செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாக். பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே வீரர்களை அனுப்பத் தீர்மானித்தோம்

pak-2nd-test.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபையில் கிரிக்கெட் அணியினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் காமினி லொக்குகே விளக்கமளித்தார்.

இலங்கை வீரர்களின் நிலைகுறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், அநுரகுமார திசாநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபை முதல்வரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரினர். இதன்போது சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு, பாகிஸ்தானில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சபையிலிருந்து பிரதமர் வெளியில் சென்றுள்ளார்.

அவர் வந்ததும் முழுமையான விபரங்களைத் தெரிவிக்க முடியும் என்றார். இதனையடுத்து சற்று தாமதமாக சபைக்குள் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, லாகூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு விவகாரம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக்காலை 9.15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எமது வீரர்கள் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் பிரவேசித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றல்ல. பாகிஸ்தான் அரசாங்கம் எமது வீரர்களுக்கான பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே நாம் எமது வீரர்களை அங்கு விளையாட அனுப்பத் தீர்மானித்தோம்.மேற்படி சம்பவம் பற்றி நாம் கேள்விப்பட்ட உடனேயே வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தானுடன் கலந்துரையாடினோம். அதனையடுத்து எமது வீரர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. பல தடவைகள் பல நாடுகளில் இதுபோன்று புலிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதில் குறிப்பிடத்தக்கது. எனினும் எமது வீரர்கள் தயங்காது தமது விளையாட்டுக்களை தொடர்ந்தனர்.

இம்முறை பாகிஸ்தானின் உறுதிமொழியை நாம் நம்பினோம். அத்துடன் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இலங்கைக்கு ஏனைய சர்வதேச அணிகள் விளையாடவர பின்வாங்கியபோது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளே எமக்குக் கை கொடுத்தன. அந்த உதவிக்குப் பிரதியுபகாரமாகவே இம்முறை பாகிஸ்தானுடன் விளையாட நாம் முன்வந்தோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட அநுரகுமார திசாநாயக்க எம்.பி பாகிஸ்தானுடன் இம்முறை இணைந்து விளையாடவிருந்த அவுஸ்திரேலிய அணி பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. இத்தகைய சூழலில் பாதுகாப்பில்லை என்ற நிலையிலும் எமது அணியை அங்கு அனுப்ப முற்பட்டதேன்? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே பாகிஸ்தானின் உறுதிமொழியில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம் என்றார்.

புதுக்குடியிருப்பு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளனர்

puthukkudiyiruppu-junction.jpgமேஜர் ஜெனரல் கமால் குனரத்ன தலைமையிலான 53வது படைப்பிரிவின் படையணியான 8வது செயலணி படைப் பிரிவினரும் பிரிகேடிய சாவேன்திர சில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினரும் இன்று (மார்: 03) காலை 9.30 மணியளவில் எல்ரிரிஈ இன் இறுதித் தளமான புதுக்குடியிருப்பு நகரின் சந்தியைக் கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

58வது படைப்பிரிவினரும் 8வது செயலணிப்படையினரும் கடந்த 20ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி புலிகளின் நிலைகளை முற்றாக அழித்துக் கொண்டு இச்சந்தியை அடைந்துள்ளனர். இப்படைப்பிரிவின் படையணிகளான 12 வது கஜபா றெஜிமன்ட், முதலாவது கஜபா றெஜிமன்ட் மற்றும் 4வது விஜயபாகு படையணிகள் தற்பொழுது இச்சந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் எல்ரிரிஈ இன் மீதித் தளங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

புதுக்குடியிருப்பு நகரின் மேற்கு எல்லையில் 10வது மற்றும் 12வது கஜபா படையணிகள் நிலைகொண்டுள்ளன. 6வது, 9வது, 12து கெமுனுப் படையினர் கோம்பாவிலிருந்து புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காக தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 7வது சிங்கப் படையினரும் 10வது, 11வது காலால்படையினரும்  எல்ரிரிஈ இன் நிலைகளை தேடி அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ-35 பாதைக்கு தெற்காக முதலாது கஜபா படையினரும் நான்காவது விஜயபாகு படையினரும் 8வது செயலணி படையனரும் தாக்குதல் நடத்தி புதுக்கடியிருப்பு சந்தியை கைபற்றியுள்ளனர். படையினர் இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிந்திய செய்தி – பாக்கிஸ்தானில் இலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணி மீது துப்பாக்கிச் சூடு. ஆறு வீரர்கள் காயம்! எட்டு பொலிஸார் பலி!

20090302.jpgஇலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணியின் மீது இன்றுகாலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று விளையாட்டில் கலந்துகொள்வதற்கென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கற் அணியைச் சேர்ந்த ஆறு காயமடைந்துள்ளனர்.

இதில் கிரிக்கற் வீரர்களான திலான் சமரவீர,  மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்திய சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர். கிரிக்கற் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்று நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.  

காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் இலங்கைக் கிரிக்கற் வீரர்கள் வருமாறு:-

திலான் சமரவீர,

தாரங்க பரணவித்தான,

அஜந்த மெண்டிஸ்,

சங்ககார ,

மகேல ஜெயவர்தன

சமிந்தவாஸ்

செய்திப் பின்னிணைப்பு

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரியொருவருடன் ‘தேசம்நெற்’ தொடர்புகொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலான் சமரவீரவினதும் உதவிப்பயிற்சியாளர் போல் சாபேர் ஆகியோரின் நிலைமை பாரதூரமானதல்ல எனத் தெரிவித்தார். ஏனைய கிரிக்கற் வீரர்கள் 5 வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் தொலைக்காட்சிச்சேவை இது குறித்து தகவல் தெரிவிக்கையில்,  வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதவர்களாலே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இறுதியாகக் கிடைக்கும் தகவல்களின்படி இத்தாக்குதலில் எட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதம்

பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து, வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கெட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான்,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இன்று இரவுக்குள் நாடு திரும்புவர் எனவும் துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை வீரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்னரே அவர்கள் பாகிஸ்தான் சென்றதாகவும் அர்ச்சுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது முதல் தீவிரவாத தாக்குதல் 

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:

இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர், இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி.  மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.

cricket_pakisthan.jpg

pak-2nd-test.jpg

கட்டுநாயக்கவில் சுட்டு வீழ்த்தப்பட்ட தற்கொலை விமானத்தின் விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார்

ruban.jpgகட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடாத்த வந்த விமானம் தரையில் உள்ள படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அவ்விமானத்தை செலுத்திவந்த புலிகள் இயக்க தற்கொலைதாரி ரூபன் நீர்கொழும்பு மஜித்திரேட் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

30 வயது முருகப்பிள்ளை சிவரூபன் என அவரது உறவினரும் முன்னாள் புலிகளியக்க உறுப்பினருமான 29 வயது இளைஞர் ஒருவரால் நீர்கொழும்பு பிரேத அறையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளார். சாட்சியின் தகவல்களின் படி முருகுப்பிள்ளை சிவரூபன் இடைக்காடு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரைப் படித்தவர் எனவும் பின்னர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார் எனவும் தெரிகிறது. அவரது தகப்பனார் புற்றுநோயினால் பாதிப்புற்று வன்னியின் கிழக்குப்பகுதியில் வாழ்வதாகவும் சகோதரி ஒருவர் ஜேர்மன் நாட்டில் வாழ்வதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

கிழக்கு மாகாண அமைச்சர்கள் கலந்துகொண்ட வைபவத்தில் துப்பாக்கிச் சூடு; பெரும் பரபரப்பு

gun.jpg காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வைபவமொன்றில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், துரையப்பா நவரெட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாகாண அமைச்சர் நவரெட்ணராஜாவின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியவருகிறது.

மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் மாகாண விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.நவரட்ணராஜா கலந்துகொள்ளும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நேற்று காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களில் நடைபெற ஏபற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காத்தான்குடி கமத்தொழில் விவசாய நிலையத்தில் அடிக்கல் நடும் விழாவில் மாகாண அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே ஒரு மீற்றர் தூரத்திற்குள் நின்ற மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக திடீரென்று வெடித்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. ரவைகள் மேலே நோக்கி பாய்ந்ததால் அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், நவரட்ணராஜா மற்றும் அதிதிகள், பொதுமக்கள் எந்தவொரு ஆபத்துமின்றி உயிர்தப்பினர்.

உடனடியாக கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் வெடித்த நான்கு ரவைகளையும் மீட்டெடுத்துள்ளனர். பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து நிகழ்வுகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. 

ஆயுதங்களைக் களைய த.ம.வி. புலிகள் உத்தேசம்

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இன்னும் சில தினங்களில் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் களையவுள்ளதாக அதன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். எதிர் வரும் சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தமது ஆயுதங்களைப் பாதுகாப்பு தரப்பிடம் வைபவ ரீதியாகக் கையளிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது கட்சியின் முழுமையான ஜனநாயகத்தையும் அரசியலையும் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதாகக் கூறும் அவர், தமது அமைப்பிலுள்ளவர்களுக்குத் தொழிற்பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. வைகோ

26-vaiko.jpg பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து வைகோ, இன்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசலில் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்  தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை பாளையங்கோட்டை ஜெயில் வாசலில் இருந்து தொடங்குகிறேன் என்றார்.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது!

sri-lanka-parliment.jpg பாராளுமன்றம்  இன்று  காலை  மீண்டும்  கூடுகிறது.  இன்றைய  அமர்வின்  போது   இலங்கை மின்சாரசபை திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியு. டி. ஜே. செனவிரத்ன இப்புதிய சட்டமூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.

இந்தியாவில் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டமாக மக்களவைத் தேர்தல்

election_ballot_.jpg இந்தியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் 5 கட்டமாக நடக்கவுள்ளது. மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 16ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 23ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30ம் தேதியும், 4வது கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும் நடக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டமாகவும், பிகாரில் 4 கட்டமாகவும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் 3 கட்டமாகவும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற 15 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

இந்த அறிவிப்புகளை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி டெல்லியி்ல் வெளியிட்டார்.

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் 124 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 23ம் தேதி 141 தொகுதிகளுக்கும், ஏபரல் 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 85 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கோபால்சாமி அறிவித்தார். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 71.40 கோடியாகும். இது கடந்த தேர்தலைவிட 4.3 கோடி அதிகமாகும்.

மொத்தம் 40 லட்சம் அரசு ஊழியர்கள், 21 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நாடு முழுவதும் மொத்தம் 8,28,804 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த மக்களவை ஜூன் 2ம் தேதிக்குள் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் அதிகமாகும். அதேபோல பழங்குடியினருக்கான தொகுதிகள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட 6 தொகுதிகள் அதிகமாகும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் பதவி்க் காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராவார்.

இதனால் முதல் கட்ட தேர்தலையடுத்து கோபால்சாமி விலகிவிடுவார். அடுத்த 4 கட்டத் தேர்தல்கள் சாவ்லாயின் தலைமையில்தான் நடைபெறும்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

medicine-01.jpgவவுனியா நலன்புரி நிலையங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 31,000 பேர் வவுனியாவில் 13 நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு குறைந்தது பத்துப்பேருக்கு மலசல கூடம் தேவையாகும். ஆனால், இங்கு 100 பேருக்கு ஒரு மலசல கூடம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக நிவாரண பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் விநியோகம் நடைபெறுகின்றது. ஆனால், தற்போதைய வெப்பகாலத்தில் கூடுதலான நீர் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெப்பகாலத்திற்கு பொருத்தமற்ற கூடாரங்களிலும் தகரத்திலான கொட்டகைகளிலும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பல இடர்களை அனுபவிக்கவேண்டியுள்ளது.

வந்தவர்களை தங்கவைக்க தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.செட்டிகுளத்தில் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வைத்தியகுழுவினர் நலன்புரி நிலையங்களுக்கு தினமும் விஜயம் செய்துவருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

நலன்புரிநிலையத்திற்குள் நுழைவதற்கு மாவட்ட செயலகத்தினால் பாஸ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.