எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“சனல் – 4” புதிய வீடியோப்படங்கள் – துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்

sanal4_uk.jpgவன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சனல் – 4’ தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.

கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது.
 
வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மழை காலம் தொடங்கியிருப்பதால் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் இந்த காணொலி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்-ஜே.வி.பி. யின் செயலாளர் அறிவிப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி இன்று முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்றிட்டம் விரைவில் பொது மக்களின் போராட்டமாக மாறும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் தற்போது ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு வகையான கேள்விகள் எழுந்துள்ளது. சகல தரப்பினரது செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவாறு அதிகாரம் ஒரு இடத்தில் மையப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது மிகவும் ஆபத்தான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தற்போது காணப்படும் நடைமுறை அரசியலும் அவ்வாறானதாகவே காணப்படுகின்றது. நாட்டை ஜனநாயக சூழலில் தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் தடையாகவே உள்ளது. எனவே தான் இம்முøறக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றுக்கு ஜே.வி.பி. செல்கின்றது. எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுடன் இணைந்து பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

4 மாவட்ட செயலகங்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழ்:

slpr080909.jpgபுது மாத்தளனில் இறுதி வெடிச் சத்தம் பயங்கரவாத ஒழிப்பின் வெற்றியை நிர்ணயித்தது போல சிறந்த அரச துறையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த முதல் வெற்றியே நான்கு மாவட்டச் செயலகங்களுக்கும் கிடைத்த சர்வதேசத் தரச் சான்றிதழென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐ. எஸ். ஓ- 9001 சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ள கண்டி, குருநாகல், மாத்தறை, காலி மாவட்டச் செயலகங்கள் சார்பில் அம் மாவட்டச் செயலர்களை வாழ்த்தி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றதுடன் அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த காலங்களில் அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி அரசாங்கத்திடமும் மறுபகுதி பிரபாகரனிடமும் இருந்தது. இங்கு வந்தால் எமது அரச அதிகாரியாகச் செயற்படுபவர்கள் அங்கு சென்று பிரபாகரனின் வழி நடத்தலைச் செயற்படுத்துவோராக இருந்த காலம் ஒன்றிருந்தது.

அந்நிலைக்கு தற்போது முடிவுகட்டப்பட்டுள்ளதுடன் முழுநாட்டிலும் அரச நிர்வாகம் அரசாங்கத்திடமே தற்போதுள்ளது. அரச சேவையை மட்டுப்படுத்தி அரச துறைகளைத் தனியாருக்கு வழங்கிய கடந்த கால ஆட்சியாளர்களின் அரச துறையை வீழ்ச்சியடையச் செய்வதிலேயே கருத்தாகச் செயற்பட்டனர்.

நாம் நாட்டைப் பற்றி புதிதாகச் சிந்தித்ததன் பிரதிபலனே இந்த சர்வதேச தரச்சான்றிதழ். கடந்த காலங்களில் எமது நாட்டைச் சிலர் தோல்வியுற்ற நாடாக வர்ணித்தனர். இதற்குக் காரணம் வெல்ல முடியாத யுத்தமும் ஒழுங்கற்ற அரச சேவையும் தான்.

இன்று நாடு பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றிகண்டு இரண்டாவது நடையான அரச துறை வீழ்ச்சியையும் வெற்றிகொண்டு சர்வதேச சான்றிதழ் பெறும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அன்று யுத்தம் புரிந்த அதே படையினரே எமது தலைமைத்துவத்தின் கீழும் யுத்தம் புரிந்தனர்.

எனினும் அன்று தலைமைத்துவம் வழங்கியவர்கள் பிரபாகரனோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவருடன் கைகோர்த்துச் செயற்பட்டவர்கள். நாமோ பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி அதனை வெற்றிகொண்டுள்ளோம்.

தலைமைத்துவம் வழங்கும் நாம் முன்னேறிச் செல்லும்படி பணித்தால் படையினர் முன்னேறிச் செல்வார்கள். நாம் பின்னே வரச்சொன்னால் பின்னடைவே கிட்டும். இதற்கான பொறுப்பு தலைமைத்துவத்திடமே உள்ளது. யுத்தத்தை வென்றமை போன்றே நாம் சிறந்த அரச சேவையைக் கட்டியெழுப்புவதிலும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறோம். அரச ஊழியர்கள் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குதல் அவசியம்.

12 லட்சத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் பொது மக்களின் வரியிலிருந்தே வழங்கப்படுகிறது. அதனால் கண்ணீருடன், பிரச்சினைகளுடன் வரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டியது அரச ஊழியர்களின் பொறுப்பாகும். இந்த சவாலை வெல்வது அவசியம்.

இத்தகைய சர்வதேச தரச் சான்றிதழ்கள் தனியார் துறை நிறுவனங்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். அவர்கள் தமது வர்த்தகத்தின் இலாப நோக்கம் கருதியே அதனைச் செய்வர். அரச துறையினருக்கோ எல்லா நிலையிலும் குறைவில்லாமல் சம்பளம் கிடைக்கிறது.

அவர்கள் விரும்பினால் மக்களுக்கு நல்லதைச் செய்யலாம் விரும்பாவிட்டால் எதையும் செய்யலாம். எனினும் இன்று நல்லதைச் செய்கின்ற மனதுடன் அரச ஊழியர்கள் செயற்படும் காலம் உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில்!

ships000.jpgஇலங் கைக்கும்  இந்தியாவுக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவையை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய கப்பல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சேவை தொடர்பான இறுதி அறிவுறுத்தலை மத்திய அரசாங்கத்திடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக கொச்சின் துறைமுக ஆணையக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கும் தென்னிந்திய கொச்சின் துலைமுகத்திற்கும் இடையேயான இந்த சேவையினை ஆரம்பிப்பது குறித்து சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டிலும் ஆராயப்பட்டது. இதனையடுத்தே தற்சமயம் இந்த சேவை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கொச்சின் துறைமுக ஆணையக தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கப்பலில் வரும் பயணிகளை கையாள்வதற்கான சகல வசதி மற்றும் தரத்தையும் கொச்சின் துறைமுகம் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் ஏற்கனவே பல வெளிநாட்டு சிறிய மற்றும் நடுத்தர பயணிகள் கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.  இலங்கையுடன் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் கப்பல் சேவைகள் போன்ற சேவைகள் அந்தமான் தீவுகளுடன் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் இந்திய இலங்கை வர்த்தக சமூகங்களுக்கிடையில் மேலும் நெருக்கமானதும் உறுதியானதுமான உறவுகளை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பம்! முதல் போட்டியில் இலங்கை வெற்றி

cricket_stadium.jpgஇலங்கை,  இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்குபற்றும் முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டி இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இச்சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு அணியும் ஏனைய இரு அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

‘கொம்பக்’ கிண்ணத்துக்கான இந்தச் சுற்றுத் தொடரில் இறுதி ஆட்டம் உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. சகல போட்டிகளும் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டங்களாகவே இடம்பெறும்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகளிடையே 11ஆம் திகதியும் மூன்றாவது போட்டி இலங்கை-இந்திய அணிகளிடையே 12ஆம் திகதியும் இடம்பெறும். இறுதி ஆட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியபோதும் இரு அணிகளுக்குமிடையில் நடந்த இருபது ஓவர்களைக் கொண்ட இரண்டு ‘ருவன்டி-20’ போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றியீட்டியது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள இன்றைய முதலாவது ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாந்தீவு குஷ்டரோக வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து – 13 நோயாளிகள் விமானப்படையினரால் மீட்பு

மட்டக்களப்பு மாந்தீவுப் பகுதியில் அமைந்துள்ள குஷ்டரோக வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தை இலங்கை விமானப்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வைத்தியசாலை மட்டக்களப்பு விமானப்படை முகாமிலிருநிது அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. வைத்தியசாலையில் இருந்த 13 நோயாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை இலங்கை விமானப்படை வீரர்கள் மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுக் காப்பாறினர்.

விமானப் படையின் 212 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி தீ அணைக்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதையடுத்து நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள முழுமையான சேத விபரம் இன்னும் மதிப்பிடப்படவில்லையெனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஒபாமாவுக்கு ஈரான் ஜனாதிபதி பதில்

அணு சக்தியை உற்பத்தி செய்வது ஈரானின் தார்மீக உரிமை. இந்த உரிமையை; விட்டு கொடுக்க தயாரில்லை என,  ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.
 
ஈரான், அணு ஆயுதம் தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சுகின்றன. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கேள்விப்பட்ட மேற்கத்திய நாடுகள், அந்நாட்டின் மீது கடந்த 2006ம் ஆண்டு முதல் பொருளாதார தடை விதித்துள்ளன.
 
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தி கொண்டால், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை விலக்கி கொள்வது குறித்து பரிசீலிப்போம்; இல்லாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்திருந்தார். அணு சக்தி உற்பத்தி என்பது ஈரானின் தார்மீக உரிமை. இந்த உரிமையை விட்டு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அமைதி பணிக்கு தான் அணு சக்தியை ஈரான் பயன்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகள் பயப்படுவது போல் நாங்கள் அணு ஆயுதம் எதையும் தயாரிக்கவில்லை.அணு ஆயுத பரவல் தடை,  அமைதி பணிக்கு அணு சக்தி என்ற விஷயத்தில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.

இந்த மாத இறுதியில் ஐ.நா., பொது சபையில் பேச வரும் போது,  அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று அகமது நிஜாத் மேலும் தெரிவித்துள்ளார்.

உருத்திரகுமாரன் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும்-வெளிவிவகார அமைச்சின் செயலர் கோரிக்கை

America’s  Flagஅமெரிக் காவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வி. உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதான ஆயுத கொள்வனவாளர் கே.பி. என்று அழைக்கப்படும் கே. பத்மநாதன் அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது இயக்கத்தில் தீவிரமாக செயற்பட்டு வரும் அதியுயர் உறுப்பினராக உருத்திரகுமார் இருந்து வருகிறார் என்பதை இலங்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இது குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன கருத்து தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரும் பயங்கரவாதத்தை ஆதரித்து வருபவருமான உருத்திரகுமார் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சட்ட முறைமையில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாட்டு அரசாங்கம் உருத்திரகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டாது என்று சில வட்டாரங்கள் தெரிவித்திருந்தது பற்றி அபிப்பிராயம் கேட்டபோதே, சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்கா தெரிவித்துள்ள உறுதிப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கையை எடுக்க அது கடமைப்பட்டுள்ளது என்று கலாநிதி கொஹண தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அதன் மீதான தடையை நீக்குமாறு அண்மையில் அமெரிக்காவில் உள்ள குழு ஒன்று விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பில் உருத்திரகுமார் ஒரு உறுப்பினராவார். இலங்கையில் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலைமை குறித்து உருத்திரகுமார் அண்மையில் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆர்வலர்களையே ரொபேர்ட் பிளேக் சந்தித்தார் என்று தெரிவித்த இலங்கை அரசாங்கம் இந்த சந்திப்பு குறித்து கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இலங்கை விவகாரத்தில் ராஜாங்க திணைக்களத்தினதும் ரொபேர்ட் பிளேக்கினதும் தலையீடு குறித்து வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் இந்த ஆட்சேபனையை தெரிவித்திருந்தது.

வன்னி மக்களின் அவலத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது அல்ஜசீரா. – இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி

aljasira.jpgவன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து “அல்ஜசீரா” தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை “அல்ஜீரா” பேட்டி கண்டுள்ளது.

தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் “அல்ஜசீரா தொலைக்காட்சி” சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் “அரச பயங்கரவாதம்” கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான “அல்ஜசீரா தொலைக் காட்சி” சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.  ஏற்கனவே “சனல்04” தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.

சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் ஆராய்வு

pree-7-9-9.jpgஇலங் கைக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் போலி வீடியோ காட்சியை வெளியிட்ட செனல் – 4 தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுக்காலை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதை இலகுவில் விடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கும் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலர் அரசியல் ரீதியில் முன்னெடுத்த சதியாக இது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில வெளிநாட்டு ஊடகங்கள் இவ்வாறான செயற்பாடுகளை இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளமை எம்மை பொறுத்தமட்டில் முதற் தடவையல்ல என்று தெரிவித்த அமைச்சர் இதுபோன்ற பல அனுபவங்கள் உண்டு என்றும் குறிப்பிட்டார். எதிர்காலத்திலும் இதுபோன்ற செயற்பாடுகளை செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை கோருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.