தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.
தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.
கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.