செய்திகள்

செய்திகள்

செய்திகள்

Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி !

Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Paxlovid மாத்திரைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி, ஜேர்மனி பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனாவினால் மோசமாகப் பாதிக்கப்படும் அபாயமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க குறித்த மாத்திரை பயன்படுத்தப்படவுள்ளது.

நோய்த்தொற்று அபாயம் அதிகமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க Pfizer, Merck நிறுவனங்களின் மாத்திரைகளுக்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏற்கனவே அனுமதி வழங்கியள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதியாக அறிவித்தது ரஷ்ய அரசாங்கம் !

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அவரது அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் அவர் பருகிய தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதில், அவர் கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு சென்றார். இந்த கொலை முயற்சிக்கும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டன. நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன் பின்னர் ரஷ்ய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில், நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பியபோது, அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக ரஷ்ய காவல்துறையினர் கூறிய நிலையில், இந்த வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, நவால்னி மாஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவரை பயங்கரவாதியாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், நவால்னியின் ஆதரவாளர்கள் பலரும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ள சுமார் 61 கோடி மாணவர்கள் – யுனிசெப் கவலை !

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் பல நாடுகளில் இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், அதனால் மன இறுக்கம், போதிய ஊட்டச்சத்து குறைவின்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை குழந்தைகள் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்குள்ளான குழந்தைகளில் 70 சதவீதம் பேர் சாதாரண வாசகங்களை கூட வாசிக்கக் கூடிய திறனற்று உள்ளதாகவும், பாடசாலையில் இடைநிற்றல் அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விரைவில் பாடசாலைகளை திறக்குமாறு உலக நாடுகளிடம் யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் விருந்தில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் – விசாரணைகளை ஆரம்பித்தனர் லண்டன் போலீசார் !

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜோன்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது.
இதற்கிடையே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கீழ் சபையில் பேசிய போரிஸ் ஜோன்சன், கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பு கேட்டார். ஆனால், போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பற்றி லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.   இதுதொடர்பாக மெட்ரோபொலிடன் காவல் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் கூறுகையில், டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான புதிய தடுப்பூசி !

பைசர் மற்றும் பயோடெக் ஆகியவை ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான புதிய தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

தடுப்பூசியின் இந்த பூஸ்டர் டோஸ், ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 1,420 ஆரோக்கியமான நபர்களிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையானது தடுப்பூசியின் பாதுகாப்பு, அதன் செயல்திறன், நோயாளியின் சகிப்புத்தன்மை நிலை மற்றும் நோயெதிர்ப்பின் நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

“என்னை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள்.” – சிவநேசதுரை சந்திரகாந்தன்

“இந்த மண்ணை நம்பி பணியாற்றிய என்னை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள். காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன்,

வடகிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்பு வாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும் போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்த போதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்து வைத்துள்ளது. அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், பலவற்றை செய்து வருகின்றோம்.

நான் கல் வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொது நூலகத்திற்கான கட்டுப்மானப்பணிக்கு நான் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகின்றது. இந்த கொரோனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மே மாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்து வைக்கப்படும்.

அதேபோன்று 62 கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.100 கிலோ மீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40 கிலாமீற்றர் வீதி வரவுள்ளது. பல அபிவிருத்தி சார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்று விடும்.

அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாததாகவேயுள்ளது. நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான கல்வி துறையை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதேநேரம், கடந்த காலத்திலிருந்த அரசியல் சாணக்கியமற்ற தமிழ் அரசியல் தலைவர்களின் வெளிப்பாடே இன்று தமிழ் மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்வதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் இதன்போது தெரிவித்தார்.

ரஷ்யாவின் பிடியில் உக்ரைன் – உக்ரனைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ஐரோப்பிய ஒன்றியம் !

சோவித் ரஷ்யாவில் இருந்து பல நாடுகள் பிரிந்து தனி நாடானது. அதில் ஒன்று உக்ரைன். ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உக்ரைன் அமைந்துள்ளது. இரு நாடுகளின் எல்லையாக கிரிமியா உள்ளது. இந்த நகரத்தை ரஷ்யா ஏற்கனவே சண்டையிட்டு கடந்த 2014-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது.
அதில் இருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஆயிக்கணக்கான படை வீரர்களை குவித்துள்ளது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே ரஷ்யா நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் போர் தளவாடங்கள், போர்க்கப்பல்களை கிழக்கு ஐரோப்போ நோக்கி அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு 1.2 பில்லியன் யூரோ  நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் புதிய அவசர கால நிதியாக இதை வழங்க பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா கிரிமியாவை தன்னுடன் இணைத்தபோது, உக்ரைனுக்கு 17 பில்லியன் யூரோ அளவில் ஐரோப்பிய யூனியன் கடன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் ராஜா நித்தியானந்தன்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய ராஜா நித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். நூலாசிரியர் க பிரேம்சங்கர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் போராளி. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைவிட்டு வெளியேறிய போதும் அவர் கழக விசுவாசத்தை விட்டுக்கொடுக்காதவர். அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியை T3S (Tamileelam School of Social Science) ஆரம்பித்த ராஜ நித்தியானந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் இக்கல்லூரியில் கற்ற நூலாசிரியர் க பிரேம்சங்கர் முன்னணியில் திகழ்ந்ததையும் அவரை ஏனைய மாணவர்களுக்கு விளக்கும் ரியுரராக நியமித்ததையும் ராஜ நித்தியானந்தன் நினைவு கூர்ந்தார்.

உலகின் முன்னணி பொருளியல் கற்கைக்கான பல்கலைக்கழகமான லண்டன் ஸ்கூல் ஓப் எக்கொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் கோடைவிடுமுறைப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி – T3S உருவாக்கப்பட்டதாக ராஜ நித்தியானந்தன் அதன் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டார். இக்கல்லூரியில் முதலாளித்துவக் கொள்கையின் தத்துவாசிரியரான அடம் சிமித், கொம்யுனிசக் கொள்கையின் தத்துவாசிரியரான கார்ள் மார்க்ஸ் ஆகியோர்களின் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அரசியல் பொருளாதாரம் மாணவர்களுக்கு புகட்டப்பட்டதாகத் தெரிவித்தார். கலை இலக்கியங்களைக் கொண்ட மேற்கட்டுமானம், பொருளாதார உற்பத்தி முறை பற்றிய கீழ்கட்டுமானம் என்று ஆழமான புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் அங்கு கற்பிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றைக் கற்பிப்பதற்கு தமிழக பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே “அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என்பதைக் குறிப்பிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை முன்வைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய அமைப்புகளிடையே அரசியல் அறிவின்மையையும் அவ்வாறானவர்களிடம் ஆயதங்கள் ஒப்படைக்கப்பட்டதன் இன்றைய நிலையையும் அவர் நாசுக்காகச் சுட்டிக்காட்டினார். தனது குறுகிய நேர உரையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனை குறைந்தது மூன்று தடவைகளாவது விதந்துரைத்திருந்தார். ஆனால் சமூக விஞ்ஞானக் கல்லூரியை உருவாக்கிய உமா மகேஸ்வரனும் கூட அற்ப அறிவுடையவர்களிடமே ஆயதங்களை ஒப்படைத்திருந்ததும் அவர்கள் படுகொலையாளர்களாக மாறியதும் வரலாறு.

மேலும் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி கடவுள் கொள்கையை மறுத்திருந்தபோதும் அதனை உருவாக்கிய ராஜா நித்தியானந்தன் அங்கு கற்ற மாணவர்கள் சிலரும் இன்று ஆன்மீகத்தில் தடம் பதித்திருப்பது இன்னுமொரு முரண்நகை. ஐயப்பன் ஆலயத்தின் குரசாமி கிரிசாமியின் ஆசிஉரையுடள் நூல்வெயீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இந்தக் கழுதை சுமந்த கவிதை அம்புலிமாமா கதைப்புத்தகம் போன்று அழகாக வடிவமைக்ப்பட்டு இருந்ததை மெச்சினார் வெளியீட்டுரையை வழங்கிய மாதவி சிவலீலன். காதலில் திளைத்தும் விடுதலைப் போராட்டம் என்று சென்று வந்து மார்க்ஸிஸக் கருத்துக்களை உதிர்த்தும் கவிதைகளை பல்வேறு தளங்களில் வடித்திருப்பதாக குறிப்பிட்ட மாதவி சிவலீலன், இக்கவிதைத் தொகுப்பு நவீன ஜனரஞ்சக இலக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். யதாரத்தவாதி வெகுஜன விரோதியாகி விடுவது போல் சில கவிதைகள் அவருக்கு விரோதத்தை சம்பாதிக்கலாம் என்பதையும் மாதவி சிவலீலன் சுட்டிக்காட்டிச் சென்றார்.

நூலின் தலைப்பையும் அதில் சொல்லப்படும் பிராணியையும் வரலாற்று ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வாளர் மு நித்தியானந்தன் சகல சமூகங்களிலுமே கழுதை ஒரு கேவலமான பிராணியாகவே கடந்த 2000 ஆண்டுகளாக அதே கழுதை என்ற பெயருடன் சித்தரிக்கப்பட்டு வருவதாகக் கூறி தமிழில் கழுதையை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த பழமொழிகள் பலவற்றைச் சுட்டிக்காட்டினார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை. கழுதை கட்டெறும்பானது, … என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். கழுதை அவ்வளவு கேவலமான பிராணி அல்ல என்று குறிப்பிட்ட மு நித்தியானந்தன் கழுதை சுமந்த கவிதையின் அர்த்தத்தை வினவினார்? கழுதையை நூலாசிரியர் கேவலமாகக் கருதுகிறாhரா என்ற கேள்வி மு நித்தியானந்தனின் ஆய்வில் தொக்கி நின்றது. மன்னாரில் கழுதைக் காப்பகம் அமைக்கப்படுவதையும் அண்மையில் இந்தியாவில் காணாமல் போன கழுதைகளைத் தேடும் சர்ச்சையையும் சுட்டிக்காட்டி அந்தக் கழுதைகள் போல் நாங்கள் எல்லோரும் எதையோ சுமக்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த சுமைகளை அறிவுகளை இல்லாமல் வாழ்க்கையை நாளாந்தம் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் வெற்றுப் பாத்திரத்தில் எதையும் ஊற்றிக் குடிக்க வேண்டுமே ஒழிய ஏற்கனவே அதற்குள் உள்ள ஏதோ ஒன்றுக்குள் ஊற்றி அருந்துவது போல் வாழ்க்கை அமையக் கூடாது எனத் தெரிவித்தார்.

க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பில் 25 வீதமான கவிதைகள் காதலைச் சொல்வதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் மு நித்தியானந்தன் தனக்கு அவருடைய சங்ககாலக் காதலில் உடன்பாடில்லை என்றார். புலியை வேட்டையாடி அதன் பல்லைக் கொண்டுவந்து காதலிக்கு அணிவித்து தான் காதலை வெளிப்படுத்த வேண்டுமானால் நாங்கள் யாருமே காதலிக்க முடியாது என நகைச்சுவையாகத் தெரிவித்தார். இக்கவிதைத் தொகுப்பில் மாட்டுப் பொங்கலுக்கூடாக மிருகவதை பற்றி படைப்பாளியின் சிந்தனையைச் சுட்டிக்காட்டிய மு நித்தியானந்தன் மலையக மக்கள் பற்றிய கவிதையையும் விதந்துரைத்தார்.

போராடுவதற்காக தம்மை அர்ப்பணித்த அப்போராட்டம் சறுக்கிய போது வெளிநாட்டுக்கு வந்து வீழ்ந்த இந்தப் படைப்பாளியைப் போன்றவர்களால் இந்த மண்ணில் ஒட்ட முடியவில்லை. வேற்றுலக மனிதர்களாகவே வாழ்கின்றனர். சகோதரப்படுகொலைகளைக் கடந்து வந்த இவர்களின் காலத்திலேயே போடுதல், போட்டுத் தள்ளுதல், தகடு வைத்தல் போன்ற சொற்பதங்கள் எமது சமூகத்தில் உருவாகிறது. தந்தையொருவர் தனது மகனைத் தேடிச்சென்று முகாமில் விசாரிக்கின்ற போது, அவரைத் போட்டுட்டாங்கள் என்று சொல்லப்பட்ட போது அந்த தந்தைக்கு அது விளங்கவேயில்லை என்பதை மு நித்தியானந்தன் அங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தொகுப்பில் கவிதைகள் ஒழுங்குமறையில் தொகுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நித்தியானந்தன் நூல் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்தில் வருவதன் அவசியத்தையும் விளக்கினார். அவ்வாறு நூல்விபரம் ஆங்கிலத்திலும் இருந்தாலேயே இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ நூலகங்களில் இந்நூல் பதிவுக்கு உட்படுத்தப்படக் கூடியதாக இருக்கும் என்றார். மேலும் நூலில் ஓவியங்கள் காத்திரமானவையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் அவ்வோவியங்களை வரைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேற்கு லண்டன் தமிழ் பள்ளியின் அதிபர் செல்வராஜா உரையாற்றுகையில் மனிதவதை பற்றி மிக இறுக்கமாகக் குறிப்பிடும் படைப்பாளர் திபாவளியைக் கொண்டாடுங்கள் ஆனால் கொன்று கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டினார். இலக்கியச்சுவை காதல்சுவை காமச்சுவை நகைச்சுவை நிறையவே இருக்கின்றது ஆனால் ஆங்கிலப் பதங்களை சொற்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நாடகக் கலைஞர் சரத் சந்திரன் கவிநயத்தோடு பேசுகையில் வாசித்து வாசித்து கவிதை கொண்டு தன் தேடலுக்கு அணை கட்டியதாகத் தெரிவித்தார். வாழ்வின் பல பக்கங்களையும் படைப்பாளர் தட்டியதைச் சுட்டிக்காட்டிய சரத் சந்திரன் வடிவமைப்பின் கவர்ச்சியும் அதற்கான ஓவியங்களும் சொற்களின் வீரியத்தைக் குறைத்து விடுமோ என்று எண்ணத் தோண்றியதாகக் குறிப்பிட்டார்.

கிங்ஸ்ரன் கொன்சவேடிவ் கட்சி கவுன்சிலர் நந்தா பரம் கவிதை; தொகுப்பு பேசுகின்ற அரசியலுக்குள் சற்று ஆழமாகவே ஊடுருவிச் சென்றார். கொன்சவேடிவ் கட்சியின் கவுன்சிலராக இருந்த போதும் அவருடைய அரசியல் பார்வை முற்றிலும் அதன் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு முரணாணதாக இருந்தது. “கருத்தை கருத்தால் எடுத்தியம்ப வேண்டும் கசையடியாலல்ல…” என்ற கவிதையை மேற்கோள் காட்டிய நந்தா பரம் பிரேம்சங்கர் ஏன் உண்மையை மறைக்கிறார். அங்கு கசையடியா நடந்தது. உண்மையில் என்ன நடந்தது. ஆனந்தராஜா, ராஜினி ஆகியோரை இழந்திருக்க தேவையில்லை என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்விமான்களான அதிபர் ஆனந்தராஜா, யாழ் பல்கலைக்கழக மருத்துவ உடற்கூற்றியல் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ராஜினி திரணகம ஆகியோரையே கவுன்சிலர் நத்தா பரம் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

படைப்பாளியின் மாட்டுப்பொங்கல் பற்றிய கவிதையை இன்றைய முதலாளித்துவ சமூகத்தோடு ஒப்பிட்டு நந்தா பரம் வழங்கிய மதிப்பீடு அசத்தலாக அமைந்தது. வருடம் முழுவதும் மாட்டை சுரண்டி உழைக்கும் மனிதன் மாடு கன்று ஈன்றபின்னும் கன்றை மாட்டுக்கருகில் கட்டி வைத்து பால்சுரக்க வைத்து அதனையும் கறந்துவிடுகின்றான். அதற்காக வருடத்தில் ஒருநாள் மாட்டுக்கு பொங்கல் வைத்து மாட்டையும் ஏமாற்றி விடுகின்றான். இதே போல் தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளியைச் சுரண்டி அவன் உழைப்பை கறந்துவிட்டு போனஸ் கொடுத்து ஏமாற்றி விடுகின்றான் என்று நந்தா பரம் சுட்டிக்காட்டி கவிதைத் தொகுப்பை விதந்துரைத்தார். படைப்பாளியின் ஜீவராசிகள் மீதான காருண்யத்தையும் கவுன்சிலர் நந்தா பரம் தன்னுரையில் கோடிட்டுக் காட்டினார்.

ஆழகானவை எல்லாம் மனதுக்கு பிடிப்பதில்லை ஆனால் மனதுக்கு பிடித்தமானவை எல்லாம் அழகாகத் தோன்றும் என கழுதை சுமந்த கவிதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிட்டவர், மாற்றுக் கருத்துக்கு மரணமோ தீர்வு! என்ற படைப்பாளியின் ஆதங்கத்தை பொறுப்புடன் குறிப்பிட்டார். இவ்வாறான போர்க்கால வீரியம் மிகு கவிதைகள் ஈழத்திலேயே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்.

வாசிப்பவர்களை பழைய நினைவுகளுக்கே கொண்டு செல்லும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒரு உள்ளடக்கம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி தன்னுரையை நிறைவு செய்தார் நிவஜோதி யோகரட்ணம்.

“இந்தக் கழுதையை அது சுமந்த கவிதையை அதன் கனவுகளை எல்லாம் எனக்கு நன்கு தெரியும்” என்று கவிநயத்தோடு தன்னுரையை ஆரம்பித்தார் படைபாளனின் பள்ளித் தோழன் ஜெகத் லக்ஷன். 1979இல் யாழ் இந்துக் கல்லூரியில் உருவான நட்பு நாற்பது ஆண்டுகளக் கடந்தும் பயணிக்கின்ற கதையை “கழுதை சுமந்த கவிதை” விமர்சனத்தினூடாக இன்னொரு கழுதையாக பயணித்த கதையை லக்ஸ்மன் தன்னுரையினூடாகக் கொண்டு வந்தார். தம்பையா மாஸ்ரரின் பின் வரிசைப் பிரமுகர்களில் ஒருவரான இந்தப் படைப்பாளிக்கு கம்பராமாயணம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் ‘கொங்கை’ க்கு விளக்கம் தெரியாமல் தவித்து, பிறகு பார்த்தால் மட்ராஸில் சமூக விஞ்ஞான கல்வி படித்ததாகக் கேள்விப்பட்டேன் என அன்றைய வாழ்க்கை போராட்டமானதைச் சுட்டிக்காட்டினார். அங்கு போராட்ட இலங்கியங்கள் படித்து சிவப்புப் புத்தகங்கள் படித்தது தான் மிச்சம் கப்பல் கடைசிவரை வரவில்லை என்றவர் எந்தக் கப்பல் வரவில்லை என்று கடைசிவரை குறிப்பிடவில்லை.

மீண்டும் 1991 இல் லண்டனில் தன் நண்பரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த லக்ஷன் 1995இல் கவிதைத்தொகுப்பை வெளியிட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. வாடகை வீடுகள் மாறியதில் கவிதைகளும் தொலைத்த சோகக் கதையைக் கூறினார். அதன் பின்னும் ஒரு கட்டுக்கவிதைகளோடு வந்து நின்றபோது வெளியிட தன்னால் முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர் ஏன் என்பதை தொக்கில் விட்டுவிட்டார். தற்போது வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பில் தன்னிடம் தந்த கவிதைக்கட்டில்லிருந்த ஒரேயொரு கவிதையே இதில் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக லக்ஷன் குறிப்பிட்டார்.

பிக்பொஸ் பார்க்க நிறைய நேரம் செலவழிக்கும் நாம் பிக்பொஸ்ஸாக யோசிக்க மாட்டோம் என்கிறோம் என மனவருத்தப்பட்டுக்கொண்ட லக்ஷன், மேலும் மேலும் படைப்புகள் எம்மத்தியில் இருந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன்னுரையை நிறைவு செய்தார்.

பேனா நண்பராக ஏற்பட்ட நட்பு சமூக விஞ்ஞானக் கல்லூரியில் சந்தித்து லண்டனில் இன்று வரை தொடர்வதை தயாமயூரன் நினைவு கூர்ந்தார். சமகாலத்தில் விடுதலைக்காகப் புறப்பட்ட தாங்கள்; மனிதநேயம் உயிர் நேயம் கொண்டு துன்பங்கள் துயரங்கள் கடந்து பயணத்தைத் தொடர்வதை தயாமயூரன் நினைவுகூர்ந்தார். தயாமயூரனும் சிறந்த முறையில் கவிதை புனைபவர் என்று குறிப்பிட்ட ராஜா நித்தியானந்தன் அவரும் தனது கவிதை நூலைக் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது எம்மோடு இல்லாத எனது சகோதரன் வசந், பிரேம்சங்கர், தயாமயூரன் ஆகியோர் சமகாலத்தில் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரியில் பயின்றவர்கள். இந்த நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்தபோதும் எனது சகோதரனின் சார்பாக என்னை வரும்படியே பிரேம்சங்கர் அழைத்து இருந்தார். நட்பு இரத்த உறவுகளுக்கும் மேலானதாக அமைந்துவிடுகின்றது. அதுவும் போராட்ட அமைப்புகளில் கருக்கொள்ளும் நட்புகள் இரத்தமும் சதையுமாகிவிடுகின்றது. இக்கவிதைத் தொகுப்பு நிகழ்விலும் அதனைக் காணமுடிந்தது.

இறுதியாக உரையாற்றிய வேணுகோபால் இந்நட்பை விதந்துரைத்திருந்தார். நல்ல நண்பர்கள் அமைவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். “கவிக்கூத்தன் பிரேம் ஒரு கம்பன் கவிதை எழுதுவதில் அவன் ஒரு வம்பன்” என்று குறிப்பிட்ட வேணுகோபால், “அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி அல்ல அடுத்த தேவி” என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி கவிஞ்ஞனுக்கு பொய்யும் அழகு என்று குறிப்பிட்டு தன்னுரையை முடித்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜெஸ்ரீ என்பவர் “கழுதை சுமந்த கவிதை” க்கு ஒரு கவிதை தந்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய கவிக்கூத்தன் பிரேம்சங்கர் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவால் இப்போது தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் இனிமேல் இன்னும் தரமாக கவிதைகளை தர வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாம் மட்டும் அல்ல எமது பிள்ளைகளையும் அவர்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே எழுதத் தூண்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு நிகழ்வை நிறைவுக்கு கொண்டுவந்தார்.

150 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டபம் நிறைந்த கவிக்கூத்தன் க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலை, இலக்கிய, அரசியல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வு கோவிட் கால முடக்கத்திற்குப் பின் இடம்பெற்ற மிகச்சிறப்பான கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வாக அமைந்தது. முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்தரப்பினரும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் புதிய பேச்சாளர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதைத்தொகுப்பு வெளியீட்டை கவித்துவத்தோடு நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமனம் !

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆயிஷா மாலிக், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகள் வரை லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு இதை பரிசீலித்தது.
லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் 4-வது  இடத்தில் ஆயிஷா மாலிக் இருந்தார் . ஆனாலும், பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. இதை தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்தார்.

நியூசிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – மக்களுக்காக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா செய்த செயல் !

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் ஆனது.
வரும் பெப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தினசரி தொற்று அந்நாட்டில் 70-ஐ தாண்டியுள்ளது.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன்.” இவ்வாறு ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.