்கும். அப்ப இது பேனா நட்பு என்ற ரீதியில் தான் உருவானது. எப்ப இது நீங்க காதலியாக அல்லது…
அசோக்: அது நீண்ட காலம். காந்தியத்துக்குள்ள வந்ததுக்கு பிறகு தோழர்கள் நிறைய பேர் செல்வியை சந்திக்கினம். செல்வி காந்தியத்துக்குள் வந்து வேலை செய்கிறார். பிறகு புளொட்டுக்கு வாறா. புளொட்டின் ஆரம்ப காலத்தில் தான் அந்த நட்பு உருவாகிறது.
தேசம்: அது எந்த ஆண்டு காலகட்டமாக இருக்கும்?
அசோக்: 83இல் அதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு முதல் நெருக்கமான பென் பிரண்ட் தான். நேரடியாக சந்தித்த பிறகுதான் அந்த லவ் எனக்கு உருவாகுது.
தேசம்: எப்ப நேரடியாக சந்திச்சனீங்கள்?
அசோக்: 82 நேரடியா சந்தித்திருப்போம்.
தேசம்: நீங்கள் காந்தியத்துக்குள்ள வேலை செய்யும்போது வவுனியாவுக்கு போறீங்க. வவுனியாவில் தான் அந்த சந்திப்பு ஏற்படுதா?
அசோக்: ஓம். நான் முதன்முதல் சந்தித்தது சேமமடுவில. செல்வியின்ர வீட்டில. அண்ணி யாழ்ப்பாண யூனிவசிற்றில படித்துக்கொண்டிருந்தவ. அப்ப செல்வி, யாழ்ப்பாணத்திலே அண்ணியைச் சந்திச்சு இருக்காங்க. அப்ப அண்ணி சொன்னா “செல்வி வந்தது. யாழ்ப்பாணம் வந்தனீ, செல்வியை சந்தித்துவிட்டு போ” என்று.
தேசம்: அப்ப நீங்க வவுனியாவில் சந்திக்கவில்லையா ?
அசோக்: வவுனியாவில் சேமமடுவிலதான் தான் சந்திச்சன். செல்வி யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்டரில படித்துக் கொண்டிருந்தவ. அப்ப நான் யாழ்ப்பாணம் வர, செல்வி போயிற்றாங்க சேமமடுவுக்கு. அப்ப அண்ணி சொன்னா, “செல்வி சேமமடுவுக்கு போயிட்டுது, வேணும்டா அங்க போய் சந்தித்துவிட்டு போ” என்று. அப்ப நான் வவுனியா போகும் போது, ஓமந்தையில் இறங்கி , சேமமடுவுக்கு போய் சந்திச்சிட்டுத் தான் ஊருக்கு போனான்.
தேசம்: அப்போ உங்களுக்கு…
அசோக்: லவ் எல்லாம் இல்லை. பிரெண்டாதான் இருந்தது.
தேசம்: இது எத்தனையாம் ஆண்டு நடந்தது ?
அசோக்: 83ஆக இருக்க இயலாது . 82 நடுப்பகுதியாக இருக்கலாம்.
தேசம்: செல்வியின் அரசியல் மாற்றம் என்பது காந்தியத்திலிருந்து புளொட்டுக்குப் போக… நீங்கள்தான் செல்வியையும் காந்தியத்துக்கு கொண்டு வாறீங்கள்…
அசோக்: ஓம் என்ட பிரண்ட் என்டதும் நிறைய பேர் சந்திக்கினம். அப்ப காந்திய ஈடுபாடுகள் வருது. சேமமடு பக்கத்தில காந்திய வேலைத்திட்டங்கள் எல்லாம் இருந்தது. அப்ப காந்திய கருத்தரங்குகளிலும் செல்வி கலந்துகொண்டார்.
தேசம்:அப்ப நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களா? பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது காந்தியத்தில்?
அசோக்: காந்தியத்தின் சிறுவர் பாடசாலைகள் முழுக்க பெண்கள் தானே ஆசிரியர்கள். வொலன்டியேர்ஸில குடியேற்றத் திட்டங்கள் போன்ற வேலைகளுக்கு ஆண்கள் ஈடுபட்டார்களேயொழிய கல்வி, சுகாதாரம் சார்ந்த விடயங்களில் எல்லாம் பெண்கள்தான் ஈடுபட்டார்கள். கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் அவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அப்ப செல்வி வந்து இதுல இல்ல. செல்வி வொலன்டியராக கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுற ஆளாத்தான் இருந்தா.
பாகம் 06:
தேசம்: காந்திய இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மற்றவர்களுடனான உறவுக்கும், அவருடனான உறவுக்கும், எப்படி அது உங்களுக்கான காதல் என்ற நிலைக்கு போச்சுது ?
அசோக்: பேனா நட்பு என்ற உறவு வரும் போது அது இலக்கிய உறவு மாத்திரமல்ல. எங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால, அது ஒரு அரசியல் சார்ந்த உறவாகவும் இருக்கும்தானே. ஒரு ஆழமான உரையாடலாக இருக்கும். எங்கட விருப்புக்கள் இதனை தீர்மானிக்கும். அத்தோட பேனா நட்பு பரஸ்பரம் ஆழமான புரிதலை நேசிப்பை அன்பை உருவாக்கும். ஆணும், பெண்ணுமாக இந்த நட்பு இருக் கிற பட்சத்தில love வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. அப்படித்தான் எங்களுக்குள்ள love வந்தது.
தேசம்: நீங்க அந்த உறவு வருவதற்கு முதல் நீங்கள் புளொட்டில் இணையவில்லை. காந்திய இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள்.
அசோக்: இரண்டிலும் இருக்கிறேன். அதற்குப் பிறகு செல்வி எங்களோட வந்த வேலை செய்யத் தொடங்குகிறா. காந்தியத்திலும் ஆண், பெண் உறவு என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. தோழமையுடன் இருந்தது. காதல்களும் இருந்தது. காதல்களும் கூட ஆரோக்கியமான உறவாகதான் இருந்தன.
தேசம்: ஆரோக்கியமான காதல் எனும் போது ? நீங்கள் எதைக் குறிப்பாக சொல்லவாறீங்கள்?
அசோக்: ஒரு பரஸ்பரம் சமநிலை. இப்ப நாங்க சொல்றோம் தானே ஒரு ஆணாதிக்கத்தனம் இல்லாமல் பரஸ்பரம் உரிமைகளை கொண்ட, சமநிலையில் தோழிகளாக பார்த்தல், ஒரு ஆரோக்கியமான சமநிலை உரையாடல். சமத்துவம். ஒரு சிக்கல் இருக்கு தானே, காதலுக்குள்ள. காதல் என்றாலும் கூட ,அதுக்குள்ளேயும் ஒரு ஆணாதிக்கத்தனம், ஆளுமை ஒன்று இருக்கும். அதிகாரம் ஒன்று இருக்கும். அந்த அதிகாரமற்ற முறையில் சுதந்திரமான உண்மையான நேசிப்பு கொண்ட காதல் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியம் இருந்தது.
தேசம்: பொதுவாகவே காதல் சம்பந்தமான விஷயங்கள் அது மலரேக்க தனிப்பட்ட எதிர்காலம் சம்பந்தமாக தான் கூடுதலாக கதைக்கிறதா இருக்கும். தாங்கள் எப்படி எதிர்காலத்தைக் கொண்டு போவது. இது வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருந்திருக்கும். ஏனென்றால், ரெண்டு பேருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். அப்ப உங்களுடைய உரையாடல் பொதுவாகவே அரசியல் சார்ந்து தான் இருக்குமா அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்து கதைக்கப்படுமா ?
அசோக்: ஆரம்ப காலத்தில பேனா நட்பில இருக்கக்க தனிப்பட்ட எங்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் விருப்பங்கள் என்று என்னவெல்லாமோ கதைத் திருக்கிறம். காதல் என்று வரும் போதும் தனிப்பட்ட விஷயங்கள் கதைத்திருப்பம். எதிர்கால இருவரின் இணைந்த வாழ்வு பற்றி நிறைய கதைத்திருக்கிறம். செல்வி மீது செல்வியின்ர அம்மம்மா, அம்மா எல்லோரும் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாங்க. செல்விக்கு அப்பா இல்ல. எங்க love செல்வியின்ர அம்மாவுக்கு தெரிய வந்த போது, செல்வியின்ர அம்மா எனக்கொரு கடிதம் எழுதி இருந்தாங்க. கடிதம் ஒரு தாயின்ர நியாயத்தை கொண்டிருந்தது. அது எனக்கு கவலைய வேதனைய கொடுத்திச்சி. படிக்க வேண்டிய வயதில் காதலா என்ற குற்ற உணர்வை என்னில வந்தது. செல்வியின்ர எதிர்கால நல்வாழ்வு என்னால வீணாகிவிடுமோ என்றெல்லாம் நான் அப்ப யோசிச்சி இருக்கிறன்.
தான் கடிதம் எழுதினது பற்றி செல்வியிற்ற சொல்ல வேண்டாம் என அம்மா கேட்டிருந்தா. நான் அத பற்றி செல்வியிற்ற சொன்னதில்ல. நானும் செல்வியும் அம்மாவை ஏமாற்றிவிட்டோமோ என்று இப்ப நினைக்கிறன்.
இயக்கத்துக்கு வந்தபிறகு முழுக்க முழுக்க இயக்கம் சார்ந்த உரையாடல்களாகத் தான் இருந்தது. அடுத்தது இயக்கத்துக்கு வந்ததுக்கு பிறகு இரண்டு பேரும் பிஸியாகிட்டம். அப்ப சந்திக்கிறதும் குறைவு. நாங்க கூடுதலாக சந்திக்க தொடங்கினது யாழ்ப்பாணம் வந்த பிறகுதான்.
தேசம்: உங்கள் அரசியல் தெளிவு மற்ற தோழர்களிடம் இருந்ததா?
அசோக்: இருந்தது ஏனென்றால் வாசிப்பும், அரசியல் அறிவூட்டல்களும் நிறைய நடந்தது. காந்தியத்தில் வேலை செய்த நிறைய தோழர்களைப் பார்த்தீர்கள் என்றால் நான் சந்தித்த தோழர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தாக்கள் தான். அதற்குக் காரணம் பின்புலம் புளொட் இருந்தது. புளொட்டுக்குள்ள வந்த தோழர்களை பார்த்தீர்களென்றால் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்த ரீதியாக வளர்ச்சி அடைந்து தோழர்களாக தான் இருந்திருப்பார்கள். தலைமையை விடுங்கள், தலைமை தொடர்பா எங்களுக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அதுக்கு கீழ வந்த தோழர்களைப் பார்த்தீர்களென்றால் அவங்க கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்து தான் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். புளொட்டை தேர்வு செய்வதற்கான அரசியல் தெளிவு ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.
ஏனென்றால், அந்த கால கட்டங்களில் தோன்றிய இயக்கங்கள் தொடர்பாக புலிகள் தொடர்பான விமர்சனம் இருக்கு அவங்களுக்கு. மார்க்சிய ஐடியோலொஜி கொண்ட இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளொட் இருக்கு. அப்ப அவர்கள் புளொட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் புளொட் மக்கள் மத்தியில் வேலை செய்யுது. அவர்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டுமென்ற அபிலாசை இருக்கின்றபடியால் அவங்கள் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்க. புளொட்டுக்கு வந்ததுக்கு பிறகு நான் சந்தித்த தோழர்கள் முழுப் பேரும் அரசியல் வளர்ச்சி கொண்டவர்களாக இருந்தாங்க. மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வமும், அபிலாசையும் கொண்டவர்களாக இருந்தாங்க.
தேசம்: யாழ்ப்பாண நிலையும் இப்படித்தான் இருந்ததா?
அசோக் : 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான், யாழ்ப்பாணத்தில புளொட்டினுடைய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கு முயல்கிறோம். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் அமைப்புகள் இருக்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியும், தோழர் குமரனும் தான் அங்க முக்கியமான ஆட்களாக இருந்தவை. சத்தியமூர்த்தியும், ரிங்கோ கேதீஸ்வரனும் யாழ்ப்பான யுனிவர்சிட்டியில் இருந்தபடியால், அங்கு பெரிதாக வேலை செய்ய முடியவில்லை. புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அவ்வளவுதான்.
எனக்கு தெரிஞ்சு யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அண்டர்கிரவுண்டுல சுழிபுரத்தில் ஒரு சில தோழர்கள் வேலை செய்தார்கள். சிவசண்முகமூர்த்தியுடன் சுந்தரத்துடன் இயங்கியவர்கள் அவர்கள்.
வெகுஜன மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை. அந்த காலகட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பாக EPRLF இருந்தது. எல்லா வகையிலும் அவங்கள் பலமான அமைப்பாக இருந்தவங்க. கருத்தியல் சார்ந்தும் நிறைய வளர்ச்சி அடைந்த தோழர்கள் அவங்களிட்ட இருந்தாங்க. எங்களுக்கு அப்படி இல்ல. அடுத்தது பொலிஸ் நெருக்கடி ,கண்காணிப்புக்கள் இருந்தபடியால யாழ்ப்பாண பொறுப்பாக இருந்த குமரன் தோழரால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதால குமரன் 83 க்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியாவில் எங்களுடன் தான் வேலை செய்தவர். 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான் மக்கள் அமைப்பு அரசியல் வேலைத்திட்டம் என்று யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறம்.
தேசம்: இந்த காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது? எவ்வளவு தூரம் பெண்கள் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள்? அரசியலை நோக்கி அல்லது பெண்களை அரசியலை நோக்கி கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?
அசோக்: காந்தியத்தில் வேலை செய்த பெண்கள் பலரும் புளொட்டில் இணைகின்றனர். நிறைய பெண் தோழர்கள். சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 83க்கு முன்னர் நிறைய பாசறைகள் நடந்தது.
தேசம்: 83 ஜூலைக்கு முதலே இந்த அரசியல் வகுப்புகள் தீவிரமாக நடக்கிறது…
அசோக் : ஓம், தீவிரமாக நடந்தது. யாழ்ப்பாணத்தில நடக்கேலையேயொழிய, அங்கால நிறைய நடந்தது. வவுனியாவில சமணர்குளம் என்ற இடத்தில தொடர்ச்சியாக அரசியல் பாசறைகள் நடந்தது. தங்கராஜா என்ற தோழர் பழைய JVP தோழர் அரசியல் வகுப்புக்கள் எடுத்தவர். பாசறைகள் வகுப்புகள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும். தோழர் கேசவன் எல்லாம் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லா தோழர்களுக்குமான ஒரு அரசியல் வகுப்பாக தான் இருந்தது அது.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் கூடுதலாக அரசு எதிர்ப்பு ஊர்வலங்கள் அப்படியான சம்பவங்கள் கூட நடந்திருக்கும்.
அசோக்: நடந்தது. புளொட் ஆரம்ப காலத்தில் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பு. ஒரு அண்டர் கிரவுன்ட் அமைப்பாக இருக்கேலதானே. அந்த நேரத்தில் உண்ணாவிரதம், கிராமங்களில் கருத்தரங்குகள் நடத்தி இருக்குறம். 82இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளை, மக்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டங்கள் நிறைய இடங்களில் நடத்தியிருக்கிறோம். 81ம் ஆண்டும் 82ம் ஆண்டும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மே தினக் கூட்டம் நடத்திஇருக்கிறம். அதால தான் நாங்கள் வெகுஜன அமைப்பாக பரவலாக பார்க்கப்பட்டோம்.
தேசம்: இன்னும் ஒரு விஷயம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக மட்டக்களப்பில் மூன்று சமூகங்களுமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் இருக்கிறது. முதல் உரையாடலில் சொல்லி இருந்தீர்கள், ஜேவிபியின் அரசியல் வகுப்புகள் எடுக்க வந்தவர்களில் முஸ்லிம் தோழர்களும் இருந்தார்கள் என்று. தமிழ் முஸ்லிம் உறவு எப்படி இருந்தது அந்தக் காலத்தில்.
அசோக்: மிக நெருக்கமாக இருந்தது. புளொட்டில் முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முஸ்லிம், தமிழர் உறவுகள் ஒரு சிக்கலான விஷயமாக போய்விட்டது பிற்காலத்தில்.
மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தோழர்கள் இருந்தார்கள். உதாரணமாக நாக படையின் உருவாக்கம் எப்படி நடந்தது தெரியும்தானே… புளொட் வெகுஜன அமைப்பு வேலையைத்தான் கூடுதலாக செய்துகொண்டிருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அப்ப புலிகள் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு சில தோழர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு ஒன்று இருந்தது.
புளொட்டுக்கு ஆரம்ப காலத்தில் எங்களுட்ட அந்த ஐடியா இருக்கேல. நாங்கள் வெகுஜன மக்கள் மத்தியிலும், காந்தியத்தோடையும் இருந்தபடியால், மக்கள் மத்தியிலான வேலைத்திட்டமாகத்தான், தொடர்பாகதான் எங்களுடைய கொள்கை இருந்தது. அரசியல்மயப்படுத்தல், மக்களை அணிதிரட்டல், அதற்கு ஊடாக மக்கள் யுத்தத்தை கொண்டு வருதல் என்பதுதான் புளொட்டின் கோட்பாடாக இருந்தது. அந்த நேரத்தில இந்த தோழர்கள் மிகத் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொல்லி, முடிவெடுத்து அப்படி செயற்படவும் தொடங்கிவிட்டனர். தயா, சிறிபத்மன் கொஞ்சத் தோழர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதுல ஜூனைதீன் இரண்டு மூன்று முஸ்லிம் தோழர்ககளும் இருந்தவர்கள்… இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த நாக படையை உருவாக்கினாங்க… அது கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாங்கள் தீவிரமாக இல்லை என்று சொல்லி, அவர்கள் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட வெளிக்கிட்டாங்க.
தேசம்: அப்படி என்றால் என்ன கொள்ளை போன்ற சம்பவங்களா?
அசோக்: கொள்ளை இல்லை. மட்டக்களப்பு மாலா ராமச்சந்திரன். அந்தக் கொலை அவங்கதான் செய்தது.
தேசம்: இது கழுகு படையா? நாக படையா?
அசோக்: நாக படை. இந்த நாக படைக்கு ஊடாகத்தான் மாலா ராமச்சந்திரன் கொலை நடக்குது. நாகேந்திரன் என்றவர் சுடப்பட்டு அவர் தப்பிவிட்டார்… அப்ப ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம். யுஎன்பி கட்சியை சேர்ந்தவர்களை சுடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டக்களப்பில பலரை சுட்டிருப்பாங்க. எந்தவொரு அரசியல் தெளிவும் இவங்ககிட்ட இருக்கல்ல. அப்ப நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளர். இவங்க வாசுதேவாவின் தனிப்பட்ட உறவை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக இயங்க வெளிக்கிட்டாங்க. இது வாசுதேவாவுக்கும் சிக்கலாகி விட்டது. அது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்துட்டது.
ஏனென்றால், இவங்கள் புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கள். ஒரு தனி இயக்கமாக நாக படை என்று உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டாங்க… அது எங்களுக்கு பெரிய சிக்கலாக வந்தது. பிறகு அவர்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி. பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான தோழர்கள் எல்.ரீ.ரீக்கு போயிட்டாங்க.
தேசம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவ்வளவு தூரம் தீவிரவாத இயக்கமாக இல்லாதபடியால்… அதுல இருந்த முஸ்லிம் தோழர்களுக்கு பிறகு என்ன நடந்தது ?
அசோக்: ஜூனைதீன் என்ற தோழர் புலிகளோடு சேர்ந்து பிறகு லெப்டினட் கேணலாக இருந்து , பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். முக்கியமான பதவியில் இருந்தவர். மற்ற முஸ்லிம் தோழர்களின் பெயர் மறந்து போயிட்டேன். அவங்களும் எல்.ரீ.ரீ தான்.
தேசம்: அந்தக் கால கட்டங்களில் 80களின் ஆரம்பம் 83 ஜூலை முதல் மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாணத்தில் எப்படி இந்த வெவ்வேறு இயக்கங்களின் செயற்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருந்தினமா? அல்லது…
அசோக்: இல்லை எல்.ரீ.ரீ .ஈ மிகக் குறைந்த அளவில் தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் நிறைய பேர் வேலை செய்தவர்கள். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. எல்.ரீ.ரீ . ஈ ஆட்களோடும் உறவு இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில பெரிய முரண்பாடு இயக்கங்களுக்குள்ள. அது மட்டக்களப்பில் இருக்கேல.
எல்.ரீ.ரீயில வேலை செய்த தோழர்கள் எல்லாம் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். வேணுதாஸ் அண்ணர் எல்லாம் எல்.ரீ.ரீயில் மிக முக்கியமான ஆள். ரஞ்சன் கனகரட்ணம் என்ட ஃப்ரெண்ட். பரமதேவா என்ற ஃப்ரண்ட். புளொட் வாசு தேவாவின் தம்பி. எங்களுக்குள்ள நெருக்கம் ஒன்று இருந்தது. ரஞ்சனும், நானும் பரமதேவாவும் ஜெயிலில் ஒன்றாக இருந்தம். அப்ப அவர்களுக்கு புளொட்டுக்கு வாற ஐடியா இருக்கேல. எல்.ரீ.ரீக்கு போற ஐடியா இருந்தது. அப்புறம் நாங்க வெளில வந்தும் மிக நெருக்கமாகத் தான் இருந்தம்.
தேசம்: யாழ்ப்பாணத்தில் இயக்கங்களுக்கு இடையிலான வன்முறை மிகக்கூர்மையாகவும், மட்டக்களப்பில் நட்பு ரீதியாகவும் இருந்ததற்கு காரணம் என்ன?
அசோக் : யாழ்ப்பாணத்தில் அதிகாரப் போட்டி ஒன்று இருந்ததாக தெரிஞ்சது. நாங்க பிறகு கதைக்கலாம் இதைப் பற்றி. நான் யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த உறவுகள் எனக்கு நீடித்தது. அப்ப இறைகுமாரன், உமைகுமாரன் யாழ்ப்பாணத்தில கொலை செய்யப்பட்டபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இக் கொலைகளை யார் செய்தது என்று உண்மையாக எங்களுக்கு தெரியாது. இறைகுமாரன் வாசுதேவாவின் ஃப்ரண்ட். எனக்கும் தெரியும் இறைகுமாரனை. வாசுதேவவோட இளைஞர் பேரவையில் இருந்து பிரண்ட்.
அப்ப நாங்கள் மட்டக்களப்பில் இறைகுமாரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினாங்கள். அதற்குப்பிறகுதான் வேணுதாஸ் அண்ணை என்னை கூப்பிட்டு சொல்கிறார் அசோக் உங்கட இயக்கம்தான் செய்தது என்று சொல்லி. உனக்கு தெரியாதா என்று.
அசோக்: ஓம். இரண்டு வாரத்திற்கு பிறகு பிறகு மட்டக்களப்பில் ஒரு ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அமிர்தலிங்கம் வந்தவர். அப்பதான் அவர் ஓப்பினா பேசினார் கொலை செய்து போட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்று. எனக்கும் வாசுதேவாவுக்கும் பயங்கரப் பேச்சு. அப்பதான் வெளில தெரியும் எல்லாருக்கும் புளொட் தான் செய்தது என்று சொல்லி. அதற்கிடையில் வாசுதேவா புளொட் தான் செய்தது என்று தெரிஞ்ச உடனே யாழ்ப்பாணம் போனார். போயிட்டு வந்து சொன்னார் உண்மையிலேயே புளொட் தான் செய்தது என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
தேசம்: அதுக்கான காரணங்கள் விளக்கங்கள் தரப்பட்டதா உங்களுக்கு…
அசோக்: அதற்குப் பிறகு சென்டர் கமிட்டில அதெல்லாம் கதைக்கப்பட்டது. தன்னிச்சையாக சில பேர் செய்ததாக. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கல்ல.
தேசம்: இந்த கொலைகளில் சந்ததியாருக்கு தொடர்பு இருக்கின்றதா?
அசோக் : இல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோழர் சந்ததியாரால் அமைப்புக்கு வந்தவங்க. சந்ததியாருக்கு மிகவும் தெரிஞ்சவங்க. இதனால்தான் அப்படி சந்தேகம் பலருக்கு வந்தது. உண்மையிலே தன்னிச்சையான செயற்பாடுதான் இந்த கொலைகள்.
தேசம்: இதெல்லாம் புளொட் ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு முதல் நடந்த சம்பவங்களா அல்லது அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களா… ?
அசோக்: இந்த கொலைகள் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் புளொட் கட்டமைப்பு உருவாகல்ல. ஏனைய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இது சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையான சுந்தரத்தின் விசுவாசிகளால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. புளொட்டின் கட்டமைப்பு பார்த்தீர்களென்றால் 79 ஆண்டு நவம்பர் புளொட்டின் உருவாக்கமே வருது. தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயர் வைக்கப்படுகிறது. அதற்கு முதல் புதியபாதை என்ற அமைப்பு தான் இருந்தது. புதியபாதை என்ற அமைப்பு பிறகு புளொட் என்ற பெயருடன் உருவாக்கப்படுகிறது.
உருவாக்கப்பட்ட மத்திய குழுவில் இருந்தவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். உமா மகேஸ்வரன், சந்ததியார், ஐயர், சாந்தன், சுந்தரம். இதில ஐயரும், சாந்தனும் பிரபாகரனோடு சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் முக்கியமானவர்கள். 79 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட மத்திய குழுவின் பிற்பாடு அவங்களுக்குள்ள ஒரு முரண்பாடு வருகிறது .ஏனென்றால் தன்னிச்சையான போக்கு நடக்குது.
தேசம்: இந்த காலகட்டத்தில் நீங்கள்…
அசோக் : புளொட்டில இல்லை நான். இது காலப்போக்கில் கேள்விப்பட்ட விஷயங்கள். என்ன முரண்பாடு வருது எப்படி என்றால். இவங்கள் எப்படி புலிகளில் என்னென்ன தவறு நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இங்க நடக்குது. முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவது. பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து தான் இருந்தது. பிறகு மத்திய குழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் இவங்கட ஆதிக்கம் மேலோங்க கருத்து முரண்பாடு வருகின்றது. பிறகு சுந்தரம் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் சேர்த்து தன்னிச்சையான போக்குல ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி ஐயரும், சாந்தனும் முரண்படுகின்றாங்க. பிரச்சனை வரும்போது சாந்தனும் ஐயரும் அந்த கமிட்டியை விட்டு போகிறாங்க… அதுல மிஞ்சினது சந்ததியாரும், உமாமகேஸ்வரனும், சுந்தரமும் தான். இப்ப பார்க்கும்போது தெரியுது என்னவென்றால், புலிகளின் அதே அரசியலுடன் தான் இவர்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறங்க என்று. ஏனென்றால் மத்திய குழுவுக்குள்ள ஜனநாயகம் எதுவும் இருக்கல்ல.
மக்கள் போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம், வர்க்க அணி திரட்டல் எந்த அரசியல் தெளிவும் இவர்களிடம் இருக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற புளொட் வாசகம் எம்மைப் போன்றவங்கள உள்வாங்க பயன்படுத்தபட்ட கோசம் என்பது இப்ப நினைக்கக்குள்ள விளங்குது.
தேசம்: இதே காரணங்களுக்காகத்தானே பிரபாகரனோடு முரண்பட்டு ஐயர் வெளியேறியவர்…
அசோக் : ஓம். அப்போ ஐயரோடு சாந்தன், நாகராஜா, குமணன் போன்றவர்கள் வெறியேறுகிறாங்க. பிரபாகரனோடு ராகவன், மாத்தையா, செல்லக்கிளி போன்றவர்கள் இருக்கிறாங்க.
தேசம்: இதில பார்க்கும் போது இதில ஓரளவு சமப்படுத்தப்பட்ட பலம் ஒன்று சந்தததியார், உமா மகேஸ்வரன், சுந்தரத்துக்கு ஒரு ஈகுவலான பலம் இருந்திருக்கு. அதில சந்ததியாரும் சுந்தரமும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள்…
அசோக்: உமாமகேஸ்வர் கட்டுவன். ஐயர் புண்ணாலைக்கட்டுவன்.
தேசம்: சாந்தன்…
அசோக்: தெரியல்ல.
தேசம் :இது ஒரு லூசான கட்டமைப்பா…
அசோக்: பெயரளவில்தான் மத்திய குழுவே தவிர அரசியல் இயக்க கட்டமைப்புக்கான எந்த அரசியல் அமைப்பு வடிவங்களை விதிகளை புளொட் கொண்டிருக்கல்ல. இவங்கள் வெளியேறினதுக்கு பிறகு நான் நினைக்கிறேன் அதுக்குள்ள பிறகு கண்ணனும், ராஜனும் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு சென்றல் கமிட்டி என்று உருவாக்கப்படவில்லை. அப்படியேதான் இயங்கிக்கொண்டிருந்தது. பிறகுதான் பூரணமான சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் உருவாக்கப்படுது 83 ஜூலைக்கு பிற்பாடு.
தேசம்: ஆம் ஆண்டு ஜூலை வரைக்கும் இப்படியான ஒரு கட்டமைப்புதான்?
அசோக்: இப்படியான கட்டமைப்புதான். ஆனா யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில மாவட்ட நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன அந்த நேரத்தில். மாவட்ட அமைப்பாளராக நாங்கள் இருந்தோம். மாவட்ட அமைப்பாளர் கூட்டம் வவுனியாவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும். ஒரு உத்தியோகபூர்வமான அமைப்பா மாவட்ட அமைப்புக்கள் இருந்தது. மாவட்ட அமைப்பாளருக்கு கீழ கிராமிய அமைப்பாளர்கள் எல்லாம் இருந்தாங்க. மட்டக்களப்பு ஜெயில் விரெக் நடந்து பின்தளம் சென்ற பின்னதான் சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் பூரணமாக உருவாக்கப்படுது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தலிபான்கள் தரப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களால் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது.
குறிப்பாக பல பெண்கள் களத்துக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இப்படி காபூல் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் அந்நாட்டுக் குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காபூல் போராட்டத்தின் போது தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், களத்தில் இருந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார். அதற்கு சற்றும் அசராமல் அந்தப் பெண், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். இது குறித்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.