செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“சிலந்தி வலையாக செயற்பட்ட இலங்கையின் சட்டங்கள் – சிறிய பூச்சிகள் சிக்கின. பெரிய விலங்குகள் வலையை சேதமாக்கி தம்பி விடுகின்றன” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் “தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.

இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கையை குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின்(UNDP)ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகனம் மோதி யாசக பெண் மரணம் !

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி கடவையில் பயணித்த யாசகப் பெண் ஒருவர் 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், பொலவத்தை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் 70 வயது நபராவார். விபத்தின்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜீப் வாகனத்தில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஜீப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஐந்து லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கிறோம். எதற்காகவும் கொள்கைகளில் மாற்றம் இருக்காது – தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கிறோம். எதற்காகவும் கொள்கைகளில் மாற்றம் இருக்காது – தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களை பார்த்து நாம் அனுதாபப்படுகிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதி அமைச்சரிடம் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று இன்னும் ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. இந்த நாட்களில் நாம் எமது எதிர்கால பயணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். எமக்கென்று தெளிவான கொள்கைகள், திட்டங்கள் உள்ளன.நாம் நாட்டு மக்களிடத்தில் தெளிவான திட்டங்களை முன்வைத்துள்ளோம். எனவே நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதற்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படமாட்டோம். இந்த நாட்டை சரியான பாதையில் நாம் வழிநடத்துவோம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறோம். அதேபோன்று அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். வறுமை ஒழிக்கும் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். டிஜிட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் மேம்படுத்துவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கவலைகளை எழுப்பியுள்ளார்.

திட்டமிடப்பட்ட தேர்தலை இரத்து செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் முடிவின் விளைவாக ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 10% அநாவசிய செலவினம் எற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், பொது மக்கள் மீது நிதிச் சுமையையும் சுமத்தியது, வரி செலுத்துவோர் நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அறிக்கை கூறியது.

தேர்தல் காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

உரிமையற்றது, ஒன்றுமில்லை என்று ஒதுக்கிய மாகாணசபைக்கு ஏன் வரிந்து கட்டுகிறது தமிழ் தேசியம்?

உரிமையற்றது, ஒன்றுமில்லை என்று ஒதுக்கிய மாகாணசபைக்கு ஏன் வரிந்து கட்டுகிறது தமிழ் தேசியம்?

ஆய்வாளர் வி சிவலிங்கத்துடன் 13வது திருத்தச் சட்டமும் மாகாண சபையும் பற்றிய நேர்காணல்

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இந்த உறவுகளை வைத்து அரசியல் செய்வது மோசமானது” முன்னாள் போராளி, மாவீரர்களின் தாய் தமிழ்கவி

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இந்த உறவுகளை வைத்து அரசியல் செய்வது மோசமானது” முன்னாள் போராளி, மாவீரர்களின் தாய் தமிழ்கவி

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

கடந்த வாரம் கடற்தொழிலமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தான்” என்ற அடிப்படையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பு கண்டனக் குரல் எழுப்பி இருந்தது.

 

ஆனால் தொடர்ச்சியாக இதனை ஒரு அரசியல் வியாபாரமக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை என்ற குரல்களும் தற்போது எழ ஆரம்பித்துள்ளது.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று பல்வேறு பிரிவுகளாக சுயேட்சைக்குழக்கள் போல் சிதறிப்போயிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியும் தமிழ் அரசியல் பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான அனந்தி சசிதரன் முன்னைய உரையாடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதிக்கப்பட்ட இப்பெண்கள் அரசியல் கட்சிகளாலும் வெளிநாட்டு சக்திகளாலும் முகாமைத்துவப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டினார்.

 

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் என்பது தற்போது என்ஜிஓ போலாகி அவர்களுடைய போராட்டமும் ஒரு புரொஜக்ற் ஆகிவிட்டது என்கிறார் மற்றுமொரு வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் தாயார். “இவர்கள் டிசம்பர் ஏழில் ஊடக மையத்திற்கு வந்து ஒருவர் மாறி ஒருவர் உள்ளகப் பொறிமுறை வேண்டாம் சர்வதேசம் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனரே. ஏன் ?” என்று அத்தாயார் கேள்வி எழுப்பினார்.

 

“நியாயத்தை யார் வேண்டுமானாலும் விசாரித்து வழங்கலாம் தானே? அதென்ன வெள்ளைத் தோல் உள்ளவன் வந்து விசாரித்தால் தான் எங்கள் பிள்ளைகளின் ஆத்மா சாந்தி அடையும். எங்களின் ஆத்மா சாந்தி அடையும். என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர்”. அப்படியானால் ஐஎன்ஜிஓ – சர்வதேச என்ஜிஓ இவர்களை இயக்குகின்றதா?” என்ற கேள்வியும் தவிர்க்க முடியாது என்கிறார் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயார்.

தேசிய இனப்பிரச்சனை தீர்வு குறித்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு !

தேசிய இனப்பிரச்சனை தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (07) மாலை இடம்பெற்றது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பிலும், புதிய அரசாங்கத்துடன் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் சுவிஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி செயலாளரும், சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான ரிம் எண்டர்லின், இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வோல்ற், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் மனிதப் பாதுகாப்பிற்கான முதன்மைச் செயலாளர் ஜெஸ்ரின் பொய்லற், சுவிஸ் தூதரகத்தின் மூத்த தேசிய திட்ட அதிகாரி சுசந்தி கோபாலகிருஸ்ணன் உள்ளடங்கிய குழுவினர் தமழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர்.

இதில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா வாள்வெட்டு சம்பவம் – ஐவர் கைது !

வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கி முனையில் மட்டும்தான் விதிகள் கடைப்பிடிக்கப்படுமா? இதுவென்ன பழக்கதோசமா?

துப்பாக்கி முனையில் மட்டும்தான் விதிகள் கடைப்பிடிக்கப்படுமா? இதுவென்ன பழக்கதோசமா?

தமிழ் – முஸ்லீம் உறவு நிலையும் தேசிய நல்லிணக்கமும் சாத்தியமா? பிரிவினைக்கான தேவை உள்ளதா:

ஆய்வாளர் சட்டத்தரணி மொகமட் நிஸ்தார் மற்றும் ஆய்வாளர் கலைஞர் மாவடி ஏஆர் சிறிதரன் ஆகியோருடன் இன உறவுகள் தொடர்பான உரையாடல்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். குறித்த சந்திப்பில் மேலும் பேசிய நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.