செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பெண்கள் கெளரவத்துடன் வாழும் சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மகளிர் தின செய்தி

International_Women_Dayபெண்கள் கெளரவமாகவும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவிப்பதற்கு அனை வரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் என்ற வகையில் புதிய உத்வேகத்துடன் எழுந்து நிற்கும் இந்த வேளையில் சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை விடுக்கக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“பெண் சமூகத்தின் கெளரவத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பெண்கள் மீதான இம்சைகளை ஒழிப்பதற்கு ஒன்றுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானதெனக் கருதுகிறேன்.

சமூக கட்டமைப்புக்கு வலுவூட்டும் குடும்பம் என்ற அங்கத்தின் முதன்மையான இடம் தாய்க்கு உரியதாகும். மஹிந்த சிந்தனையின் மூலம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அவளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தாலும், வறுமையினாலும், மதுபானத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அரசாங் கம் இதனைப் புரிந்துகொண்டுள்ளது. “மதுவுக்கு முற்றுப் புள்ளி” வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நிம்மதி அடையும் பெண்கள் அநேகர்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான இராணுவ கட்டமைப்பு புலிகளை வெற்றிகொள்ள உதவியது – ஜனாதிபதி

mahi-trnco.jpgமரபுவழி இராணுவத்துக்கு கெரில்லாயுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் பொய்யாக்கியுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைப் படையினரை மரபுவழி இராணுவமாகவன்றி மனிதாபிமானப் படையினராகக் கட்டியெழுப்பிய தன் மூலமே வடபகுதி நடவடிக்கையில் வெற்றிவாகை சூட முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விமானப் படையினருக்கு வர்ணவிருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை சீனன் குடாவில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். விமானப் படையின் நான்கு பிரிவுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் 30 உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

தாய்நாட்டின் ஐக்கியத்தையும், கெளரவத்தையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வருகிறார்களென்று பாராட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் உலகப் படையினருக்கு ஒரு முன்மாதிரியாக இலங்கை விமானப்படையினர் திகழ்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எதிரியின் இலக்கை மாத்திரம் துல்லியமாக இலக்கு வைக்கும் நமது விமானப் படையினர் ஒரு போதும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுக் கட்டடங்களை இலக்கு வைத்தது கிடையாது. அந்தளவுக்கு எமது படையினர் ஒழுக்கமுடையவர்களாக உள்ளனர். உலகின் முதலாந்தர பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தை எமது படையினர் இன்று மண்டியிட வைத்துள்ளார்கள். இதில் முக்கிய பங்களிப்பை விமானப்படையினர் ஆற்றியிருக்கிறார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைத்தளபதிகள் அவர்களின் பாரியார்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்:- வடக்கில் எமது இராணுவ முகாம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது விமானப் படையினர் பாரிய சேவையை வழங்கியிருக்கிறார்கள். படையினர் போக்குவரத்து, கடல் கண்காணிப்பு போன்ற விடயங்களில் அளப்பரிய சேவைகளைப் புரிந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து நிலப்பரப்புகளை மீட்பதில் தரைப்படையினருக்குப் பக்கபலமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தரை, கடல் ஒரு பிரச்சினையே அல்ல. புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், தற்கொலைப் படகுகள் போன்றவற்றை அழிப்பதில் பாரிய பணியாற்றியிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வன் போன்ற தலைவர்கள் மெளனமாக்கப்பட்டபோது எமது விமானப்படையினரின் திறமைக்கே பாராட்டு கிடைத்தது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை 45 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

sl-army.jpgஇலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அமெரிக்க வேலையில்லாதோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது

worker.jpgஅமெரிக் காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

புதுமாத்தளனில் பட்டினிச்சாவு என்ற செய்தி முல்லை மருத்துவரின் அடிப்படையற்ற கருத்து – சுகாதார அமைச்சின் செயலர் விளக்கம்

logo_health.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.

எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.

எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.

எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.

இறையாண்மைக்கு எதிரான கருத்து: நாஞ்சில் சம்பத் கைது

nanjilsampath.jpgமதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை சென்னையில் கைதுசெய்யப்பட்டார்.  இம்மாதம் முதல் தேதியன்று திருப்பூரில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனித் தமிழ்நாடு உருவாகவேண்டும் என்றும், டெல்லியில் அதன் தூதரகம் அமைய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அதற்குப் போராட வேண்டும் என்றும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுமாத்தளன் பகுதிக்கு 500 மெ. தொன் உணவு – இன்று தரையிறக்கம்

ship.jpgபுதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

29 டொலருக்கு மசகு எண்ணெயினை கொள்வனவு செய்யும் அரசு பெற்றோலை 120 ரூபாவுக்கு விற்கின்றது – ரவி எம்.பி.

ravi-karunanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். எரிபொருள் தொடர்பான சிறிய கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் உலகத்தையே சுற்றிவருவதாகவும் ரவி எம்.பி. பரிகாசம் செய்தார். பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வாய்மூல வினா விடைக்கான நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ரி.எம்.வி.பி. அமைப்பு இன்று அரசிடம் ஆயுதங்கள் கையளிப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவை கலைப்பது என்று ஏற்கனவே எடுத்த முடிவின் பேரில் இன்று உத்தியோகபூர்வமாக தம்மிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளது. மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற இது தொடர்பான வைபவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னான்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபர் எட்வின் குனத்திலக்கா,மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசூரிய ,மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் ,மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்

தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவு இன்றுடன் கலைக்கப்பட்டு விட்டதாக முன்னதாக இங்கு உரையாற்றிய அந்த அமைப்பின் ஊடக பேச்சாளரான ஆசாத் மௌலானா கூறினார் இதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடொன்று நகர சபை மண்டபத்தில் நடை பெற்றது. இம் மகாநாட்டில் ஐ.நா வின் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் உள்ளுர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

இலங்கையில் தமிழ் ஆயுத அமைப்பொன்று இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக ஆயுதங்களை கையளிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும். 1987 ம் ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் படி விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புகள் ஆயுதங்களை கையளித்திருந்தாலும் அந்த கையளிப்பானது இந்திய இராணுவம் ஊடாகவே இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்;டது  இக் காலப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் இல்லாத போதிலும் டெலோ ,ஈ.பி.ஆர்.எல்.எப். ,புளொட் ஆகிய அமைப்புகளும் வைபவ ரீதியாக ஏற்கனவே தம் வசமிருந்த ஆயுதங்களை இப்படி கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் பிரதேசங்களில் சகல சபைகளையும் கைப்பற்றியதோடு நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட்டு தமது கட்சியைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவாகும் வாய்ப்பை பெற்றிருந்தது. மட்டக்களப்பில் இன்று நடை பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத கையளிப்பின் போது 56 துப்பாக்கிகள் ,சுமார் 6000 துப்பாக்கி ரவைகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பிலிருந்து வெளியாகிய தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு :

ரி 56 ரக துப்பாக்கிகள் 52 அதற்கான மகசீன் 168, மற்றும் ரவைகள் 2106
எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கி 01, ரி 81 ரக துப்பாக்கி 01, ஏ.கே.எல்.எம். ஜி. ரக துப்பாக்கிகள் 02, ஆர்.பி.ஜி. உட்பட ஷெல்கள் 46, வெளிச்ச குண்டுகள் 16
பி.கே. ரவுன்டஸ் 4650, கைக் குண்டுகள் 02 உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.

போராட்டம் தொடரும் – வக்கீல்கள்

hc-clash.jpgசென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே நடந்த மோதலில் இரு தரப்பினருக்குமே தொடர்பு உள்ளது என்று கூறியுள்ள ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை நிராகரிப்பதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற கலவரம் குறித்து விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் வக்கீல்களே. அதேபோல போலீஸாரும் எல்லை மீறி நடந்து கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திற்கே மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை பாரபட்சமாக இருப்பதாக கூறி அதை வக்கீல்கள் நிராகரித்துள்ளனர்.