சித்திரைப் புத்தாண்டுக்கு முன்பாக குடாநாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் விதத்தில் ஏ-9 பாதையூடாக பொருட்களை கொண்டு செல்ல தனியார் வர்த்தக நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
யாழ். குடாநாட்டுக்கு தமது உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தமையையிட்டு அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்ட தனியார் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண விசேட சந்திப்புக்காக அழைத்தமை குறித்தும் தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டனர்.
நேற்றுக்காலை சுமார் 10.30 க்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ணவின் தலைமையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் பிரதி பலனாக நாளை வியாழக்கிழமை சுமார் 20 அல்லது 25 லொறிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
லயன் புரூவரி, ரைகம் இன்டஸ்ரீஸ், டி. எஸ். ஐ., மெலிபன், யுனிலிவர், டி. சி. எஸ். எல், பாட்டா, எஸ். ரி. சீ, ஆர்பிகோ, ஹேமாஸ், சுவதேஷி இண்டஸ்ரீஸ், கார்கில்ஸ், அபான்ஸ், எலிபன்ட் ஹவுஸ், லங்கா சதொச, எட்னா சொக்லேட் உட்பட 35 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குடாநாட்டுக்கு தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கான இணக்கத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.
நாளை வியாழக்கிழமை லொறிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமறும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கம்பனி பிரதிநிதிகளை கேட்டுக் கொண்ட துடன் முடியுமானவரை நிறுவனம் ஒன்று க்கு தலா ஒரு லொறி வீதம் வழங்க ஏற்பாடுகள் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக எவ்வளவு பொருட்கள் எந்தெந்த கம்பனிகள், எத்தனை லொறிகள் என்ற முழு விபரமும் இன்று மாலையே தெரியவரும் எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தினகரனுக்குத் தெரிவித்தார்.
தனியார் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நேற்று நடத்திய விசேட கூட்டம் உலக வர்த்தகமையத்தில் நடைபெற்றது. காலை 10.30 க்கு ஆரம்பமான கூட்டம் சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மேலதிக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் என். பி. லியனாராச்சி, உதவி ஆணையாளர் ரியல் அட்மிரல் எஸ். எஸ். ரத்னகீர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.