செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தென்னாசியாவை சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துகிறார் – சந்திரிக்கா பண்டாரநாயக்க பெருமை !

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமராகிறார் !

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.

பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.

இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார்.

அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார்.

ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இருவரும் சேர்ந்து எங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் – சீன ஜனாதிபதிக்கு கிம் ஜோங் வாழ்த்து !

இருவரும் சேர்ந்து எங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஸி ஜின்பிங், மூன்றாவது முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்பு !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இத்தாலி பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி (45), வெற்றி பெற்றார். ஜோர்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​மெலோனி உக்ரைனுக்கு தனது ராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி நேற்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என உறுதியளித்தார்.

 

உயர்அதிகாரியை புகழ்ந்து கீதம் பாட மறுத்த 16 வயது மாணவியை அடித்துக் கொலைசெய்த பாதுகாப்பு படையினர்- ஈரானில் பெண்கள் மீது தொடரும் அடக்குமுறை !

ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் அங்கு ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்குள்ள பெண்கள் ஈரான் அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது.

இந்தப் போராட்டங்களை அந்நாட்டு அரசு மிகவும் மோசமான முறையில் கையாண்டு வருகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்கு மற்றொரு மரணம் நிகழ்ந்து உள்ளது. இந்த முறை வெறும் 16 வயதான மாணவி அடித்தே கொலை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வடமேற்கு அர்டபில் நகரில் உள்ள ஷாஹீத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது மாணவிகள் சிலர் ஈரானின் உட்சபட்ச அதிகாரிகளைக் கொண்ட சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியை புகழ்ந்து பாட மறுத்து உள்ளனர்.

சோதனை என்ற பெயரில் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் சுப்ரீம் லீடரை புகழ்ந்து கீதம் பாட வற்புறுத்தி உள்ளனர். இருப்பினும், அந்த மாணவிகள் பாட முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மாணவிகள் என்று கூட பார்க்காமல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

வகுப்பறையிலேயே பாதுகாப்புப் படையினர் இப்படி மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் 16 வயதான அஸ்ரா பனாஹி பாதுகாப்பு படையினர் தாக்கியதில் அப்படியே சரிந்தார். உயிரிழப்பு இதையடுத்து அவர் உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இருப்பினும், மாணவி உயிரிழந்ததற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஈரான் அரசு இதை மறுத்து உள்ளது. அஸ்ரா பனாஹியின் உறவினரும் மாணவி இதய பிரச்சினை காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஹிஜாப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த செப். மாதம் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் பொலிசார் அவரை கைது செய்தனர். தடுப்புக் காவலில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கோமா நிலைக்கும் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பெண்கள் தலைமுடியை வெட்டியும் ஹிஜாபை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் மட்டுமே இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தில் பெரும் சர்ச்சை !

காலநிலை மாற்றம் உலகளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் படி நியூஸிலாந்து எடுக்கப்பட்டுள்ளது நடவடிக்கை பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஓசியானிய நாடுகளில் ஒன்றான நியூஸிலாந்தில் சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் அங்கு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. அங்கு சுமார் 1 கோடி மாடுகளும் இரண்டரை கோடி ஆடுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் மூலாதாரமாக இந்த கால்நடை வளர்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த கால்நடைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறி சுற்றுசூழலை பாதிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாடுகள் ஏப்பம் விட்டாலோ (Burp) அல்லது வாயு வெளியேற்றினாலோ (Fart) அதற்கு வரி விதிக்க நியூஸிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதேநேரம் இந்த வரிவிதிப்புக்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் இருக்கும் விவசாயிகள் இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவை 2030 வாக்கில் 10 சதவீதமாகவும், 2050 வாக்கில் அதை 47 சதவீதமாகவும் குறைக்க நியூஸிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

“இலக்கை அடைய முடியவில்லை“ – பதவியேற்ற 45 நாட்களில் பதவி விலகினார் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் !

இங்கிலாந்தின்  பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

கல்லெறிந்து கொல்ல தலிபான்கள் திட்டமிட்டதால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 கோடி பெண்களில் 80 சதவீதத்தினர் ஊடகங்களில் பணியாற்றியவர்கள்.

இந்நிலையில், காபூல் நகரில் வசித்த ஒரு இளம்பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இருவரும் மாகாணம், மாகாணமாக தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். கடந்த 13ம் திகதி அந்த இளைஞரைப் பிடித்த தலிபான் -பயங்கரவாதிகள் அவரை துாக்கிலிட்டு கொலை செய்தனர்.

இளம்பெண்ணை பிடித்து, பொது இடத்தில்கல்லால் எறிந்து கொல்லவும் திட்டமிட்டனர். இதை அறிந்த அந்தப் பெண், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இலங்கையின் வடபகுதியில் அதிகரிக்கும் சீனாவின் ஆளில்லா விமானங்கள் – எச்சரிக்கிறது தமிழ்நாடு புலனாய்வு பிரிவு !

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்

இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அயல்நாட்டில் சீனாவின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு  இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அனைத்து நகரங்கள் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடலட்டை வளர்ப்பை தொடங்குவதற்கு சீன இராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகின்றது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்களின் உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் என சில நாட்களிற்கு முன்னர்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு எல்லை பாதுகாப்பு குழு மத்திய புலனாய்வு பணியகத்தை மேற்கோள்காட்டி செய்மதிகள் ரொக்கட்கள் கண்டங்களிற்கு இடையிலான செய்மதிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான சீனா கப்பலின் அம்பாந்தோட்டை  விஜயம் குறித்து எச்சரித்திருந்ததுடன்  தமிழ்நாட்டில் அணுசக்தி நிலையங்கள் துறைமுகங்கள் உள்ளதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்திருந்தது.

முல்லைத்தீவு அனலைதீவு மீசாலை சாவகச்சேரி உட்பட வடக்கின் பல பகுதிகளிற்கான சீன பிரஜைகளின் நடமாட்டம் தமிழ் மீனவர்களின் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற  கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர்என  அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலை இலங்கை மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தலாம் வடக்குகிழக்கு பகுதியில் இந்தியாவி;ன் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர் என   புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

 

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி – பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இன்னமும் உரிமையற்றோராய் !

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்கு எதிராக இன்று (16) ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.