செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘இரு நாள் மோதல்களில் 282 பேர் காயம்’- மருத்துவ அதிகாரி

puthukkudi.gifஇலங் கையின் வடக்கே மோதல்கள் நடக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குகின்ற புதுமாத்தளன் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மாத்திரம் எறிகணை வீச்சுக்களால் காயமடைந்த 282 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சந்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதுமாத்தளன் மருத்துவமனையில் 600க்கும் அதிகமான நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புதுமாத்தளனில் இருந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக்கு காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடனான கப்பலில் பயணித்த காயமடைந்தவர்கள் 5 பேர் வழியிலேயே மரணமடைந்ததாக திருகோணமலையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் மூன்று பெண்களும், ஒரு ஆணும் ஒரு குழந்தையும் அடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணசபை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கியுள்ளது

கிழக்கு மாகாணம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இன்றுவரை 1,242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 269 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மட்டக்களப்பு கச்சேரியில் சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

முதலமைச்சரின் செயலாளர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில், போர்ச் சூழலினால் அழிந்து சிதைவுற்றிருக்கும் இம் மாகாணத்தினை விரைவாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பினை முழுமையாக செய்து உதவுதல் வேண்டும்.

இம் மாகாணத்தில் 1,000 வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஐ.ஓ.எம்.நிறுவனத்தின் அனுசரணையில் தொழிற் பயிற்சியினை வழங்கி வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணசபை ஸ்தாபிக்கப்பட்டு 10 மாதங்களே ஆகின்றன. அதற்குள் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் 1,000 கிலோ மீற்றர் வீதி 1,760 மில்லியன் ரூபா செலவில் ஜெய்கா உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கையும் அபிவிருத்தி கண்டுள்ளது. 2008-2009 காலப்பகுதியில் பெரும்போக நெல்செய்கையாக இம் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் நெற் பயிரிடப்பட்டு அறுவடையும் முடிவடைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 200 மில்லியன் நெக்டெப் திட்ட உதவி இதற்கென பெறப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருந்தகங்கள் இப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்டிருப்பதுடன் கணிசமானோருக்கு இதில் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் மீன்பிடித்துறையினை முன்னேற்றும் வகையில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏ5 வீதி திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தமது போக்குவரத்தினை இலகுவாக மேற்கொள்ளவும் வழிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொப்பிகலை, வாகரை பகுதியிலுள்ள 15 கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் 1,000 கணினிகளை இந்திய அரசாங்கம் இப் பிரதேசப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கினியாகல மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ; 4 மின்மாற்றிகள் நாசம்

அம்பாறை, இங்கினியாகல பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திங்கட் கிழமை காலை ஏற்பட்ட பாரிய தீயினால் நான்கு பாரிய மின்மாற்றிகள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன.  இதனால் பாரிய நஷ்ட மேற்பட்டுள்ளதுடன், அம்பாறையின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.

இங்கினியாகலயில் நீர் மின் உற்பத்தி நிலையமொன்றுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்திலேயே  தீவிபத்து ஏற்பட்டது.  இதையடுத்து விமானப்படை, பொலிஸார் மற்றும் இராணுவ தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

மின் நிலையத்திலுள்ள தீயணைப்பு பிரிவால் பாரிய தீயை உடனடியாக அணைக்க முடியாது போகவே தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டெரியத் தொடங்கியது.  வெளியிலிருந்து தீயணைப்பு பிரிவுகள் அங்கு வந்து சேருவதற்கிடையில் பாரிய தீ பரவி மின் நிலையதிலுள்ள, குறைந்தது நான்கு பிரதான மின்மாற்றிகளை முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த விமானப்படையினர் தீயணைப்பு பிரிவு காலை முதல் பலமணி நேரமாக தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்தது. பொலிஸ் தீயணைப்புப் பிரிவும் இணைந்து இந்த தீயணைப்பு முயற்சியில் நீண்ட நேரம் போராடின. எனினும் அதற்கிடையில் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை தீ முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது. இதனால் பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இங்கு ஏற்பட்ட தீயை அடுத்து அம்பாறை மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன்  பின்னரே அக்கரைப்பற்று, திருக்கோவில், கோமாரி பகுதிக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் (30) மாலை வரை மின்விநியோகம் தடைப்பட்டே இருந்தது. மின் உற்பத்திநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பாரிய தீ பரவி மிகப் பெரும் நஷ்டத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக மின்சார சபையும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

army-refg.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் உக்கிரமாக மோதல்கள் நடைபெறுகின்ற போர்ப்பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதுவரையில் இவ்வாறு 61 ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வவுனியா நகரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கிடையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்குச் செல்லும் முக்கிய வீதியான ஏ9 வீதியில் படையினரும், யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், இராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் போது, இந்த வீதியின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது

வரி விலக்களிப்பின் மூலம் அரசுக்கு ரூ.8 பில். நஷ்டம்

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக 2008ஆம் ஆண்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருள்களுக்கான வரி நீக்கப்பட்டு வர்த்தக பண்டங்களுக்கான வரி மட்டுமே விதிக்கப்பட்டதாக அமைச்சர் நேற்று (31) நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு 24% ஆக இருந்த பணவீக்கம், தற்போது 7% ஆகக் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் தொடர்ந்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்துக்கு 1200 மெட்ரிக் தொன் உணவூப் பொருட்கள் – நாளை அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு!

green-ocean.jpgபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 1200 மெட்ரிக் தொன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாளை ஏப்ரல் 01 திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படையத் தளபதிகள் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க இப்பொருட்களை பாதுகாப்பு வலயத்துக்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி பணிப்பரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் மேற்பாவையில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள், திருகோணமலை அரச அதிபர், மற்றும் சர்வதேச செஞ்சிலுவை அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி அத்தியாவசிய சேவைகள் ஆனைணாயர் நாயகத்தின் ஏற்பாட்டில் சிட்டி ஒவ் டப்ளின்| என்ற கப்பல் மூலம் 1200 மெட்ரிக் தொன் உணவவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசிää பருப்பு, சீனி, மரக்கறி எண்ணெய், கோதுமை மா, குழந்தைப் பாலுணவு, சரக்குத்தூள், சோயா,வெள்ளைப்பூடு, தேயிலை,  மரக்கறி வகைகள் மற்றும் சுகாதார உபகரணங்களும் சுகாதரா அமைச்சினால் வழங்கப்பட்ட 55 வகையான மருந்து வகைகளும் இன்று புறப்படும் கப்பலில் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அத்துடன் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருட்களும் இதில் அனுப்பிவைக்கப்படும். படுக்கை விரிப்புக்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள்,  நுளம்பு வலைகள்,  சமையலறைப் பயன்பாட்டுப் பொருட்கள்,  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள்,  துவாய்கள் மற்றும் சவர்க்காரம் என்பன இதில் அடங்கும்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் மேலும் ஒரு தொகை உணவுப் பொருட்களை இதே கப்பலில் மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

4பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் மீது வழக்கு

vijayakanth1.jpgசிவகங்கை மக்களவை  தொகுதியில் தேமுதிக, தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுவதற்காக சில இடங்களில் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

ஆனால் அவர் அனுமதி வழங்கப்படாத இடங்களான மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட், திருப்புவனத்தில் பிள்ளையார் கோவில், திருப்பாச்சேத்தி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். அவரது வேனுடன் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதற்காக மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் போலீசாரால் விஜயகாந்த் மீது 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 180 (அனுமதியின்றி பேசுதல்), 188(தேர்தல் அதிகாரி உத்தரவை மீறுதல்), 71ஏ- போலீஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்!

கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பாட்டியாலா தொகுதியில் நிற்க ஏற்பாடு செய்து வருகிறார்.

குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை

shootout-home.jpgநீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (42). யாஹூ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவர் பணியாற்றியுள்ளார். மனைவி ஆபா (34) மற்றும் அகில் என்ற 11 வயது மகன், நேஹா என்ற 4 வயது மகளுடன் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வந்தார் தேவராஜன்.

ஆபாவின் சகோதரர் அசோகன் (35). இவரது மனைவி சுசித்ரா (25). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. அசோகனும் என்ஜீனியர். அசோகன் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக அசோகனுக்கும், தேவராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந் நிலையில், புதிய பிளாட் வாங்கினார் தேவராஜன். இதற்கு அண்ணன் குடும்பத்தை அழைத்திருந்தார் ஆபா. இதற்காக அசோகன் தனது மனைவி, மகளுடன் சான்டா கிளாரா வந்திருந்தார்.

நேற்று இரவு நடந்த விருந்தின்போது திடீரென தேவராஜனுக்கும், அசோகனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கைத் துப்பாக்கியை எடுத்து அசோகன் குடும்பத்தினரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார் தேவராஜன்.

இதில் அசோகன், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து விழுந்தனர். இதைப் பார்த்து ஆபா ஓடி வந்து தடுக்க முயன்றார்.அப்போது ஆபா, தனது இரு மகள்கள் ஆகியோரையும் சுட்டார் தேவராஜன். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர். பின்னர் தேவராஜன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரத்தம் கொட்டிய நிலையி்ல் ஆபா வீட்டுக்கு வெளியே வந்து உதவி கோர முயன்றார். ஆனால் முடியாமல் அப்படியே விழுந்து விட்டார். படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் தேவராஜன், சுசித்ரா, அசோகன், நேஹா, அகில் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தனர். கைக்குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் அது சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தி்ல் மிதந்த ஆபா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இருவர் இன்று சுட்டுக்கொலை

Regie_Varsa
திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில்  அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின்  இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்றுடன் சந்தேக நபர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.