எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

டெங்கால் 163 பேர் மரணம் 14,635 பேர் இதுவரை பாதிப்பு

aedes_aegypti.jpgடெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் தொகை 163 ஆக அதிகரித்திருப்பதுடன், இதுவரை 14,635 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதாக நேற்று சனிக்கிழமை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.

10 மாவட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு சுகாதார அமைச்சு 10 அதிகாரிகளை நியமித்துள்ளது. 10 மாவட்டங்களில் 68 இடங்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படும் இடங்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு குழுக்களை கிராம அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி களிலுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் டெங்கு கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கல்வியறிவூட்டுதல், சிரமதான நடவடிக்கைகள், பரிசோதனைகள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை என்பன இந்த டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

யாழ்தேவி இன்ரசிற்றி ரயிலில் தீ- பயணிகளுக்கு சேதமில்லை சாலியபுர பகுதியில் சம்பவம்

train_.jpgகொழும்பி லிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற யாழ் தேவி இன்ரசிற்றி ரயிலில் சாலியபுரம் பதியில் தீப்பற்றியதாகவும் எனினும் பயணிகளுக்கு உயிர்ச்சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் அனுராதபுரத்தைக் கடந்து சாலியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 10.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலில் இணைக்கப்பட்டிருந்த உணவு வண்டியில் பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் வெடித்ததனால் தீவிபத்து ஏற்பட்டதாகவும், உணவு வண்டியும், முதலாம் வகுப்புப் பெட்டியும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், பயணிகளுக்கு சேதமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் உணவு வண்டியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உடனடியாகத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மட்டு, வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை

udaya_nanayakkara_brigediars.jpg வவுனியா பாரதிபுரத்திலும் மட்டக்களப்பு கிரான் குளம் வாவி பகுதியிலும் நேற்று மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பாரதிபுரம் வித்தியாலய அதிபரான நடராசா ரமேஷ்கந்தா (வயது 34) என்பவரும், அரிசி ஆலை முகாமையாளரான குணரத்தினம் சிவரூபன் (வயது 31) என்ற நபருமே இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலி உறுப்பினரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கிரான் வாவியோரப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அவ்வழியே வந்த நபர் ஒருவரை சோதனை செய்யமுற்பட்டுள்ளனர். இச்சமயத்தில் குறித்த நபர் படையினரின் துப்பாக்கியை பறித்து சுட்டுள்ளார். படையினரும் திருப்பிச் சுட்டதில் புலி உறுப்பினரும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்துள்ள புலி உறுப்பினர் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த படைவீரர் அம்பாறையைச் சேர்ந்த சுமனதிஸ்ஸ என்றும் காயமடைந்த படைவீரர்கள் இருவரும் பண்டார, ராஜபக்ஷ என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்

kattankudy_arms.gifஅரசாங் கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று பெருந்தொகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை ஆயுதங்களைக் கையளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேற்படி பள்ளிவாசலில் நடந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் அதிபர் எடி சன் குணதிலக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி பால, ஆரையம்பதி பொலிஸ் பொறுப்பதிகாரி கப்டன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு; ரீ-56 ரக துப்பாக்கி -17, எஸ்.எம்.ஜீ. 01, சொட்கன்-01, 03 ரக துப்பாக்கி-04, ஜே.ஆர். ரக கைக்குண்டு-03, எஸ்.எம்.ஜீ. கைக்குண்டு-10, 38 ரக குண்டு-01, ரீ-56 ரக ரவைகள்-1076, ரீ-56 ரக மகkன்-25, ல்கட்டாஸ்-01, 9 எம்.எம்.பிஸ்டல்-01, 9எம்.எம்.மகkன்-07

மேற்படி ஆயுத ஒப்படைப்பின் பின்னர் கூட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக உரையாற்றினார்

முல்லைத்தீவு ஈழம் வங்கி – மீட்கப்பட்ட நகைகளை உரியோரிடம் ஒப்படைக்க இராணுவம் ஏற்பாடு

முல்லைத்தீவு மக்களால் ஈழம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை நிவாரணக் கிராமங்களில் உரியவர்களிடம் கையளிக்க இராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஈழம் வங்கியில் அடகு வைத்த நகைகளை படையினர் அண்மையில் மீட்டனர். அடகுவைத்தவர்களின் விபரங்களுடன் கூடிய தங்க நகைகள் அடங்கிய 8709 பொதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அடகு வைத்தவர்களுக்கு வழங்கிய பற்றுச்சீட்டின் பிரதிகள் நகையுடன் பொதி செய்யப்பட்டு வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் தேடுதல்களை மேற்கொண்ட இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1040 தங்க வளையல்களையும் கண்டெடுத்துள்ளனர்.

852 பெரிய தங்க வளையல்களும், 188 சிறிய தங்க வளையல்களும், 45 தங்க வளையல் துண்டுகள், கைச்சங்கிலி என்பவற்றையும் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தமிழில் நேர்முக வர்ணனை

cricket20-20.jpgகாலியில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர்பான தமிழ் நேர்முக வர்ணனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் முழு நேரமாக ஒலிபரப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் தொடர்பாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எம்.எச். அஸ்வர் தமிழ் மொழியில் நேர்முக வர்ணனையை செய்கிறார்.
இதுவரை காலமும் கிரிக்கெட் போட்டி நேர்முக வர்ணனை முழு நேரமாக சிங்கள மொழியிலும் இடையிடையே ஆங்கில, தமிழ் மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் தமிழ் மொழியிலும் முழுநேரமாக நேர்முக வர்ணனை இடம்பெறுமெனவும் அஸ்வர் தெரிவித்தார்.

காலியில் நேற்று காலை 10 மணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. நேற்று ஆட்டமுடிவின் போது இலங்கை அணி முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தேர்தல் கடமைகளுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

election.gifயாழ்.  மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயற்சி செயலமர்வுகள் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாக்காளர்கள்  பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக இம்முறை 500 அரச உத்தியோகத்தர்களும்  யாழ். மாநகரசபைத் தேர்தலுக்கென இம்முறை ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும்  கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும்  உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜக்சனின் பெயரில் மின்னஞ்சலில் பரவும் வைரஸ் – கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

மைக்கேல் ஜக்சனின் பெயரைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜக்சன் என்ற பெயரில் ஈமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மின்னஞ்சலில் ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மின்னஞ்சல் கூறுகிறது. அடடா என்று ஆச்சரியப்பட்டுத் திறந்து பார்த்தால் அவ்வளவுதான் கணினி காலியாகி விடுகிறதாம்.

இந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் நமது கணினி மட்டுமல்லாது, யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம். அதேபோல, மைக்கேல் ஜக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.

கூட்டமைப்பினரை ஜனாதிபதி தனியாக சந்திப்பதற்கு தீர்மானம்

sampanthr.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடமே ஜனாதிபதி தனது தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீண்டநேரம் தனியாகச் சந்தித்து பேசிய ஜனாதிபதி கூட்டமைப்பினரை அடுத்த வாரமளவில் தனியாக சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அவர் இம்மாதத்திற்குள் சந்திப்பார் என்றும் அதற்கான அழைப்பு ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக விரைவில் அனுப்பப்படும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப 332 விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக 332 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் சிறந்த கல்வியினை மாணவர்களுக்கு வழங்க முடியும் என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி நியமனம் செய்யப்படவுள்ள 332 விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களுள் 131 பேர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களமொழிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் பெறும் பாடசாலையில் மூன்று வருடங்களும் மாகாணத்தில் 5 வருடங்களும் கடமையாற்றுவதுடன், எதிர்காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் இடம்பெறும்போது தாம் விரும்பிய மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லலாம் என செயலாளர் உபுல் வீரவர்தன மேலும் தெரிவித்தார்.