செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சிகள் வழங்கத் திட்டம்

school-2.jpgகிழக்கு மாகாண பாடசாலைகளில் சென்.ஜோன் அம்புலன்ஸ் அமைப்பின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதலுதவிப் பயிற்சித் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமது பிரதேசத்திலும் பாடசாலை சூழலிலும் திடீர் அனர்த்தம் மற்றும் விபத்துகள் ஏற்படும் வேளையில் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டுதல் தொடர்பாகவும் செய்முறை பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த கால யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மாணவர்கள் மத்தியில் முதலுதவி சம்பந்தமான போதிய அறிவு இல்லாததினால் விலை மதிப்புள்ள பெறுமதி வாய்ந்த மக்களின் உயிர்கள் பறிபோயின. சரியான தருணத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அதிகமான மக்களை உயிர் இழப்புகளிலிருந்து பாதுகாத்திருக்க முடியும். கிழக்கு மாகாணத்திலுள்ள 13 கல்வி வலயங்களிலும் வலய மட்டத்தில் முதலுதவி பயிற்சி முகாம்களை ஒழுங்கு செய்து பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘யாழ். மக்கள் சுயமாக உழைத்து உண்பதிலேயே பெரும் நாட்டம்’ – பிரதி அத்தியாவசிய ஆணையர்

யாழ்ப்பாண மக்கள் இலவசமாக உணவு பெற்று உண்பதை விரும்பாதவர்கள். அவர்கள் சுயமாக உழை த்து உண்பதிலேயே நாட்டம் கொண்டவர்களென்று அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் லியனாராச்சி தெரிவித்தார். யாழ். மக்கள் தமது விவசாயத்தை மேம்படுத்திக் கொள்வதற்கென கூடுதலாக உரத்தையே பெற்றுத் தருமாறு கேட்கிறார்கள் என்று தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்துக்கு உணவு தவிர்ந்த மரக்கறி வகைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

கப்பலில் மரக்கறிகளை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் (01)  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் உணவுக்குத் தட்டுப்பாடு கிடையாது என்று தெரிவித்த அவர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப் பட்டவர்களுக்காக 1600 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போது மின்சாரத் துண்டிப்பு 15, 30 நிமிடங்கள், மாத்திரமே மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வை அரசு முன்வைக்காத வரையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் விடுதலைப் புலிகளையே ஆதரிப்பர் – ரொபேர்ட் ஓ பிளேக்

robert_blake.jpg
விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதரதமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.  ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது;

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட முடியாது. அரசாங்கம் பேச்சுகளை நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அரசாங்கம் அப்படியான திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சுகளை நடத்தி ஒரு தீர்வுக்கு அரசாங்கம் முன்வரலாம். இதில் வெற்றி பெற்றுவிட்டால் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம்.

கொழும்புக்கு நான் வந்தபோது எண்ணற்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள் நடைபெற்றன. இப்போது குறிப்பிடும்படியான அளவுக்கு அமைதியாக உள்ளது. அத்தகைய நிகழ்வுகள் இப்போது இங்கு இல்லாமல் போனாலும் கிழக்கு மற்றும் வவுனியாவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும்.

அனைத்துக் கட்சிக்குழு என்பது தேக்க நிலையடைந்து விட்டது. ஒரு ஆண்டாகவே 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவே கூறி வருகின்றனர். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு உதவி செய்யக்கூடிய புலம்பெயர் தமிழர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் தொடர்பாடல்கள் நல்ல முறையில் உள்ளபோதும் வடக்கு பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார். வடபகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஐ.நா.சபை குழுவை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமைகளை அறிய அரசாங்கம் உதவ வேண்டும்.

புறக்கோட்டை விமானப்படைத் தலைமைச் செயலகத்திற்கு முன்பு குண்டு வெடிப்பு

blast.jpgபிற்பகல் 5.20 மணியளவில் கொம்பனித் தெருவிலுள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி விமானப்படை தலைமையகத்தினுள் நுழைய முற்பட்ட வேளை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதில் காயமடைந்த 36பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் மூவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக விபத்து சேவைப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி 03 இறந்துள்ளனர். இத்தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு வரையான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவ இடத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று

school-2.jpgகடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.  பரீட்சைப் பெறுபேறுகள் இன்று காலை வெளியாக உள்ளதுடன், மாலையிலேயே இணையத்தளம் மூலம் முடிவுகள் வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.

 http://www.doenets.lk/

வன்னியில் அத். உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது: ஐ. நா. சபைக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த இலங்கை அரசு முடிவு

mahinda-samarasinga.jpgவன்னியில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலைமையை விளக்கி ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வ பதில் கடிதமொன்றை இன்னும் ஓரிரு நாளில் அரசாங்கம் அனுப்பவுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் புலிகளைப் பலப்படுத்துவதற்கோ, படையினரை பலவீனப்படுத்துவதற்கோ இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கி மூனின், ஐ. நா. அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் தெரிவித்துள்ளதைப் போன்று வன்னியில் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் தொடர்ச்சியாக உணவுப் பொருள்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் இறுதிவரை வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்களின் விபரங்களையும் வெளியிட்டார். ‘வன்னியில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்று நிலைமைகளை அவதானிப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்று வோல்ரர் கெலின் கூறியிருக்கின்ற தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

கடந்த 29ம் திகதி வன்னிக்குச் சென்ற உணவு லொறித் தொடரணியுடன் 10 சர்வதேச பிரதிநிதிகள் சென்றுவந்தனர். அங்கு மக்களை நேரில் சந்தித்தபோது, எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.  என்று தெரிவித்த அமைச்சர் வோல்ரர் கெலின் வழமையை மீறி செயற்பட்டுள்ளாரென்றும், எவ்வாறெனினும் அவர் இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் உத்தியோகபூர்வமாக பதில் அளிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

‘ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால், அங்குள்ள எமது தூதரகத்தின் வாயிலாகவே விடயங்கள் கையாளப்பட வேண்டும். என்றாலும், அகதிகளுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் நேரடியாக பாதுகாப்புச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இது பிழையான அணுகுமுறையாகும். இதுகுறித்து நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். ஆயினும், அவரது கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும். இதற்கு பாதுகாப்புச் செயலாளர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையெத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்ற அமைச்சர்,

‘கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக அரசாங்க அதிபர்கள் சமர்ப்பிக்கும் விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு இடங்களிலும் பதிவாகியுள்ளன. எனவே, சரியான தகவல்களைத் திரட்டவுள்ளோம். தற்போதைக்கு கிளிநொச்சியில் 29,197 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,254 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26,670 குடும்பங்களைச் சேர்ந்த 98,707 பேரும் மொத்தம் 2,10,000 பேருக்கு ஜனவரியிலிருந்து 9 வாகனத் தொடரணிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத் திட்டத்திற்கு மேலதிகமாக முல்லைத்தீவுக்கு 24,769 மெட். தொன் உணவுப் பொருள்களும், கிளிநொச்சிக்கு 21,850 மெட். தொன் உணவுப் பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகரம் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்த நடவடிக்கையையும் புலிகளைப் பலப்படுத்தும்படி மேற்கொள்ளப்பட மாட்டாது. டிசம்பரில் மாத்திரம் ஒரு இலட்சம் கிடுகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதேநேரம் இந்தியாவிலிருந்து கிடைத்த உதவிப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள்

abcd.jpgசீனாவில் பீஜிங் நகரில் உள்ள ஒரு காலணிக்கடையில் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள புஸ்ஸின் உருவப்படத்தின் மீது குறிவைத்துக் காலணியை வீசுபவருக்கு விஸேட தள்ளுபடி கிடைக்கின்றது.

உருவப்படத்தின் உயரத்தில் A யிலிருந்து D வரை குறிக்கப்பட்டிருக்கும் இடங்களின் மீது தூரத்திலிருந்து குறிபார்த்து வீசுபவருக்கு காலணி படுமிடத்தைப் பொறுத்து 20-50 வரையிலான தள்ளுபடியில் அக்காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்
.
ஈராக் பிரதமருடன் சேர்ந்து புஸ் பேட்டியளித்த போது ஊடகவியலாளர் ஒருவர் வீசிய காலணி வகைக்கே இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இது பற்றி கடை உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கும் போது ஈராக்கில் நடந்த காலணி எறியப்பட்ட சம்பவம் எங்களைக் கவர்ந்தது. வாடிக்கையாளரின் பொழுதுபோக்கிற்காக தள்ளுபடி அளிக்கின்றோம். அதற்கு உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள் என்று தலைப்பு இட்டுள்ளோம் என்கிறார்.

ஜன. 5-ல் ஹசீனா பதவியேற்பு

haseena.jpg
பங்களாதேஷ் புதிய பிரதமராக இரண்டாவது முறையாக வரும் 5ம் தேதி அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா பதவியேற்கிறார்.

அவர் பங்களாதேஷ் அதிபர் இயாஜுதின் அகமதுவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஹசீனா விரும்பும் நாளில் அவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்று அதிபர் அகமது கூறியதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி 262 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி 32 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு ஜனாதிபதி நஸீத் இன்று இலங்கை வருகை

maldives_president.jpgமாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (2) இலங்கை வருகிறார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 10.30 மணியளவில் வந்தடையும் மாலைதீவு ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்கவுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு பெரு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரி உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தரவுள்ளனர்.

மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5.00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத்துக்கும் இடையிலான இரதரப்பு சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது வரிவாக ஆராயப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விஷேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கவுள்ளார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதிக்கும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை சந்திக்கும் மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் வெளிவிவகார, கலாசார, நீதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

நாளை மறுதினம் காலை (4) மாலைதீவு ஜனாதிபதி தனது இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பவுள்ளார்.

இரவு விடுதி தீவிபத்தில் 60 பேர் உயிரிழப்பு.

bangkok-nightclub.jpgதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். ( 31 ) இந்த விபரீதம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் இந்த பயங்கர தீவிபத்தில் படுகாயமடைந்தனர். பாங்காக்கின் எக்கமாய் மாவட்டத்தி்ல உள்ள சந்திகா கிளப்பி்ல் நேற்று இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தீப்பொறி பற்றி தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த இரண்டு மாடிக் கட்டட கிளப்பும் தீயில் சிக்கி கருகியது. பாதிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலும், தீயிலும் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 212 பேர் படுகாயமடைந்தனர். 30 பேரின் உடல்கள் அடையாளம் முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது. பான்டு வாத்தியக் குழுவினர் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகேதான் முதலில் தீப்பிடித்ததாக போலீஸ் அதிகாரி பிரவீத் கான்ட்வால் கூறியுள்ளார்.

தீவிபத்து நடந்த கிளப் அந்தப் பகுதியில் பிரபலமானது. உள்ளூர்க்காரர்கள் தவிர வெளிநாட்டினரும் பெருமளவில் அங்கு குழுமியிருந்தனர். இறந்தவர்களில் வெளிநாட்டினரும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.