எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானம்

indian-bus.jpgஇந்தியா விலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். அடுத்த வருடம் மேலும் 1000 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்குடனும் தனியார் துறைக்குப் போட்டியாக இ.போ.சபையை பலப்படுத்துவதற்காகவும் கூடுதலான பஸ்களைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தருவிக்கப்படவுள்ள பெரிய ரக ‘அசோக் லேலண்ட்’ பஸ்கள் பிரதான வீதிகளிலும், கிராமப்புற வீதிகளிலும் ஈடு படுத்தப்பட உள்ளதோடு, மீள் குடியேற்றம் நடத்தப்பட்ட பகு திகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் இ.போ.ச. தலைவர் கூறினார். இதுதவிர யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக சொகுசு பஸ்களை தருவிக்கவும் இ.போ.ச. திட்டமிட்டுள்ளது. வடக்கில் மீள்குடி யேற்றப்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான பஸ்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நூல் வெளியீட்டு விழா – ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’

Mayooran_Bookசுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் ஆதரவில் இடம்பெறும் ஊடகவியலாளர் அ.மயூரனின்  ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’ என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று யூன் 5, 2010ல் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

ஜுன் 05, 2010 சனிக்கிழமை, மாலை 4.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபம்
5 Chapel Road, West Ealing, London W13 9AE

கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இராப்போசன விருந்துபசாரமும் நடைபெறும்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகின்றோம்.

அன்றையதினம், ஈழத்தில் வெளியான புதிய தமிழ் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் வாசகர் வட்டம் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

அ.மயூரன்
நூலாசிரியர்
078 9498 6780

ஐ.தி.சம்பந்தன்
செயலாளர்,
சுடரொளி வெளியீட்டுக் கழகம்
020 8552 6992

வெளிநாட்டு உதவிகளில் 60 வீதம் வடமாகாண அபிவிருத்திக்கே பயன்பாடு – ஆளுநர் சந்திரசிறி

cha.jpgவெளி நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த உதவிகளில் 60 சதவீதமான நிதி வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் இந்தளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு ஒதுக்கப்படும் நிதிகள் வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு, வீதி, நீர்ப்பாசன, மின்சார, விவசாய, வீடமைப்பு, குடிநீர் வசதி, மீள்குடியேற்றம், நிவாரண, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான், சீனா உட்பட பல்வேறு உலக நாடுகள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சிக்கு சிறந்த செய்திக்கான விருது!

channel-4.jpgஇலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் – 4  செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றது. 

திரைப்பட விழாவும் இந்திய முதலீடும் இலங்கையின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் – iifa விழாவில் ஜனாதிபதி மஹிந்த

Mahinda Rajapaksaஇலங்கை யின் மீதும் அதன் பொருளாதாரக் கொள்கையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்தியா இலங்கையில் நடத்த முன்வந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் அதிகளவு முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தற்போது முன்வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவின் முன்னோடியாக நேற்று இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் விசேட அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

வர்த்தக சம்மேளன அமர்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக வருகை தந்திருந்தார்.ஜனாதிபதியுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசுகையில்:-

பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வருடங்களுக்கு முன்னர் தான் நாம் வெற்றி கண்டோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் போராளிகள், குண்டுத் தாக்குதல்கள் என பயங்கரவாதத்துக்கு வேறு பரிமாணத்தை எல். ரி. ரி. ஈ. யினர் அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் இராணுவ ரீதியான எங்கள் வெற்றியானது உலகளாவிய ரீதியில் அறியப்பட்டபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.

ஆதலால் பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதாயின் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை வருடம்தோறும் 6 சதவீதத்திலும் பார்க்கக் கூடுதலான வளர்ச்சியை எமது நாடு அடைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் பணவீக்கம் 22 சதவீதமாகவும் 2009 இல் 4 வீதத்திலும் பார்க்கக் குறைவாகவும் இருந்தது. உட்கட்டமைப்புகள் நாம் என்றும் எதிர்பாராத வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை முகங்கள், ரயில்வே பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் வேலை வாய்ப்பின்மை 5.7 சதவீதத்திலும் குறைவாக இருக்கின்றது. உலகில் வேலை வாய்ப்பின்மை மிகக் குறைந்தளவில் இருப்பது இலங்கையில் மட்டும் தான். நாட்டிலுள்ள அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் 2000 அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இது அடுத்த 5 வருடங்களில் 4000 டொலராக அதிகரிக்கப்படுவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம்.

உலகப் பொருளாதாரச் சிக்கலை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எமது எந்தவொரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ பொருளாதாரச் சிக்கலால் மூடப்படவில்லை. சர்வதேச உணவுச் சிக்கலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். பயங்கர வாதத்துக்கெதிராகப் போரிட்டுக் கொண்டே நாம் அடுத்தடுத்து எழுந்த இச் சிக்கல்களையும் எதிர்கொண்டோம்.

அபிவிருத்தியல்லாமல் சமாதானம் இல்லையென்பதை நாம் திடமாக நம்புகின்றோம். இடம் பெயர்ந்தவர்களை மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியமர்த்திய நாடு இலங்கையே. எல். ரி. ரி. ஈயினரால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களை புனர்வாழ்வளிப்பதிலும் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காணச் செய்வதே எமது இலக்கு. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாம் ஆரம்பித்த துறைகள் எல்லாம், எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை வழங்குகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. இராமாயண காலத்தில் இருந்து தொடர்பவை. ஒரு பொதுவான மரபு ரீதியான பொருளாதார வர்த்தக முயற்சிகளே இரண்டு நாடுகளிலும் காணப்படுகின்றன. தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மேலும் வலுச்சேர்க்கின்றோம் என்றார்.

இலங்கையில் நீங்கள் முதலிடவிரும்பினால் உங்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. ஆற்றல், திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம் போன்ற தனித்துவத்தன்மைகளையும் நீங்கள் இங்கு காணலாம்.இந்த வர்த்தக சம்மேளனம் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய உறவுகள் புதிய வர்த்தக முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார். இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தருர் ஆகியோரும் உரையாற்றினர்.

ஹ்ரிதிக் ரோஷனின் “கைட்ச்” திரைப்படம் சென்னை திரையரங்குகளில் ரத்து

hrithik-roshan.jpgசென்னை யிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான “கைட்ச்” ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்றுவரும் iifa சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திரைப்படம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் பரிசோதனைக் குழு

drage.jpgகிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்கும் வகையில் திடீர் பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எம். சுபைர் இந்தக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக மாகாண வைத்திய அத்தியட்சகர் டொக்டர். குணாலன் பணியாற்றுவார். அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் இதில் பணிபுரிவர். மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் இந்தக் குழு அவற்றின் குறைபாடுகளை அமைச்சரின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டுவரும்.

CNBC – IIFA விருது: ஜனாதிபதியினால் மூவருக்கு விருது வழங்கி கெளரவம்

iifa-aw.jpgகார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்ஜித் பேஜ், மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மகேஷ் அமலீன், இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அனுபம் கேர் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கி கெளரவித்தார்.

சீ.என்.பீ.ஸி – ஐ.ஐ.எப்.ஏ. குளோபல் லீடர் ஷிப் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை – இந்திய வர்த்தக சம்மேளனத்தின் விசேட அமர்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.

iifa திரைப்பட விழாவுக்கான அனுமதி கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகம்

iifa-colombo.jpgகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெறவுள்ள iifa சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான குறைந்தபட்ச அனுமதிக் கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.

இந்த கட்டண முறைமை ரூ.200,000 முதல் 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த சபை குறிப்பிட்டது.  இந்த புதிய குறைந்தபட்ச நுழைவுச் சீட்டுக்கான ஆசன வசதிகள் பின்புறப்பகுதியில் பிறிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.

IIFA: நட்புறவுக் கிரிக்கெட் போட்டி

iifa-cri.gifIIFA சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக நேற்று இடம்பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கும் – இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையில் முதலில் இடம் பெற்ற 10 ஓவர் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் சங்கக்கார, தலைமையிலான அணி வெற்றியீட் டியது.

இப்போட்டி பி.ப. 1.30 மணிக்கு கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் ஆரம்பமானது.
களத்தடுப்பில் ஈடுபட்ட சுனில் செட்டி, ரித்தேஷ் தேஷ்முக்…

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சங்கக்கார தனது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை அணியில் முன்னாள் வீரர்கள் விளையாடினர். இந்திய திரைப்படவீரர்கள் அணிக்கு சுணில் செட்டி தலைமைதாங்கினார். இவ்வணியில் மஹேல ஜயவர்தன, பர்விஷ் மஃறுப் ஆகியோர் விளையாடினர்.

இதேவேளை, இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. இரத்நாயக்க மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை மற்றொரு போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முதல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய ஆகியோர் விளையாடினர். இக் கிரிக்கெட் போட்டி சிறுவர் நல நிதிக்காக இடம்பெற்றது. இதற்கு யுனிசெப் அனுசரணை வழங்கியது.