செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அவுஸ்ரேலிய கடற்கரையில் நிர்வாணமாக குவிந்த பெருமளவு மக்கள் – காரணம் என்ன..?

சர்வதேச அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்கள் உடல் மீது படும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் சூரிய உதயத்தின்போது தங்கள் ஆடைகளை களைந்த அவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டும், கடற்கரையில் படுத்துக் கொண்டும், தோலின் மீது சூரிய கதிர்கள் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்விற்காக கடற்கரையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிகமாக நிர்வாண கடற்கரையாக அறிவிக்கப் பட்டிருந்தது. பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்பென்சர் துனிக் பல்வேறு கோணங்களில் இதனை படம் பிடித்தார். இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஸ்காட் மாக்ஸ், இந்த கலை படைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து நமது மக்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், புற்று நோய் காரணமாக யாரும் இறக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.

அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி அஞ்சலி – காணொலி!

நாளை நவம்பர் 27 அன்று அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் லண்டன் சறே பகுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

அமிர்தலிங்கம் காண்டீபனின் நினைவுகள் பற்றி அவருடைய நண்பர்கள் பகிர்ந்துகொண்ட அஞ்சலிக் குறிப்பு.

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது தவறான செயல் – எலான் மஸ்கட்

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறினார்.

இதையடுத்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உலகின் முதல்தர பணக்காரரான எலான் மஸ்க், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கினார். இந்த நிலையில் டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டிரம்ப் மீதான டுவிட்டர் தடையானது ஒரு மிகப்பெரிய தவறு. அது திருத்தப்பட வேண்டும். அவர் சட்டத்தை மீறவில்லை என்றாலும் அவரது கணக்கை தடை செய்ததில் டுவிட்டர் ஒரு பெரிய தவறை செய்துள்ளது என்றார்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 300க்கும் மேல் !

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது.

2 ஆயிரத்து 43 பேர் காயமடைந்தனர். 61 ஆயிரத்து 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

40 பேரைப் பற்றிய விவரங்கள் தெரிவில்லை. மேலும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 31 பள்ளி கட்டடங்களும், 124 வழிபாட்டுத் தலங்களும், 3 மருத்துவமனைகளும் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன.

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரரான வோரியா கஃபூரி கைது !

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரரான வோரியா கஃபூரி, பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

35 வயதான இவரை உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து நீக்கியதுடன், உள்ளூர் கிளப் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதுடன், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அரசாங்கத்தால் கலவரக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், கத்தார் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஈரானின் குர்து சிறுபான்மை மக்களில் கஃபூரியும் ஒருவர், அதனாலையே அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது இன மக்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தார்.

2018ல் கால்பந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கஃபூரி, இந்த முறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஈரானிய அணி தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரிப்பு !

இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த அதிகரிப்புக்கு அதிகரித்துள்ளதாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தி விமான சேவையினை வழமைக்கு கொண்டு வந்தமையும் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் யுக்ரைன் பிரஜைகளுக்கு பிரித்தானியாவில் குடியேறுவதற்கு மூன்று புதிய வீசா திட்டங்களை பிரித்தானியா அறிமுகப்படுத்தியது.

குறித்த திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் பேர் பிரித்தானிவில் குடியேறியுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிலிருந்து அதிகமாக குடிப்பெயர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.

 

இலங்கைக்கு செல்ல முடியாது – வியட்நாமிலுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை !

வியட்நாம்மில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் அந்த நாட்டின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற காதலன் – இப்படி தான் நடக்கும் என 2 ஆண்டுகளுக்கு முன்பே முறைப்பாடு செய்த காதலி !

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார்.

 

இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் திகதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் திகதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

 

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் – ஐ.சி.சியிடம் முறைப்பாடு!

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (23) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு, சர்வதேச கிரிக்கட் பேரவையின் “ஊழல் தடுப்பு பிரிவின்” பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலுக்கு இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு அறிவிக்க தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நற்பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.