செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உண்ணாவிரதத்தை முடித்த பெண்கள் – தேர்தல் பிரசாரத்தில்….

womens-fast-ends.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக சென்னையில் பெண்கள் கூட்டமைப்பு நடத்தி வந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பேர் கடந்த 13-ந் தேதி முதல் மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 5 பெண்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை மற்றும் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக போராட்டக் குழு தலைவர் பேராசிரியை சரஸ்வதி அறிவித்தார்.

இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், சோனியாவே போரை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் நடத்திய இந்த போராட்டத்தை சோனியா காந்தி தாயுள்ளத்தோடு செவி சாய்ப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவரிடம் இருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக காங்கிரசின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இன்னும் 2 நாட்களில் சோனியாவிடம் இருந்து உரிய பதிலை பெற்றுத் தருவதாக கூறியதை ஏற்று 5 நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வரவில்லை. எனவே தமிழினத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்த கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டோம்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைத் தேர்தலை நோக்கி முழுமையாக திருப்பிய நிலையில் நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகத்தின் கவனத்தை தமிழின அழிப்புக்கு எதிராக திருப்பி இருப்பது எங்களுக்கு நிறைவை தருகிறது. கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் களம் இறங்கியுள்ள நிலையில், நீதிபதி கிருஷ்ணய்யர், மேதா பட்கர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வது, தொடர் உண்ணாவிரதம், தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் பிரசாரம் ஆகியவற்றை செய்ய இருக்கிறோம்.எங்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இடம் தந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு நன்றி கூறுகிறோம் என்றார் அவர்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகி மீனா கிருஷ்ணசாமி, உண்ணாவிரதம் இருந்த 15 பெண்களுக்கும் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

ஜப்பான் உதவியில் அநுராதபுர போதனா வைத்தியசாலையை மேம்படுத்த திட்டம்!

nimalsiripaladasilva.jpgஅநுராத புரத்தில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான வசதிகளை மேம்மபடுத்த ஜப்பான் நாட்டின் உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். இத்திட்டத்தில் இர்ண்டாம் கட்ட நடவடிக்கைக்கு 390 மில்லியன் ஜப்பான் யென் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரி

anura.jpgதேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரியொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்திருந்தார்.

அரசாங்க திரைப்படப் பிரிவுடன் இணைந்தாக இது இயங்கும். இதன் இயக்குணநராக பேராசிரியர் தர்மசேன பதிராஜ நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியால் நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை இவருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா அரச நிதியத்திலிருந்து சம்பளமாக வழங்கப்படும்.

இந்தியாவுக்குள் 31 தீவிரவாதிகள் ஊடுருவல்

india.jpgபாகிஸ் தானில் இருந்து,  இந்தியாவுக்குள் 100-ல் இருந்து 120 பேர் வரை கொண்ட ஒரு கூட்டத்தினர் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதி வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.

இவர்களில் 31 பேர் தீவிரவாதிகள். மற்றவர்கள், அவர்களுக்கு வேண்டிய வெடிபொருள், ஆயுதங்கள், உணவுப்பொருள் போன்றவற்றை சுமந்து செல்லும் போர்ட்டர்கள் மற்றும் வழிகாட்டிகள். இந்த தகவலை, இந்திய ராணுவ பிரிகேடியர் குர்மீத் சிங் ஸ்ரீநகரில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்திய பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் 18 நாள் முதல் 90 நாள் வரை பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள்.

குரேஸ் பகுதியில் இப்போது அதிக அளவில் பனிக்கட்டிகள் உருவாகி உள்ளன. எனவே, எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு விட்டன.இதை பயன்படுத்தி, தீவிரவாதிகள் அந்த வழியாக இந்தியாவுக்குள் வந்து விட்டனர்” என்றார்.

யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா?

unp.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில் கூறியதாவது;

யுத்த முன்னெடுப்பின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் நிவாரண உதவிகளை அரசாங்கம் உரிய முறையில் வழங்க வேண்டும், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாம் திடமாகவுள்ளோம். அதேவேளை நீண்டகாலமாக சமாதானமொன்றை அரசு ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான அரசியல் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இனியும் யுத்தத்தை இந்த அரசு விற்பனை செய்ய முடியாது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஊடகம் ஆற்றும் பங்கு அளப்பரியது. முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கவென ஐ.தே.கட்சி நிவாரணப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஏப்ரல் 26 சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் -புன்னியாமீன்

world-intellectual-property-day.jpgஇன்று ஏப்ரல் 26ஆம் திகதி. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ஆம் திகதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டு பிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO)  2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001 இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26 ஆம் திகதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள்,  விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்,  பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக்கண்டுபிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. அதேபோல  கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விசேடமாக இத்தினத்தன்று மின்விளக்கைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன்ää கணனி மென்பொருளைக் கண்டுபிடித்த புலோரியென் மியுலர் மற்றும் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஹியுலெடி சுப்பர்மேன் ஜெரிமி பிரிப்ஸ் ஆகியோர் இத்தினத்தன்று விசேடமாக நினைவுகூரப்படுவர்.

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம்  பின்வரும் கருப்பொருட்களின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

2001 – எதிர்காலத்தை இன்று அமைத்தல்
2002 – ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
2003 – அறிவுசார் சொத்துரிமையை உங்கள் வணிகமாக்குங்கள்
2004 – ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
2005 – சிந்தி, கற்பனை செய், ஆக்கு
2006 – கருத்துடன் இது தொடங்குகிறது
2007 – ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
2008 – கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுதல், அறிவுசார் சொத்துரிமையை மதித்தல்

2009ஆம் ஆண்டு இதன் கருப்பொருள் செழுமையான நவீனமயப்படுத்தல் என்பதாகும்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகக் குறைவு. இடைக்கிடையே ஒரு சில கருத்தரங்குகள்,  பதாதைகள் மூலம் நிகழ்ச்சித் திட்டத்தை முடித்துக் கொள்கின்றன. உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு தேவைப்படக்கூடிய ஒரு விடயத்தை கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர் அல்லது சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு ஆக்கத்தை முன்வைக்கக்ககூடிய கலைஞர் அல்லது ஓவியன் இத்தினத்தன்று பிரபல்யப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படுபவனாக இருந்தான். இந்நிகழ்ச்சித் திட்டத்தில் யாதாவது ஒரு பயனையடைந்தால் திருப்தி இருக்கலாம். எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

உணவுகளை பொதி செய்வதில் மாணவர்கள்…..

vavu-stu.jpgயுத்த சூனிய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுக்கு பொது அமைப்புக்கள் சமய நிறுவனங்கள், பொதுமக்கள் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர். கோவில்குளம் சிவன் கோவில் மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை பொதி செய்வதில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

vavu-stu.jpg

இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு

Wanni_War_Boat_Refugeesவன்னியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம்கள் இன்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை, ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்கள் இன்று வன்னிக்கு சென்றனர். இரண்டு பஸ் வண்டிகளிலும், ஒரு லொறியிலும் சமையல் பாத்திரங்களுடன் காத்தான்குடிப்பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு முன்பாக இருந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எஸ். எச். அஸ்பர் தலைமையில் இவர்கள் வன்னிக்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் லிபிய ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

mahi-kadabi.jpgலிபிய ஜனாதிபதி கேர்னல் முஅம்மர் கடாபி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிய அவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு லிபியா உதவி வழங்குமென மீண்டும் உறுதியளித்தார்.

நமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவுங்கள்…

cvili.jpgஇடம் பெயர்ந்துவரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது அணிந்த பழைய ஆடைகளை வழங்க வேண்டாம். அவர்களுக்கு புதிய ஆடைகளையே வழங்குங்கள் என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது எவ்வாறு நாம் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி னோமோ அதேபோன்று தென் பகுதி மக்களின் மனிதாபிமான உணர்வுகளை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுனாமியின் போது நாம் பழைய அணிந்த ஆடைக ளையே அவசர தேவைக்காக வழங்கினோம். ஆனால் வன்னியிலுள்ள எமது சகோதர தமிழ் மக்களுக்கு அப்படி வழங்காமல் புதிய ஆடைகளையே வழங்குவோம். அவர்கள் எமது மக்கள் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலர் உணவு பொருட்கள், பிஸ்கட்வகைகள், குடிநீர் போத்தல்கள், பால்மா, திரவப்பால் பக்கற், குழந்தைகள் பால்மா, குழந்தைகளுக்கான பால் போத்தல், பற்பொடி, பற்பசை, பிரஷ்கள், டவல்கள், பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள்,  பெண்களின் உள்ளாடைகள், நுளம்பு வலை, சவர்க்காரம், சமையல் பாத்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்க முன்வாருங்கள் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பிரதான சேகரிப்பு நிலையமாக பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபமும் இயங்குகிறது.

உதவ விரும்பும் அமைப்புகள், தனி மனிதர்கள், நலன் விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை தமது பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திலோ, மாவட்ட செயலகத்திலோ, உதவி பிரதேச செயலகத்திலோ ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.நாட்டிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளையும் அழைத்து அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா மனிதாபிமான உதவி குறித்து விளக்கமளித்தார்.