செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வன்னியில் மூன்று புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்த முடிவு

vavuniy1410.jpg
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் வன்னியில் மூன்று புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் விரைவில் இப்புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.பல தசாப்தங்களாகச் சீர்குலைந்திருந்த நிர்வாக நடவடிக்கைகளை மீள சீரமைப்பதற்கு வசதியாகவே மேற்படி பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பகுதிகளில் அரச நிர்வாகத்தை மீளக்கட்டியெழுப்பவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவும் மீட்கப்பட்ட பின் உடனடியாகவே இதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பொது மக்களின் நலன்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அனர்த்த நிவாரண சேவைகள் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் வவுனியாவிற்கு சென்றது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்துள்ள அமைச்சர் பதியுதீன், இடம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.

இது சம்பந்தமாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து தொடர்ந்தும் பொதுமக்கள் வருகை தந்த வண்ணமே உள்ளனர். இவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைத் தடையின்றி பெற்றுக் கொடுப்பதற்காகவும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்டச் செயலாளர்களுக்கு நிதிவழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், அப்பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவு உயரதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசீக், வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் உட்பட சகல வசதிகளையும் அம்மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு மூன்று இடங்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு: சிவிலியன் வருகை அதிகரிப்பு:

displace.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப் பாட்டு பிரதேசத்தை நோக்கி 27 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிவிலியன்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். 78 சிவிலியன்களும் நேற்று முன்தினம் மாலை ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

18 சிறுமிகள், 13 சிறுவர்கள், 29 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் இவர்களில் அடங்குவர். வருகை தந்த சிவிலி யன்கள் வழக்கமான விசாரணைகளுக்கு பின்னர் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது – திருமா பேட்டி

thiruma_1501.jpgஈழத் தமிழரைப் பாதுகாக்க கோரி சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் நிருபர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது சிங்கள இராணுவம். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதால் அந்த நாட்டுக்கு செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோன்று இப்போது, ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது சிங்கள் ராணுவம். இதைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் அணியுடனான சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

வன்னியிலிருந்து இதுவரை 1400 பேர் வவுனியாவுக்கு! – அமைச்சர் ரிஷாத் தகவல்

risard.jpgவன்னியிலிருந்து இதுவரை ஆயிரத்து நானூறு பேர் இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ளனர் என்று அரசு தெரிவிக்கின்றது. இவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வவுனியாவுக்குச் சென்று அந்த மக்களைப் பார்வையிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் கூறியவை வருமாறு:-வன்னியிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வர ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை 540 குடும்பங்களைச் சேர்ந்த 1400 பேர் வவுனியாவை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வவுனியா பார்மில் அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.இந்த மக்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் நடவடிக்கையில் எனது அமைச்சு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றது.

இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு நான் வவுனியா அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளேன். வன்னியில் இருந்து வவுனியாவுக்குத் தொடர்ந்தும் மக்கள் வந்தால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் வழங்குவதற்கு எனது அமைச்சு தயார் நிலையில் உள்ளது – என்றார்.

முல்லைத்தீவில் தர்மபுரம் பிரதேசமும் நேற்று படையினரிடம் வீழ்ந்தது

_army.jpgமுல்லைத்
தீவிலுள்ள புலிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான தர்மபுரம் பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டெடுக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தர்மபுரம் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சாவிந்திர டி சில்வா தலைமையிலான படையினர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரம் நகரை கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். பரந்தன்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையிலுள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாக தர்மபுரம் பிரதேசம் கருதப்படுவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், ஏ-9 நெடுஞ்சாலைக்கு கிழக்கே 15 கிலோ மீற்றர் தொலைவிலும் ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாகப் பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின் போது இராணுவத்தின் கவனத்தை மிகவும் ஈர்த்திருந்த தர்மபுரம் பல வருடங்களுக்கு பின்னர் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தர்மபுரம் நகரை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் 4 சடலங்களையும், புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கிய படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளால் மனிதக் கேடயங்களாக வைத்திருந்த பொது மக்களையும் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழருக்கென தனி நடனக்கலை தொடர்பாக அறிஞர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்

dance.jpgஇலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழருக்கு என தனித்துவமான நடனக்கலை ஒன்று இருக்கிறது. தென்மோடி, வடமோடி என அக்கலை அமைகிறது. எமது நடனக்கலை எது என்பதை நமது அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சுந்தரம் திவகலாலா தெரிவித்தார்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளராகப் பணிபுரிந்து பின்பு ஜேர்மன் நாட்டு ஜிரிஇஸட் நிறுவனக் கல்வி அலகின் நிபுணத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்த சுந்தரம் திவகலாலா, புதிய பதவியை ஏற்றபின், கடந்த சனிக்கிழமை திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் திருகோணமலை இராஜரெட்ணம் நடனாலயத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவாக நடத்தப்பட்ட அபிநய சாதனா நாட்டிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசினார். அவர் மேலும் கூறுகையில்;

உலகில் வாழும் 770 இலட்சம் தமிழ் மக்களின் ஜீவநாதமான கலையாக பரதநாட்டியம் விளங்குகின்றது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் பரதம் சமயம் சார்ந்த கருவியாக அடையாளம் காணப்பட்டது. இந்தியாவில் பரதம் செழித்து வளர்வதற்கு பல விற்பன்னர்கள் காரணமாக இருந்தார்கள், இருந்து வருகின்றார்கள். எமது இனம் எதனைச் செய்யினும் அதிலே ஒரு பாண்டித்தியம் இருக்க வேண்டும். பரதம் தமிழ் மக்களின் பொக்கிஷமாகும். இந்தியாவிலிருந்து எமக்கு கிடைத்தது. எமக்கென்றொரு தனித்துவம் இருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழராகிய எமக்கு வடக்கு, கிழக்கிலே தென்மோடி, வடமோடி மற்றும் கிராமிய நடனங்கள், காத்தவராயன் கூத்து என இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கென தனி நடனக்கலை பற்றி எமது அறிஞர்கள் ஆய்வுசெய்ய வேண்டும்’ என்றார். கௌரவ அதிதியாகப் பங்குபற்றிய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி. தண்டாயுதபாணி பேசும்போது;  “நகரத்தில் அழகான அரங்கில் குழந்தைகளின் நேர்த்தியான அற்புதமான நடன நிகழ்வுகளை நாம் ரசிக்கிறோம், அனுபவிக்கின்றோம். இவ்வாறான சூழல், வாய்ப்பு எம் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் எமது குழந்தைகளுக்கு இருக்கிறதா? இது எனது உள்ளத்தை நெருடுகிறது.

“மூதூர் இலங்கைத் துறைமுகத்துவாரம் பாடசாலை 2006 அனர்த்தத்தில் இடம்பெயர்ந்தது. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் அப்பாடசாலை 2007 இல் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் நான் கலந்துகொண்டேன். அவ்விழாவில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் அம்மாணவர்கள் பங்குபற்றினார்கள். நகர மாணவரின் அளவுக்கு கிராமப்புற மாணவரின் ஆற்றல் அமையவில்லை. அவர்களுக்குள் புதைந்து இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு அங்கு இல்லை. பூநகர் திருவள்ளுவர் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். கூரையின்றி பாடசாலையின் வகுப்பறைகள், பாதுகாப்பான அறை பாடசாலையில் இல்லை. ஆனால், நிகழ்வில் பிள்ளைகள் ஆடினார்கள், பாடினார்கள், கலையின் மெருகை அக்குழந்தைகளுக்குக் கொடுக்க முடியுமா? என்பதை பெரியோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’ என்றார். மூத்த கலைஞர்கள், பெரியோர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஜேர்மேனியத் தூதுவர் ஜர்கன் ரெத்இன் கருத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சு அதிருப்தி:

palitha_koahana.jpg
ஜேர்மேனிய தூதுவர், மறைந்த-சண்டேலீடர் ஆங்கில வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து,இலங்கைவெளியுறவு அமைச்சு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலர் பாலித கோஹன இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற ஜேர்மேனிய தூதுவர், ஜர்கன் ரெத்,”இன்று ஒருவர் மௌனித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் பற்றி ஏற்கனவே அரசுடன் பேசியிருக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் பற்றிய எமது செயற்பாடுகள் தாமதமாகி விட்டன. இன்று மனிதத்துவத்தின் பெரும் உண்மைக் குரலை நாம் இழந்துவிட்டோம் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இலங்கையின் வெளியுறவு செயலாளர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க, கொரிய நிதியுதவியுடன் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் பயிற்சி – அமைச்சர் பியசேன கமகே

potty-training.jpgஅமெரிக்க, கொரிய நிதியுதவியுடன் அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் பேருக்குத் தொழிற் பயிற்சிகளை வழங்க தொழிற் பயிற்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார். இதன்போது வடக்கு, கிழக்கு மீட்கப்பட்ட பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமையளிப்பதுடன் புலி சந்தேக நபர்களென தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இவ்வாறு அம்பேபுஸ்ஸ, பல்லேகல, பூசா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான நிதியுதவிகளை அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவல், ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு திறனபிவிருந்தி, தொழிற் பயிற்சி அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :- வேலைவாய்ப்பில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வாழ்க் கைத்தொழிற் பயிற்சி அமைச்சு நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதன் பயனாக இவ்வருடம் 60,000 பேருக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளன. அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் பேருக்குத் தொழிற் பயிற்சி வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைச்சு தொழிற் பயிற்சிகளை வழங்குவதுடன் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெறும் வகையிலான சான்றிதழ்களையும் பயிற்சியின் முடிவில் வழங்கி வருகின்றது.

தொழிற் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களில் தற்போது டிப்ளோமா சான்றி தழுக்கான பயிற்சிகள் இடம்பெறுகின்றன. உயர் டிப்ளோமா மற்றும் பட்டதாரி பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் வகையில் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமொன்றைத் திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் உட்பட சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையங்களைப் புனரமைக்க அமெரிக்கா உட்பட பல நாடுகள் 1125 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்காலத் தேர்தல்களில் படையினரையும் வேட்பாளர்களாக நிறுத்த ஜனாதிபதி விருப்பம்

nimal-sripala.jpgவடக்கில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த தேசத்தை உறுதியாக நின்று போராடிக் கைப்பற்றிய இராணுவத்தினரை எதிர்காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் நிறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த விருப்பத்தை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த வாரம் குருநாகல் மக்களுக்கு முதன்முதலில் அறிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வக்கீல்கள் சங்கத்துடனான சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேற்படி முடிவு பற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; இன்று நாட்டின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் இறைமையை காப்பாற்றுவதற்காகவும் நேர்மையாக போராடும் வீரர்களை அரசியலில் பங்கேற்க வைக்க ஜனாதிபதி விரும்புகிறார் எதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இராணுவத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதுடன் அவர்கள் அரசியலில் உற்சாகத்துடன் பங்குபற்றுவதற்கும் ஊக்கமளிக்கப்படுவர்.

அத்துடன் இந்த இராணுவ அதிகாரிகளை அரசியலில் பிரவேசிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்கு நேர்மையாக பாதுகாப்பளித்து வரும் இவ்வீரர்களை அரசியலில் பங்குபற்ற செய்ய எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் வடமேல் மாகாணத்தில் இராணுவ வீரர்கள் நிச்சயம் அதிகளவான வாக்குகளைப் பெறுவர் எனவும் அங்கு இராணுவத்தினருக்கு சிறந்த வரவேற்புள்ளதெனவும் தெரிவித்தார்.

கண்டியில் இன்று – அரச பொங்கல் விழா

pongal-02.jpgதைப்பொங்கல் பண்டிகையையொட்டி ‘பிரஜா சக்தி’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ‘அரச பொங்கல் விழா’ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 10.00 மணிக்கு கண்டி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், மாகாண அமைச்சர்கள் பலரும் இப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. அமைச்சர் தொண்டமானால் வழி நடத்தப்படும் ‘பிரஜா சக்தி’ அமைப்பு இவ்விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் மலையகத்தின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் இப்பொங்கல் விழாவில் இடம் பெறவுள்ளன.