செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இதுவரை 195 பேர் பலி !

துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 195 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலிருந்து சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் என வேதனைகளை சாட்சியாக்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யாதீர்கள் – மக்களை அறிவுறுத்தும் நியூசிலாந்து..?

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு எதிராக நியூஸிலாந்து மக்கள் அறிவுறுத்தப்படவில்லை என நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச சுற்றுலாத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நியூசிலாந்து அங்கீகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்குச் செல்வதற்கு எதிராக நியூசிலாந்து மக்களுக்கு இரண்டு வகையான பயண ஆலோசனைகள் உள்ளன.

‘பயணம் செய்ய வேண்டாம்’ ‘அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்’. என்பதே அவையாகும். தற்போது 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையான பயண ஆலோசனைகள் உள்ளன. எனினும் அதில் இலங்கை உள்ளடங்கவில்லை.

மாறாக, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் இலங்கை இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் நியூசிலாந்து மக்கள் ‘அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ‘என்பதையே தாம் அறிவுறுத்தியதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் பயண ஆலோசனைகள் அண்மையில் ‘இறுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு செய்தி தவறாகக் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.

கொரோனாவில் இருந்து 64 கோடியே 84 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைவு !

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64 கோடியே 84 லட்சத்து 95 ஆயிரத்து 665 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 71 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருநங்கை மனைவிக்காக கர்ப்பமாக இருக்கும் கணவனான திருநம்பி – பெற்றோராகும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி!

இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்ற பகுதியிலுள்ள தம்பதிகளான சஹத் – ஜியா இருவரும் மூன்றாம் பாலின தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் கணவனாக இருக்கும் ஜியாவுக்கும் மனைவியாக இருக்கும் சஹத்திற்கும் முதல் குழந்தை பிறக்கவிருப்பதை புகைப்படங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்ட பின்னர் இவர்களுக்கு என ஒரு குழந்தையை தத்தெடுத்து  வளர்க்க முடிவு செய்து குறிப்பிட்ட ஒரு பிரபல வைத்தியசாலையில் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

அதற்கு மருத்துவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சஹத் தந்தையாகவும் பெண்ணாக பிறந்து கணவனாக இருக்கும் ஜியா தாயாகவும் இருந்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இந்த முறையை சரியாக செயற்படுத்தி தற்போது ஜியா கர்ப்பமாக இருக்கிறார். இவர்களின் அன்பு குழந்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த உலகிற்கிற்கு வரவிருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மூன்று உயிர்களும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன – பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. கடன் தொல்லைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அரசாங்கத்திற்கு ‘கடினமான சூழலை’ அளித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நேதன் போர்ட்டர் தலைமையிலான ஐஎம்எஃப் மிஷன், 7 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியின் ஒன்பதாவது மறுஆய்வுக்காக நிதி அமைச்சர் இஷாக் டார் தலைமையிலான பாகிஸ்தான் தரப்புடன் ஜனவரி 31 அன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.

பெஷாவரில் நடைபெற்ற அபெக்ஸ் கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் போது பாகிஸ்தான் பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார். இந்த குழு தீவிரவாதத்தை கையாள்வதற்கான மிக உயர்ந்த மாகாண அமைப்பாகும்.

பாதுகாப்பு நிலைமை குறித்து பேசுகையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எடுத்துரைத்த ஷெரீப், “இந்த நிலைமை முழு தேசத்திற்கும் முன்னால் உள்ளது” என்று கூறினார்.

“நான் பேசும் இந்த வேளையில், ஐஎம்எஃப் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ளது. அவர்கள் நிதியமைச்சர் இஷாக் தர் மற்றும் அவரது குழுவினருக்கு கடினமான, இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த கட்டத்தில் உள்ள பொருளாதார சவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. நாடு சந்திக்க வேண்டிய ஐஎம்எஃப் நிபந்தனைகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று ஷெரீப் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதையும் அவர் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டு வார முடிவில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 16.1 சதவீதம் குறைந்து 3.09 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பாகிஸ்தானின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேநேரத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை எதிர்பார்த்துள்ள அதே நேரம் மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் அலி சற்று நேற்றைய தினம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது !

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்தார். மேலும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேற்படிப்பு சான்றிதழை தொலைகாட்சிக் நேர்காணல் ஒன்றில் எரிந்தார். மேலும், வீதிகளில் நின்று புத்தகங்களையும் வழங்கி வந்தார்.

இந்த நிலையில், மஷால் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்ற புகாரில் தலிபன் அரசால் கைது செய்யப்பட்டார். கைதின்போது மஷாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தலிபான் அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மஷாலின் கைது ஆப்கானிஸ்தானில் உள்ள சமூக ஆரவலர்களிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி பள்ளிகளிலும் பெண்கள் படிக்க இடைக்கால தடைக்கு தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பைக் கேட்டு, ஆப்கானிஸ்தான் பெண்கள் பலர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், பெண்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கையின் உண்மையான நண்பன் சீனாவே – அமெரிக்காவுக்கு சீனா பதில் !

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான கடன் நிவாரணத்துக்காக சர்வதேச நாணய நிதிய நிபந்தனை விடயத்தில் சீனா காட்டியுள்ள முனைப்பு போதாது என்று நூலன்ட் தெரிவித்திருந்தார்.

எனினும் உண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு ஏதாவது செய்யவேண்டுமானால், தமது நேர்மையைக் காட்ட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழன் அன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில், கருத்துரைத்த, சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர்-மாவோ நிங், அமெரிக்க ராஜதந்திரி கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இலங்கையும் அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளது மற்றும் அதற்காக சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போவதை நிறுத்துமாறு வோஷிங்டனை அவர் எச்சரித்தார்.

உண்மையான நண்பன் என்ற வகையில் சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் உன்னிப்பாகக் கவனித்து அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான உதவிகளை மிகச் சிறந்த முறையில் வழங்கி வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மணிக்கு 160 கி.மீ தூரம் – மின்சார விமானத்தை அறிமுகம் செய்கிறது நாசா !

அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.

இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது. இந்த விமானத்துக்கு எக்ஸ்-57 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமாக எக்ஸ்-57 தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன. இவற்றை தேவையற்ற நேரத்தில் மடித்துக் கொள்ள முடியும். வழக்கமான பெட்ரோலிய எரிபொருளை பயன் படுத்தும்போது, எரிபொருள் தீர தீர, விமானத்தின் எடை குறையும்.

 

பேட்டரியில் இருந்து கிடைக்கும் சக்தி அதன் எடை மற்றும் அளவை பொருத்ததாக உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் சக்தியும், வழக்கமான விமான எரிபொருளில் இருந்து கிடைக்கும் சக்தியைவிட 50 மடங்கு குறைவாக உள்ளது. தற்போது குவாண்டம் தொழில்நுட்பத்தில் பேட்டரிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேட்டரிகளில் லித்தியம் பேட்டரி சிறப்பானதாக உள்ளது. ஆனாலும் அவற்றின் எடை அதிகமாக உள்ளது. லித்தியம் எளிதில் தீப்பிடிக்ககூடியது என்பதால், அது தீங்கு விளைவிக்கும் அபாயமும் உள்ளது.

நாசா உருவாக்கியுள்ள எக்ஸ்-57 மின்சார விமானத்தில் 160 கி.மீ தூரம் வரை பறக்கலாம். இதற்கு ஒரு மணி நேரம் ஆகும். பரிசோதனை முயற்சியாக தயா ரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார விமானம் இந்த ஆண்டு பறக்க விடப்படவுள்ளது.

அமெரிக்காவில் கொடூரமாக தாக்கி கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு – 7 போலீஸார் பணியிடை நீக்கம் !

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.  3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் திகதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார்.

 

அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்தனர். வீட்டுக்கு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் விரட்டிப்பிடித்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். 3வது நாளில் அந்த நபர் இறந்தார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மெம்பிஸ் போலீஸ் நிர்வாகம், இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவர்களில் 5 பேர் கருப்பினத்தவர்கள். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட டைரே நிக்கோலஸின் உடல் நிலையை மதிப்பீடு செய்து போதிய மருத்துவ உதவிகளை வழங்காத காரணத்துக்காக தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான குற்றங்களில் ஈடு படும் நபர்களை விரட்டிப்பிடிக்க ‘ஸ்கார்பியன்ஸ்’ என்ற பெயரில் அதிரடிப்படையை மெம்பிஸ் காவல்துறை 2021-ம் ஆண்டு உரு வாக்கியது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் படை தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியதால், ஸ்கார்பியன் படையை நிரந்தரமாக கலைப்பதாக மெம்பிஸ் காவல் துறை அறிவித்துள்ளது.

தொடர் பொருளாதார பிரச்சினைகள் – இங்கிலாந்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரித்தானியாவில்  5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் இராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், அரசு ஊழியர்கள் என 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தம் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றதால் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 85 சதவீத பள்ளிகள் பாதிப்பை சந்தித்தன.

லண்டனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்த முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், வரிவிதிப்பு முறை நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் சமத்துவமின்மை மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. இதனை நாடு தாங்காது. பிரிட்டனில் முன்பை விட கோடீஸ்வரர்கள் அதிகரித்துவிட்டனர். கோவிட் காலத்தில் கோடீஸ்வரர்கள் நிறைய பணம் சம்பாதித்தனர். அதற்கு ஏற்ப அவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை” என அவர் குற்றம் சாட்டினார்.