எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

குவைத்திலிருந்து 36 பணிப்பெண்கள் நேற்றும் நாடு திரும்பினர்

house-maid-1.jpgவிசா காலாவதி காரணமாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 36 பணிப் பெண்கள் நேற்றும் நாடு திரும்பியுள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

நேற்று காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக பணியகத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்ற இவர்கள் பல்வேறு காரணங்களினால் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்துள்ள துடன் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கியுள்ளனர். இந் நிலையில் இவர்களின் விசா காலாவதியாகியுள்ள தெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையினால் இவர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற 150 பேருக்கு இன்று நிரந்தர தொழில் நியமனம் – ‘தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு இரத்மலானையிலுள்ள தங்களது ட்றை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென நேற்று முன்தினம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இது சம்பந்தமாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ. குணசேகர, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே உட்பட தொழில்வாய்ப்பு பெறும் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் ஆகக் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ட்றை ஸ்டார் ஆடைத்தொழில் நிறுவனம் நாடளாவிய ரீதியில் 16 ஆடைத் தொழிற்சாலைகளை கொண்டிருப்பதுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்கி வருகின்றது.

IIFA திட்டமிட்டபடி கொழும்பில் இடம்பெறும் ஏற்பாட்டாளர் அறிவிப்பு

iifa-awards-logo.jpgசர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வைபவத்திற்கான இடம்மாற்றப்படமாட்டாது என்று விழாவின் ஏற்பாட்டாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் எதிர்வரும் ஜூன் 3-5 இல் திரைப்பட விருதுவிழா இடம்பெறவுள்ளது. இலங்கையின் தலைநகரில் விழா நடத்தப்படவுள்ள நிலையில் இடத்தை மாற்றுமாறு தமிழ் திரைப்படத்துறையினர் அதிகளவு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே இடம்மாற்றப்படாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச்சேவை குறிப்பிட்டது.

எமக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. இடம்மாற்றப்படமாட்டாது.திட்டமிட்டபடி நடவடிக்கையை முன்னெடுப்போம் என்று இந்த விழாவினை ஏற்பாட்டு செய்துள்ள விஷ்சிரா விட்டின் பணிப்பாளர்களில் ஒருவரான சபாஷ் ஜோசப் ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்று விளையாட முடியுமென்றால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வந்து ரி20 போட்டிகளில் விளையாடமுடியுமென்றால் நாங்கள் ஏன் அங்கு போகமுடியாது. இது பிணைப்பை ஏற்படுத்துவதற்கான மற்றொரு வழிமுறையாகும் என்றும் ஜோசப் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் சந்திரன் ரட்ணம் கைது – 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான சந்திரன் ரட்ணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மிரிஹான பொலிஸார் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவரை ஆஜர் செய்ததாகவும் இவரை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதலாவது ஒழுங்கை, வாகொடை வீதி, நுகேகொடையிலுள்ள சந்திரன் ரட்ணத்தின் வீட்டிலிருந்து கடந்த 26 ஆம் திகதி வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்திரன் ரட்ணம் ‘ஆணையிறவுக்கான பாதை’ என்ற சிங்களத் திரைப்படத்தை தயாரித்தவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1948 தொலைபேசி ஊடாக இலவச சுகாதார ஆலோசனை

images.jpgபுகையிலைப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக தொலைபேசி ஊடாக இலவச ஆலோசனை வழங்கும் சேவையொன்று இன்று 31ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கி ன்றது.

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினத்தின் நிமித்தம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற இச்சேவைக்கு நாடு சுதந்திரமடைந்த வருடமான 1948ம் ஆண்டே இலக்கமாக வழங்கப்பட்டிருப் பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

1948 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் புகையிலை பாவனை, புகைப் பிடித்தல் பழக்கவழக்கம் என்பவற்றைத் தவிர்ந்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலோசனைச் சேவையில் உளவள மருத்துவ நிபுணர்களும், பொதுமருத்துவ நிபுணர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும் அவர் கூறினார்.

வடமேல் மாகாண சபையில் இன்று சத்தியப்பிரமாணம்

வடமேல் மாகாண அமைச்சர்களான நெரஞ்சன் விக்ரமசிங்க, சாந்த பண்டார, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து மூன்று மாகாண அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

விவசாய கமத்தொழில் கால் நடை அபிவிருத்தி அமைச்சராக டி.பீ. ஹேரத், பாதைகள், மின்சாரம், வீடமைப்பு, மீன்பிடித்துறை அபிவிருத்தி அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா, சமூக நல அபிவிருத்தி சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார அமைச்சராக குணதாச தெஹிகம ஆகியோர் இன்று (31) வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பளல்ல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.

முல்லை – முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 72 குடும்பங் களுக்கு முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இவர் களுக்கென 10 மில்லியன் செலவில் உபகரணங்கள் இவ்வாரம் வழங்கப் படவுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

முல்லைத்தீவில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நலனைக் கருத் திற்கொண்டு அவர்களது வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மீனவக் குடும்பங்களுக்கும் படகு, மீன்பிடி வலை, பெட்டிகள், பொருத்தப்பட்ட சைக்கி ள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் உள்ள மணமகனின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை!

வெளிநாட்டில் உள்ளவரின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை. வடமராட்சி கரவெட்டிப் பகுதியில்  பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் கொலை செய்யப்பட்டு அவரது நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று (29.05.2010) முற்பகல் 11.15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டியைச் சேர்ந்த ஜெயபாலன் விஜயலட்சுமி வயது 54 என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரது கணவரும் ஒரேயொரு மகனும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தாயாருடன் இப்பெண் அவரது விட்டில் வசித்து வந்துள்ளார். தனது மகனுக்குத் திருமண ஏற்பாட்டை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 22 பவுண் நகையும் பல இலட்ச ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் வீட்டிலிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இப்பெண்ணைக் கொலை செய்து விட்டு அவரது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை  நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். நெல்லியடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் நடந்த மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 28ஆம் திகதி புங்குடுதீவில் வைத்து ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவை சொந்த ஊராகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரே கொல்லப்பட்டுள்ளார். புங்குடுதீவிலுள்ள உறவினரைச் சந்தித்து விட்டுத் திரும்பும் வழியில், புங்குடு தீவு அலடிச்சந்தியில் வைத்து அங்கு நின்ற சிலரிடம் சாராயம் எங்கு வாங்கலாம் என விசாரித்துள்ளார். அங்கிருந்த இருவர் சாராயம் வாங்கித்தருவதாக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரது சடலம் அடிகாயங்களுடன் தெங்கன் திடல் பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் 10 ஆயிரம் ருபா பணம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.  இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று வந்த குற்றச்செயல்கள் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது இடம்பெற்றுள்ள இக்கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிளிநொச்சிக்கான நீர் விநியோகம் முழுமையாக்கப்பட்ட பின்னரே இரணைமடு நீர் யாழ்.இற்கு விநியோகம்

Iranaimadu_Tankகிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்வது குறித்து கடந்த சில காலமாக ஆராயப்படுட்டு வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பின்பே யாழ். குடாநாட்டிற்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தீhமானிக்கப்பட்டுள்ளது.

Iranaimadu_Tankஇரணைமடுக்குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு குடிநீர்  விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக நேற்று (29 May 2010) யாழ். மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் நடாளுமன்றக் குழுக்களின் தலைவர் மு.சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி, ஐக்கிய தேசயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சு.பரமராஜா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை நிர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள். யாழ். மாநகர முதல்வர் திருமதி. ப. யோகேஸ்வரி, நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி உட்பட ஏனைய பகுதி  மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டுக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்விநியோகம் செய்வது குறித்து ஆராய்வதே முக்கியமானது என்கிற கருத்து அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டது. யாழ். குடாநாட்டிற்கான குறித்த நீர்விநியோகத் திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரது கருத்துக்களின் நிறைவில் தொகுப்புரை நிகழ்த்திய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கிளிநொச்சி மக்களுக்கான நீர்விநியோகம் முழுமையாக்கப்படாமல் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கான நீர்விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்தார். அத்துடன் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்படும் எனவும், கிளிநொச்சி மக்களுடன் இணைந்து மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இது தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் – ஹிலாரி

hilary-gl.jpgநீண்ட காலம் நிலவிய நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்ரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் திருமதி கிளின்ரனைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கினார்.

gl-hilary.bmpநல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு, அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமெனவும், சுயாதீனமாகவும், பாரபட்சமின்றியும் செயற்படுவதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

திருமதி கிளின்ரனுடனான சந்திப்புக்குப் பின்னர் அவருடன் இணைந்து செய் தியாளர் மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கலந்து கொண்டார். அரசாங்கம் உள்ளூர் மட்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பேராசிரியர் பீரிஸ், “ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.

நிச்சயமாக இதனை முன்னெடுக்கின்ற வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தேவையென நாம் கருதினால், அந்தச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம். ஆனால், ஆரம்பக் கட்டத்தில் ஆணைக்குழு அதன் பணிகளைச் செய் வதற்கு அனைத்துவிதத்திலும் அதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென நினைக்கின்றோம்” என்றார்.

யுத்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால விதிகளுள் 70% பிரமாணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், எஞ்சிய விதிகள் தேவைப்படும் காலத்திற்கு மேலதிகமாக ஒரு கணமும் நீடிக்கப்படாது எனச் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அமெரிக்கா இலங்கை தொடர்பில் அதன் பிரஜைகளுக்கு நீண்டகாலம் விதித்து வந்த பயண எச்சரிக்கையை விலக்கிக் கொண்டுள்ளமைக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தத்தின் நிறைவின் போது இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

“மூன்று தசாப்த பழைமையுடைய இந்த மோதலை ஆழமாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆஜர்படுத்தப்படும் சாட்சிகளைத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்குரிய பரந்தளவிலானதும் போதுமானதுமான சட்ட விதிகளை இக்குழு கொண்டிருக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. குழு உறுப்பினர்கள் சுயாதீனம் நடுநிலைமை மற்றும் அதிகாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்த கிளின்ரன் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையையும் விருப்பத்தையும் இந்த ஆணைக்குழு நிறைவேற்றுமென அமெரிக்கா நம்புவதாகவும் குறிப்பிட்டார்.