எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரபாகரன் சரண் அடைய வேண்டும்: ப.சிதம்பரம்

chidambaram1.jpg
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சரண் அடைய வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது. இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும். நான் எதையும் ஊகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்க வில்லை என்றார்.

நளினி விடுதலைகோரிய மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் நளினி.  அவரை  விடுதலை செய்ய கோரி சென்னை ஐ கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கிழ.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைப் பகிஷ்கரிப்பு

eastern-university.gifகிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து வருவதால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரிவுரையாளர் ஒருவருக்கும் மாணவர்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இந்த பகிஷ்கரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.

குறிப்பிட்ட விரிவுரையாளரை தமது பீடத்திலிருந்து மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மாணவர்களை அவமதிக்கும் வகையில் இவ்விரிவுரையாளர் நடந்து கொள்வதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மாணவ பிரதிநிதிகளுக்கும் மருத்துவத் துறை பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.ஜி கருணாகரனுக்குமிடையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்ததைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பீடாதிபதி விதித்திருந்த நிபந்தனையை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதன் காரணமாகவே தொடர்ந்தும் மாணவர்கள் இந்த விரிவுரைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் இணைப்பாளர் ஒருவர் மாணவர்கள் விரிவுரைகளுக்குத் திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. 

பாதுகாப்பு வலயத்தில் 24 மணி நேரத்தில்; ஏழு தற்கொலைத் தாக்குதல்கள் – பிரிகேடியர் தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 4 மனித குண்டுகளும் 2 மோட்டார் சைக்கிள் குண்டுகளும், வெடி மருந்து நிரப்பபட்ட கெப் வாகன குண்டு ஒன்றும் இத்தற்கொலைத் தாக்குதலில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார். 

தெ. கி. பல்கலையின் பதில் உபவேந்தராக ஹுஸைன் இஸ்மாயில்

eastern-university.gifஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராகக் கடமையாற்றி தனது பதவிக்காலத்தை நேற்று நிறைவு செய்த கலாநிதி ஏ. ஜி. ஹுஸைன் இஸ்மாயில் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை பதில் உபவேந்தராக கட மையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் 28ம் திகதியாகிய நேற்று அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் காணவில்லை

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலையில் இம்மாணவி கல்வி பயின்று வந்தவராவார்.

நேற்றுக் காலை அம்மாணவியின் பாட்டனார் வழமை போல் அவரை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்றுவிட்டு வந்துள்ளார். பாடசாலைவிடும் வேளையில் அவரை அழைத்துச் செல்ல அவரது பாட்டனர் சென்ற போது, அம்மாணவி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது

இச்சம்பவத்தினால் அப்பாடசாலை மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாணவியின் தந்தையான சதிஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் மேலும் 527 பேர் வருகை

puthumathalan.jpg
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு நோயாளர்கள்,காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ,உதவியாளர்கள் 527 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் நேற்று புல்மோட்டைக்கு விஜயம் செய்தார்.இந்திய மருத்துவர் குழுவைக் கொண்ட வைத்தியசாலைக்கும் இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் அவர் நேரில் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலம் 25 கடற்புலிகள் பலி

navy.jpgமுல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இன்று காலை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் புலிகளின் ஆறு படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் 25 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகளும் தாக்குதல் படகுகளும் முல்லைத்தீவு கடற்பிரதேசத்துக்குள் நுழைவதை அவதானித்த கடற்படையினர் அவற்றின்மீது உடனடியாகத் தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலை; 4.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகளும் கலிபர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இரண்டு தாக்குதல் படகுகளையம் படையினர் தாக்கியழித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் காரணாக கடற்படைப் படகு ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை – 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டி

advani.jpgஇந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதுடன் 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலின்; 3ம் கட்டத்துக்கான பிரசார நடவடிக்கைகள்  நேற்று மாலையுடன் முடிவடைந்தன. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. இந்திய பொதுத் தேர்தல் 5 கட்டமாக் நடக்கிறது. கடந்த 16ந் தேதி முதல்கட்ட தேர்தல் 124 தொகுதிகளிலும் 23ந் தேதி 2ம் கட்ட தேர்தல் 141 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. 3ம் கட்டமாக 107 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் 107 தொகுதிகளில் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இவர்களில் 101 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

107 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 14 கோடியே 40 லட்சத்து 2 ஆயிரத்து 265 பேர் ஆவர். 

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு முன்னர்!

laxman_yapa_abeywardena.jpgஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குமிடையில் நிச்சயம் நடைபெறும். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் 70 வீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடமத்திய, சப்ரகமுவ, வடமேல்,  மத்திய மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அரசாங்கம் பெற்ற வெற்றியை ஐ.தே.க. விமர்சித்துக் கொண்டிருக்காமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம்வாய்ந்த வேட்பாளர் ஒருவரை நியமித்து வெற்றியீட்டிக் காட்டட்டும்.

முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டபோது 62.8 வீத வாக்குகளைப் பெற்றார். அவர் இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டபோது 51 வீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகப் போட்டியிட்டால் இதுவரையில் எவரும் பெற்றிருக்காதவாறு 70 வீத பெரும்பான்மையை நிச்சயம் பெறுவார். மேல் மாகாண சபைக்கு கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 50.6 வீதமானவர்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இம்முறை 63.23 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.