செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தெ. கி. பல்கலையின் பதில் உபவேந்தராக ஹுஸைன் இஸ்மாயில்

eastern-university.gifஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகக் கடமையாற்றி தனது பதவிக்காலத்தை நேற்று நிறைவு செய்த கலாநிதி ஏ. ஜி. ஹுஸைன் இஸ்மாயில் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை பதில் உபவேந்தராக கட மையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் 28ம் திகதியாகிய நேற்று அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் காணவில்லை

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில் இம்மாணவி கல்வி பயின்று வந்தவராவார்.

நேற்றுக் காலை அம்மாணவியின் பாட்டனார் வழமை போல் அவரை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்றுவிட்டு வந்துள்ளார். பாடசாலைவிடும் வேளையில் அவரை அழைத்துச் செல்ல அவரது பாட்டனர் சென்ற போது, அம்மாணவி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது

இச்சம்பவத்தினால் அப்பாடசாலை மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாணவியின் தந்தையான சதிஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் மேலும் 527 பேர் வருகை

puthumathalan.jpg
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு நோயாளர்கள்,காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ,உதவியாளர்கள் 527 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் நேற்று புல்மோட்டைக்கு விஜயம் செய்தார்.இந்திய மருத்துவர் குழுவைக் கொண்ட வைத்தியசாலைக்கும் இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் அவர் நேரில் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலம் 25 கடற்புலிகள் பலி

navy.jpgமுல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இன்று காலை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் 25 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகளும் தாக்குதல் படகுகளும் முல்லைத்தீவு கடற்பிரதேசத்துக்குள் நுழைவதை அவதானித்த கடற்படையினர் அவற்றின்மீது உடனடியாகத் தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலை; 4.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகளும் கலிபர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இரண்டு தாக்குதல் படகுகளையம் படையினர் தாக்கியழித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் காரணாக கடற்படைப் படகு ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை – 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டி

advani.jpgஇந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதுடன் 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலின்; 3ம் கட்டத்துக்கான பிரசார நடவடிக்கைகள்  நேற்று மாலையுடன் முடிவடைந்தன. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. இந்திய பொதுத் தேர்தல் 5 கட்டமாக் நடக்கிறது. கடந்த 16ந் தேதி முதல்கட்ட தேர்தல் 124 தொகுதிகளிலும் 23ந் தேதி 2ம் கட்ட தேர்தல் 141 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. 3ம் கட்டமாக 107 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் 107 தொகுதிகளில் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இவர்களில் 101 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

107 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 14 கோடியே 40 லட்சத்து 2 ஆயிரத்து 265 பேர் ஆவர். 

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு முன்னர்!

laxman_yapa_abeywardena.jpgஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குமிடையில் நிச்சயம் நடைபெறும். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் 70 வீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடமத்திய, சப்ரகமுவ, வடமேல்,  மத்திய மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அரசாங்கம் பெற்ற வெற்றியை ஐ.தே.க. விமர்சித்துக் கொண்டிருக்காமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம்வாய்ந்த வேட்பாளர் ஒருவரை நியமித்து வெற்றியீட்டிக் காட்டட்டும்.

முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டபோது 62.8 வீத வாக்குகளைப் பெற்றார். அவர் இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டபோது 51 வீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகப் போட்டியிட்டால் இதுவரையில் எவரும் பெற்றிருக்காதவாறு 70 வீத பெரும்பான்மையை நிச்சயம் பெறுவார். மேல் மாகாண சபைக்கு கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 50.6 வீதமானவர்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இம்முறை 63.23 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

பிரபாகரனின் விளையாட்டு முடிவடைந்தது; உயிருடன் பிடிக்க முழுமூச்சில் முயற்சி! சி.என்.என். தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி பேட்டி

Mahinda Rajapaksa விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விளையாட்டு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. அவரை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முழுமூச்சில் எடுக்கப்படுகின்றன. விரைவில் அவர் பிடிக்கப்பட்டுவிடுவார் என நம்புகின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்படித் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான சி.என்.என்னுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே ஜனாதிபதி இப்படிக்கூறியுள்ளார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்க நேரிடும் அதன் பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் ஜனாதிபதி பேட்டியில் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.

எமது அரசாங்கம் போர்நிறுத்தம் எதனையும் அறிவிக்கவில்லை இப்போது பிரபாகரனைப் பற்றியோ அல்லது வேறு எவரைப் பற்றியோ கவலைப்படவில்லை அது பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது  என்றே கருதுகிறேன் என்றார் ஜனாதிபதி.

லண்டன் தாக்குதல் சந்தேக நபர்கள் 3 பேர் விடுதலை

julyassist_met_comp.jpgலண்டன் நகரின் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை, நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை அக் குற்றச்சாட்டில் இருந்து பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று விடுவித்துவிட்டது. லண்டன் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இளவயது பிரிட்டிஷ் முஸ்லீம்களுக்காக லண்டன் நகரில் உளவு பார்த்ததாக வாஹீத் அலி, சாதீர் சலீம் மற்றும் முகமது ஷகீல் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால் தாங்கள் லண்டனில் உள்ள சுற்றுலா இடங்களைப் பார்க்கவே வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர்.

வெடி குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துள்ள ஜூரிகள், வாகீத் அலி மற்றும் முகமது ஷகீல் ஆகிய இருவர் மீதும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாமுக்கு செல்லத் திட்டமிட்டது தொடர்பாக குற்றம் கண்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை: இலங்கை விவகாரம்- உயர் அதிகாரிகளுடன் ஒபாமா அவசர ஆலோசனை

obama-hilari.jpgஇலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ் எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து, அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாண சபை முதல்வர் அமைச்சர்கள் 4 இல் பதவியேற்பு

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் எதிர்வரும் மே 4ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்ற தகுதியான சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக நியமிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பார் எனவும் அவர் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் எதுவித உண்மையும் இல்லை. கட்சியிலுள்ள சகல கட்சித் தலைவர்களினதும் ஒத்துழைப்புடனேயே முதலமைச்சர் நியமிக்கப்படுவார்.

முதலமைச்சர் யார் என்பது குறித்து ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும். அவரவர் பெற்றுள்ள வாக்குகள் சிரேஷ்டத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தெரிவு இடம்பெறும். கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்கவும் கொழும்பில் துமிந்தசில்வாவும் களுத்துறையில் ரெஜினோல்ட்குரையும் கூடுதல் விருப்புவாக்கு பெற்றுள்ளனர் என்றார்.