வடக்கில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த தேசத்தை உறுதியாக நின்று போராடிக் கைப்பற்றிய இராணுவத்தினரை எதிர்காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் நிறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த விருப்பத்தை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த வாரம் குருநாகல் மக்களுக்கு முதன்முதலில் அறிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வக்கீல்கள் சங்கத்துடனான சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மேற்படி முடிவு பற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; இன்று நாட்டின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் இறைமையை காப்பாற்றுவதற்காகவும் நேர்மையாக போராடும் வீரர்களை அரசியலில் பங்கேற்க வைக்க ஜனாதிபதி விரும்புகிறார் எதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இராணுவத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதுடன் அவர்கள் அரசியலில் உற்சாகத்துடன் பங்குபற்றுவதற்கும் ஊக்கமளிக்கப்படுவர்.
அத்துடன் இந்த இராணுவ அதிகாரிகளை அரசியலில் பிரவேசிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்கு நேர்மையாக பாதுகாப்பளித்து வரும் இவ்வீரர்களை அரசியலில் பங்குபற்ற செய்ய எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் வடமேல் மாகாணத்தில் இராணுவ வீரர்கள் நிச்சயம் அதிகளவான வாக்குகளைப் பெறுவர் எனவும் அங்கு இராணுவத்தினருக்கு சிறந்த வரவேற்புள்ளதெனவும் தெரிவித்தார்.