எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வெளிநாட்டுப் பறவைகள் வருகையால் முல்லைத்தீவில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

Bird_Unusual_to_SLமுல்லைத் தீவுப் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், இராணுவத்தினருக்கும் பறவைக்காய்ச்சல் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு இத்தடுப்பூசியை ஏற்றுவதற்கு போதுமான மருந்து கையிருப்பில் இல்லாத காரணத்தினால் முதலில் அரசாங்க ஊழியர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இவற்றை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் பணியாற்றும் பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துகள் வந்து சேர்ந்ததும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி ஏற்ப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் தற்போது வருகின்ற நிலையில் சிலர் அப்பறவைகளைப் பிடித்து இறைச்சிக்காக பயன்படுத்துவதாகவும் இதனால் இப்பகுதிகளில் இத்தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு 29ஆம் திகதி பூஸா முகாமிற்கு செல்கிறது.

Magazine_Prisonநல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 29ஆம் திகதி காலியிலுள்ள பூஸா தடுப்பு முகாமிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளை பார்வையிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கான வழிவகைகள், சாத்தியங்கள் குறித்தும் ஆராயுவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் வெளி மாவட்டங்களில் நடைபெறும்போது அனைத்து தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழு விஜயம் செய்யவுள்ளது

புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியெற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் சாட்சியங்களை நல்லிணக்க ஆணைக்குழு பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து தயாராகும் ‘பனை மரக்காடு’ திரைப்படம்.

Seveal_K_JHCபாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வை மையமாக வைத்து ‘பனை மரக்காடு’ என்ற திரைப்படம் இலங்கையில் படமாக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப பூஜை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், தமிழரின் கலை, காலாசார பாரம்பரியங்கள் பாதிக்கப்படாத வகையிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கே. செவ்வேள் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து, ஐந்து வயதுக் குழந்தையுடன் வாழும் பெண்ணொருத்திக்கும் இளைஞன் ஒருவனுக்கும் ஏற்படும் காதல் இக்கதையின் கரு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனை மரக்காடு’ திரைப்படத்தை கேசவராஜா இயக்குகின்றார். இசையமைப்பை தென்னிந்திய இசையமைப்பாளர் சிற்பி மேற்கொள்கின்றார். இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இலங்கையிலுள்ள தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களும் இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். படத்தின் பிரதான நடிகர்களை உள்நாட்டில் தெரிவு செய்வதற்காக காத்திருப்பதாகவும் அவ்வாறு யாரும் முன்வராவிடில் அவர்களை இந்தியாவிலிருந்து தெரிவு செய்ய வேண்டி வரும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில நீண்ட காலமாக வாழும் சட்ட ஆலோசகரான செவ்வேள் ஏற்கனவே ஓரிரு படங்களை தமிழகத்தில் தயாரித்தவர். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் பிரிவுத் தலைவராக இருந்த இவர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மீண்டும் அடைமழை, வெள்ளம்.

Jaffna_Floodயாழ்ப் பாணம் வன்னி உட்பட வடக்கில் கடந்த மூன்று நாட்களாக தணிந்திருந்த மழை நேற்று திங்கள் இரவிலிருந்து மீண்டும் கடுமையாக பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கிளிநொச்சி உட்பட பல பிரதேசங்களில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பொது மக்கள் பயணம் செய்ய முடியாதபடி வெள்ளம் தேங்கி நிற்கும் காட்சிகளை காணமுடிகிறது.

கிளிநொச்சியின் பிரதான ஏ-9 பாதையிலும் பல குறுக்கு வீதிகளில் வடிகாலமைப்புகளில்லாத காரணத்தினால் வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கிநிற்கும் நிலை காணப்படுகின்றது. தாழ்வான நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இரத்ததானத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்.

Blood_Donationஇவ் வருடம் பாடசாலைகளில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வுகளில் தேசிய மட்டத்தில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த கல்லூரியில் இவ்வருடம் இடம்பெற்ற இரத்ததான முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்துள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 210 பேர் இரத்ததானம் செய்து அக் கல்லூரி தேசியமட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை மருத்துவர்கள் இரு வருடங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்ற வேண்டும்

Faculty_of_Medicine_UoJயாழ்ப் பாண பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவர்களாக வெளியேறுவோர் இரு வருடங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது. அவ்வாறு இரு வருடங்கள் வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளில் பணியாற்றியதன் பின்னரே அவர்கள் வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறமுடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுதாகவும், இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டால் இப்பற்றாக்குறையை ஓரளவிற்கு குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் ஒரு வருடம் மட்டும் தங்கள் பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றம் பெற்று செல்லலாம் என்கிற நடைமுறையே இவ்வளவு காலமும் இருந்து வந்தது. ஆனால் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இரு வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்கிற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். தீவகத்தில் எட்டு வைத்தியசாலைகள் உள்ளன. ஆனால், அவற்றில் ஆறு வைத்தியர்களே தற்போது கடமையாற்றி வருகின்றனர். சில வைத்தியர்களுக்கு இடமாற்றமும் கிடைத்துள்ளது இந்நிலையில் குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு.

Muslim_IDPs_Get_Supportயாழ். குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி கிடைத்துள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள 622 முஸ்லிம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான உடனடிக் கொடுப்பனவாக இத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும். இதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு அவர்கள் முன்னர் வசித்து வந்த வெளி மாவட்டங்களிலுள்ள பதிவுகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானை குருக்களும் அவரது மகன்களும் சுடப்பட்டமை தொடர்பாக கைதாகியுள்ள நால்வருக்கும் 14 நாட்கள் விளக்க மறியல் உத்தரவு.

chankanai-kurukkal.jpg
சங்கானையில் குருக்களும் அவரது இரு மகன்மாரும் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் கைதான இரு படையினரையும் இரு தமிழ் இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சங்கானையில் குருக்கள் மீதும் அவர் இரு மகன்கள் மீதும் இரு இளைஞர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் காயமடைந்த 55 வயதான குருக்கள் கடந்த புதன் இரவு உயிரிழந்தார். கொள்ளையடிக்கச் சென்ற வேளையில் இவர்கள் மீது துப்பாக்கியினால் சுடப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்ட இரு இளைஞர்களும், அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த இரு படையினரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது மல்லாகம் நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சங்கானை குருக்களின் கொலைக்கு இந்து மத அமைப்புக்கள் கண்டனம்.
17 12 2010

கடந்த சனிக்கிழமை சங்கானையில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, கடந்த புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமான நித்தியானந்த குருக்களின் கொலையைக் கண்டித்து பல இந்து மத அமைப்புக்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

குருக்களது மரணச்சடங்குகள் நேற்று வியாழன் பிற்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் சமய, சமூகப் பிரதிநிதிகள்- பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். மானிப்பாய் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

சங்கானையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த குருக்கள் வைத்தியசாலையில் மரணம். படையினர் இருவர் கைது.
16 12 2010

கடந்த சனிக்கிழமை இரவு சங்கானையில் குருக்கள் ஒருவரும் அவரது மகன்மார் இருவரும் சுடப்பட்டு அவர்களது மோட்டார் சைக்கிளையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற இருவரும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கிய இரு படைச் சிப்பாய்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பின்னர் படையினரிடம் சரணடடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்றும், இவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையான இராணுச் சிப்பாய் எனவும் மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரின் துப்பாக்கியைக் கொண்டு கொள்ளைச் சம்வத்திலீடுபட்டதுடன், குருக்கள் மீதும் அவரின் மகன்மார் மீதும் துப்பாக்கியால் சுட்டவர்களான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர் சக்தி என அழைக்கப்படும் காசிநாதன் முகுந்தன், மற்றவர் ரமணன் என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் சிவரூபன் எனவும், இவர்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள படையினரில் ஒருவர் இராணுவ கோப்ரல் குணசேன, மற்றவர் சிப்பாயான ரட்ணாயக்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டு விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

படையினரின் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், போர் முடிவுற்ற பின்னர் படையினரால் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்ல விடயங்கள் சிலரால் நாசமாக்கப்பட்டு வருவதாகவும, இவர்களைப் போன்றவர்களுக்கு இராணுவத்தில் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் தான் நேரடியாக கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர். யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வேறு சில இது போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த சங்கானை இழுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலயதத்தின் குருக்களான நித்தியானந்த குருக்கள் (வயது 55) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனளிக்காது நேற்று புதன் கிழமை இரவு மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன்மாரான சிவானந்த சர்மா, ஜெகானந்த சர்மா இருவரும் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று மின்சாரம் துண்டிப்பு.

Electricity_Cableயாழ்ப் பாணம் நகர்ப்பகுதி உட்பட சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

உயர் மின்அழுத்த மார்க்கங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக யாழ். மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததன் காரணமாக இன்று நகரின் வங்கிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட்ட முக்கிய நிறுவனங்கள் என்பன தனிப்பட்ட மின்பிறப்பாகிகளின் மூலம் மின்சாரத்தைப் பெற்று இயங்கியமை குறிப்பிடத்தக்கது. வழமையாக ஞாயிற்றுக் கிழமையும் திறந்திருக்கும் சில நிறுவனங்கள் இன்று மின்சாரமின்மையால் மூடப்பட்டிருந்தன.

இவர்கள் தானா ஈழத்தைப் பெற்றுத்தர இருந்தார்கள்?! :அழகி

Kuppi_Cynideபுலம்பெயர் தமிழ் மக்களே!
இன்று பனிவிழுந்து வெள்ளை வெளீரென்று ஜரோப்பிய மண்ணெங்கும் அழகாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. நத்தார் பண்டிகைக் காலமாதலாலும் அழகினை வேண்டியும் மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் அழகை ரசித்துக் கொண்டிருப்பீர்கள். மெழுகுவர்த்தியும் தன்னை எரித்து, தானே உருகி, தன்னையே அழித்தும் ஒளியைக் கொடுத்து மற்றவர்களைச் சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கும்.

இப்படித்தான் ஒரு போராளி என்பவனும் இருக்க வேண்டும். ஒரு உண்மையான போராளி இப்படித்தான் இருப்பான். ஒரு இனத்துக்காகவும் ஒரு வர்க்கத்துக்காகவும் போராடும் போராளி தன் சுக போகங்களை மறந்து தன் உடன் பிறப்புக்களையும் துறந்து தியாக மனப்பான்மையுடன் வாழ வேண்டும். அத்துடன் சுதந்திரம் வேண்டி நிற்கும் அந்த மக்களையும் நேசிக்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்கள் தான், மக்களுக்கு தலைமையேற்க வேண்டும். இப்படிப்பட்ட உத்தமர்களைத் தான் வரலாறும் நேசித்துக் கொண்டிருக்கின்றது.

உலகத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் அடைந்த நாடுகளையும் அதன் வரலாறுகளையும் எடுத்துப் படிக்கும் போது அந்தந்த நாட்டுக்காக தங்களையே அர்ப்பணித்த மாபெரும் தலைவர்கள் பற்றியும் அவர்கள் செய்த தியாகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். கியூபா புரட்சியைவென்ற சேகுவரா பிடல்கஸ்ரோ, நிக்குரவாவின் புரட்சியை வென்ற சன்ரிஸ்தா ஒட்டகே, ரசியப் புரட்சியைத் தந்த லெனின், சீனாவில் புரட்சியை வெடிக்கச் செய்த மாவோ வியட்நாமில் கொசுமினும் தன் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை தன்னின மக்களுக்காய் சிறையிலே கழித்தனர். இன்றுவரையும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நெல்சன் மண்டேலா பற்றியும் அவர்கள் பட்ட கஸ்ரங்கள் பற்றியும் அறியலாம். அவர்கள் படங்களைப் பாருங்கள் இப்படியான தலைவர்கள் வாடி வதங்கி தோலும் தடியுமாகவே காட்சியளிப்பார்கள். ஏன்….? மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கியிருக்கும் போது இவர்கள் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் எப்பொழுதும் மக்கள் சிந்தனையுடனும், மக்களோடுமே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்டினியால் செத்து மடிந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனும் அவரது சகாக்களும் தமிழ் நாட்டு நடிகர்கள் போல மினுமினுத்துக் கொண்டே காட்சியளித்தார்கள். இவ்வளவு பிரச்சினைகள் மத்தியில் இவர்களுக்கு உணவு எங்கிருந்து வந்தது….?

புலம்பெயர் தமிழ் மக்களே, இங்கு புலிக்கு பணம் சேர்ப்பவர்களை தயவுசெய்து கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று பாருங்கள். அவர்கள் எல்லோரும் எப்படி எல்லாம் வாழ்கின்றார்கள் என்பதைக் கண்டு கொள்வீர்கள். ஏதாவது விடுதலை உணர்வு கொஞ்சமாவது இருக்கின்றதா…? ஆனால் சில பேர் விடுதலையென்றும் போராட்டம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டுக்குப் போய் ஆயுதம் ஏந்திப் போராட இவர்களோ அல்லது தங்கள் பிள்ளைகளையோ அனுப்ப இவர்கள் தயாராக இருக்கின்றார்களா..? இதற்கு புலிக்கொடியைத் தூக்குபவர்கள் எல்லோரும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

நாம் திரும்பத் திரும்ப இந்த விடயங்களைத் தான் எழுத வேண்டியுள்ளது. அத்திவாரம் இல்லாமல் எப்படிக் கட்டிடம் கட்ட முடியாதோ அப்படித்தான் விடுதலை அமைப்புக்களும். ஆனால் எந்தவொரு விடுதலை பற்றியும் தெரியாத, புரியாத ஒரு கூட்டம் தான் புலிக்கொடியுடன் அலைந்து கொண்டு திரிகின்றது. முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும் போதும், தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா..? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும் தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும்.. ஏன் இறந்து போனவர்களின் இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்களையும் எமது மண்ணையும் கொடுரமாகச் சிதைத்த இந்தப் பாசிசப் புலிக்கூட்டம் மீண்டும் தலைமை தாங்க முற்படுவது வேதனைக்கும் வெட்கத்துக்குமுரிய விடயமாகும். உலக நாடுகள் புலிகளை ஏன் தடைசெய்தது எனப் பார்ப்போமாயின் பிரபாகரனுக்கும் பில்லாடனுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருக்கின்றது.
1.இரண்டு பேரும் ஆயுதப்பிரியர்கள்
2.இரண்டு பேரும் கல்வியை பற்றிய தெளிவில்லாதவர்கள்.
3.இரண்டு பேரும் பெண்களை மதிக்காதவர்கள்.
4.இரண்டு பேரும் தாக்குதலில்தான் கவனம் கொண்டவர்கள். பின் விளைவுகள் பற்றிய அறிவில்லாதவர்கள்.
5.பில்லாடன் உலகவர்த்தக மையத்தைத் தாக்கி ஈராக் மக்களையும் ஆப்கானிஸ்த்தான் மக்களையும் கொண்டு குவிக்க காரணமானார்.
6.பிரபாகரன் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி சிங்கள தமிழ் இந்திய அரசியல் வாதிகளைக் கொன்றதோடு சாதாரண அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தார்.
7.பில்லாடன் பாடசாலைக்குப் போன பெண்பிள்ளைகளைக் கொலை செய்தார்.
8.பிரபாகரன் பாடசாலைக்குப் போய் கொண்டிருந்த 12 வயதுக்கும் /அதற்குக் குறைந்த வயதொத்தப் பிள்ளைகளையும் கட்டாயமாகப் பிடித்து இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு குண்டுகள் கட்டி வெடிக்கச் செய்து கொலை செய்தார்.
9.பில்லாடன் பல மனைவிமார்களுடன் வாழ்ந்தார். பிரபாகரன் தன் மனைவி குழந்தைகள் குடும்பமென வாழ்ந்தார்.
இப்படியாக இருவரிலும் நிறையவே ஒற்றுமைகள்.

உண்மையில் பிரபாகரன் தமிழ்ப் பெண்களை மதித்திருந்தால் இறுதிக்கட்டப் போரில் இந்தப் பெண் பிள்ளைகளை எல்லாம் இராணுவத்திடம் நிராயுதபாணிகளாக சரணடையச் செய்திருக்க மாட்டார். ஏற்கனவே இராணுவம் பற்றித் தெரிந்திருந்தும் இப்படி நடந்த கொண்டதற்குக் காரணம் தானும் தன் குடும்பமும் அழியும் போது மற்றத் தமிழ் மக்களும் அழியட்டுமே என்ற குறுகிய நோக்கம்தான். மக்களை நேசிக்கும் ஒரு உண்மையான தலைவவன் எந்த இடர் வந்தாலும் இறுதிவரை மக்கள் பற்றியே சிந்தித்திருப்பான். மக்கள் பற்றியே சிந்திக்கவும் வேண்டும். இந்தப் புலம்பெயர் நாடுகளில் மனித நேயமற்றவர்கள் இன்றும் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு திரிகின்றார்கள். சிந்தனை என்பது இவர்களுக்கு இல்லை. தங்களைக் கதாநாயகர்களாகக் காட்டி திருமணம் செய்து கொள்வதற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவுமே திரிகின்றார்கள். இவர்களை இப்படியே விட்டு வைப்பீர்களேயானால் ஈழத்தில் ஒரு தமிழருமே மிஞ்சமாட்டார்கள். இவர்கள் ஈழத்தில் செய்த தியாகம் தான் என்ன…? இவர்கள் ஏன் புலிக்கொடியைத் தூக்குகிறார்கள் என்றால் ஈழநாட்டுக்குப் போய் போராடி மரணிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே. வாழத்தெரிந்த கூட்டம்.  இவர்கள் கூடவிருந்தே குழிபறிப்பார்கள். தமிழினமே இனிமேலும் மோசம் போகாதீர்கள். தமிழ் மக்கள் புலிகளிடம் மோசம் போனது போதும். எல்லோரும் இனியாவது விழித்திருங்கள்.

நித்திரை கொள்பவனை எழுப்பி விட முடியும். ஆனால் நித்திரை கொள்பவன் போல் இருப்பவனை எழுப்பி விட முடியாது. மனித நேயமுள்ளவர்கள் எல்லோருமாக சேர்ந்து எமது ஈழத்தை மீட்டெடுக்கும் வேலைகளில் இறங்க வேண்டும். எமது உள்ளங்களால் இப்போதும் நாம் ஈழப்போராட்டத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் நாம் முன்பு விட்ட தவறுகளுக்கு எம்மை உட்படுத்தாமல் முன்பு எமது போராட்டத்தினுள் இருந்த மோசடிகாரர்கள் வியாபாரிகள் சந்தர்ப்பவாதிகள் என்போரை இனங்கண்டு இந்தப் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கிவிட வேண்டும். போராட என்ற போர்வையில் இயக்கங்களுக்குள் வந்து சுகபோகங்களை அனுபவிக்கவென கொள்ளையடித்து பழிவாங்கி தங்களது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றி இன்று பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் ஏன் இன்னமும் வெளிநாடுகளில் இனங் காணப்படவில்லை? இந்த நிலமைகளுக்கு முதலில் தமிழ் மக்களாகிய நாங்கள் விடை தேட வேண்டும். தயவு செய்து தமிழ் மக்களே, உங்கள் கல்போன்ற இதயங்களை கொஞ்சமேனும் வெடிக்க வைத்து சில பசுமையான தாவரங்களை வளர விடுங்கள். அப்பொழுதுதான் அனாதைகளான எங்கள் உறவுகள் சந்றேனும் ஆறுதலடைய முடியும். மாவீரர்கள் யார்? கப்டன், கேணல், 1ம் கப்டன், வீரவேங்கை இவர்கள் எல்லாம் யார்? போராளிகளை எப்படி தரம் பிரித்தீர்கள்? பலவந்தமாக பிடித்துக் கொண்டு போய் குண்டுகளை கட்டி வெடிக்க வைத்து படம் பிடித்து பணம் சேர்த்தீர்களே இவர்கள் யார்? எதிரியிடம் பிடிபடாமல் சயனைட் விழுங்கி உயிர் இழந்தார்களே இவர்கள் யார்? இவ்வளவு காலமும் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்து மற்றவர்களுக்கு குண்டுகளை கட்டி கொன்று தொலைத்த பிரபாகரனும் அவரது சகாக்களும் எக்காளமிட்டு முழங்கி கொண்டு இருந்தார்களே இவர்கள் யார்? முள்ளிவாய்காலில் தம்மை காப்பாற்றுவதற்கு மக்களை பணயமாக்கி கொன்று குவித்தார்களே – தப்பியோட முயன்ற பொது மக்களை தனது வாளினால் வெறிகொண்டு மூர்க்கமாக வெட்டி வெட்டி கொன்றாரே பிரபாகரனின் மகன் சாள்ஸ் இந்தப் புலிப் பிரகிருதிகள் எல்லாம் யார்? மக்கள் பட்டினியால் சாகும்போது அத்தியாவசியப் பொருட்களை விற்று காசு பண்ணினார்களே இவர்கள் யார்?

உங்களை எல்லாம் பத்திரமாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புகின்றோம் என்றவுடனேயே பிரபாகரனும் அவரது குடும்பமும் உடனடியாக சரணடைந்ததே இவர்களெல்லாம் யார்? இறுதியாக முள்ளிவாய்க்காலில் நெஞ்சமெல்லாம் வெடித்து சிதறும் வண்ணம் தமிழ் பெண்கள் இராணுவத்தால் குதறி எறியப்பட்ட காட்சிகளைப் பார்க்கிறோமே இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? இறுதிநேரத்தில் நடந்த எம் மக்களின் அழிவுகளைக் காணும்போதும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போதும் எப்படியெல்லாம் நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இராணுவத்தாலும் புலிகளாலும் எமது கலாச்சாரம் பெண்மை தாய்மை கிழித்தெறியப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் ஏன் நடந்தது. இதைத் தடுத்திருக்க முடியாதா.. ? எமது பலம் பலவீனம் எல்லாம் புரிந்து கொண்டிருந்தோமோ? இவையெல்லாவற்றையும் நாம் ஆராயவில்லை. முயற்சியும் செய்யவில்லை. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் புலிகளும் புலிகளுக்கு ஆதரவான மாமாக்களும்தான். நடந்து முடிந்த போரின் வடுக்களும் வேதனைகளும் இன்னுமே எம்மை உருக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும். . ஏன் இறந்து போனவர்களின், இரத்தவாடையும் பிணவாடையும் கூட இன்னும் மாறாத நிலையில் இங்கே அடுத்த கட்டப்போருக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

உலக நாடுகளில் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் விடுதலைப் புலிகள் அல்லது தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் கொடியை எந்த தமிழர் போராட்டங்களிலும் தூக்கி பிடிக்கிறார்களே யார் இவர்கள்? ஈழ மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக குதறப்படும் காட்சிகளை விற்று இங்கு காசு சேர்த்தவர்கள் யார்? அடி அத்திவாரத்தோடு பிடுங்கி எறியப்பட்ட பண்பு கெட்ட புலிகளை இன்னும் தூக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்களே இந்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள் யார்?

வெறும் பணத்திற்காகவும் தமது சுயநல தாகங்களுக்காகவும் ஜிரிவி எனும் விபச்சார தொலைக்காட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்களே – எப்போதாவது மக்களுக்கு சிறு உண்மையைக் கூட சொல்லாமல் ஐரோப்பாவெங்கும் மந்தைகளாக்கி வைத்திருக்கிறார்களே யார் இவர்கள்? இப்பொழுதும் எமது போராட்டம் வளர முடியாதவாறு புலிகள் என்ற பெயரில் அறிக்கைள் விட்டுக் கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் எப்போது இனங்காணப் போகின்றோம்? பிரபாகரன் இன்னமும் காட்டிற்குள் இரண்டாயிரம் போராளிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என வாய்சவடால் விட்டு மற்றவர்களை மடையர்களாக்கி கொண்டிருக்கிறார்களே இவர்கள் எல்லாம் யார்? புலிகளுக்கு பணம் சேர்த்து திரிந்தவர்களெல்லாம் மிக விலை உயர்ந்த கார்களில் உலா வருகின்றார்களே அவை எங்கனம் சாத்தியம்?
இவை குறித்து முதலில் நாம் தெளிந்த சிந்தனையுடன் சிந்திப்போமானால் என்ன தவறுகள் விட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இவ்வளவு காலமும் தவறு செய்துள்ளோம் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் வர வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசியற் பொறுக்கிகளை சமூக விரோதிகளை நமது போராட்டத்தைக் கருவறுத்தவர்களை ஓரங்கட்ட முடியும். ஓரம் கட்ட வேண்டும்.

தனி ஈழம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையே சமீப காலம் வரை இலங்கைப் பேரினவாதம் இடித்துரைக்கின்றது. தியாக உணர்வுடன் தெளிந்த சிந்தனையுடன் எமது போராட்டத்தை நாம் மீள அமைத்துக் கொள்ள வேண்டும். கும்பலிலே கோவிந்தா என எமது போராட்டம் கொச்சைப்படுத்தப்படக் கூடாது. உண்மையான போராளிகள் எப்போதும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. பிரபாகரன் மாதிரி எதிரியிடம் உயிர் பிச்சை கேட்க மாட்டார்கள். பிரபாகரனால் போசித்து வளர்க்கப்பட்ட பலரும் ராஜபக்சவின் காலடியில் வீழ்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவையாவும் புலம்பெயர் மக்கள் தம் கண்முன்னே பார்த்து தெரிந்து கொண்ட விடயம். மரணபயம் என்பது பயங்கரமானது என்பது உண்மை. ஆனால் தனது கையில் அதிகாரம் இருக்கிறது என்ற நினைப்பில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்களை பிரபாகரனும் அவனது சகாக்களும் கொன்று குவித்தார்களே. அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு மற்றவர்களின் மரணபயம் ஏன் விளங்கவில்லை? ஏனெனில் பிரபாகரன் மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய போராட்ட வீரன் பகத்சிங்தான் நினைவுக்கு வருகின்றான். (தேசியத் தலைவர் தனது முன்னுதாரணம் பகவத் சிங் கட்டபொம்மன் என்றெல்லாம் எத்தனை சவடால் விட்டிருக்கிறார்.) தன்னை தூக்கில் போடும் போது தனது தலையை கறுப்புத் துணியால் மூடவேண்டாம் நான் சாகும் போதும் எனது தாய் மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்புகின்றேன் என முழங்கினான். இவனல்லவா வீரன்!! இவனல்லவா போராளி! இவனல்லவா மாமனிதன்! இவனல்லவா தியாகி! இவனல்லவா சூரிய புதல்வன்! இத்தகையவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் போராடப் புறப்பட வேண்டுமாயின் இலட்சக் கணக்கான மக்களின் குருதியை வீணடித்த தமிழ் பெண்களின் மானத்தை பலி கொடுத்த சரணடைவு என்ற அவமானத்தை பெற்றுத் தந்த புலிக்கொடி முதலில் அழிக்கப்பட வேண்டும். புலி பினாமிகள் தமது தொடர்ச்சியான சுகபோக வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக ஈழமக்களை விற்பனை செய்வதை இத்தோடு நிறுத்த வேண்டும்.