வடக்குத் தெற்கு என்றோ கிழக்கு மேற்கு என்றோ சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்றோ பேதங்கள் இல்லாமல் வாழக்கூடிய ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் அண்மையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்; எமது நாட்டின் பிரதான வளங்களில் ஒன்றாக கடல் வளத்தை எமது ஜனாதிபதி அடையாளங் காட்டியுள்ளார். நமது நாடு சகல வளங்களையும் கொண்டது. நமது நாட்டைச் சுற்றிவர கடல்வளம் உள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறான மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகிறோம்.
நீண்டகாலமாக பயங்கரவாத பிரச்சினைகளால் பயிர் செய்யப்படாத காணிகளில் இன்று கிழக்கில் விவசாயம் செய்யப்படுகிறது. கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த வாய்ப்பு விரைவில் வடபகுதி மக்களுக்கும் கிடைக்கும். இந்த சுதந்திரத்தை மீண்டும் நமக்கு வழங்குவதற்காக தமது, இன்று உயிரைத் தியாகம் செய்த படையினரை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர்களால் தான் இன்று வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
அடுத்தபடியாக உங்களது பிரதேச அமைச்சர் அமீர் அலியின் முயற்சியை நான் குறிப்பிட்டாக வேண்டும். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு எத்தனை கற்கள் கொண்டு கட்டப்படவுள்ளதோ அத்தனை கற்களையும் விட அதிகமான முறை என்னிடம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தைப் பற்றிப் பேசியுள்ளார். பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. நமது முயற்சிகளுக்குத் தடையாக சர்வதேச வலைப்பின்னல்களில் அகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வழியில் சென்றுவிட வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்