எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இனவாத சுவரொட்டிகளை ஒட்டி அரசின் மீது பழிபோட ஐ.தே.க சதி

srisena.jpgமேல் மாகாண சபைத் தேர்தலை இலக்காக வைத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு சேறுபூசும் வகையில் இனவாத சுவரொட்டிகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

இந்த சுவரொட்டிகளை அரசாங்கம் வெளியிடும் சுவரொட்டிகள் போல் வெளியிடுவதற்கு அவர்கள் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேல் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், மேல் மாகாண சபைக்கான ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரம் வெற்றிகரமான முறையில் மூன்று மாவட்டங் களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டங்களில் ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரத்திற்குப் போட்டியாக ஐ.தே.க. வோ, ஜே.வி.பி. யோ கிடையாது.

ஐ.தே.க.வுக்குள் உட்கட்சி பூசல் காரணமாக அக்கட்சித் தலைவரால் கூட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிரு க்கிறது. இதனால் ஐ.தே.க.வின் பிரதேச மட்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியு ள்ளனர். அனேகர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றனர். ஜே.வி.பியின் தீவிர செயற்பாட்டாளர்கள் கூட ஐ.ம.சு. முன்னணிக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேல் மாகாண சபைக்கான ஐ.தே.க.யி னதும், ஜே.வி.பி. யினதும் பிரசார நடவடிக்கைகள் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கத்தினதும், ஐ.ம.சு.முன்னணியினதும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இனவாத சுவரொட்டிகளை அரசாங்கம் வெளியிடுவது போன்று வெளியிட ஐ.தே.க.வின் ஒரு குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

மேல் மாகாணத்தில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்காக வைத்தே இப்படியான சேறுபூசும் சுவரொட்டிகளை வெளியிட அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அரசுடைமையாக்கப்படும் வாகனங்கள் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்த ஜனாதிபதி பணிப்பு

ranjithsiyabalapitiya.jpgசுங்கச் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரசுடைமையாக்கப்படும் வாக னங்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்கும், படையினருக்கும் பயன் படுத்த வழிவகுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசுடைமையாக்கப் பட்டிருக்கும் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். முதலில் வாகனங்களை விற்பனை செய்வதற்கே நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அரச வருவாய்த்துறை மற்றும் பிரதிநிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

ஏல விற்பனையில் முன்பு குறிப்பிட்ட நிறுவனத்தினரே பங்கேற்று வந்தனர். எனவே, இதில், பரவலான பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமுகமாக, பரந்து பட்ட பிரசாரத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புலிகளின் 130 மி.மீ. ஆட்லெறி தாக்கியழிப்பு

srilanka_army1.jpgபுலிகளின் 130 மி.மீ ரக கனரக ஆட்லெறி ஒன்றை விமானப் படையினர் கிபீர் விமானங்கள் நேற்று முற்பகல் தாக்கியழித்துளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே புலிகளால் பொருத்தப் பட்டுக்கொண்டிருந்த இந்த பீரங்கியை இலக்கு வைத்து தரைவழியாக இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய அதே சமயம், விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் கனரக ஆட்லெறி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே அதாவது, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்பகுதியில் செயற்பட்ட புலிகள் 130 மி.மீ. ரக கனரக பீரங்கியை பொருத்தி படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் உள்ள பிரதேசத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே புலிகள் இந்த கனரக பீரங்கியை பொறுத்த முற்பட்டுள்ளனர்.

விமானப் படையினர் உரிய இலக்கு மீது தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 130 மி.மீ. ரக பீரங்கி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதை விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். படையினரை இலக்கு வைத்து புலிகள் மேற்கொள்ளவிருந்த இந்த தாக்குதல் முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ-9 ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பொருட்கள் கொண்டுசெல்ல தனியார் வர்த்தகர் இணக்கம்

a9-food.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்பாக குடாநாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் விதத்தில் ஏ-9 பாதையூடாக பொருட்களை கொண்டு செல்ல தனியார் வர்த்தக நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

யாழ். குடாநாட்டுக்கு தமது உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தமையையிட்டு அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்ட தனியார் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண விசேட சந்திப்புக்காக அழைத்தமை குறித்தும் தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டனர்.

நேற்றுக்காலை சுமார் 10.30 க்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ணவின் தலைமையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் பிரதி பலனாக நாளை வியாழக்கிழமை சுமார் 20 அல்லது 25 லொறிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

லயன் புரூவரி, ரைகம் இன்டஸ்ரீஸ், டி. எஸ். ஐ., மெலிபன், யுனிலிவர், டி. சி. எஸ். எல், பாட்டா, எஸ். ரி. சீ, ஆர்பிகோ, ஹேமாஸ், சுவதேஷி இண்டஸ்ரீஸ், கார்கில்ஸ், அபான்ஸ், எலிபன்ட் ஹவுஸ், லங்கா சதொச, எட்னா சொக்லேட் உட்பட 35 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குடாநாட்டுக்கு தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கான இணக்கத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

நாளை வியாழக்கிழமை லொறிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமறும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கம்பனி பிரதிநிதிகளை கேட்டுக் கொண்ட துடன் முடியுமானவரை நிறுவனம் ஒன்று க்கு தலா ஒரு லொறி வீதம் வழங்க ஏற்பாடுகள் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக எவ்வளவு பொருட்கள் எந்தெந்த கம்பனிகள், எத்தனை லொறிகள் என்ற முழு விபரமும் இன்று மாலையே தெரியவரும் எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தினகரனுக்குத் தெரிவித்தார்.

தனியார் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நேற்று நடத்திய விசேட கூட்டம் உலக வர்த்தகமையத்தில் நடைபெற்றது. காலை 10.30 க்கு ஆரம்பமான கூட்டம் சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மேலதிக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் என். பி. லியனாராச்சி, உதவி ஆணையாளர் ரியல் அட்மிரல் எஸ். எஸ். ரத்னகீர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தயாரான “ரோபோ” சர்வதேச கண்காட்சியில் முதலிடம் மொறட்டுவ பல்கலை மாணவர்கள் சாதனை

இந்தியாவின் மும்பை நகரில் அண்மையில் நடந்த “ரோபோ” போட்டியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பிரிவே இந்த ரோபோவைத் தயாரித்தது.

இந்த ரோபோவின் வேகம் மற்றும் தடை அறிந்து வழியைமாற்றிக்கொள்ளும் சக்தி போன்ற சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ரோபோவிற்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தொழில் நுட்ப நிறுவனமே இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு அபூர்வ ஆற்றல் இருப்பதாக கூறி அழகான பக்தைகளை கவர்ந்திழுத்து பாலியல் வல்லுறவு! லண்டன் போலிச் சாமியார் கைது

mohana-sing.jpgதனக்கு அபூர்வ மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறி பெருந்தொகையான பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்து, அவர்களில் அழகிய யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் வட லண்டனில் இடம்பெற்றது.

மோகன்சிங் என தன்னைக் கூறிக் கொண்ட மைக்கல் லயன்ஸ் (51 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, லண்டனிலுள்ள வூட் கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மேற்படி நபர் தனக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்பிருப்பதாகவும் அதீத ஆற்றல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறி, பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அவர்களில் 7 பேரை கடந்த 10 வருட காலமாக அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மேற்படி பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், தனக்கு ஆன்மிக சக்தியை வழங்குவதாகக் கூறி சாமியார் தன்னை நிர்வாணமாக்கி தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறினார்.

மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், மேற்படி சாமியார் மாடிக்குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து சென்றதாகவும் தன் மீது நறுமண தெளிப்பான் ஒன்றைத் தெளித்து புரியாத வார்த்தைகளைக் கூறி முணுமுணுத்தபடி தனது கழுத்தை நெரித்துப் பிடித்து குற்றச் செயலை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

வட லண்டனில் பெல்சைஸ் பார்க் எனும் இடத்தில் வசிக்கும் மைக்கல் லையன்ஸ் என்ற இந்த போலிச் சாமியார், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான பிலிப் சாட்ஸ் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர் உதவி   வழங்கப்படுவதை ஆட்சேபித்து கொலம்பியா நீதி மன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமெரிக்கக் குழு, அமெரிக்க திறைசேரிச் செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேசயத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக்லாண்டாசாகர் ஆகியோருக்கு எதிராகவே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 84 பக்கங்களைக் கொண்ட இந்த மனுவில் சர்வதேச நாணய நிதியத்தின்  ஆளுநர் உட்பட்டவர்களும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையில் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டு வருகின்றன. தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில்  இலங்கைக்கு 19கோடி டொலர்கள் வழங்கப்படுவது அமெரிக்க அரசியலமைப்பை மீறும் செயலென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணாமல் போதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்துவது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானதாகும்.

அத்துடன், பாலியன் வன்புணர்வுகள், மனிதநேயமற்ற செயல்கள், நீதியற்ற முறையில் ஆட்கள் தடுத்து வைக்கப்படுதல், கைதுகள், வைத்திய  வசதிகள்  வழங்கப்படாமை, பட்டினி, அரசியல் பிரதிநிதித்துவம் மறுப்பு, பேச்சுச் சுதந்திரமின்மை, சித்திரைவதைகள் என்பன இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரி போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம்: கொள்கலன் சோதனைகளில் கடற்படையினரும்

கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் சகல கொள்கலன்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்கத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் கொள்கலன்களைச் சோதனையிடும் பணியில் கடற்படையினரையும் ஈடுபடுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறையினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதி இதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுத்ததாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதுடன், பாதுகாப்பை வலுப்படுத்தவும், வினைத்திறன் மிக்க சேவையை வழங்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கப்பல் இறக்குமதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றை இணைத்த வலையமைப்பொன்றை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதேவேளை சுங்கத் திணைக்களத்திற்குப் புறம்பாக வெளியில் கொள்கலன்களைச் சோதனையிடுவதற்கு பொதுவான ஓர் இடத்தை இனங்காணவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புதுமாத்தளனிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் புல்மோட்டை வருகை

green-ocean.jpgமுல் லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடற்படையினரின் வழித்துணையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘கிரீன் ஓஷன்’ கப்பல் மூலம் இதுவரை 16 தடவைகள் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இந்தக் கப்பல் புல்மோட்டையை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினரால் அழைத்து வரப்பட்ட 540 பொதுமக்களில் 229 பெண்கள், 167 ஆண்கள் மற்றும் 144 சிறுவர்களும் அடங்கு வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அழைத்துவரப்பட்டவர்களில் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு கடற்படையினர் அவசர முதலுதவி வழங்கிய பின்னர் புல்மோட்டை யிலுள்ள இந்திய மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இரு நாள் மோதல்களில் 282 பேர் காயம்’- மருத்துவ அதிகாரி

puthukkudi.gifஇலங் கையின் வடக்கே மோதல்கள் நடக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குகின்ற புதுமாத்தளன் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் மாத்திரம் எறிகணை வீச்சுக்களால் காயமடைந்த 282 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சந்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதுமாத்தளன் மருத்துவமனையில் 600க்கும் அதிகமான நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புதுமாத்தளனில் இருந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக்கு காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடனான கப்பலில் பயணித்த காயமடைந்தவர்கள் 5 பேர் வழியிலேயே மரணமடைந்ததாக திருகோணமலையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் மூன்று பெண்களும், ஒரு ஆணும் ஒரு குழந்தையும் அடங்குகின்றனர்.