செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம் !

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன் 79ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலுள்ளது.

குறித்த பட்டியலில் 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்திலும் சுவிற்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகள், முறையே இரண்டு முதல் ஐந்தாம் இடம் வரை தரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 41.52 சதவீதத்துடன், 91 ஆவது இடத்தில் இந்தியாவும், 34.44 சதவீதத்துடன் 110 ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

தரமான கல்வி வாய்ப்புகள் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் – கல்வி அமைச்சர்

வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

எதிர்காலத்தில் பாடசாலைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது இலகுபடுத்தப்படும்; ஆரம்ப, கனிஷ்ட இரண்டாம் நிலை மற்றும் சிரேஷ்டஇரண்டாம் நிலை மற்றும் 8,000 பட்டதாரிகள் நிதி நிர்வாகத்திற்காக வைக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள 100 கல்வி வலயங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான சேவை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள STEM கல்வி (விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம்) நாட்டின் கல்வி முறையில் பிரபல்யப்படுத்தப்படும் அதேவேளை தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டங்களை வழங்கும் நிறுவனமாக.அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது என்றும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் செயலூக்கமான பங்களிப்பை எதிர்பார்க்கும் அதே வேளையில் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது?

எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது என்பதற்கு இன்னும் தான் எனக்கு விடைதெரியவில்லை. இன்னும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 2006 மாவிலாறு மூடியதிலிருந்து 2009 ஜனவரிவரை இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் புலிகள் இராணுவம் பொதுமக்கள் என கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரமளவிலேயே இருந்தது. யுத்தத்தை அப்போதே நிறுத்துங்கள் மக்களைக் கொல்லக் கொடுத்து யுத்தத்தை வெல்ல முடியாது. கொல்லப்பட்டவர்களுக்கு மனிதவுரிமை கோஷம் எழுப்புவதில் பயனில்லை என பதிவுக்கு மேல் பதிவுகள் எழுதினேன். எழுதினோம். என்ன ஆச்சு. கொத்துக்கொத்தாக கொல்லக் கொடுத்தார்கள். எனக்கு இன்னமும் புரியாத விசயம் கொல்லப்படுவதை நிறுத்துவது நல்லதா? அல்லது கொல்லப்பட்ட பின் அதை வைத்து மனித உரிமைக்காகப் போராடுவது நல்லதா?

இக்கீழுள்ள பதிவை மணியம் சண்முகம் டிசம்பர் 26 அன்று தன் முகநூலில் பதிந்துள்ளார். என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பதிவு மிகவும் ஈர்த்தது. அதிஸ்ட் வசமாக சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்படாமல் ‘அங்காலை அனுப்பப்பட்டவை எத்தனைபேர்? துரதிஷ்டவசமாக இங்கு மனித உரிமைகள் பேசுகின்ற பெரும்பாலானோர் அவர்கள் தனிமனிதர்களாக இருந்தாலென்ன அமைப்புகளாக இருந்தாலென்ன, நாடுகளாக இருந்தால் என்ன? சமாதானத்துக்காக நோபல் பரிசு வழங்கும் நாடாக இருந்தாலென்ன அவர்கள் ஒன்றும் மனித உயிர்கள் மீதும் மனித நேயத்தின் மீதும் அக்கறைகொண்டவர்கள் கிடையாது. அவர்கள் மனித உரிமையை ஒரு அரசயல் ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். அதனால் தான் மனித உரிமைகள் மனிதம் அற்ற வெற்றுக் கோஷங்கள் ஆகிவிட்டது. மனித உரிமையைச் பேசுவோர் தான் எப்போதும் வன்முறையை உற்பத்தி செய்பவர்களாகவும் வன்முறையை ஏற்றுமதி செய்பவர்களாகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளனர். மனிதவுரிமை என்பது கேலிக் கூத்தாக்கப்பட்டு ஆண்டுகள் தசாப்தங்கள் கடந்துவிட்டது.

யுத்தங்கள் உற்பத்தி செய்யப்பட்டால் தான் வருமானம் பெருகும் லாபம் குவியும். அதற்காக மக்கள் கொல்லப்பட வேண்டும். காயப்பட வேண்டும். வரலாறு காணாத துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதேசமயம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி மனித உரிமை நாடகம் போடவேண்டும்.

உங்களுக்கு ஏதாவது விளங்கிச்சு? எனக்கும் அப்படித்தான்.

இப்போது மணியம் சண்முகத்தின் கதையல்ல நிஜத்தைப் பார்க்கலாம்:

31 ஆவது ஆண்டு நினைவாக…..

1991 டிசம்பர் 26 ஆம் திகதி (இதே தினம்) முன்னிரவு நேரம் நல்லூர் பண்டாரிக்குளம் ஒழுங்கையிலுள்ள ஒரு இரண்டுமாடிக் கட்டிடத்தின் கீழ் அறையொன்றில் நான் அடைக்கப்படுகின்றேன். என்னை அங்கே அடைக்கும் போதே அந்த அறையில் ஏற்கெனவே ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர்.

அறைக்குள் நுழைந்ததும் மூத்திரவாடை குப்பென்று அடிக்கிறது. மங்கலான ஒளியுடன் அல்லாடிக் கொண்டிருந்த குப்பி விளக்கின் ஒளியில் அந்த அறையின் மூலையில் ஒரு உலோகச் சட்டி இருக்கிறது. அது மூத்திரத்தால் நிறைந்திருக்கிறது. அதன் மணம் வயிற்றைக் குமட்டுகிறது. சுவர்களில் மூட்டைப் பூச்சிகளையும், நுளம்புகளையும் நசுக்கிய இரத்தக்கறை.

அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபோது, நான் யாழ். நகரின் ஸ்ரான்லி வீதியில் இருந்த எமது புத்தகக் கடையில் இருக்கிறேன். கூட இன்னொரு வயோதிபத் தோழரும் என்னுடன் இருக்கிறார். வழமையாகத் தினமும் வருபவர்.

எனது பெயரைச் சொல்லி ‘நீங்கள் தானா அவர்?’ என வந்த மூன்று பேரில் ஒருவன் கேட்கிறான். எனக்கு அவர்களது தோற்றத்தையும் பாவனைகளையும் பார்த்தவுடன் விளங்கிவிட்டது. இருந்தாலும் கேட்கிறேன்:
‘என்ன விசயம் தம்பி?’

‘ஒரு சின்ன விசாரணை. எங்களுடன் வாருங்கள்’. அவன் எனது முகத்தைப் பார்க்காமல் எங்கோ பாரத்துக்கொண்டு பதில் சொல்கிறான். பின்னர் தான் புலனாய்வுப் பிரிவிலிருந்து வருவதாகக் கூறி தனது அடையாள அட்டையைக் காண்பிக்கிறான். வந்தவர்கள் மூவருக்கும் 20 வயதுக்குள்தான் இருக்கும்.
புத்தகக் கடையைப் பூட்டி திறப்பைத் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர் அங்கிருந்து நேரே தமது இருப்பிடத்துக்கு என்னை அழைத்துச் செல்ல முயல்கின்றனர். நான் ஒருவாறு அவர்களை வலியுறுத்தி சுமார் அரை மைல் தூரத்திலுள்ள எனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு எனது சைக்கிளை நிறுத்திவிட்டு, இரவு உணவுக்காக வாங்கிவந்த பாணை மனைவியிடம் கொடுத்து விடயத்தைக் கூறுகிறேன். மனைவி அழத் தொடங்குகிறார். ஒன்றரை வயது கைக்குழந்தையான எனது மகள் ஒன்றும் புரியாது மிரண்டுபோய் இருக்கிறாள்.

அவர்கள் புத்தகக் கடையைச் சோதனையிட்டது போல எமது வீட்டின் அறைகளுள்ளும் புகுந்து சோதனையிட்ட பின்னர் என்னைத் தமது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார்கள். புறப்படும் போது வாசல்வரை வந்த மனைவியின் முன்னால், ‘என்னை எப்ப விடுவியள் தம்பி?’ எனக் கேட்கிறேன்.
‘அது உங்கடை விசாரணையைப் பொறுத்தது’ எனப் பதிலளிக்கிறான். அவனது சுருதி மாறியிருந்ததை அவதானித்தேன்.

அறைக்குள் இருந்தவர்களில் பலர் தாடியுடன் காணப்படுகின்றனர். அவர்களது உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக முகச்சவரம் செய்யாதது மட்டுமின்றி, குளிக்கவும் இல்லை என்பது புரிந்தது, அவர்களில் ஒருவர் எழுந்து சென்று மூலையில் இருந்த சட்டிக்குள் சிறுநீர் கழித்தார். இனிமேல் நானும் இப்படித்தான் என்பது புரிந்தது.

‘என்ன விசயத்துக்காக உங்களைப் பிடிச்சவங்கள்’ என ஒருவர் என்னிடம் கேட்கிறார்.

‘காரணம் ஒண்டும் சொல்லேல்லை’ என நான் பதில் சொல்கிறேன்.

‘உங்களை என்ன காரணத்துக்காகப் பிடிச்சவை?’ என நான் அவரைத் திருப்பிக் கேட்கிறேன்.

‘உம்மைப் போலைதான் எனக்கும் காரணம் சொல்லேல்லை’ அவர் கூறுகிறார்.

‘எவ்வளவு காலமாக இஞ்சை இருக்கிறியள்?’ திரும்பவும் அவரிடம் கேட்டேன்.

‘ஆறு மாசம் வரும். ஆனா ஒரு வருசம் ஆன ஆக்களும் இருக்கினம்’.

இடையே மேல்மாடியிலிருந்து சிங்களத்தில் ஏதோ ஒலி வருகிறது. நான் ஒன்றும் விளங்காமல் அங்கிருந்தவர்களைப் பார்க்கிறேன். எனது நிலையைப் புரிந்து கெண்ட அவர்களில் ஒருவர்:
‘அது பிடிச்சு வைச்சிருக்கிற சிங்களப் பொலிஸ்காரர் பிரித் ஓதுறாங்கள். இது ஒவ்வாரு நாளும் நடக்கும். என்னத்தை ஓதினாலும் அவங்களை இவங்கள் விடப்போறதில்லை. அங்காலை அனுப்பிப் போடுவாங்கள்’ என்று கூறுகிறார். ‘அங்காலை’ என்பதை சற்று அழுத்திக் கூறுகிறார். நானும் ‘அங்காலை’தான் போகவேண்டி வருமோ என மனம் துணுக்கிறுகிறது.

கொஞ்ச நேரத்தில் ஒரு பையன் கதவைத் திறந்து ஒரு பிளாஸ்ரிக் சட்டியில் சிறிதளவு கொத்து ரொட்டியைக் கொண்டுவந்து அங்கிருந்த கோப்பைகள் ஒவ்வொன்றிலும் கொட்டிவிட்டுப் போகிறான். போகும்போது ‘புதுசா வந்தவருக்கும் குடுங்கோ’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்.

கோப்பைகள் பற்றாக்குறையால் ஒரு கோப்பையில் இருவர் சேர்ந்து சாப்பிடுகின்றனர். என்னையும் அழைக்கின்றனர். நான் ‘பசிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு சுவருடன் சாய்ந்து எனது எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறேன்.

அறைக் கதவு மீண்டும் திறக்கப்படுகிறது. என்னை மாலையில் அங்கு கொண்டு வந்து விட்டவன் என்னைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். நான் எழுந்து அவனுடன் போகிறேன். அந்த வீட்டின் முன்னால் உள்ள காவல் குடிலில் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கியுடன் இருப்பவன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வாசலைப் பார்த்து குறி வைத்தபடி இருக்கிறான்.

என்னை அழைத்துப்போக வந்தவன் ஒரு கறுப்புத் துணியால் எனது கண்களை மூடிக் கட்டிவிட்டு என்னைக் கைகளில் பிடித்து அழைத்துப் போய் தனது சைக்கிளில் ஏற்றுகிறான்.

‘எங்கை தம்பி கூட்டிக்கெண்டு போறியள்?’ எனக் கேட்கிறேன்.
‘எங்களிட்டை வந்திட்டால் கேள்வி ஒண்டும் கேட்கக் கூடாது’ என எச்சரிக்கிறான்.
எனது ஒன்றரை வருட நரக வாழ்வுக்கான பயணம் ஆரம்பமாகிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் 1994 யூன் 6 ஆம் திகதி வெளியே வருகிறேன். அந்த ஒன்றரை வருடங்களில் எனது கண்ணீர் எல்லாம் வற்றி கண் வரண்டுபோய் விட்டது. என்னைப் போன்ற பலரினதும் கண்ணீரும்தான்.

அந்தக் கண்ணீர் எல்லாம் திரண்டு 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கடல் அலைகளாக ஆர்ப்பரிக்கின்றன.

அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்படியான பனிப்புயல் – 60 பேர் பலி !

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்பட்டது.

வெப்ப நிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசியது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பனிபுயலில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்தது. மேலும் பனிபுயல் கடுமையாக தாக்கிய பகுதிகளுக்கு மீட்பு படையினர் சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகிறார்கள். மேலும் பனி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிணங்களையும் மீட்டு வருகிறார்கள். நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனி கட்டிகளுக்கு அடியில் ஏராளமான பிணங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பனிபுயல் வீசியதில்லை என்று கூறப்படுகிறது. பனிபுயல் காரணமாக அமெரிக்காவில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களின் ஓடுபாதையில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு பனி படிந்து இருப்பதால் விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை ரத்து செய்தது. சவுத்வெஸ்டு நிறுவனம் மட்டும் சுமார் 2497 விமான சேவைகளை ரத்து செய்ததாக கூறியுள்ளது. நேற்று மட்டும் 3410 உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். அமெரிக்காவில் பனிபுயலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் நடந்த இந்த சோகச்சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பனிபுயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தென்கொரிய பகுதிகளுக்குள் ஊடுருவும் வட கொரியாவின் ஆளில்லா விமானங்கள்!

தமது வான்பரப்பிற்குள் பல ஆளில்லா விமானங்களை வடகொரியா பறக்கவிட்டதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜியோங்கி மாகாணத்தைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தென் கொரிய வான்வெளியை ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக தெரிவித்தனர்.

ஐந்தாண்டுகளில் முதல் முறையாக வான்வெளிக்குள் ஊடுருவிய ஆளில்லா விமானங்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் தென் கொரியா அறிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவை உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென் கொரிய போர் விமானங்களில் ஒன்றான கே.ஏ.-1 இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தென்கொரிய இராணுவம் கூறியுள்ளது.

இறுதியாக வட கொரியாவின் ஆளில்லா விமானம் ஜூன் 2017 இல் எல்லையைத் தாண்டியபோது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை மிரட்டிய யாழ் பல்கலை சிற்றின்பப் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் ரவுடித்தனம் ஓடியோவில் பதிவு!

டிசம்பர் 24 நத்தார் தினத்துக்கு முதல்நாள் பேராசிரியர் செல்வரத்தினம் சந்திரசேகரம் காலைக்கதிர் ஆசிரியரை மிகக் கீழ்த்தரமான முறையில் பேசிய ஒளிப்பதிவு தேசம்நெற் இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளதாக காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை வினவிய பேராசிரியர் சந்திரசேகரனைக் குறுக்கிட்ட வித்தியாதரன் உங்கள் பெயர் அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லையே என விளக்கி இருந்தார். மேலும் உங்களுக்கு அச்செய்தியில் தவறு இருப்பதாகத் தெரிந்தால் மின் அஞ்சல் மூலமாக அதனைத் தெரியப்படுத்துங்கள் அதற்கு பதிலளிக்கப்படும் என பல தடவை கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் நிதானமாக உரையாடிய பேராசிரியர் எஸ் சந்திரசேகரன் சிறிது நேரத்திற்குள் ஒரு தெருப்பொறுக்கியின் நிலைக்கு கீழிறங்கி தகாத முறையில் சண்டையிடவும் மிரட்டவும் ஆரம்பித்தார்.

அவ்வளவு சூடான நிலையிலும் வித்தியாதரன் நிதானமாக வார்த்தைகளை விடாமல் ஒரு ஆசிரியராக பண்பாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதும் பேராசிரியர் எஸ் சந்திரசேகரம் அதட்டியும் மிரட்டியும் மிருகத்தனமாக நடந்துகொண்டதாக வித்தியாதரனினதும் சந்திரசேகரத்தினதும் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். பேராசிரியர் சந்திரசேகரம் பொருளியல்துறையின் தலைவரும் கூட. இவர்களே இவ்வாறு நடந்துகொண்டால் இவர்கள் வழிகாட்டும் மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய அந்நண்பர் இவர்களிடம் கற்று வடக்கு கிழக்கிலும் அதற்கு அப்பாலும் பணியாற்றுபவர்கள் மக்களுடன் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, டிசம்பர் 24 காலைக்கதிர் பத்திரிகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை சீனாவுக்கு கற்கை நெறிகளுக்கு அனுப்புவது பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. இந்த ஏற்பாட்டை சினாவில் கற்ற பொருளியல் பேராசிரியர் பீடாதிபதி மேற்கொண்டதாக அச்செய்தி குறிப்பிட்டு இருந்தது. அச்செய்தித் தகவல் பேராசிரியர் சந்திரசேகரம் பற்றியதாக இருந்தாலும் அச்செய்தியில் வித்தியாதரனின் அரசியல் குதர்க்கம் இருந்தது. சந்திரசேகரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதில் சிற்றின்பப் பேராசிரியர் தனது மாணவிகளை மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைக்கும் பாணியில் ஒரு ஊடக ஆசிரியரை மிரட்டி இருக்கின்றார். தனது நிலையை உணரும் அளவுக்கு நிதானம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்.

காலைக்கதிர் மட்டுமல்ல யாழ் பத்திரிகைகள் அனைத்துமே இந்திய முகவர்களாக செயற்படுபவை. இந்திய நலன்கள் மீறப்படுமானால் இப்பத்திரிகை ஆசிரியர்கள் அதற்கேற்றாற் போல் செய்தியை தாலித்து வதக்கி காரம் மசாலா போட்டு இந்தியாவிடம் நல்ல பெயர் வாங்கும் வகையில் வெளியிடுவார்கள். இந்த அடிப்படை கூடத் தெரியாமல் பொருளியல்துறைக்கு பீடாதிபதியாக எப்படி பேரசிரியர் எஸ் சந்திரசேகரம் நியமிக்கப்பட்டார். தன் புலன்களை ஆங்காங்கு சிதறவிடாமல் கொஞ்சம் அரசியல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் அவருக்கு நல்லது என்கிறார் அவரிடம் கற்ற முன்னாள் மாணவி.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் பெயர் ஊடகங்களில் அடிபடுவது இது முதற்தடவையல்ல. சில மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விதவையான ஒரு முன்னாள் போராளியின் மனைவியுடன் தகாதமுறையில் நடந்துகொண்டமை பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் சிற்றின்பப் பேராசிரியரானார். மேலும் இவரது பொருளியல் பீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் இளம்குமரன் தன்னுடைய காமுகத்தனத்திற்காக கரும்புடையன் என்ற பட்டம் பெற்றவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை அந்தப்புரமாக்கி வரும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்களின் தொல்லை யாழ் சமூகத்தின் விழுமியங்களுக்கு பெரும் தொல்லையாகி வருகின்றது. இவர்களது காமக்குத்துக்கள் தற்போது மேலும் அதிகரித்து வருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டுள்ளனர். தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள், அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain Barre’ Syndrome’ (‘Guillain-Barre’ Syndrome’) பற்றிய வேலியே பயிரை மேய்கின்ற துரதிஸ்ட்டம் பற்றி த ஜெயபாலன் “தமிழ் கல்விச் சமூகம் ஒரு பார்வை” என்ற நூலை 2010இல் வெளியிட்டு இருந்தார். இந்நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளிவந்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முன்னாள் பேராசிரியர் சண்முகலிங்கன் ஒரு பதவிக்காலத்துடனேயே பதவி இறக்கப்பட்டு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அது போல் கலைத்துறைக்கு பீடாதிபதியாக பெண் பேராசிரியரை நியமிப்பதே கலைத்துறைசார்ந்த மாணவிகளுக்கு ஓரளவு பாதுகாப்பை ஏற்படுத்தும்.

காமுகர்களாக மாறியுள்ள பேராசிரியர்கள் ஒரு பலம் மிக்க அனுபவம்மிக்க ஊடக ஆசிரியரோடு இவ்வளவு மோசமாக நடந்துகொண்டால் இவர்கள் பற்றி முறையிடும் இருபதுக்களின் தொடக்கத்தில் உள்ள மாணவிகளின் நிலை என்ன? மேலும் இம்மாணவிகள் தங்கள் பட்டத்தைப் பெற்று வெளியேற இந்தக் காமுகர்கள் அனுமதி வேண்டும். இதனைப் பயன்படுத்தி இந்த இளம் பெண்களை வேட்டையாட இந்த கல்வியையும் தேசியத்தையும் போர்த்துக்கொண்டு இந்த ஓ(ஆண்)நாய்கள் அலைகின்றன.

ஈரான் சிறைகளில் அடித்தும் – கற்பழிக்கப்பட்டும் துன்புறுத்தப்படும் பெண்கள் – சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விசனம் !

ஈரானில் ‘ஹிஜாப்’ விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. 3 மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டம் ஈரானை உலுக்கியது. ஈரான் அரசு இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

பெண்கள், சிறுவர்கள் உள்பட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அந்த நாட்டின் கோர்ட்டு வழங்கி வருகிறது. இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்ட வழக்கில் கைதாகி டெஹ்ரானில் உள்ள சிறையில் இருக்கும் மனித உரிமை ஆர்வலரான நர்கீஸ் முகமதி என்கிற பெண் சிறையில் பெண்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், சிறையில் உள்ள பெண்கள் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்படுவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு மறுத்துள்ளது.

தமிழினி – ஜெயன் தேவா உறவின் பின்னணி – தேசம் ஜெயபாலனுடன் மனம் விட்டு பேசுகிறார் ஜெயன் தேவா

தமிழினிக்கு தடுப்பு முகாமில் நடந்தது என்ன?

தமிழினி – ஜெயன் தேவா உறவின் பின்னணி என்ன?

தமிழினியை ஜெயன் தேவா ஏன் திருமணம் செய்தார்?

தமிழினியின் கூர்வாளின் நிழலில் – யார் எழுதியது?

தேசம் ஜெயபாலனுடன் மனம்விட்டு பேசுகிறார் ஜெயன் தேவா!

(குறிப்பு: இந்நேர்காணல் 2016 ஓகஸட் 21இல் கிளிநொச்சி திருநகரில் ‘தேசம்நெற்’க்காகப் பதிவுசெய்யப்பட்டது.)

“உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன.”- விளாடிமிர் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 305-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டொலர்கள் ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.