எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஒபாமாவின் கருத்தை இரான் வரவேற்றுள்ளது

obma-iran.jpgஅமெரிக்கா-  இரான் இடையிலான முப்பது ஆண்டுகால பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள கருத்தை இரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் வரவேற்றுள்ளார்.

”ஆனால் வாஷிங்டனின் நிலைப்பாட்டு மாற்றம் வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் நீடிக்கவேண்டும், தம்முடைய கடந்தகால தவறுகளை அது அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா அப்படிச் செய்யும் பட்சத்தில் இரான் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளாது” என்று அலி அக்பர் ஜவான்ஃபகிர் கூறியுள்ளார்.

இரானிய புத்தாண்டை முன்னிட்டு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில், இரானுடன் நேர்மையாகவும் பரஸ்பரம் மரியாதையுடனும் உறவுகளை முன்னெடுக்க தான் விரும்புவதாகக் கூறியிருந்தார்.

அக்குரஸ்ஸ சம்பவ தற்கொலைக் குண்டுதாரி மாத்தறையில் பிச்சைக்காரருடன் தங்கியவர் – சிறுவன் வாக்குமூலம்

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டிய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் மாத்தறையில் பிச்சை எடுத்துவரும் 13 வயது சிறுவனிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட நபரின் புகைப்படத்தை பத்திரிகையில் தான் பார்த்ததாகவும் அவர் மாத்தறையில் பிச்சைக்காரர் தங்கும் சிறிய மதுரைக் கட்டிடத்தில் தங்கியிருந்தார் எனவும் அச்சிறுவன் கூறியுள்ளான் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் தனது பெயரை சமன் என்று கூறினார். ஒரு மாதத்துக்கு முன்னர் அங்கு வந்து தங்கியிருந்தார். அவர் சிங்களத்தில் உரையாடுவார். மாத்தறையில் படையினர் பயிற்சி செய்வதையும், மாத்தறை மகாநாமப் பாலத்தையும் அவர் அடிக்கடி பார்த்துவந்தார். அவருக்குப் புஷ்பகுமார் என்ற நண்பர் ஒருவர் உதவி வந்தார். இருவரும் சிங்களத்தில் உரையாடுவார்கள்.

இருவரின் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்தபோது அவர்களில் சந்தேகம் ஏற்பட்டது. வெலிகம பகுதிக்குப் பிச்சை எடுக்க இருவரும் போனபோது நானும் அவர்களுடன் போனேன். ஆனால் வெலிகம பொலிஸார் அதனைப் பொருட்படுத்தாமல் எம்மைப் போகும்படி கூறிவிட்டனர்.

அவர்கள் இருவரும் வெலிகம பகுதிக்கு பிச்சை எடுக்க வந்தபோது நானும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தேன். வீட்டில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு இங்கு வந்து பிச்சை எடுத்து வாழ்கின்றேன் எனவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளான். விசாரணையின் பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

அதிகாரப் பகிர்வின் ஊடாக ஈழத்தை உருவாக்கும் பாதையில் அரசு பயணம் – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

parliament.jpgஅதிகார ங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் அரசு சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி. இந்தப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தியது.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஒய்வூதிய சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே மேலும் கூறியதாவது;

அரசு தமிழருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கப் போகின்றது. இதுதொடர்பாக ஜனாதிபதியே சர்வதேச செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் சென்று கொண்டிருக்கின்றது.

யுத்தத்தில் படையினர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மக்கள் பெரும் சுமைகளை சுமந்து கொண்டிருக்கின்றார்கள். படையினரும் தமது உயிர்களை தியாகம் செய்து நாட்டின் இறைமையை காக்க போராடுகின்றனர். புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு மக்களின் ஆதரவைக் கோரும் அரசு அந்த மக்களின் இடுப்புப்பட்டிகளை இறுகக்கட்டுமாறு கோருகின்றது. இந்த நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் மக்களும் சுமைகளை சுமக்கின்றனர். ஆனால், அரசோ இதனைப் பயன்படுத்தி சுக போகங்களை அனுபவிக்கின்றது.

அதிகாரத்தை பகிர்தல், ஈழத்தை உருவாக்குதல் போன்ற அரசின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதனை அனுமதிக்க முடியாது. சமுர்த்தி அதிகாரிகள் நியமனம் அரசியல் ரீதியாகவே இடம்பெறுகின்றது. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே அரசு சமுர்த்தி அதிகாரிகள் நியமனங்களை வழங்குகின்றது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சீராக செயற்பட்டாலே நாடு ஒழுங்காக இருக்கும். ஆனால், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிகள் திருப்திகரமாக இல்லை. பல குளறுபடிகள், ஊழல்கள் காணப்படுகின்றன. படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகள் ஒய்வூதிய சட்டமூல திருத்தத்தை நாம் வரவேற்கின்றோம். இதற்காக நாம் முன்பிருந்தே போராடி வருகின்றோம். அது தற்போது தான் கைகூடி வந்துள்ளது.  இதேபோன்று, ஆசிரியர் ஒய்வூதிய திட்டம் தொடர்பிலும் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.
 

சீனாவிற்கு தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan.jpgஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், இவ்விடயத்தில் இடையூறு விளைவிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் சீன அரசாங்கத்திற்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை  விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா. நடேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசானது தனது இனப்படுகொலைகளை மூடிமறைக்க இது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற போர்வையில் பரப்புரைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட இருந்த இவ் விவாதத்தை உள்நாட்டு பிரச்சனை என சீனா வர்ணித்திருப்பதனால் இவ்விவாதம் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சீனாவிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே, சீனா இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் தமிழ்மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்கு விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும், சீனாவிடம் ஐநாவில் தமிழ்மக்களின்நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து இன்று 483 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

navy_civilians.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து காயமடைந்த பொதுமக்களில் 483 பேர் இன்று புல்மோட்டைக்கு கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளவர்களை இந்திய வைத்தியர்களின் கள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் முகமாக அவர்களை கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 11 தடவைகளில் புதமாத்தளனில் இருந்து இதுவரை  நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது

ருபெல்லா தடுப்பூசி வழங்குவதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு.

vaccina.jpgருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்ததையடுத்து ,த்டுப்பூசி வழங்குவதை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிடுள்ளார். அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்ட பின் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ருபெல்லா தடுப்பூசி வழங்கப்படதையடுத்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் பல மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 12 வயது மாணவியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அதேவேளை வைத்தியசாலையில் 26 மணவியர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமலை சிறுமி படுகொலையுடன் ரி.எம்.வி.பியை தொடர்புபடுத்தியிருப்பது கவலைக்குரியது -முதலமைச்சர் சந்திரகாந்தன்

Regie_Varsaதிருகோண மலையில் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மக்கள் மத்தியில் அதிருப்தியையும ஆத்திரததையும் எற்படுத்தியுள்ளமை நியாயமானது. ஆனால் இதில் தமது கட்சியை தொடர்புபடுத்தியிருப்பது கவலைக்குரியது என கூறுகின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்.

ஜூட் ரெஜி வர்ஷா வின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.  நேற்று பொலிஸ் காவலில் இருந்த வேளை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபரான வரதராஜா ஜனார்த்தனன் தமது கட்சியின் உறுப்பினர் அல்ல. தேர்தல் பிரச்சார காலத்தில் சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் இக் கொலை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த ஈடுபாடு காரணமாக குறித்த சந்தேக நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் போன்று மக்கள் மத்தியில் நடமாடியுள்ளார் என்பதை தற்போது தான் தங்களால் அறிய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் நேற்று மாலை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் வீரநகரிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடமொன்றிலிருந்து 2 கைக்குண்டுகளும் ஏற்கனவே மாகாண சபையின் பாவனையிலிருந்த அச்சுக்கூட களஞ்சியத்திலிருந்து ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் தகவல்களின்படி இரண்டாவது இடத்திலேயே புத்தகங்களுக்குள் மறைத்து வைக்கப்படடிருந்த சயனைட்டை எடுத்து உட்கொண்டதாக தெரிய வருகின்றது.

ரி – 56 துப்பாக்கியொன்றும் தன்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இந்நபர் பொலிசாரிடம் தெரிவித்திருந்த போதிலும் அது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

கலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்துவிடாது. – முதலமைச்சர் அனுதாபம்.

cm-ep.jpg இலங்கையின் மூத்த கலை இலக்கிய கலைஞர்களில் ஒருவரான மட்டுநகர் வி. முத்தழகு  (மார். 19) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 77.  மிக நீண்ட காலமாக இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவரின் `தாகமாய் இருக்கிறேன்` சிறுகதைத் தொகுதி பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் அரசியல், கலை, இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் அண்ணன் முத்தழகு. இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக, நகைக்கடை வர்த்தக சங்கத்தின் தலைவராக, ஒரு சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளனாக எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகள் காலத்தால் அழிந்துவிட முடியாதவை. தமிழ் இனம் வாழும்வரை அண்ணன் முத்தழகுவின் பெயர் நிலைத்து நிற்கும். அன்னாரின் மறைவினால் கலை உலகத்திற்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

அன்னார் எமது தாய் நாட்டில் மாத்திரம் அல்ல தென் இந்தியாவிலும் தனது பெயரை நிலைநிறுத்தியவர். அரச உயர் விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்று எமது பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்தவர். அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

புலி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த சுவாமி நடவடிக்கை.

subramanian_swamy.jpg தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய உயர் நீதிமன்றத்தில் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சியின்கீழ் புலி ஆதரவாளர்கள் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி நீதிமன்றத்தில் வைத்து புலி ஆதரவுச் சட்டதரணிகளினால் சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்டார் நீதிபதி மற்றும் பொலிஸார் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இவ்வாறு எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு இந்திய உயர் நீதிமன்றத்தின் உதவியினை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆளுனர் மொகான் விஜயவிக்கிரம புல்மோட்டைக்கு விஜயம்.

கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜய விக்கிரம இன்று (20.03.2009) புல்மோட்டைப் பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புல்மோட்டை வைத்தியசாலை இந்திய வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.